Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மரமாகும் விதைகள்!!

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 129 (பகவத்கீதை உரை)

மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஸ்சித்யததி ஸித்தயே

யததாமபி ஸித்தானாம் கஸ்சின்மாம் வேத்தி தர்ஹ்வத (7:3)

‘‘இந்த உலகில் உள்ள ஆயிரக் கணக்கானோரில் வெகு சிலரே தாம் பிறந்ததன் காரணத்தை அறிய முற்படுகிறார்கள். இவர்களில் ஓரிருவர்தான் என்னைப்பரிபூரணமாக அறிந்து கொண்டு பிறவித் தளையிலிருந்து விடுபடுகிறார்கள்.’’அதாவது, தம்முடைய அன்றாட வாழ்க்கையின் வசதிகள், எதிர்காலக் கனவுகளை நினைவாக்கும் பண, பொருள் சேர்க்கை உத்திகள், சுயநலம், சிற்றின்பம் என்று ஆயுளை வீணாக்குகிறார்கள். அவர்களில் யாரோ ஓரிருவரே, சுய பரிசோதனை செய்து கொள்கிறார்கள்; அவர்களே பிறப்பின் நோக்கத்தைப் புரிந்து கொண்டவர்களாக இருக்கிறார்கள்; இறைத் தன்மையை அறிய முயற்சிக்கிறார்கள்.

ஆனால் பரமாத்மாவை அறிந்து கொள்ள முயற்சிப்பவர்களிலும் சொற்பமானவர்களே தம் நோக்கத்தில் வெற்றி காண்பவர் களாக இருக்கிறார்கள். ஆமாம், ஆன்மிகப் பாதையைத் தேர்ந்தெடுத்து அதில் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்பவர்கள் தியானம், தர்ம வழியில் நடப்பது போன்றவற்றால் ஏற்படும் மனக் கட்டுப்பாட்டைக் கொண்டு சித்தி அல்லது பக்குவம் பெற முயற்சிக்கிறார்கள் ஆனாலும், அவர்கள் அனைவருமே இறுதி இலக்கை அடைவதில்லை. ஆமாம், பல தடைகளையும் மாயைகளையும் கடந்து இறைவன் என்ற உண்மையை, அந்தத் தத்துவத்தை உணர்வது அத்தனை அரிதான விஷயம்.

‘பிறவா வரம் தாரும் இறைவா மறுபடி

பிறவா வரம் தாரும் பிறந்தாலும் உன் திருவடி

மறவா வரம் தாரும் மாநிலமேல் இனி

பிறவா வரம் தாரும்.

பார்வதி நேயா பக்த சகாயா

பந்தம் அறாதா வந்தருள் தா தா

முந்தை வினை கோற சிந்தாகுலம் தீர

எந்தை உன் பாதாரவிந்தம் துணை சேர

பிறவா வரம் தாரும்’

- என்ற பாடல் மூலமாக, மிகச் சிறந்த வாக்கேயக்காரரும், சங்கீத கலாநிதியுமான பாபநாசம் சிவன், பிறவியின் நோக்கத்தை மனம் உருகி விவரிக்கிறார். பிறவி எடுப்பதன் பயனே முந்தைய ஜன்மத்தின் கணக்கைத் தீர்க்கத்தான். முந்தைய, அதற்கும் முந்தைய, அததற்கும் முந்தைய என்று பிறவிகளின் கணக்குப் பட்டியல் நீண்டதாகவே இருக்கிறது. அதில் வரவுப் பகுதியைவிட செலவுப் பகுதி பெரிதாக இருக்குமானால், இந்தச் செலவைத் தீர்க்க அடுத்தடுத்த ஜன்மங்கள் தேவைப்படுகின்றன. ஒவ்வொரு யுகத்திலும் தீமைகளும், அநீதிகளும் அதிகரித்து இருப்பதற்கு, இவ்வாறு செலவுப் பட்டியல் குறையாததுதான் காரணம்.

இந்த ஏழாம் அத்தியாயம் ‘ஞான விஞ்ஞான யோகம்' என்று தலைப்பிடப் பட்டிருக்கிறது. ஞானம் என்பது தத்துவ அறிவு; விஞ்ஞானம் என்பது அனுபவ அறிவு. நன்கு கனிந்த கனி மரத்திலிருந்து உதிர்வதை அறிவது ஞானம் என்றால், அது ஏன் கீழ் நோக்கி விழுந்தது என்ற கேள்வி எழுப்புவதும், அதற்கான பதிலை அறிவதும் விஞ்ஞானம்.ஆன்மிகத்தைப் பொறுத்தவரை, புத்தகங்களைப் படித்தோ, சொற்பொழிவு களைக் கேட்டோ, இறைவனை அறிய முயற்சிக்கலாம். இது தத்துவ ரீதியான தியரி.

