பாரெங்கும் ஆலயம் கொண்ட திருமால், பேசும் தெய்வமாய் குழந்தை வடிவில் அருளும் தலம் உடுப்பி. கர்நாடக மாநிலத்தில் உள்ள அற்புதமான தலம். பாலாழியில் பள்ளி கொள்ளும் பரந்தாமனின் திருவுரு, பச்சிளம் பாலகனாய், வெண்ணெயுண்ட கண்ணனாய் முகத்தில் சதா தவழும் கள்ளச் சிரிப்புடன் பாலிதழ்கள் மின்ன பார்க்கும் பார்வையில் இந்த பார் முழுதும் குளிர்கிறது. சில நூற்றாண்டுகளுக்கு முன், மத்வ சம்ரதாய ஆச்சார்யருள் ஒருவரான ஸ்ரீமத் மத்வாச்சாரியார் பிரதிஷ்டை செய்யப்பட்ட திருவுருவம்தான் தற்போது ஆலயத்தில் அருளும் பாலகிருஷ்ணன் விக்ரகம். மத்வாச்சாரியார், ஒரு முறை உடுப்பிக்கு அருகில் உள்ள மால்பே கடற்கரையில் தியானத்தில் இருந்த போது, சூறா
வளியில் அகப்பட்டு திசை தெரியாமல் தவிக்கும் ஒரு கப்பலைக் கண்டார்.
உடனே தனது காவி உடையினை அவிழ்த்து அதைக் கொம்பொன்றில் கட்டி கடலை நோக்கி அசைத்து திசையறியாத கப்பல் கரையேற உதவி செய்தார். அது ஒரு சரக்குக் கப்பல். தங்களுக்கு தக்க சமயத்தில் உதவிய ஆச்சாரியருக்கு தங்கள் நன்றியை வெளிப்படுத்தும் வகையில் கப்பலில் வந்தவர்கள் சந்தன மரத்தின் வேர் ஒன்றை அவருக்கு அன்பளிப்பாகத் தந்தனர். அந்த வேரை உற்று நோக்கிய ஆச்சாரியரின் ஞானக்கண்களுக்கு, அதனுள் நிலைகொண்டிருந்த பாலகிருஷ்ணன் அருட்காட்சியளித்தான். அவர் அந்த வேரிலிருந்து பாலகிருஷ்ணனை பிரித்தெடுத்து உடுப்பியில் பிரதிஷ்டை செய்தார்.
கிருஷ்ணரின் மனைவியான ருக்மிணி தேவியால் பூஜிக்கப்பட்ட கிருஷ்ண விக்ரகம் இது என்போரும் உண்டு. இந்த கிருஷ்ணனை பூஜிக்க இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் பரியாய தர்பாரில் அட்ட மடத்தின் சந்நியாசிகளும் சுழற்ச்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவது இத்தல மரபு. வழக்கமான ஆலய கருவறையில் இருந்து வேறுபட்ட நிலையில் காட்சி தருகிறது, இக்கோயிலின் கருவறை.
ஒன்பது கம்பிக் கட்டங்களாக அமைக்கப்பட்ட, ஜன்னல் போன்ற கதவு வழியாகத்தான் இந்த கிருஷ்ணனை தரிசிக்க முடியும். உள்ளே கையில் தயிர் கடையும் மத்துடன் முகத்தில் புன்முறுவல் தவழ நிற்கும் யசோதை மைந்தனை, ஆசை தீரப் பார்த்தும் ஆசை அடங்கா விழிகளுடன் பக்தர்கள் தவிப்பது தவிர்க்க முடியாதது.
இந்த ஜன்னலை கனகனகிண்டி (கனகனின் ஜன்னல்) வாயில் என்கின்றனர். முன்பொரு முறை கனகதாசன் எனும் ஏழை பக்தர், கண்ணனை தரிசிக்க உடுப்பிக்கு வந்தார். அவரை ஆலயத்தினுள் அவரை அனுமதிக்கவில்லை. கனகதாசர் ஆலயத்திற்குப் பின்புறம் சென்று கண்களில் நீர் வழிய கண்ணனை தியானித்து நின்றார். பக்திக்கு மட்டுமே கட்டுப்படும் அந்த மாயாதீதன், கனகதாசருக்கு தரிசனமளிக்கும் விதத்தில் பின்புறம் திரும்பியதுடன், அவர் தரிசிக்க ஏற்ற வண்ணம் ஆலயச் சுவரில் ஒரு பிளவையும் ஏற்படுத்தினான். கனகதாசருக்கு கண்ணன் தரிசனம் அளித்த பிளவினை இன்றும் பக்தர்கள் கனகன கிண்டி என அழைக்கின்றனர். முதன்முதலாக இத்தலத்திற்கு வருபவர்கள், இந்த துவாரத்தின் மூலம் கண்ணனை தரிசித்துவிட்டே பின் ஆலயத்துள் நுழைகின்றனர். கோயில் கோபுரமும் கனக கோபுரம் என்றே வழங்கப்படுகிறது.
