Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

இந்த வார விசேஷங்கள்

10.10.2026 - சனி புரட்டாசி நான்காவது சனிக்கிழமை

புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்குரிய உத்தம மாதமாகக் கருதப்படுகின்றது. நான்காவது சனிக்கிழமை என்பது புரட்டாசி மாதத்தின் முக்கிய வழிபாட்டு நாட்களில் ஒன்றாகும். அதிகாலையில் நீராடி, தூய்மையான ஆடைகளை அணிந்து, துளசி மாடத்திற்கு அருகில் விளக்கேற்ற வேண்டும். பெருமாள் படத்திற்குத் துளசி மாலை சாற்றி, விஷ்ணு சகஸ்ரநாமம் அல்லது பெருமாள் துதிகளைப் பாராயணம் செய்ய வேண்டும். இயன்றால், அருகிலுள்ள விஷ்ணு கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வது சிறப்பு. சர்க்கரை பொங்கல், பாயசம், அப்பம், வடை மற்றும் கனி வகைகளை நிவேதனமாகப் படைக்கலாம். பெருமாளுக்கு மிகவும் உகந்த துளசி தீர்த்தம் மற்றும் இலை பிரசாதம் வழங்குவது சிறப்பு.

10.10.2026 - சனி மஹாளய அமாவாசை

இன்று மிக முக்கியமான மஹாளய அமாவாசை. புரட்டாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச அமாவாசை மஹாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. இது பித்ருக்களுக்கு (முன்னோர்களுக்கு) மிக முக்கியமான திதியாகும். ஆண்டு முழுவதும் வரும் அமாவாசைகளில் தர்ப்பணம் கொடுக்கத் தவறியவர்கள்கூட, (மறந்தவனுக்கு மஹாளயம்) இந்த மஹாளய அமாவாசை நாளில் தங்களின் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்தால், அவர்களின் ஆன்மா சாந்தியடையும் என்றும், குடும்பத்திற்குப் பித்ரு தோஷம் நிவர்த்தியாகி முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்றும் ஐதீகம்.

அன்றைய தினம் காலையில் குளித்து முடித்துவிட்டு, வீட்டில் அல்லது புனித நீர்நிலைகளின் அருகில் அமர்ந்து முறைப்படி பித்ரு தர்ப்பணம் (எள்ளும் நீரும் இறைத்தல்) கொடுக்க வேண்டும். காகம் மற்றும் பசுவிற்குப் பிண்ட சோறு அல்லது உணவு வழங்குவது மிகவும் அவசியம். ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்குவது மிகுந்த புண்ணியத்தைத் தரும்.

அவரவர் இல்லங்களிலேயே தர்ப்பணம் செய்யலாம். காவிரி, தாமிரபரணி போன்ற புண்ணிய நதிக்கரைகளிலும், கடல்கரையோரம் உள்ள திருத்தலங்களிலும் (எ.கா:ராமேஸ்வரம், திருவெண்காடு, ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டபம், பவானி கூடுதுறை) செய்வது மிகவும் விசேஷமானது.

11.10.2026 - ஞாயிறு காமதேனு பூஜை

அனைத்து தேவர்களும், முனிவர்களும் விரும்பியதை வழங்கும் தேவலோகப் பசுவான காமதேனுவை வழிபடுவது, குடும்பத்திற்குச் செல்வம் மற்றும் அமைதியைத் தரும். நவராத்திரி தொடக்கமாக இந்த பூஜையைச் செய்வார்கள். பசுவை கோமாதாவாகப் பாவித்து வழிபடுவதே காமதேனு வழிபாடாகும். கோமாதாவில் சகல தேவதைகளும் வசிப்பதாக ஐதீகம். எனவே, காலை வேளையில் குளித்துவிட்டு பசுவிற்கு அகத்திக்கீரை, பழங்கள் மற்றும் வெல்லம் கலந்த உணவு வழங்குவது சிறந்தது. பசுவை வணங்கி, சந்தனம், குங்குமம் வைத்து மலர் தூவ வேண்டும். நேரடிப் பசு இல்லாவிட்டில், காமதேனு உருவம் பொறிக்கப்பட்ட படத்திற்குப் பூக்களால் அலங்கரித்து, தீபமேற்றி வழிபடலாம்.

