Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வளங்களை தட்டாது தரும் வராஹர்

வராக ஜெயந்தி 7-4-2026

வராக அவதாரத்தின் கதை இதுதான்

ஒரு சமயம், மகரிஷிகள் நால்வர் மகா விஷ்ணுவைத் தரிசனம் செய்ய வைகுந்தம் வந்தனர். அங்கு காவல்புரிந்த ஜெயன், விஜயன் என்ற இரு காவலர்கள் மகரிஷிகளைத் தடுத்தார்கள்.அந்த ரிஷிகள் கோபம் அடைந்து, ‘‘நீங்கள் பூலோகத்தில் பிறக்கக்கடவீர்கள்” என்று சாபமிட்டார்கள்.ஜெய, விஜயர்கள் முனிவர்களைப் பணிந்து வணங்கி, ‘‘உங்கள் சாபப்படி நாங்கள் எப்பிறவி எடுத்தாலும் மகாவிஷ்ணுவின் திருநாமத்தை மறவாதிருக்க அருள் புரிய வேண்டும்” என்று கேட்டனர்.

விஷ்ணு அங்கே தோன்றி, முனிவர்களிடம், ‘‘இவர்கள் செய்த தவறுக்குத் தாங்கள் அளித்த சாபம் சரியானது தான்.இவர்கள் இருவரும் பூலோகத்தில் கொடிய அசுரர்களாக மூன்று முறை பிறந்து, பின், நம் அருளினால் நம்மையே அடைவார்கள்” என்று கூறினார்.அதன்படி, இருவரும் கசிப முனிவருக்கும், அதிதிக்கும் பிள்ளைகளாகப் பிறந்தார்கள். முதலில் பிறந்தவன் இரண்யகசிபு.அடுத்துப் பிறந்தவன், இரண்யாட்சன். இரண்யகசிபு பிரம்மனை நோக்கித் தவம் இருந்து, ‘எவராலும், எந்த ஆயுதத்தாலும் தனக்கு மரணம் நேரிடக் கூடாது’ என்று வரம் பெற்று, மூன்று உலகங்களையும் தன்வசப்படுத்திக் கொண்டான். இரண்யாட்சனும் பிரம்மனிடம் வரங்களைப் பெற்றுப் பலசாலியாகி, தேவர்களைச் சிறை பிடித்தான்.அவர்கள் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்தது.

இரண்யாட்சன் ஆணவம் அதிகமாகி, வருண பகவானை வம்புக்கு இழுத்தான். அதற்கு வருண பகவான், ‘‘அசுரனே, விஷ்ணு பகவான் வராக உருவம் எடுத்து வருவார். அவரிடம் போராடு” என்று சொன்னார். அவன் வராக மூர்த்தியைத் தேடிப் பல திசைகளிலும் அலைந்து திரிந்தான். நீர்ப் பிரளயத்தில் பூலோகம் மூழ்கியதால், பிரம்மா மகாவிஷ்ணுவை நோக்கித் தவமிருந்தார். அப்போது அவருடைய சுவாசத்திலிருந்து வெண்ணிறமாக சிறிய வராகம் (பன்றி) ஒன்று உருவாகிச் சிறிது சிறிதாக வளர்ந்து பிரம்மாண்டமான உருவம் எடுத்தது.

பிரளயத்தில் மூழ்கியிருக்கும் பூமியை வெளியே கொண்டுவரச் சமுத்திரத்தில் குதித்தது. இச்சமயத்தில், எங்கு தேடியும் வராக மூர்த்தியைக் காணாததால், இரண்யாட்சன் சோர்வடைந்து, அசுர லோகத்தில் சுகமாக இருந்தான். அப்போது நாரதர் அங்கே தோன்றி, ‘‘இரண்யாட்சா, மகாவிஷ்ணு வராக உருக் கொண்டு நீரில் மூழ்கியிருக்கும் பூமியை மேலே தூக்கிக் கொண்டிருக்கிறார்” என்று சொன்னார். உடனே அவன் கதாயுதத்தைக் கையில் ஏந்தியபடி விரைந்தான். வராகமூர்த்தி தமது கோரைப் பற்களால் பூமியைத் தூக்கியபோது இரண்யாட்சன் தன் கதாயுதத்தால் அடித்தான். இருவருக்கும் கடும் போர் உண்டானது.இரண்யாட்சன் அடித்த அடியால், மகா விஷ்ணுவின் கதாயுதம் கையிலிருந்து நழுவி விழுந்தது.

தேவர்கள் அனைவரும் அதிர்ச்சியுற்றனர். இரண்யாட்சன் மீண்டும் தன் கதாயுதத்தால் தாக்க, மகாவிஷ்ணு தம் இடது காலால் அதைத் தட்டிவிட்டு, தம் கையில் சக்கராயுதத்தை வரவழைத்தார்.

