Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஒரே எழுத்தில் ஒளிந்த மூன்று வாழ்க்கை ரகசியங்கள்!

அளவில்லாத நிகழ்ச்சிகள் அன்றாடம் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த நிகழ்ச்சிகளை வைத்து `கருத்து அலசல்’ என்ற பெயரில் கருத்தரங்கங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.

வாருங்கள்! நாமும் ஒரு கருத்து அலசல் நிகழ்ச்சியை பார்க்கலாம். இக்கருத்து அலசல் நம் தேசத்தின் ஞான சொத்துக்களில் ஒன்றான பிரகதாரணியக உபநிடதத்தில் உள்ளது. இதில் இடம் பெற்றவர்கள் பிரம்மதேவரும் மூன்று குழுக்களும்.

ஒரு சமயம், தேவர்கள் எல்லோரும் பிரம்மதேவரிடம் சென்று, ``நான்முகனே! எங்களுக்குச் சுருக்கமாக ஓர் உபதேசம் செய்யுங்கள்!’’ என வேண்டினார்கள். பிரம்மாவும் அவர்களுக்கு `த’ என்ற ஒரே ஓர் எழுத்தை மட்டும் உபதேசத்தைவிட்டு,``தேவர்களே! இதுதான் உபதேசம். புரிந்து கொண்டீர்களா?’’ எனக் கேட்டார். ஒரு சில வினாடிகளில் தேவர்களும்,``புரிந்துவிட்டது சுவாமி!’’ என்றார்கள். அவர்கள் என்ன புரிந்து கொண்டார்கள்? தேவர்களிடம் உள்ள பெரிய கோளாறு, புலனடக்கம் இல்லாததுதான். ஆனந்த மயமான தேவலோகத்தில், அவர்கள் சுகவாசிகளாக மனம் போன போக்கில் இருப்பது தேவர்களின் வழக்கம். தேவர்களுக்குப் புலனடக்கம் கிடையாது. அது தேவர்களுக்கும் தெரியும்.

அதனால் அவர்கள்,``நமக்கு `தமம்’ (புலனடக்கம்) தேவை. அதைப் `பளீர்’ என்று பொட்டில் அடித்ததைப்போல் சொல்லாமல், முதல் எழுத்தான `த’ என்பதை மட்டும், அப்படியே நாசுக்காகச் சொல்லி, நமக்கு அறிவுறுத்தி இருக்கிறார் பிரம்மதேவர்’’ என்றார்கள். அதைக் கேட்டுப் பிரம்மதேவரும்,``நீங்கள் உணர்ந்தது சரிதான்?’’ என்று சொல்லி, தேவர்களை வழி அனுப்பினார்.

அதை அறிந்ததும், மனிதர்களுக்கும் ஆசை வந்தது. அந்தக் காலத்தில் மனிதர்களும் பிரம்மதேவரை நெருங்கும் படியாக இருந்தார்கள். அதனால் மனிதர்களும் பிரம்மதேவரை நெருங்கி, ``எங்களுக்கும் உபதேசம் செய்யுங்கள்!’’ என்று வேண்டினார்கள். பிரம்மா, அவர்களுக்கும் `த’ என்ற அந்த ஒற்றை எழுத்தையே உபதேசித்தார். மனிதர்களுக்கு, தன் தங்கள் தவறு தெரியும் அல்லவா? அதனால் அவர்களும் தங்களுக்குத் தேவையான உபதேசம்தான் இது என்பதைப் புரிந்து கொண்டார்கள்.பிரம்மதேவர்,``உபதேசம் புரிந்ததா?’’ எனக் கேட்டார்.

மனிதர்கள் ``தெரிந்து கொண்டோம் சுவாமி! `தத்த’ என்று உபதேசம் செய்தீர்கள்’’ என்றார்கள். ``தத்த’’ என்றால், ``கொடு’’ - ``தானம் செய்’’ என்பது பொருள். பெரும்பாலானவர்களுக்கு, யாருக்காவது எதையாவது கொடுக்க வேண்டும் என்றால், உயிரே போய்விடும். ஒரு வேளை அடுத்தவர்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டி வந்தால்கூட, ஐந்து ரூபாய் தந்தால் போதும்; ரூ.50 வரவேண்டும் என்று இருந்தால்தான் கொடுப்பார்கள். தமிழில் ஓர் அற்புதமான வாக்கு உண்டு. `கைக்கும் பைக்கும் காததூரம்’ என்பார்கள். காததூரம் என்பது ஏறத்தாழ 12 கிலோமீட்டர் தூரம் என்பது பொருள்.

