Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வீரத்தை வழங்கும் வில்லியனூர் வரதராஜபெருமாள்

புதுச்சேரி அருகில் இருக்கும் ஊர் வில்லியனூர். இங்கு கூடப்பாக்கம் என்னும் பகுதி மிகவும் பிரபலம். கூடப்பாக்கத்திற்கென்றே தனி வரலாற்றுச் சிறப்புகள் உண்டு. மேலும், இவ்விடத்தில் புராதனமிக்க தலங்கள் ஏராளமாக உள்ளன. அதில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலின் சிறப்புகளை பற்றியும், எப்படி கோயில் உருவானது? எந்த மன்னரால் கட்டப்பட்டது? திவான் கந்தப்ப முதலியார் என்ன செய்தார்? இக்கோயில் அருகிலேயே சிவபெருமான் நிமிலீஸ்வரர் தோன்றிய வரலாறுகள், செஞ்சி கோட்டையை கைப்பற்றிய முகலாய மன்னர்கள், கிருஷ்ணதேவராயரின் வருகை, ஆயி குலம் பற்றிய தகவல்கள் என இந்த தொகுப்பில் பல சுவாரஸ்யத்தை காணலாம்.

கிருஷ்ணதேவராயரை நகைத்த மக்கள்ஒரு முறை, விஜயநகர சாம்ராஜ்ய அரசரான கிருஷ்ணதேவராயர், வேறொரு இடத்திற்கு செல்வதற்காக கூடப்பாக்கம் வழியாக பயணித்திருக்கிறார். அப்போது, கூடப்பாக்கத்தின் பெயர், ``வண்ணத்தம்பட்டு’’ என்று இருந்திருக்கிறது. இரவு நேரம் ஆகிவிட்டதால், தன் படைகளோடு வண்ணத்தம்பட்டிலே ஓய்வெடுத்தார். மறுநாள் காலையில், வண்ணத்தம்பட்டு வழியாக புதுச்சேரிக்கு செல்ல ஆயத்தமான கிருஷ்ணதேவராயர், பல வண்ண நிறங்களைக்கொண்ட பெரிய வீட்டையும், அதன் முன்பு இருக்கும் புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணரையும் காண்கிறார். உடனே, கிருஷ்ணரை பார்த்து நமஸ்கரித்துக் கொள்கிறார், விஜயநகர மன்னர். இதனைக் கண்ட பொதுமக்கள், வாய்விட்டு ஏளனமாக சிரிக்கிறார்கள். மன்னருக்கு ஒன்றுமே புரியவில்லை.

``மந்திரியாரே... ஏன் என்னைக் கண்டு அனைவரும் சிரிக்கிறார்கள்’’ என்று மந்திரியை நோக்கி கிருஷ்ணதேவராயர் கேள்விக் கேட்டார்.

``தெரியவில்லை மன்னா... விசாரிக்கிறேன்’’ என்றார் மந்திரி.

``ஏன்.. மன்னரைப் பார்த்து நகைக்கிறீர்கள்?’’ என்று கூடியிருந்த மக்கள் கூட்டத்தை பார்த்து மந்திரி கேட்டார். அனைவரும் அமைதியாகினர். பல முறை மந்திரியார் கேட்டும், கேட்ட கேள்விக்கு பதில் யாரும் கூறவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக் கொள்ளமுடியாது;

``பயப்படாமல் கூறுங்கள். நான் யாரையும் ஒன்றும் செய்துவிடமாட்டேன். ஏன் என்னைக் கண்டு சிரித்தீர்கள்?’’ என்று மன்னர் கிருஷ்ணதேவராயரே மக்களிடத்தில் வினவினார். மன்னரே கேட்டதும் அமைதியை கலைத்து, சிலர்;

