Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

இன்றைய வலிகளே நாளைய வலிமை

அவன் மிகவும் இளகிய மனம் படைத்தவன். யாருக்காவது உதவி தேவைப்பட்டால், தன்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். மற்றவர்களின் வேதனையைப் பார்த்தால் அவனால் அமைதியாக இருக்க முடியாது.

ஒருநாள் அவன் வீட்டின் முற்றத்தில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தான். வீட்டின் முன்புறம் அழகான ரோஜா செடிகள் பூத்திருந்தன. அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு சிறிய வண்ணத்துப்பூச்சி அவனுடைய கவனத்தை ஈர்த்தது. அந்த வண்ணத்துப்பூச்சி தனது கூட்டுப்புழுக் கூட்டிலிருந்து வெளியே வருவதற்கு மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தது. அது மீண்டும் மீண்டும் வெளியே வர முயற்சி செய்தது; ஆனால் கூட்டின் சிறிய திறப்பு வழியாக அதன் உடல் வெளியே வரமுடியவில்லை.

அதைப் பார்த்த அவனுடைய மனம் மிகவும் பரிதாபப்பட்டது. “இந்தச் சிறிய உயிரினம் எவ்வளவு கஷ்டப்படுகின்றது! இதற்கு நான் உதவி செய்தால், இது உடனே வெளியே வந்து அழகாகப் பறந்து செல்லுமே!” என்று நினைத்தான். தன்னுடைய உதவி நல்லதுதான் என்று எண்ணி, உடனே ஒரு கத்தரிக்கோலை எடுத்துக்கொண்டு வந்தான்.

கூட்டுப்புழுக் கூட்டைச் சுற்றியிருந்த பகுதியை மெதுவாக வெட்டி, வண்ணத்துப்பூச்சி எளிதாக வெளியே வருவதற்கான வழியை ஏற்படுத்தினான். தன்னால் ஒரு உயிருக்கு விடுதலை கொடுத்துவிட்டதாக நினைத்து அவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.

ஆனால், சிறிது நேரம் கழித்தும் அந்த வண்ணத்துப்பூச்சி வெளியே வந்து பறக்கவில்லை. அது தரையில் விழுந்து கிடந்தது. அதன் உடல் பலவீனமாக இருந்தது. சிறிது நேரத்தில் எறும்புகள் அதைச் சூழ்ந்தன. அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. இறுதியில் அந்த வண்ணத்துப்பூச்சி இறந்துவிட்டது.

அவன் அதிர்ச்சியடைந்தான். “நான் அதற்கு உதவி செய்யத்தானே நினைத்தேன்? அப்படியிருக்க, ஏன் அது இறந்தது?” என்று வேதனையுடன் சிந்தித்தான்.

பின்னர் அவன் புரிந்துகொண்டான். அந்த வண்ணத்துப்பூச்சி கூட்டுப்புழுக் கூட்டிலிருந்து வெளியே வருவதற்காக போராடும் அந்தக் கடினமான செயல்முறையே அதன் சிறகுகளுக்கும் உடலுக்கும் தேவையான வலிமையை உருவாக்கும் ஒரு இயற்கையான பயிற்சியாக இருந்தது. அது அந்தப் போராட்டத்தை கடந்து வெளியே வரும்போதுதான் பறப்பதற்குத் தேவையான சக்தியைப் பெறுகிறது. அவன் செய்த உதவி, உண்மையில் அந்த வண்ணத்துப்பூச்சியின் வளர்ச்சிக்குத் தடையாகிவிட்டது.

இறைமக்களே, வாழ்க்கையும் இப்படித்தான்! நம்முடைய வாழ்க்கையிலும் சில நேரங்களில் நாம் அனுபவிக்கும் கஷ்டங்கள் நம்மை அழிப்பதற்காக வருவதில்லை; நம்மை உருவாக்குவதற்காகவும், வலிமைப்படுத்துவதற்காகவும், அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்வதற்காகவும் அனுமதிக்கப்படுகின்றன.

சில போராட்டங்கள் நம்முடைய வாழ்க்கையில் இல்லாமல் போயிருந்தால், நாம் இன்று இருக்கும் அளவுக்கு வலிமையானவர்களாக இருந்திருக்க முடியாது. சில கண்ணீர்கள் இல்லாமல் இருந்திருந்தால், வாழ்க்கையின் மதிப்பை நாம் புரிந்திருக்க முடியாது. சில தோல்விகள் இல்லாமல் இருந்திருந்தால், வெற்றியின் அருமையை நாம் உணர்ந்திருக்க முடியாது.

அதனால், வாழ்க்கையில் கஷ்டம் வந்த வுடன், “தேவன் என்னை ஏன் இப்படி சோதிக்கிறார்?” என்று மட்டும் கேட்காமல், “இந்த அனுபவத்தின் மூலம் தேவன் என்னை எதற்காக ஆயத்தப்படுத்துகிறார்?” என்று சிந்திக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஒரு விதை மண்ணுக்குள் புதைக்கப்படும்போது அது இருளை சந்திக்கிறது. ஆனால் அந்த இருளுக்குள்தான் அதன் வேர்கள் வளர்கின்றன. ஒரு தங்கம் நெருப்பில் சுடப்படும்போதுதான் அதன் தூய்மை வெளிப்படுகிறது. அதுபோல, மனிதனுடைய வாழ்க்கையிலும் சில கஷ்டங்கள் அவனுடைய உண்மையான வலிமையை வெளிக்கொண்டு வருகின்றன.

எனவே, இன்று நீங்கள் சந்திக்கும் கஷ்டத்தைப் பார்த்து மனம் தளராதீர்கள். நீங்கள் கடந்து செல்லும் போராட்டம் வீணானது அல்ல. அது உங்கள் வாழ்க்கையின் அடுத்த பறப்பிற்கான பயிற்சியாக இருக்கலாம்.

- அருள்முனைவர். பெ. பெவிஸ்டன்