``என்ன சார் இது என் கைக்கும் என் பைக்கும் இடைவெளி, 12 கிலோமீட்டர் தூரமா? நம்பும்படியாக இல்லையே’’ என்ற கேள்வியெழலாம். ஆனால் இதுதான் உண்மை. உதாரணமாக, யாராவது பிச்சைக்காரர் வந்து கேட்டால், அவருக்கு ஏதாவது போடலாம் என்று கை, சட்டைப் பையை நோக்கிப் போகும். ஆனால் உடனே போட்டுவிட மாட்டோம். மனம் மாறும். கை அவ்வப்போது போய், சட்டைப்பையை தொட்டுவிட்டு வரும்.

ஐந்து ரூபாய் போடலாம் என்று நினைத்துப் பையைத் தொடுவோம். கை கீழே இறங்கும். இரண்டு ரூபாய் போடலாம் என்று எண்ணி, அது ஒரு ரூபாயாக மாறும். இவ்வளவு தடவைகள் பையை நோக்கி கை போன தூரத்தைக் கணக்கிட்டால், அது தாராளமாகக் காததூரத்தைவிடக் கூடுதலாகவே இருக்கும்.ஆகவே மனிதர்கள் கொடுக்க மாட்டார்கள். அதனால்தான் மனிதர்களுக்கு உபதேசம் செய்த பிரம்மதேவர், ``கொடு - தானம் செய்!’’ என்பதைக் குறிக்கும் முகமாக `த’ என்று கூறினார்.

இவ்வாறு தாங்கள் புரிந்து கொண்டதாக, மனிதர்கள் கூறியதும் பிரம்மதேவர்,``ஆமாம்! நீங்கள் சரியாகத்தான் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்’’ என்று சொல்லி மனிதர்களை அனுப்பிவைத்தார். இதை அறிந்ததும் அசுரர்களும் பிரம்மதேவரிடம் ஓடி வந்து விட்டார்கள். அவர்களும்,``எங்களுக்கு உபதேசம் செய்யுங்கள்!’’ என வேண்டினார்கள். பிரம்மதேவரும் பழையபடியே `த’ என்ற ஒற்றை எழுத்தை உபதேசித்தார்.

அசுரர்களும்,``சுவாமி! புரிந்து விட்டது! புரிந்துவிட்டது! `தயத்வம்’ என்று எங்களுக்கு உபதேசம் செய்துவிட்டீர்கள்’’ என்று கூறினார்கள். ``தயத்வம்’’ என்றால் தயவுடன் இருங்கள் என்பது பொருள். அசுரர்களுக்கு இரக்கம் என்பதே கிடையாது. அது அசுரர்களுக்குத் தெரியும். அதனாலதான் அவர்கள் அவ்வாறு பொருள் கொண்டார்கள். இவ்வாறு மூன்று பிரிவினருக்கும் பிரம்மதேவர் உபதேசம் செய்து முடித்தார். ஆதிசங்கரர் இதற்கு உரை கூறும்போது, இக்கதையில் கூறப்படும் தேவர்கள், அசுரர்கள் என்பவர்கள் எல்லாம் மனிதர்களை தவிர அவர்கள் வேறானவர்கள் அல்ல; அதாவது அவர்களும் மனிதர்களே என்று உரை எழுதி இருக்கிறார்.

``மனிதர்களிலேயே எல்லாவிதமான நற்குணங்கள் இருந்தாலும், புலனடக்கம் இல்லாத மனிதர்கள் தேவர்கள். கொடுக்கின்ற எண்ணமே இல்லாதவர்கள் மனிதர்கள். அடுத்தவர்களுக்கு இம்சை செய்து கொண்டு கொடூரமாக இருக்கும் மனிதர்களே அசுரர்கள். ஆகையால் பிரம்மதேவர் உபதேசித்த மூன்று உபதேசங்களும் நமக்காகவே ஏற்பட்டவை என்கின்றார்’’ பகவான் ஆதிசங்கரர். மறைகளின் முடிவு என்று வர்ணிக்கப்படும் உபநிடதங்களில், இப்படிப்பட்ட வழிகாட்டும் கதைகள் நிறைய இருக்கின்றன. நம் வாழ்வில் மங்கலங்கள் நிறைய வேண்டும் என்பதற்காகவே அக்கதைகள் இருக்கின்றன.

V.R.சுந்தரி