``மன்னா... நீங்கள் வணங்கியது கோபாலகிருஷ்ணராக இருக்கலாம். ஆனால், அதன் பின்னால் பெரிய வீடு இருக்கிறதே அது `ஆயி’ என்னும் தாசியின் வீடு. அதற்கும் சேர்த்து உங்களுடைய வந்தனம் அமைந்துவிட்டது. அதனாலதான் எங்களையும் அறியாமல் நகைத்துவிட்டோம்’’ என்று சொன்னதும் மன்னர் கூனிக்குறுகி பெருத்த அவமானத்திற்கு ஆளானார். இத்தகைய பெரும் அவமானத்தை, மன்னரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

ஊருக்கே தண்ணீர்

ஆகையால், ஆயியை தண்டிக்க எண்ணினார். காவலர்களை அனுப்பி, ஆயியை அழைத்துவர உத்தரவிட்டார். காவலர்களும் ஆயியை அழைத்து வந்தார்கள். கிருஷ்ணதேவராயர் இருந்த கோபத்திற்கு, ஆயி தலையை வெட்ட ஆணையிடுவாரோ.. என்கின்ற அச்சம் அனைவரிடத்திலும் தோன்றியது. மாறாக, வித்தியாசமான ஒரு உத்தரவை பிறப்பித்தார், மன்னர். அதாவது அக்காலத்தில் புதுச்சேரிக்கு கடும் தண்ணீர் தட்டுப்பாடுகள் ஏற்பட்டன. ஆகையால், ஆயி தங்கியிருக்கும் பெரிய வீட்டை இடித்து, அங்கு ஒரு குளம் அமைக்க உத்தரவிட்டார். இதனை தலைவணங்கி ஆயியும் ஏற்றுக் கொண்டாள். அதன் பின்னர், ஆயி வீட்டை இடித்து குளம் அமைக்கப்பட்டது. இதனால், இக்குளத்திற்கு ``ஆயிகுளம்’’ என்று பெயர் ஏற்பட்டது. பல ஊர்களுக்கும் குடிநீர் இங்கிருந்துதான் செல்லும். குறிப்பாக சில காலம் ஆயி, தன் குளத்தில் இருந்து தண்ணீரை எடுத்து, புதுச்சேரிக்கு தானே சென்று, அங்குள்ள மக்களின் தாகத்தை தீர்த்ததாக வரலாற்றுப் பதிவு கூறுகிறது.

அதுமட்டுமல்ல... புதுச்சேரிக்கு, தண்ணீர் கொடுத்த முதல் பெண் என்கின்ற பெருமையும் ஆயிக்கு உண்டு! வற்றாத குளமாக இன்றும் ஆயிகுளம், புதுச்சேரியின் தாகத்தை தீர்த்து வருகிறது. மற்ற இடங்களிலெல்லாம் சுமார் 30 முதல் 50 அடிவரை தோண்டி போர் போட்டால்தான் தண்ணீர் கிடைக்கும். ஆனால், ஆயி குளத்தில் 11 அடிக்கே ஊற்றுத்தண்ணீர் இன்றளவும் கிடைக்கிறது என்று சொன்னால், ஆச்சரியமாகத்தான் உள்ளது.

இத்தகைய பெருமைவாய்ந்த இந்த கூடப்பாக்கம் ஊரில்,ஸ்ரீ வரதராஜப் பெருமாள் அருள்பாலித்து வருகிறார். இக்கோயில் ஏறத்தாழ 700 ஆண்டுகள் பழமைவாய்ந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன. நன்கு அழகான தாமரை மலர் மீது வரதராஜப் பெருமாள் வீற்றிருக்கிறார்.