இதன் பலன்:

1. குடும்பத்தில் இருந்த கடன் தொல்லைகள் மற்றும் வறுமை நீங்கும்.

2. வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகி, நிம்மதியும் ஒற்றுமையும் நிலவும்.

3. நினைத்த காரியங்கள் தடையின்றி நிறைவேற முன்னோர்களின் ஆசியும் காமதேனுவின் அருளும் கிடைக்கும்.

11.10.2026 - ஞாயிறு நவராத்திரி ஆரம்பம்

புரட்டாசி மாத வளர்பிறை பிரதமை திதியில் தொடங்கி, ஒன்பது நாள்கள் கொண்டாடப்படும் விழா நவராத்திரி ஆகும். இது அம்பிகையை சக்தி வடிவமாக வழிபடும் பெருவிழா. முதல் நாள் (பிரதமை) அன்று நல்ல நேரத்தில் காப்பு கட்டி, வீட்டின் சுத்தமான இடத்தில் ஒன்பது படிகள் அல்லது வசதிக்கேற்ப படிகள் அமைத்து கொலு பொம்மைகளை அடுக்கி வைக்க வேண்டும். கலசம் ஸ்தாபித்தல் (சொம்பில் நீர் நிரப்பி, மாவிலை மற்றும் தேங்காய் வைத்து, அதற்குச் சந்தனம், குங்குமம் இட்டு) அம்பிகையின் பிரசன்னமாகக் கலசம் அமைக்க வேண்டும். ஒன்பது நாட்களும் காலை மற்றும் மாலை வேளைகளில் விளக்கேற்றி, லலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி மற்றும் தேவி மகாத்மியப் பாடல்களைப் பாராயணம் செய்ய வேண்டும். தினமும் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என ஒன்பது வடிவங்களாக அம்பிகையை அலங்கரித்து வழிபட வேண்டும்.

ஒவ்வொரு நாளுக்கும் தனித்துவமானது:

* 1-2 ஆம் நாள்: பாசிப்பருப்பு சுண்டல், சர்க்கரை பொங்கல்.

* 3-4 ஆம் நாள்: கடலைப்பருப்பு அல்லது காய்ந்த பட்டாணி சுண்டல், பாயாசம்.

* 5-6 ஆம் நாள்: வெள்ளை சுண்டல் (கொண்டைக்கடலை), எலுமிச்சை சாதம் அல்லது தயிர் சாதம்.

* 7,8-9 ஆம் நாள்: மொச்சை சுண்டல், புளி சாதம் மற்றும் கேசரி.

‘‘அபிராமி அந்தாதி’’, ‘‘மகிஷாசுர மர்த்தினி ஸ்தோத்திரம்’’ மற்றும் ‘‘திருப்புகழ்’’ போன்ற பக்திப் பாடல்களைப் பாடலாம். அம்பாளுக்குச் சூட்டப்படும் மஞ்சள், குங்குமம், புது வஸ்திரம் மற்றும் ஒன்பது நாட்களும் கொலுவிற்கு வரும் பெண்களுக்குத் தாம்பூலம் (மஞ்சள், குங்குமம், ரவிக்கை துணி, தாம்பூல இலை - பாக்கு, பழங்கள் மற்றும் கண்ணாடி வளையல்கள்) வழங்குவது குடும்பத்திற்கு மங்கலத்தைக் கொண்டு சேர்க்கும்.

