கர்நாடகா - உச்சிலா
மகாராஷ்டிர மாநிலத்தில் கோலாப்பூர் நகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கரவீர நிவாசினி அம்பாபாய் மகாலட்சுமி கோயில் மிகவும் புகழ்பெற்ற ஒரு சக்தி பீடமாகும். மும்பை மாநகரில் அமைந்துள்ள ஸ்ரீ மகாலட்சுமி கோவில் மற்றொரு பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். கோலாப்பூர் மற்றும் மும்பையில் உள்ள ஸ்ரீ மகாலட்சுமி கோவில்களுக்கு அடுத்தபடியாக கர்நாடக மாநிலத்தில் உடுப்பி மாவட்டத்தில் உச்சிலா கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகாலட்சுமி கோயில் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது.
இக்கோவில் 1957 ஆம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது. செல்வம் மற்றும் சுபிட்சத்திற்கான தெய்வமாக ஸ்ரீ மகாலட்சுமி வழிபடப்படுகிறார். மங்களுரு மற்றும் உடுப்பியைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவர்களின் குலதெய்வமாக விளங்குகிறார், உச்சிலா ஸ்ரீ மகாலட்சுமி. கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றினுள் செல்வத்தையும் சுபிட்சத்தையும் வழங்குபவள் ஸ்ரீ மகாலட்சுமி. பாற்கடலைக் கடைந்தபோது தோன்றியவள். தூய்மையான இடங்களிலும், நற்பண்புகள் நிறைந்தவர்களிடமும் மகாலட்சுமி வாசம் செய்வாள். மகாலட்சுமியை வெள்ளிக் கிழமைகளில் விளக்கேற்றி வழிபட்டால் வீட்டில் செல்வமும் சுபிட்சமும் பெருகும் என்பது ஐதீகம்.
மிக அழகாகவும் ஆச்சரியத்தையும் மனதில் ஏற்படுத்தும் கலைநயத்தோடு காட்சியளிக்கும் உச்சிலா ஸ்ரீ மகாலட்சுமி கோயில் தனித்துவமான துளுநாடு கட்டடக்கலை பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய பாணியில் கலைநயமிக்க தேக்கு மர வேலைப்பாடுகளும் அதிக அளவில் அமைந்திருக்கும். இப்பகுதியில் நிலவும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப சாய்வான கூரைகள், மங்களுர் ஓடுகள் கொண்டு வேயப்பட்டுள்ளன. கருங்கல்லால் ஆன அழகிய சுவர்கள் மற்றும் மரச்சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கலைநயமிக்க சாளரங்கள் இக்கோயிலுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.
கருவறையில் அன்னை ஸ்ரீ மகாலட்சுமி தெய்வீகமும் அழகும் ஒன்றாகக் கலந்து அற்புதமான அலங்காரங்களோடு பக்தர்களுக்கு அருளாசி வழங்கிவருகிறார். அன்னை மகாலட்சுமியை தரிசித்த பக்தர்கள் அன்னையின் தெய்வீக அழகில் மெய்மறந்து மனமுருக அன்னையை வழிபட்டபடியே நிற்கின்றனர். மிகவும் பிரமிப்பூட்டும் வகையில் அமைந்துள்ள இந்த தலத்தின் ராஜகோபுரம் மிகவும் வித்தியாசமான முறையில் ஐந்து நிலைகளையும் ஒன்பது கலசங்களையும் கொண்டு காண்போரை வியக்க வைக்கிறது.
கோவிலின் பிரதான நுழைவாயில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இங்கு மிக உயரமான அழகான கொடிமரம், அதற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய அளவிலான பலிபீடம் முதலானவை அமைந்துள்ளன. கோயிலின் நுழைவாயில் அருகில் இடது புறத்தில் ஸ்ரீ பத்ரகாளி அம்மன் சந்நதி அமைந்துள்ளது. இக்கோயில் வளாகத்தின் தென்மேற்கு மூலையில் 2006 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஸ்ரீ பிரசன்ன கணபதி கோயில் உள்ளது.
கோயிலின் தென்கிழக்கு திசையில் வசந்த மண்டபமும் கோயிலின் வலது பக்கத்திற்குள் நுழையும்போது தீர்த்த மண்டபமும் அமைந்துள்ளன. கோயிலின் வளாகத்திற்கு வெளியில் வடகிழக்கு மூலையில் கோயிலின் புனித தீர்த்தத்தைக் காணலாம். இதற்கு அருகில் நாகர் சந்நதி அமைந்துள்ளது. தொடக்கத்தில் இத்தலத்தின் அம்மனை தொலைவில் இருந்தே தரிசிக்க முடிந்தது. சமீபத்தில் நடைபெற்ற மறுவடிவமைப்பிற்குப் பின்னர் அம்மனின் அழகிய ரூபத்தை அருகில் இருந்து தரிசிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மங்களுர் தசராத் திருவிழாவினைப்போல உச்சிலா தசரா விழாவும் மிகவும் புகழ்பெற்ற ஒரு திருவிழாவாகும். இத்திருவிழா இத்தலத்தில் மிகவும் விமரிசையாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப் படுகிறது. நவராத்திரி நாட்களில் தினமும் மகாலட்சுமிக்கு சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடைபெறுகின்றன. வருடந்தோறும் இத்தலத்தில் தேர்த் திருவிழா கொண்டாடப்படுகிறது. பிரதி வெள்ளிக் கிழமைகளில் இக்கோயில் வளாகத்தில் சத்ய நாராயணா பூஜை நடைபெறுகிறது.
உச்சிலா மகாலட்சுமி தலமானது காலை ஆறு மணிமுதல் பிற்பகல் இரண்டு மணி வரையிலும் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் பக்தர்களின் வழிபாட்டிற்காக திறந்திருக்கும். மங்களூருக்கும் உடுப்பிக்கும் இடையில் அமைந்துள்ள உச்சிலாவில் தேசிய நெடுஞ்சாலையில் இந்தத் தலமானது அமைந்துள்ளது. மங்களூருவிலிருந்து முப்பத்தி ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும் உடுப்பியிலிருந்து சுமார் இருபது கிலோமீட்டர் தொலைவிலும் பெங்களுருவிலிருந்து சுமார் 380 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
ஆர்.வி.பதி