இரண்யாட்சன் சூலாயுதத்தை ஏவினான். சக்கராயுதத்தால் சூலாயுதமும் பொடிப் பொடியானது. இரண்யாட்சன் ஆவேசமாக மகாவிஷ்ணுவின் மார்பின் மீது ஓங்கிக் குத்தினான். இருவருக்கும் உக்கிரமான போர் மூண்டது. இரண்யாட்சனால் சமாளிக்க முடியவில்லை.

பின், அவன் மறைந்து, ஆகாயத்திலிருந்து கற்களையும், அனேகவித பாணங்களையும் கொண்டு தாக்கினான்.சிறிது நேரம் அவனுடைய ஆற்றலை விளையாட்டாக வேடிக்கை பார்த்தார் மகா விஷ்ணு. அசுரர்கள் பலர், பயங்கரமான உருவங்களில் இரண்யாட்சனுக்கு உதவியாக வந்தனர். அவர்கள் அத்தனை பேரையும் வதம் செய்தார் மஹாவிஷ்ணு.இனியும் காலம் தாழ்த்துவது சரியில்லை என்று எண்ணிய மகாவிஷ்ணு அவனை இறுகப் பிடித்துத் தலையின் மீது ஓங்கி அடிக்க, இரத்தத்தைக் கக்கிக் கொண்டு பூமியின் மீது விழுந்து மடிந்தான். அனைவரும் மகாவிஷ்ணுவைத் தொழுதனர்.இது தான் திருமாலின் 3வது அவதாரமான வராக அவதாரம் பற்றியது.

யாகங்களும் வராகரும் வராகர் பொதுவாக ஆதி வராகர், யக்ஞ வராகர் மற்றும் பிரளய வராகர் ஆகிய மூன்று வடிவங்களில் வணங்கப்படுகிறார். வராக பெருமானுக்கு உள்ள தனிச்சிறப்பு, யாகங்களைக் காப்பாற்றுகின்ற மூர்த்தி. யாகங்கள் நிறைவேற வேண்டும் என்று சொன்னால் அங்கே வராக பெருமாள் யக்ஞ வராகராய் ஆவாஹனம் ஆக வேண்டும். 120 (10 யோசனை) கிலோ மீட்டர் அகலமும் 1200 கிலோ மீட்டர் உயரமும் கொண்டவராக மலையைப் போன்ற பெரிய உருவோடு வெண்மையான கூர்மையான பற்களைக் கொண்டு தீயைப் பொலிகின்ற ஒளியும் சூரியனைப் போல ஜொலிக்கும் கண்களும் கொண்டு விளங்கியதாக இந்தப் புராணத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது. இந்த வராக மூர்த்தியின் வடிவம் வேத வேள்வியின் ஒவ்வொரு அங்கத்திற்கும் ஒப்பிடப்படுகிறது. அவரே ஒரு வேள்விச் சாலை. உபநிடதங்களும் அவற்றின் மறைபொருளும் அவருக்கு இருக்கை. சூரியனும் சந்திரனும் அவரது இருகண்கள். வேதத்தின் சாகைகள் அவருடைய காதணிகள்.

அவருடைய நீண்ட முகம் வேள்வியின் சுருக் அதாவது ஆஜ்யம் விடுகின்ற கரண்டி. அவருடைய பெருத்த ஓசை சாமவேதம்.அவருடைய வடிவம் உண்மையும் ஒழுக்கமும் நிறைந்த வடிவம். வேத மேடையே அவரது இதயம். சோமபானமே அவரது குருதி எப்படி வர்ணிக்கப்படுகிறது நாணயங்களில் வராகன் ஸ்ரீ முஷ்ணம் வராகருக்கென்றே உள்ள தலம். அக்கால அரசர்கள் பலரும் தங்கள் ஸ்தூபிகளில் வராகர் உருவைப் பயன்படுத்தினர். நாணயங்கள் வராகர் பெயரால் வராகன் என்றே வழங்கப்பட்டன. வராகி மிகிரர் என்ற பெயரில் உள்ள ரிஷி ஜோதிட சாஸ்திரத்தை வரையறை செய்து கொடுத்தார். அரசு முத்திரைகளில் வராகர் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டன.

வராக தலங்கள்

பெருமாள் கோயில் என்று வழங்கப்படும் காஞ்சி வரதர் சந்நதியிலும், மேல்கோட்டை திருநாராயணபுரம் கோயிலிலும், மாமல்லபுரத்திலும், திருமலை, திருவிடவெந்தை, திருக்கடல்மல்லை, ஸ்ரீ வில்லி புத்தூர், கல்லிடைக்குறிச்சி முதலிய தலங்களிலும் வராகர் சந்நதிகள் உள்ளன. காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயக் கருவறை கோஷ்டத்தில் உள்ள கள்வர் பெருமான், ஆதிவராஹர் என்றே வணங்கப்படுகிறார்.