நிம்மதியை நல்கும் நிமிலீஸ்வரர்

மேலும், கோயிலின் அமைப்பை வைத்து பார்க்கும்போது, பல்லவர்கள் கட்டியிருக்கலாம் என்று தொல்லியல்துறை கூறுகிறது. தற்போது, வரதராஜப் பெருமாள் அருகில் நிமிலீஸ்வரர் என்னும் பெயர் கொண்ட சிவபெருமான் அருள்பாலித்து வருகிறார். இவருக்கும் மிக பெரிய வரலாறு உண்டு. முன்னொரு காலத்தில் நிமிலீஸ்வரர், கூடப்பாக்கம் இடத்தில் இருந்து சற்று தொலைவில்தான் பிரதிஷ்டை ஆகியிருந்தார். செஞ்சிக் கோட்டையை கைப்பற்றிய முகலாய மன்னர்கள், நிமிலீஸ்வரர் கோயிலை சூறையாடி தகர்த்துவிட்டன. இதில், 300 குடும்பங்களுக்கும் மேல் சிக்கி மாண்டு போனார்கள். தப்பித்த சில குடும்பத்தினர்கள், சூறையாடப்பட்ட சில எஞ்சிய திருமேனிகளை எடுத்துக் கொண்டு, கூடப்பாக்கத்தில் தஞ்சம் புகுந்ததாக வரலாறு பேசுகிறது. அதன் பின்னர், கொட்டகை ஒன்றை அமைத்து 20 ஆண்டிற்கும் மேலாக, நிமிலீஸ்வரரை பூஜித்து வந்திருக்கிறார்கள்.

அதன் பின்னர், கோயில் எழுப்பி 12.12.2010-ஆம் ஆண்டில், நிமிலீஸ்வரர் கோயிலின் கும்பாபிஷேகம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. அதே போல், 1835-ஆம் ஆண்டு, வரதராஜ நாயக்கரால்ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில் புதுப்பித்து கட்டப்பட்டது. மேலும், திவான் கந்தப்ப முதலியார் இக்கோயிலை விரிவாக்கம் செய்துள்ளார். ஒரு காலத்தில், கூடப்பாக்கமே திவான் கந்தப்ப முதலியாரிடம் இருந்துள்ளது. அத்தகைய செல்வாக்கு மிக்கவர். இன்றும் இவரின் வம்சாவளிகள் வாழ்ந்துவருகிறார்கள்.

முதலில் வந்த உற்சவர்

இக்கோயிலின் ராஜகோபுரம் எழுப்பி 15 வருடங்கள்தான் ஆகிறது. இதற்கு முன்னர், மொட்டைக் கோபுரமாக அதாவது பாதி நிலையில் மட்டுமே இருந்தது. இங்குள்ள உற்சவர் ராமரின் திருமேனி மிகவும் பழமைவாய்ந்தது. ஆனால், 15 ஆண்டுகளுக்கு முன்புதான், மூலவரான ராமர் எழுந்தருளினார். ஆகையால், மூலவரைவிட உற்சவர் ராமருக்கு சாந்நித்தியம் அதிகம் என்று பக்தர்களின் நம்பிக்கை. மேலும், இங்கு பிரதிஷ்டை ஆவதற்கு முன்னர், இக்கோயிலின் அடுத்து தெருவில் உள்ள பஜனை மடத்தில்தான் உற்சவர் ராமர் இருந்திருக்கிறார்.

அதன்பின்னரே, இக்கோயிலில் உற்சவர் ராமர் வந்திருக்கிறார். அதே போல், 15 ஆண்டுகள் முன்பு இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டாள் அழகான ஆண்டாள். ஆனால், 1965-ஆம் ஆண்டிலேயே இந்த கோயிலில், அனுமார் பிரதிஷ்டை ஆகிவிட்டார். ஆக, இங்குள்ள அனுமன் சுமார் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த சாந்நித்தியம் கொண்டவர். வடக்குத் திசையை நோக்கி அருள்பாலித்து வருகிறார்.

வடக்குத் திசையை நோக்கி எந்த தெய்வம் இருந்தாலும், அவர் இடத்தில் வேண்டினால் போதும், வேண்டிய வரத்தை தந்தருள்வார். மேலும், இக்கோயிலில் ராமரை கண்டவாறு அனுமன் காட்சியளிக்கிறார். இதுவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது. மிக முக்கியமாக, படிக்கும் குழந்தைகளுக்கு அனுமன் அருள்புரிகிறார். வேண்டியது நிறைவேறினால், வடமாலை சாற்றும் வழக்கமும் உள்ளது.

