சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் ஆவணி மாதத்தில், மகாலட்சுமியை இல்லத்திற்கு வரவேற்கும் மங்களகரமான விரதமாக வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆடி அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக் கிழமையே வரலட்சுமி விரத நாளாகக் கொண்டாடப்படுகிறது. திதி மாறலாம்; தேதி மாறலாம்; நட்சத்திரமும் யோகங்களும் ஆண்டுக்கு ஆண்டு மாறக் கூடும். ஆனால் இந்த விரதம் கடைபிடிக்கப்படும் வெள்ளிக் கிழமை மட்டும் மாறாது. அதனால்தான், ஆவணி மாத வளர்பிறை பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பு தினமாக எப்போதும் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, ஆவணி மாதம் நான்காம் தேதி, 21.8.2026 வெள்ளிக் கிழமை வரலட்சுமி விரதம் கடை பிடிக்கப்படுகிறது. சில பகுதிகளில், 28.8.2026 அன்றும் வரலட்சுமி விரதம் வைத்திருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலோர் ஆவணி மாதம் நாலாம் தேதி வரலட்சுமி நோன்பு வைத்திருக்கின்றனர்.
பூஜை நேரங்கள்
வெள்ளிக்கிழமை விரதமாக இருப்பதால், அதற்கு முந்தைய நாளான வியாழக்கிழமை மாலையிலேயே வாசலில் கோலமிட்டு, மங்களப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு பலகையில் கலசத்தை வைத்து, அதில் மகாலட்சுமியை ஆவாகனம் செய்து, மங்கள இசை, தீபம், கற்பூரம் ஆகிய உபசாரங்களுடன் இல்லத்திற்கு அழைத்து வந்து பூஜை அறையில் பிரதிஷ்டை செய்வது வழக்கமாகும். இவ்வாறு மகாலட்சுமியை வரவேற்க விரும்புவோர், வியாழக்கிழமை மாலை 5.10 மணி முதல் 6.10 மணி வரை இந்த நிகழ்வை நடத்தலாம்.அடுத்த நாள் வெள்ளிக்கிழமை காலை 6.10 மணி முதல் 7.10 மணி வரை வரலட்சுமி விரதப் பூஜையைச் செய்யலாம். மாலை பூஜையை 5.10 மணி முதல் 6.10 மணி வரை செய்யலாம். இரவுப் பூஜையை 8.10 மணி முதல் 9.10 மணி வரை நடத்தலாம்.
நிறைவாக, அடுத்த நாள் சனிக்கிழமை காலை 7.10 மணி முதல் 7.40 மணி வரை புனர்பூஜை செய்து, கலசத்தில் ஆவாகனம் செய்யப்பட்ட மகாலட்சுமிக்கு உரிய உபசாரங்களை நிறைவு செய்து, பிரசாதம் வழங்கி, விரதத்தை மங்களகரமாக முடித்துக் கொள்ளலாம். மேற்கண்ட நேரங்கள் பொதுவாக பூஜைக்கு ஏற்ற ராகு காலம் எம கண்டம் இல்லாத சுப ஹோரை நேரங்கள். தங்கள் குடும்ப வழக்கம் அல்லது பெரியோர்கள் கூறிய முறையின்படியும் பூஜையை கடைபிடிக்கலாம்.
வரலட்சுமி விரதம் மிகவும் எளிமையானது. வியாழக்கிழமையன்று வீட்டை நன்றாகக் கழுவித் துடைத்து, தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். தரை மட்டுமல்ல, கூரையிலும் தூய்மையைப் பராமரிக்க வேண்டும். வீட்டின் வாசலில் பெரிய மாக்கோலம் இட வேண்டும். இயன்றால் வண்ணக் கோலமாக அமைத்தால் இன்னும் சிறப்பு. தூய்மையும், அழகும், மங்களமும் நிறைந்திருக்கிறதோ, அங்கே திருமகள் மகிழ்ச்சியுடன் எழுந்தருளுவாள் என்பது நம் முன்னோர் நம்பிக்கையாகும். நிலைவாசல் தொடங்கி வீட்டின் அனைத்து கதவு நிலைகளிலும் மஞ்சளும் குங்குமமும் இட வேண்டும்.