என்றாலும், அனுபவ அறிவு என்ற ப்ராக்டிகலுக்கு இதுவே ஆதாரம். ஆமாம், இறைத்தன்மையை அண்ட சராசரத்திலும், சக உயிர்களிடத்திலும் நேரடியாகக் கண்டு உணரும் ‘விஞ்ஞானம்’ இது. ‘இந்த விஞ்ஞான நிலையை அடைபவர்களே என்னைத் தத்துவப்படி அறிந்தவர்கள்,' என்கிறார் கிருஷ்ணன். இறைவனை அவனது உண்மையான தத்துவத்துடன் அறிவது என்பது, பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும், உயிர்களும் இறைவனின் வெவ்வேறு வடிவங்களே என்பதை உணர்வதாகும். இந்த உன்னத நிலையை அடையும் ஒரு அரிய சாதகனைப் பற்றியே கிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.

ஒரு மரம் பழங்களைத் தருகிறது. அந்த ஒவ்வொரு பழத்திலும் நிறைய விதைகள் இருக்கின்றன. எல்லா விதைகளும் நிலத்தில் விழுந்து மீண்டும் செடியாக முளைக்கின்றனவா என்ன? இல்லையே! அவற்றில் சில, காலடிகள் பட்டு சிதைந்து போகின்றன. சில பறந்து போய் ஏரி, குளங்களில் விழுகின்றன. முளைவிட இயலாமல் பாறைகளின் மீதோ, தரிசு நிலத்திலோ, போய் விழுகின்றன. ஆனால் ஒருசில மட்டும், உறுதியாக நிலத்தில் ஊன்றிக் கொண்டு, அந்தப் பகுதியில் பரவியிருக்கும் ஈரத்தை உறிஞ்சிக் கொண்டு, முதிர்ந்து, முளை விட்டு, செடியாகி, காற்றையும், மழையையும் உணவாகக் கொண்டு, மரமாகக் கிளர்ந்தெழுகின்றன.

அதுபோல, மானிடப் பிறவி என்பது, இறைவனை உணர்வதற்காகவே ஏற்பட்டது; அதுதான் வாழ்க்கையின் குறிக்கோள் என்று அறிந்து கொள்பவர் வெகு சிலரே! இவர்களுடைய முயற்சிக்கு அனுகூலமான சூழ்நிலை, முறையான, மனம் கோணாத முயற்சி ஆகியவை உதவி புரிகின்றன. இத்தகையவர்கள் மிகவும் அரிதானவர்களாகவே இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்களுடைய லட்சியம் மிகப் பெரியது; ஆகவே, அதை எட்டுவதும் அத்தனை சுலபமில்லை.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர், அந்த நோக்கம் நிறைவேறுவது பற்றி மிக எளிமையான உதாரணத்துடன் விளக்குகிறார்: ‘‘காசியில் மாதா அன்னபூரணியின் கோயிலுக்குள் நுழைந்தவர்கள் பிரசாதம் பெறாமல் வெளியே வர முடியாது. சிலருக்கு உடனே பிரசாதம் கிடைக்கிறது; வேறு சிலரோ, காத்திருக்க வேண்டியிருக்கிறது. நீண்ட நெடுநேரம் பொறுமையாகக் காத்திருந்து பெறுபவர்களும் உண்டு. ஆனால் யாரேனும் ஒருவருக்குக் கூட பிரசாதம் இல்லை என்ற நிலை அந்தக் கோயிலில் உருவானதே இல்லை. அதேபோல, பிறப்பெடுத்த எல்லோருக்கும் முக்தி நிச்சயம் உண்டு.

சிலர் இப்பிறப்பின் நிறைவாகவே முக்தி அடைகின்றனர்; சிலர், இன்னும் இரண்டு, மூன்று பிறவிகளுக்குப் பிறகு அதை எட்டுகின்றனர். வேறு சிலரோ, கணக்கற்ற பிறவிகள் எடுத்த பின்னர் முக்திக்கு உரியவர்களாகின்றனர். ஆனால் எல்லோருக்குமே விரைவாகவோ, சில பிறவிகள் கழித்தோ முக்தி பெறுவது என்பது சர்வ நிச்சயம்.’’வயதிலும், அனுபவத்திலும் மூத்தோரை அவர்களுடைய பாதங்களில் தலை பதித்து வணங்குகிறோம். இது அவர்களுக்கு நாம் காட்டும் மரியாதை மட்டுமல்ல; அவர்களுடைய அறிவுரைகளுக்கும், வழிகாட்டல்களுக்கும் நாம் சரணாகதி அடைவதன் அடையாளம்.