இந்த சந்நதி 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று! தன்னை இகழ்ந்த மகாலட்சுமியை அரூப லட்சுமியாக மாறி காமாட்சி அம்மனின் சந்நதியின் வலது கோஷ்டத்தில் தவமியற்றி காமாட்சியின் குங்குமத்தை அவள் திருமேனியில் பக்தர்கள் தூவ அதனால் செளந்தர்யலட்சுமியாக மாறி காமாட்சியின் வலது கோஷ்டத்தில் அமர்ந்த தன் மனைவியைக் காண வந்த திருமாலே கள்வர் பெருமான் எனும் ஆதிவராஹர்.

திருமலை (திருப்பதி) ஸ்வாமி புஷ்கரணியில் வராஹமூர்த்தி விசேஷமாக வழிபடப்படுகிறார். ஸ்ரீனிவாசருக்கு இடம் தந்த மூர்த்தியாதலால் முதல் நிவேதனம் இந்த வராஹருக்கே செய்யப்படுகிறது. திருமலை திருப்பதி தரிசனம் செய்யுமுன் அலர்மேல்மங்கை தாயாரை தரிசித்து பின் வராஹமூர்த்தியை தரிசித்தபின்னே திருமலையப்பனை தரிசிக்கவேண்டும் என்பது ஐதீகம். செங்கல்பட்டை அடுத்த திருமலைவையாவூர் தலத்தில் அற்புத வடிவில் லட்சுமி வராஹ மூர்த்தி அருளாட்சி புரிகிறார்.

கேரளம், திருவனந்தபுரத்தில் அனந்தபத்மநாப சுவாமி ஆலயத்திற்கு 1 கி.மீ. தொலைவில் லட்சுமியுடன் வராஹ மூர்த்தி திருக்கோயில் கொண்டருள்கிறார். வடஇந்திய மதுராநகரில், துவாரகீஷ் ஆலயத்திற்கு அருகில் ஆதிவராஹ மூர்த்திக்குத் தனிக்கோயில் உள்ளது. செந்நிறத் தோற்றம் கொண்ட இவரை லால் வராஹர் என்கிறார்கள். இவருக்குச் சற்றுத் தொலைவில், வெண்ணிறத் தோற்றம் கொண்ட ஸ்வேதவராஹ மூர்த்தியும் ஆலயம் கொண்டுள்ளார்.

ஜெய்ப்பூர், கேந்த்ரபராவில், கர்டீசன்ஸ் தெருவின் வடக்கு முனையில் யக்ஞவராஹ மூர்த்தியின் ஆலயம் உள்ளது. இத்தலம் காடக்ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. விஜயநகரப் பாணியில் அமைந்துள்ள ஆலயம் இது.கேரளம், எர்ணாகுளம் - கொடுங்கல்லூர் பாதையில், வரபுழா எனும் தலத்தில் 450 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் நரசிம்ம மூர்த்தியுடன் வராஹமூர்த்தியும் தரிசனம் தருகிறார்.

கேரளம் - கொச்சினிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள சேரை எனும் தலத்தில் அழீக்கல் வராஹ மூர்த்தி திருவருள் புரிகிறார்.புஷ்கரில் உள்ள பிரசித்தி பெற்ற பிரம்மன் ஆலயத்தில் வராஹமூர்த்தி தனி சந்நதியில் அருள்கிறார். 1727ம் ஆண்டு ராஜா சுவாமி ஜெய்சிங் எனும் ஜெய்ப்பூர் மன்னரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்தியாம் இவர். விசாகப்பட்டினம், வால்டேரில் உள்ள சிம்மாசலத்தில் லட்சுமிநரசிம்மரும் வராஹ மூர்த்தியும் இணைந்து ஒரே உருவில் அருள்கிறார்கள். ஆண்டு முழுதும் சந்தனக் காப்பிலேயே அருளும் மூர்த்தி இவர்.

ஹரியானா, ஜின்ட் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் சுயம்பு வராஹர் ஆலயம் உள்ளது. அதனாலேயே அந்த தலம், வராஹ கிராமம் என்றழைக்கப்படுகிறது. மைசூர், மாண்ட்யா மாநிலத்தில் உள்ள கல்லஹள்ளி பூக்கனகரேவில் பூவராஹர் ஆலயம் உள்ளது.கேரளம், இடுக்கி மாவட்டம் பன்னூர் தொடுபுழாவில் வராஹ மூர்த்திக்கென தனி ஆலயம் உள்ளது. அழகிய வடிவில் வராஹ மூர்த்தியை இங்கு தரிசிக்கலாம்.மத்தியபிரதேசத்தில் உள்ள கஜுரோஹா ஆலயத்தில் வராஹமூர்த்திகளை தரிசிக்கலாம்.