பூஜை அறை
அடுத்து பூஜை அறையைத் தூய்மைப்படுத்த வேண்டும். சுவாமி படங்களையும், சிறு விக்கிரகங்களையும் நன்றாகத் துடைத்து, மஞ்சளும் குங்குமமும் இட்டு, மலர்களால் அலங்கரிக்க வேண்டும். வீட்டின் எந்தப் பகுதியிலும் குப்பை, கூளம் அல்லது அசுத்தம் இருக்கக் கூடாது. கலசம் வைப்பதற்காக ஒரு சுத்தமான பலகையை முன்கூட்டியே தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல், குத்துவிளக்கை வைப்பதற்கும் ஒரு சிறிய பலகையையோ, பீடத்தையோ அல்லது மரப்பலகையையோ சுத்தப்படுத்தி ஆயத்தமாக வைத்திருக்க வேண்டும். குத்துவிளக்கை எந்தக் காரணத்தைக் கொண்டும் வெறும் தரையில் வைக்கக் கூடாது. குத்துவிளக்கிற்கும் மஞ்சளும் குங்குமமும் இட்டு, மலர்ச்சரம் அல்லது பூமாலையால் அலங்கரித்து அழகுபடுத்த வேண்டும். வரலட்சுமி பூஜை நாளில் குத்துவிளக்கின் ஐந்து முகங்களிலும் தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்புடையது. அதோடு, ஒரு தனி அகல் விளக்கில் பசு நெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்தால் இன்னும் விசேஷமான பலன் உண்டாகும்.
விளக்கை ஏற்றி வைத்துவிட்டாலே, மங்களகரமான மகாலட்சுமி அந்த இடத்தில் எழுந்தருளிவிட்டாள் என்றே பொருள். விளக்கு ஏற்றும்போது அனைவரும் சொல்லக்கூடிய சிறப்பான மந்திரம்:
``சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்கியம் தனசம்பதா
சத்ருபுத்தி வினாசாய தீபஜ்யோதிர் நமோஸ்துதே’’
பொருள்: மங்களத்தையும், நன்மைகளையும் தருவது தீபம்.நல்ல உடல் நலத்தையும், செல்வத்தையும் தருவது. அறியாமையை நீக்கி, தீய எண்ணங்களை அழிக்கும் ஒளி. அந்த ஜோதியை வணங்குகிறோம். இந்த மந்திரமும் சொல்லலாம்
``தீபஜ்யோதி: பரப்ரஹ்மா
தீபஜ்யோதிர் ஜனார்த்தன:
தீபோ ஹரது மே பாபம்
தீபஜ்யோதிர் நமோஸ்துதே’’
இந்த மந்திரத்தின் பொருள்: தீபத்தின் ஜோதி பரப்பிரம்மமே. அந்த ஒளியே ஜனார்த்தனனாக விளங்குகிறது. அந்தத் தெய்வீக ஒளி என்னுடைய பாவங்களை நீக்கட்டும். அந்தத் தீப ஜோதியை நான் பணிந்து வணங்குகிறேன். ஆகவே, வரலட்சுமி விரத நாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் பக்தியுடன் தீபம் ஏற்றி இந்த மந்திரத்தைச் சொல்லி வழிபட்டால், இல்லத்தில் இருள் அகன்று ஒளியும், வறுமை அகன்று வளமும், கலக்கம் நீங்கி அமைதியும் நிலைக்கும்.