இப்போதும் சிலரை நாம் மகான்களாக மதிக்கிறோம்; அவர்களைக் கடவுளாகவே கருதுகிறோம். ‘நடமாடும் தெய்வம்,' ‘கண் கண்ட கடவுள்' என்றெல்லாம் போற்றுகிறோம். அவர்களுடன் நமக்குத் தொடர்பு ஏற்பட்டதிலிருந்து நம் வினைகள் அறுபடுவதாக நாம் உணர்கிறோம். அவர்களுடைய கருணைப் பார்வையாலும், ஆலோசனையாலும் நம்முடைய பொருளாதார மற்றும் உடல் நலப் பிணிகள் தீர்வதாகவும் அனுபவப் படுகிறோம். இந்த அனுபவங்களை அவர்கள் ஆற்றிய அற்புதங்களாக, பலருக்கும் மெய்சிலிர்க்கத் தெரியப் படுத்துகிறோம்.

அவர்கள் மீது நாம் முழு நம்பிக்கை கொண்டு, அவர்களுடைய படங்களை பூஜை அறையில் வைத்து வழிபடவும் செய்கிறோம். இதனால் அவர்களைப் பின்பற்றும் புதியவர்கள் உருவாகிறார்கள். தத்தமக்கென்று புதுப் புது அனுபவம் பெறுகிறார்கள். ஒரு கட்டத்தில் தாம் அனுபவம் பெறுவதைவிட அந்தப் பெரியவர்களுக்கு சேவை செய்வதையே தம் பாக்கியமாகக் கருதுகிறார்கள். இதன் மூலம் சம்சார சாகரத்திலிருந்து கரையேற முயற்சிக்கிறார்கள்.

‘கவலைப்படாதே, நான் இருக்கேன், நான் பார்த்துக்கறேன்' என்றெல்லாம் ஒரு மகான் ஆறுதல் சொல்லும்போது மனசு லேசாகிறது; புதுத் தெம்பு உருவாகிறது. அவருடைய ஆதரவில், பிடிமானத்தில் நம் துயர்கள் களையப்படும் என்று நம்புகிறோம். சில சமயங்களிலாவது அப்படி நடக்கிறது என்பதால், அதுவே அவர்களைத் தொடர்ந்து பின்பற்றச் செய்கிறது.

நம்முடைய தினசரி நடவடிக்கைகளே ஏதோ ஒரு நம்பிக்கையின் அடிப்படையில்தான் நிகழ்கின்றன. வீட்டை விட்டு வெளியே போகும் நாம், மாலையில் வீட்டுக்குத் திரும்புவோம் என்ற நம்பிக்கையில்தான் போகிறோம். அதாவது நாம் திரும்பும்போது எந்த வீட்டை விட்டுப் போனோமோ அந்த வீடு அங்கேயே நமக்காக நிலைத்திருக்கும், காத்திருக்கும் என்ற நம்பிக்கை. தினந்தோறும் அப்படியே நடக்கும் என்ற நம்பிக்கை. பல சமயங்களில் அப்படியே நடந்தாலும், சில சமயங்களில் புரண்டு விடுகிறது.

சமீபத்திய நேபாள சம்பவம் இதற்கு மிகச் சரியான உதாரணம். ஒருசில நிமிடங்களில் இருந்ததெல்லாம், இல்லாமல் போன துயரம்! எல்லாம் தண்ணீரோடு அடித்துக் கொண்டு போய், சேற்றில் அமுங்கி உருத்தெரியாமல் போய்விட்டதே! தத்தமது வீடுகளை விட்டுச் சென்றவர்கள், மீண்டும் வீடு திரும்புவோம் என்ற நம்பிக்கை எப்படி ஒருசில நிமிடங்களில் வீணாய்ப் போனது?

ஆக, நம்பிக்கை என்பது எதிர்பார்த்தல். தான் நினைப்பது போலவே அப்படியே நிகழும் என்ற எதிர்பார்த்தல். ஆனால் நம்பிக்கையுடன், சுமுகமாக ஆற்றில் போய்க் கொண்டிருந்த படகு, திடீர் காட்டாற்று வெள்ளத்தால், கரையைக் காணவே முடியாதபடி ஆற்றோடு அடித்துக் கொண்டு போய்விடுவது எதிர்பாராததுதானே!

