Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

வசந்த நவராத்திரியில் தரிசிக்க வேண்டிய ஸ்ரீசக்ரம் அமைந்த திருத்தலங்கள்

காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்ரத்திற்கே அனைத்து பூஜைகளும் செய்யப்படுகின்றன. லலிதா ஸஹஸ்ரநாமத்தை இயற்றிய வசின்யாதி வாக்தேவதைகள் எண்மரும் இதில் எழுந்தருளியுள்ளனர்.பூந்தமல்லிக்கு அருகே மாங்காட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அர்த்தமேருவுக்கு புனுகு, சந்தனம் சாத்தப்படுகிறது. கும்பகோணம்-மாயவரம் பாதையில் உள்ள பாஸ்கரராயபுரம் ஆனந்தவல்லி அம்மன் முன் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.புதுக்கோட்டை புவனேஸ்வரி தேவி முன் உள்ள மகாமேரு, சாந்தானந்த சுவாமிகளால் ஸ்தாபிக்கப்பட்டது.ஸ்ரீசைலம் பிரமராம்பிகா தேவியின் முன் ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்துள்ளார்.

சென்னை திருவொற்றியூர் தியாகராஜர் ஆலயத்தில் வட்டப்பாறை அம்மனின் உக்கிரம், ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்ரத்தால் தணிக்கப்பட்டது.திருவானைக்காவில் அகிலாண்டேஸ்வரி தேவியின் ஒரு காதில் ஸ்ரீசக்ர தாடங்கத்தையும், ஒரு காதில் சிவசக்ர தாடங்கத்தையும் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். கொல்லூர் மூகாம்பிகையின்மகிமைக்கு காரணம் தேவியின் முன் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீசக்ரமே.சென்னை காளிகாம்பாள் ஆலய மேருவில் அந்தந்த மாத்ருகா அட்சரங்கள் அந்தந்த ஸ்தானத்தில் செதுக்கப்பட்டுள்ளன.சென்னை திருவல்லிக்கேணி அனுமந்தலாலா தெருவில் உள்ள காமகலா காமேஸ்வரி சந்நதியிலும் ஸ்ரீசக்ரப்பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

சென்னை நங்கநல்லூரில் திதிநித்யா தேவிகளின் சக்கரங்களும், விக்கிரகங்களும் இரு புறங்களிலும் திகழ 16 படிகளின் மேல் மகாமேருவுடன் கோலோச்சுகிறாள் ராஜராஜேஸ்வரி. நேபாளம் குஹ்யேஸ்வரி ஆலயத்திலுள்ள தாமரை மொட்டின் நடுவே அமைந்துள்ள ஸ்ரீசக்ரத்தை அனைவரும் தொட்டு பூஜிக்கலாம்; அதில் பொங்கிவரும் தீர்த்தத்தை தலையில் தெளித்துகொண்டு பிரசாதமாவும்உட்கொள்ளலாம்.திருப்போரூர் முருகன் ஆலய பிராகாரத்தில் சிதம்பர சுவாமிகள் நிறுவிய சக்கரத்தை தனி சந்நதியில் தரிசிக்கலாம். தாம்பரம், மாடம்பாக்கத்திலுள்ள தேனுபுரீஸ்வரர் ஆலய தேனுகாம்பாள் சந்நதியில் ஸ்ரீசக்ரம் உள்ளது.

தாம்பரம்& ஸ்ரீபெரும்புதூர் பாதையிலுள்ள பண்ருட்டிக்கண்டிகை தலத்தில் பூரணமகாமேருவிற்கு இருபுறங்களிலும், வாராஹி, மாதங்கி மற்றும் திதி நித்யா தேவியர் பதினைந்து பேரும் யந்திர வடிவாக அருள்கிறார்கள். திருச்சி மலைக்கோட்டையில் சுகந்த குந்தளாம்பாளின் சந்நதி ஸ்ரீசக்ர வடிவில் அமைந்திருக்கிறது.கேரளாவில் ஓணத்தக்குளம் அருகே உள்ள செட்டிக்குளத்தில் அம்பிகை சந்நதியில் ஸ்ரீசக்ரம் பொருத்தப்பட்டிருக்கிறது.காசி ஹனுமான் காட்டில் முத்துஸ்வாமி தீட்சிதர் ஆராதனை செய்த சிவலிங்கத்தின் உச்சியில் ஸ்ரீசக்ரம் பொறிக்கப்பட்டுள்ளது.மன்னார்குடி ராஜகோபாலன், தேவியின் அம்சமான கோபாலஸுந்தரியாக விளங்குகிறார். அதனால் அவர் திருவடிகளில் ஸ்ரீசக்ரம் வைத்து வழிபடப்படுகிறது.