கலசத்தில் மகாலட்சுமி
வரலட்சுமி விரதத்தின் மையமாக விளங்குவது கலச ஸ்தாபனம் ஆகும். வெள்ளி, செம்பு அல்லது பித்தளையால் ஆன ஒரு தூய்மையான கலசத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் சுத்தமான நீரை நிரப்பி, ஏலக்காய், பச்சைக் கற்பூரம், கிராம்பு போன்ற நறுமணப் பொருட்களை சேர்க்கலாம். பின்னர் கலசத்திற்கு மஞ்சளும் குங்குமமும் இட்டு, நூல் அல்லது பூச்சரம் சுற்றி மங்களகரமாக அலங்கரிக்க வேண்டும்.
அதன்பிறகு கலசத்தின் வாயில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட மாவிலைகளை வைத்து, அதன் மேல் மஞ்சள் பூசப்பட்ட தேங்காயை அமர்த்த வேண்டும். கலசத்தை வைப்பதற்காக ஒரு மனைப்பலகையைத் தயார் செய்து, அதன் மேல் ஒரு வாழை இலையை விரிக்க வேண்டும். முதலில் நெல்லை பரப்பி, அதன் மீது மற்றொரு இலையை வைத்து பச்சரிசியைப் பரப்பலாம். அந்த அரிசியின் மீது வலது கை சுட்டுவிரலால் ``ஓம்’’ அல்லது ``ஸ்ரீ ’’ என்ற மங்கள அட்சரத்தை எழுதி, அதன் மேல் கலசத்தை பிரதிஷ்டை செய்ய வேண்டும். நெல் கிடைக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டியதில்லை. ஒரு நுனி வாழை இலையின் மேல் பச்சரிசியை மட்டும் பரப்பி, அதன்மேல் கலசத்தை வைத்தாலும் போதுமானது.
தேங்காயின் முன்புற மட்டையைச் சீவி, அதை நன்கு வழுவழுப்பாகச் சுத்தம் செய்து, மஞ்சள் பூச வேண்டும். பின்னர் அதில் திருமகளின் திருமுகத்தை வரைந்து, கிரீடம் சூட்டி, கம்மல், மூக்குத்தி, நெற்றிச்சுட்டி, மாலை போன்ற ஆபரணங்களால் அலங்கரிக்கலாம். கலசத்தின் கழுத்திலிருந்து புதிய பட்டுப் பாவாடையையோ அல்லது பட்டுப் புடவையையோ கொசுவம் வைத்து அணிவித்து, மகாலட்சுமியை ஒரு சுமங்கலித் தாயாக அலங்கரிக்க வேண்டும். தாயாரின் முகத்தை வரைவதற்குப் பதிலாக, வெள்ளியிலும், தங்க முலாம் பூசப்பட்டும் கடைகளில் கிடைக்கும் தாயாரின் முகங்களை வாங்கிப் பயன்படுத்தலாம்.
எத்தனை வேளை பூஜை செய்வது?
முதல் நாள் வியாழக்கிழமை மாலை விளக்கு வைக்கும் பிரதோஷ வேளையில், திருமகளை அழைத்து பூஜை அறையில் எழுந்தருளச் செய்து பாயசமோ அல்லது சர்க்கரை கல்கண்டு, பழங்கள் வைத்தோ நிவேதிக்கலாம். இரவு திருக்காப்பு செய்வதற்கு முன் அவசியம் பால் நிவேதனம் செய்ய வேண்டும். அடுத்த நாள் விசேஷமான நிவேதனங்கள் செய்து பூஜிக்க வேண்டும். மாலை ஏதேனும் ஒரு சுண்டல் வைத்து நிவேதனம் செய்யலாம். இரவு குங்குமப்பூ ஏலக்காய் போட்ட பால் நிவேதனம் செய்ய வேண்டும். மறுநாள் காலை யதாஸ்தான புனர்பூஜைக்கு ஏதேனும் சாத்துக்குடி, மாதுளம், கொய்யா வைத்து பூஜை செய்யலாம். ஒரே நாள் பூஜை என்று சொன்னால் காலையில் ஒரு பூஜை, மத்தியானம் பிரதான பூஜை, மாலையில் புனர்பூஜை செய்து, யதா ஸ்தானம் செய்துவிடலாம். மங்கலப் பொருள்களாக மஞ்சள் பூசிய நோன்புச் சரடு, மஞ்சள், குங்குமம், புடவை, ரவிக்கை, வளையல், கண்ணாடி, சீப்பு முதலிய பொருள்களை வைக்க வேண்டும் நிவேதனமாக பொங்கல், பாயசம், வடை, கொழுக்கட்டை, இனிப்புகள், சுண்டல், பழங்கள், தயிர், பசும்பால், நெய், தேன் படைக்கலாம். இதில் பால், நெய், தயிர், தேன் மகாலட்சுமிக்கு மிகவும் விருப்பமான பொருள்கள். ஹோமம் செய்வதாக இருந்தால் தேனைப் பயன்படுத்துவார்கள்.