ஆனால் எதையும் எதிர்நோக்காமல், பரந்தாமனிடம் பரிபூரண சரணாகதி அடைந்து விட்டால், எதிர் வரும் எந்த வினையையும் நம்மால் எந்த மனக் கிலேசமுமின்றி கையாள முடியும் என்பதுதான் கிருஷ்ணனின் அறிவுரை. விஞ்ஞானத்தில் புகுவது என்பது ஒரு நிஷ்டை போலத்தான்; ஆனால் இது சந்தேகத்தோடு கூடிய நிஷ்டை, அதாவது ஆழ்நிலை தியானம். ஆனால் தர்மத்தில் புகுவது என்பது சந்தேகமற்ற நிஷ்டையால்தான் கைகூடும். ‘கந்த சஷ்டி கவசம்தனைப் படிப்போர்க்கு நிஷ்டையும் கைகூடும்,' என்றார் பாலன் தேவராயன். மனம் முழுவதும் அந்தக் கவசத்தில் லயிக்கும் போது, எந்த புற இடையூறுகளையும் கவனிக்காமல் ஈடுபடும்போது, நிஷ்டை கைகூடும் என்று அர்த்தம்.

கொஞ்சமும் சந்தேகமற்ற நிஷ்டையில் ஆழும் மனிதன் கடவுளை உணர்கிறான். அவரிடமே சரணாகதி அடைகிறான்; அது ஒன்றே தன் வாழ்க்கையின் இலக்கு என்று தீர்மானிக்கிறான்.

‘என்னைச் சரணடைந்து விடு,' என்று கிருஷ்ணன் கூறும்போது, தன்னுடன் இத்தனை நாள் அந்நியோன்யமாகப் பழகிய அவனை எப்படிச் சரணடைவது, எதற்காக சரணடைவது என்று அர்ஜுனன் குழம்பவில்லை என்பதை இங்கே கவனிக்க வேண்டும்.

‘என் மனம் போரில் நாட்டம் கொள்ளவில்லை,' என்று மட்டும்தான் அவன் சொல்கிறானே தவிர, மற்றபடி கிருஷ்ணனின் அறிவுரைகளை செவிமடுத்துக் கொண்டுதான் இருக்கிறான். எந்த சந்தேகமும் கொள்ளாமல் அவரை சரணடைவதால் ‘நான்’ போய்விடுகிறது என்பது மட்டும் அவனுக்குத் தெரிகிறது. அதோடு, ‘நான்,' ‘என்னை' என்றெல்லாம் கிருஷ்ணன் கூறும்போது அதில் அவன் அகம்பாவத்தைக் காணவில்லை. கம்பீரமான தன்னம்பிக்கை ஒளிர்வதைத்தான் காண்கிறான். ‘நம்பினோர் கைவிடப்படார்,' என்ற மூதுரை அவனுடைய உள்ளத்தில் ஆழமாகவே பதிந்திருக்கிறது.

சரணாகதி அடைவது என்றால் என்ன? முற்றிலும் தன்னை இழந்து, கிருஷ்ணர் வசமாகி விடுவது - மெஸ்மெரைஸ் பண்ணப்பட்டது போல! தான் அவராகிவிடும்போது அவருடைய கட்டளையை நிறைவேற்றும் கருவியாக அவன் மாறி விடுகிறான். சரணாகதி மூலம் அவருடனேயே ஐக்கியமாகி விட்டாலும், அவருக்குள்ளிருந்து தான் வெளியே வந்து அவருடைய உத்தரவுகளை ஒரு கருவியாக அவன் நிறைவேற்றுகிறான்!

இறைவனை அடைவது என்பதை எளிதாகக் கருதினால் அது எளிது; ஆனால் சுயநலத்தால் அதை நாமே கடினமானதாக்கிக் கொள்கிறோம். நம்மைப் பிணைத்திருக்கும் சுயநலப் பிடிகளிலிருந்து விடுவித்துக் கொள்ள நமக்குத் தெரியவில்லை அல்லது விரும்புவதில்லை. இதனாலேயே கடவுளை நமக்கு நன்மைகளை மட்டும் செய்து கொடுக்க வேண்டிய சேவகனாகவே நினைக்கிறோம். தீமைகள் ஏற்பட்டால் நிந்திக்கிறோம். ஆனால் சரணாகதி என்பது, எங்கிருந்தாலும், நம் நம்பிக்கையை அவர் மீது பசுமரத்தாணி போல பதித்துக் கொண்டால், துன்பம் இல்லை, துயரம் இல்லை. நிம்மதியே என்றும் இனி.