திருவிடைமருதூரில் மூகாம்பிகை முன் மகாமேரு பிரதிஷ்டைசெய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், ரமணாஸ்ரமத்தில் ஸ்ரீசக்ரத்திற்குத் தனி சந்நதி உள்ளது.தஞ்சாவூருக்கு அருகேயுள்ள புன்னைநல்லூர் மாரியம்மனின் முன் சக்கரப் பிரதிஷ்டை செய்தவர், மகான் சதாசிவபிரமேந்திரர்.காவேரிக்கரையில் ஸ்ரீரங்கப்பட்டினம் என்ற இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. மற்றும் மைசூரில் இருந்து சுமார் 17 கி.மீ-. தொலைவில் உள்ளது. சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலயம். மைசூர் மும்மடி கிருஷ்ணராஜ உடையார் மகாராஜாவால் நிறுவப்பட்டுள்ளது. பக்தர்களின் பிரார்த்தனைகள் சொன்ன அடுத்த நிமிடமே நிறைவேறுவதால் இங்குள்ள அம்பிகைக்கு ‘நிமிஷாம்பாள்’ என்ற சிறப்பு பெயர் நிலவி வருகிறது. இங்கு கல்லால் அமைக்கப்பட்ட ஸ்ரீசக்கரத்தைக் காணலாம்.

ஏற்காடு, நாகலூரில் அமைந்துள்ளது ஸ்ரீவித்யா மகாமேரு ஆலயம். கருவறையில் ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரி அம்மன் வீற்றிருக்கிறாள். ஸ்ரீசக்கர வடிவில் கோபுரம் அமைந்துள்ளது இந்த ஆலயத்தின் சிறப்பு.சங்கரன் கோவில் தலத்தில் ஸ்ரீகோமதி அம்மனும், ஸ்ரீசங்கர நாராயணரும் அருளாட்சி செய்கின்றனர். ஸ்ரீகோமதி அம்மன் சன்னதியில் இருந்து (மூலஸ்தானம்) 10 அடி தொலைவில் அமைந்திருக்கும் ஸ்ரீசக்கரக் குழி கூடுதல் சிறப்பு சேர்க்கிறது. அம்பாளின் திருப்பார்வையில் உள்ள இந்த சக்கரக் குழியில் அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி தியானித்து பிரார்த்தனை செய்தால் எண்ணிய காரியம் அனைத்தும் நிறைவேறும்.

திருவாரூர் அட்சர பீடமும், சக்ரமும், சைவர்களின் தலைமைப் பீடங்களில் ஒன்றானதும் ஆகும். திருவாரூரில் உள்ள தியாகராஜசுவாமி கோயிலில் உள்ள கமலாம்பிகை சந்நதி சாக்தர்களால் பெரிதும் கொண்டாடப்படும் சந்நதியாக இருக்கிறது. இவளை சக்ரராஜ சிம்மாசனி என்று போற்றுகின்றனர். இங்குள்ள சந்நதியில் அட்சர பீடம் என்னும் பீடம் உள்ளது. அதில் அ முதல் க்ஷ வரை அனைத்து எழுத்துக்களும் எழுதிய பிரபா மண்டலத்துடன் கூடிய ஸ்ரீசக்ரம் வழிபாட்டில் உள்ளது. இங்குள்ள அம்பிகையே ஸ்ரீசக்கரத்தில் அமர்ந்துள்ளதாக கூறுகின்றனர்.குற்றாலத்து தரணி பீடம் என்னும் மகாமேரு சந்நதி பராசக்தி பீடமான தரணி பீடம் ஆகும் திருக்குற்றாலத்திலுள்ள குற்றாலநாதர் ஆலயத்தில் அவருக்கு இடப்புறம் தனிச் சந்நதியில் அமைந்துள்ளது. பெரிய கற்பலகையில் மேரு வடிவாக ஸ்ரீசக்ரம் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறுகின்றன.