பாராயணம் செய்ய வேண்டிய ஸ்தோத்திரங்கள்
வரலட்சுமி பூஜையில் அலங்காரமும் நைவேத்தியமும் எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு மந்திர பாராயணமும் முக்கியமானதாகும். பக்தியுடன் உச்சரிக்கப்படும் ஒவ்வொரு நாமமும், ஒவ்வொரு ஸ்லோகமும் மகாலட்சுமியின் அருளைப் பெறுவதற்கான வழியாக அமைகிறது. வரலட்சுமி விரதத்தன்று பாராயணம் செய்ய ஏற்ற நூல்கள் மற்றும் ஸ்தோத்திரங்கள் பல உள்ளன. அவற்றில் முக்கியமானவை:
1.ஸ்ரீ லட்சுமி சஹஸ்ரநாமம்
2.ஸ்ரீ ஸ்துதி (ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளியது)
3.ஸ்ரீ ஸ்தவம் (கூரத்தாழ்வான் அருளியது)
4. மகாலட்சுமி அஷ்டகம்
5. மகாலட்சுமி அஷ்டோத்திர சதநாமாவளி
6. மகாலட்சுமி போற்றி மந்திரங்கள்
7. மகாலட்சுமி காயத்ரி மந்திரம்
ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் மகாலட்சுமியின் அருளைப் பெறுவதற்கான அற்புதமான துதியாக விளங்குகிறது.
நோன்பு கயிறு
அன்று மஞ்சள் சரடு வைத்து துதிக்க வேண்டும். அதை கையிலே கட்டிக்கொள்ள வேண்டும். அது ஒன்பது இழைகளால் இருக்கும். ஒன்பது முடிச்சு போட்டு மஞ்சள் பூசி இருக்கும். பூஜை எல்லாம் நிறைவேறிய பின் மிக இந்த மஞ்சள் நோன்புச் சரடை அணிய வேண்டும். பக்தியோடு நோன்புச்சரடை எடுத்து சுமங்கலி பெண்கள் வலது கரத்தில் அணிவார்கள். (திருமணம் போன்ற சுப காரியங்களில் கங்கணதாரணம் உண்டு. அப்பொழுது பெண்கள் இடது கையில் கட்டுவார்கள்) திருமணமான பெண்களுக்கு கணவன் நோன்புச்சரட்டை அணிவிக்க வேண்டும். “நவ தந்து ஸமா யுக்தம் நவக்ரந்தி சமன்விதம் பத்ரீயாம் தட்ஷிணே ஹஸ்தேதோரகம்ஹரிவல்லபே” என்று சொல்லி கட்டவேண்டும். `மஹா லஷ்மியே, ஒன்பது இழைகளும், முடிச்சுகளும் கொண்ட மஞ்சள் சரடை உன் பிரசாதமாக என் வலது கையில் கட்டிக்கொள்கிறேன். எனக்கு அருள் புரிய வேண்டும்” என்பது பொருள். திருமணமாகாத பெண்களுக்கு சுமங்கலிப் பெண்கள் ஆசி வழங்கி கட்டி விடுவார்கள், சிலர் தானே அணிந்து கொள்வதும் உண்டு. அவரவர்கள் குல வழக்கப்படி செய்யலாம்.