அதே போல், தாயார் சந்நதி தூணில் ஒரு அனுமன் அருள்பாலிக்கிறார். அவரிடத்தில் தீய சக்தி அணுகாமல் இருக்க, வேண்டிக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பினை உருவாக்கித் தருவார்

வேலைவாய்ப்பினை உருவாக்கித்தரும் வரதராஜபெருமாள், எனக்கும் வேலை வாங்கிகொடுத்திருப்பதாக கோயிலின் பட்டர் (அர்ச்சகர்) தெரிவித்தார். மேலும் அவர், பல தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார். அதன் காரணமாகத்தான் இந்த தொகுப்பை, தொகுத்து வழங்க முடிந்திருக்கிறது. மேலும் அவர் கூறியதாவது;

``சில ஆண்டுகளுக்கு முன்பு கோயிலில் ஜேஜேவென்று கூட்டம் அலைமோதும். வருடம் 365 நாட்களும் பக்தர்கள் வருகை புரிந்து விழாக்களில் பங்கெடுத்துக் கொள்வார்கள். இப்போது பக்தர்களின் வருகை குறைந்துவிட்டது. தொலைக்காட்சி, கைப்பேசி என்று அதில் மூழ்கிவிட்டார்கள். அப்படியில்லாது கோயில் விழாக்களில் பங்கெடுத்து வரதராஜனின் அருளைப் பெறவேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.

விழாக்களும் பிரசாதங்களும்இக்கோயிலில், நவராத்திரி பத்து நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். அதே போல்,ஸ்ரீ ராமநவமியை ஒட்டி பத்து நாட்களும், வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாள் திருவீதிவுலாவும் நடைபெறும். மேலும், புரட்டாசி மாதத்தில் நான்கு சனிக்கிழமைகளிலும் ஸ்வாமி எழுந்தருளி புறப்பாடு சென்று பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். ஆடி வெள்ளி மற்றும் தை வெள்ளி அன்று தாயாருக்கும், ஆண்டாளுக்கும் விசேஷ அலங்கார பூஜை நடைபெறும். சுண்டல், புளியோதரை, சர்க்கரை பொங்கல், தயிர் சாதம், வெண் பொங்கல், மிளகு சாதம், தேங்காய் சாதம் என பக்தர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தளிகை செய்து, அதனை பெருமாளுக்கு நிவேதனம் செய்து, பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்யப்படுகிறது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளை தரிசிக்க முடியாதவர்கள், கூடப்பாக்கம் இந்த வரதராஜப் பெருமாளை தரிசித்து அருள்பெறலாம். இக்கோயிலில் தாயார், பெருந்தேவி என்னும் திருநாமத்திலே பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 2010-ஆம் ஆண்டில், இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.இக்கோயிலைத் தவிர, சக்ரவிநாயகர், புட்லாயியம்மன், ஆனந்த விநாயகர், ராமர் கோயில், தட்சு பிள்ளையார் கோயில்,ஸ்ரீ ராகவேந்திரா கோயில் ஆகிய இந்த கோயில் சுற்றியுள்ள மற்ற கோயிலையும் தரிசிக்கலாம்.

கோயில் திறந்திருக்கும் நேரம்: தொடர்புகொண்ட பின் கோயிலுக்கு செல்லலாம்.

அமைவிடம்: பாண்டிச்சேரியில் இருந்து 7கி.மீ., தூரத்தில் வில்லியனூர். அங்கிருந்து, 4கி.மீ., தூரத்தில் கூடப்பாக்கம் வரதராஜப்பெருமாள் கோயிலை அடையலாம். வில்லி யனூரில் இருந்து பத்துக்கண்ணு வழியாக செல்லும் பேருந்தில் இறங்கி கூடப்பாக்கம் நிறுத்தத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில்தான் கோயில் உள்ளது அல்லது வில்லியனூரில் இருந்து ஆட்டோவிலும் பயணிக்கலாம்.

கோயில் தொடர்புக்கு:ஸ்ரீ நிவாசன் - 9488814059.

ரா.ரெங்கராஜன்