ஒடிசா, கேந்த்ரபரா மாவட்டத்தில் உள்ள அவுல் எனும் ஊரில் லட்சுமி வராஹர் கோயில் கொண்டருள்கிறார். ராஜஸ்தான், ஜலோர் மாவட்டத்தில் உள்ள பின்மல் நகரத்தின் மையத்தில் வராஹ் ஷ்யாம் எனும் பெயரில் வராஹ மூர்த்தி அருள்கிறார்.

முஸ்தா சூரணம்

ஆச்சாரியர்கள் வராக அவதாரத்தில் மேன்மையை மிக அற்புதமாகப் பேசுகின்றார்கள். பகவான் அவதாரம் எடுக்கும் பொழுது அந்த அவதாரத்துக்கு ஏற்ப அத்தனை இலக்கணங்களும் பொருந்தும் படியாக ஆகிவிடுகின்றார். இதற்கு “மெய்ப்பாடு” என்று பெயர். வராக அவதாரத்தில் அவருடைய உணவு என்ன என்று சொன்னால் நிலத்திலேயே அடியில் முளைக்கக் கூடிய கோரைக்கிழங்கு.

தண்ணீர் நிறைந்து உள்ள சதுப்பு நிலங்களில் உண்டாகும் இந்த கோரைக்கிழங்கு சரீர வியாதிகளைப் போக்க வல்லது. கபம், பித்தம், ஜுரம் முதலியவை இந்த மருந்தினால் தீர்ந்துவிடும். வராக சேத்திரம் ஆகிய ஸ்ரீ முஷ்ணத்தில் இந்த முஸ்தா கிழங்கு சூரணத்தை பிரசாதமாகத் தருவர். அதனை சர்க்கரையோடு அல்லது வெல்லத்தோடு சேர்ந்து உண்டால் நம்முடைய உடம்பில் இருக்கக்கூடிய பல்வேறு விதமான நோய்களும் நீங்கிவிடும். ஆசாரியர்கள் இந்த கோரைக்கிழங்கை முத்தக்காசு என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார்கள்.

சங்கல்ப மந்திரம்

நாம் தினசரி சங்கல்ப மந்திரம் சொல்கிறோம்.அதில் வராகப் பெருமான் பற்றிய குறிப்பு வருகிறது. ‘‘துவிதீய பரார்த்தே ஸ்ரீ சுவேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே கலியுகே ப்ரதமே பாதே” என்று சங்கல்ப மந்திரம் கூறுகிறோம். இது கலியுகத்தின் முதல் பாதம் ஆகும். மனிதர்களின் ஒரு ஆண்டு தேவர்களுக்கு ஒரு நாள். தேவர்களுக்கு 365 நாள் ஒரு தேவ ஆண்டு.1200 தேவ ஆண்டு கலியுகம். 10 கலியுகம் ஒரு மகாயுகம். ஆயிரம் மகாயுகம் ஒரு பிரம்மாவின் பகல். இப்பகலின் முடிவில் ஒரு பிரளயம் ஏற்படும்.

அப்பொழுது எங்கு பார்த்தாலும் ஒரே தண்ணீர் மயமாகவே இருக்கும். இரவு முடிந்த பிறகு மறுபடியும் படைப்புத் தொழில் ஆரம்பிக்கும்.இது ஒரு கால சுழற்சி.இதை நாம் ஒரு கல்பம் என்று சொல்லுகின்றோம். ஒரு கல்பத்தில் 12 மனுக்கள் வாழ்ந்துபோவார்கள். ஒரு மநுவின் காலம் ஒரு மன்வந்தரம் எனப்படும் இப்பொழுது 6 மனுக்கள் போய்விட்டனர்.

ஏழாவது மனுவில் கிருத யுகம் திரேதா யுகம் துவாபர யுகம் முடிந்து கலியுகத்தின் முற்பகுதியில் நாம் வாழ்ந்து வருகின்றோம். இந்த கல்பம் உண்டாகும் பொழுது தான் பகவான் வராக ரூபம் எடுத்து தண்ணீரில் இருந்து பூமிப் பிராட்டியை மேலே கொண்டுவந்து நிலை நிறுத்தினார். அதனால் நாம் வாழும் கல்பம் ஸ்ரீஸ்வேத வராக கல்பம் எனப்படுகிறது.இதை தினசரி சொல்லி நம்மை அறியாமலே வராகப் பெருமானை வணங்கும்பேறு நமக்குக் கிடைக்கிறது.

பேராசிரியர் எஸ். கோகுலாச்சாரி