தினமும் அர்த்தஜாம பூஜை முடிந்த பின், கண்ணனின் விக்ரகத்தை தன்னிரு கைகளில் ஏந்தி அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் படுக்க வைப்பார், பர்யாய பீடாதிபதி. பல்லக்கு ஆலயத்தைச் சுற்றி பிரதட்சிணம் வரும். அது முடிந்ததும் கண்ணனை ஊஞ்சலில் இருக்க வைத்து மெல்ல ஆட்டியவாறே டோலோற்சவம் நடைபெறும். அச்சமயம் கண்ணன் துயில் கொள்வதாக ஐதீகம். பின் கண்ணனின் துயிலுக்கு பங்கம் வராமல் அனைவரும் கலைந்து செல்வர். பின் காலை நிர்மால்ய தரிசனத்துடன் கண்ணன் துயிலெழுவார். ஆலயத்தின் பின் உள்ள மத்வசரோவம் எனும் திருக்குளத்தின் நடுவில் மத்வரின் சிற்பம் உள்ளது. அந்த சரோவத்தின் கரையில் கோபாலனான கண்ணனின் பிரியத்திற்குரிய கோசாலை எனும் ஆநிரைகள் உள்ள கொட்டில் உள்ளது.
கருமை நிறமுள்ள பால் காம்புகளைக் கொண்ட பசுவின் பாலையே இந்த ஆலய கிருஷ்ணனின் பூஜைக்கு பயன்படுத்துகின்றனர். ஆலய பிராகாரச் சுவர்களில், கண்ணனின் லீலைகள் அழகுச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. இத்தலத்தில் ஸ்ரீதரிசனம் எனும் வழிபாடு நடத்தப்படுகிறது. அன்றைய நாளில் மன வேற்றுமை கொண்ட தம்பதியர் ஆலயத்திற்கு வந்து பாலகிருஷ்ணனை வணங்கிய பின் கணவன் மீதுள்ள தனது வெறுப்பையோ ஐயப்பாட்டையோ எதுவானாலும் நேரடியாக கணவன் முகத்திற்கு நேராகச் சொல்லி, மனபாரத்தை இறக்கி வைக்கும் நிகழ்ச்சி அது.
அன்றைய தினம் யாரும் யாரையும் எதிர் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆலயத்தைச் சுற்றியுள்ள கடைகளில் கண்ணனுக்கு காணிக்கை செலுத்த மயிற்பீலி, தயிர்மத்து போன்றவை கிடைக்கின்றன. இந்தக் கோயிலுக்கு தரிசனம் செய்ய வரும் அனைத்து பக்தர்களுக்கு, ஆலயத்தின் சார்பில் சாதம், சாம்பார், ரசம், காய், கூட்டு என அறுசுவை உணவு, கண்ணனின் பிரசாதமாக அளிக்கப்படுகிறது.
ஆலயத்தில் கிருஷ்ணருக்கு நவராத்திரி ஒன்பது நாட்களும், மைசூர் மகாராஜாவால் அளிக்கப்பட்ட பட்டுப்புடவைகள் அணிவிக்கப்பட்டு, தேவி பாவத்தில் அலங்கரிக்கப்படுகிறது.
தினம் தினம் தேர் திருவிழா காணும் மூர்த்தி இவர். வீதிவலம் வரும் தேரில் வீற்றிருக்கும் திவ்ய மூர்த்தியாய் திவ்ய தரிசனமளிக்கும் அந்த கார்மேகவண்ணனின் அருட்பார்வையில் பக்தர்கள் துன்பங்கள் எல்லாம் பறந்தோடி விடுகிறது. வீதி வலம் வரும் முன், செண்டை மேளம் முழக்கம் வானுயர முழக்கப்படும். ஆலய அர்ச்சகர் மேளதாளங்கள் முழங்க தேரில் ஏறி நின்று உற்சவமூர்த்திக்கு தீபம் காட்டுவார். பின் தலைப்பாகை அணிந்த சிறுவன் ஒருவன் தங்கத்தேரில் முன்னால் அமர, வயோதிகர் ஒருவர் தீப்பந்தம் ஏந்தியவாறு சற்று பின்னால் நிற்க, தேர் நகரத் துவங்கும். கோபாலா, மாதவா, கோவிந்தா என்ற கோஷம் எட்டுத் திசைகளிலும் ஒலிக்க கண்ணன் ஆடி வரும் அழகைக்காணக் கண் கோடி வேண்டும்.
தேரடி வீதிகளில் அசைந்தாடிச் செல்லும் தேர், பின் ஆலயத்தின் கனக கோபுரம் முன், நிலைகொள்கிறது. பின் மூலவருக்கு பூஜைகள் நடக்கின்றன. வேண்டியவர் வேண்டியதை வேண்டும் முன்னே தரும் வேத நாயகனை பணிவோம்.
மங்களூரிலிருந்து பேருந்து மூலம் சுமார் 56கி.மீ., கடந்தால் உடுப்பி தலத்தை அடையலாம்.