11.10.2026 - ஞாயிறு தௌஹித்ர பிரதிபட்

‘‘தௌஹித்ரம்” என்றால் மகளின் மகன் அதாவது பேரன் என்று பொருள். மஹாளய அமாவாசை முடிந்த மறுநாள் (அதாவது ஆஸ்வின மாதக் கிருஷ்ணப் பிரதமை / அல்லது மஹாளய காலத்தில் வரக்கூடிய பிரதமை திதி) பித்ரு காரியங்களில் பேரன்மார்களின் பங்களிப்பைக் குறிப்பது. சாஸ்திரங்களின்படி, முன்னோர்களுக்குச் செய்யும் தர்ப்பணக் சடங்குகளில் ‘தௌஹித்ரன்’ (மகனின் மகன் அல்லாமல், மகளின் மகன்) செய்யும் சிராத்தம் அல்லது தர்ப்பணம் முன்னோர்களுக்கு மிகுந்த திருப்தியைத் தரும். மஹாளய அமாவாசைக்குப் பிந்தைய பிரதமை திதியில், முன்னோர்களை நினைத்துச் செய்யும் வழிபாடுகளில் பேரன்மார்களை (மகளின் மகனை) கொண்டு சில சடங்குகளைச் செய்வதோ அல்லது அவர்களுக்கு உரிய மரியாதை அளித்து அன்னதானம் வழங்குவதோ மரபு. சுருக்கமாகச் சொன்னால், தாத்தா பாட்டிகள் தங்கள் பேரப் பிள்ளைகளுக்கு பரிசுகள் தந்து ஆசி வழங்கும் நாள் என்று சொல்லலாம்.

12.10.2026 - திங்கள் தனவிருத்தி கௌரி விரதம்

அன்னை பார்வதி தேவியை ‘கௌரி’ வடிவத்தில் வழிபட்டு, குடும்பத்தில் செல்வ வளம் (தனவிருத்தி), ஐஸ்வரியம் மற்றும் மங்கலப் பேறுகளை அடையக் கடைபிடிக்கப்படும் உன்னதமான விரதமாகும். ‘‘குடிசை வீட்டை மாளிகை வீடாக்கும்’’ சக்தி வாய்ந்த விரதம் என்று இது போற்றப்படுகிறது. வீட்டைத் தூய்மை செய்து, பூஜை அறையில் சிவ - பார்வதி திருமேனி அல்லது படத்திற்கு அருகில் கலசம் ஸ்தாபிக்க வேண்டும். அம்பிகையை மனதாரப் பூஜித்து, நிவேதனமாக சுண்டல், இனிப்பு வகைகள் மற்றும் பழங்களைப் படைத்து வழிபட வேண்டும்.

13.10.2026 - செவ்வாய் திருமலை நம்பி திருநட்சத்திரம்

வைணவ சம்பிரதாயத்தில் மிக முக்கியமான ஆசாரியரான பெரிய திருமலை நம்பி (ஸ்ரீ சைல பூர்ணர்), எம்பெருமான் ஸ்ரீ ராமானுஜரின் தாய்மாமன் மற்றும் ஆளவந்தாரின் முதன்மை சீடர்களில் ஒருவராவார். இவரே திருவேங்கடமுடையானுக்கு (திருப்பதி பெருமாள்) மலையில் நந்தவன கைங்கர்யங்கள் செய்து தொண்டு புரிந்தவர். இவருக்கு எம்பெருமானே ‘‘பிதாமஹர்’’ (தாத்தா) என்று திருநாமம் சூட்டிகௌரவித்துள்ளார். ஸ்ரீ ராமாயணத்தின் ஆழமான உட்பொருள்களை (சரணாகதி தத்துவம்) எம்பெருமானாருக்கு உபதேசித்த பெருமை இவரை சாரும். இவருடைய திருநட்சத்திர நாளில் இவரின் குருபரம்பரையைப் போற்றித் துதிக்க வேண்டும். விஷ்ணு கோயில்களில் அல்லது இல்லத்தில் திருமலை நம்பி படத்திற்குத் துளசி மாலை சாற்றி, பிரபந்தப் பாசுரங்களைச் பாராயணம் செய்து, சர்க்கரைப்

பொங்கல் அல்லது பாயசம் நிவேதனம் செய்து வழிபட வேண்டும்.

13.10.2026 - செவ்வாய் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேக காட்சி

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நவராத்திரி திருவிழா மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும். மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள நவராத்திரி மண்டபத்தில் கொலு சிறப்பாக வைக்கப்படும். அம்மன் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு திருக்கோலங்களில் (அலங்காரத்தில்) பக்தர்களுக்குக் காட்சி தருவார். நவராத்திரி நாட்களில் அம்பிகை மதுரை மாநகரின் அரசியாகச் செங்கோல் ஏந்தி ஆட்சி செய்யும் ‘‘பட்டாபிஷேகக் காட்சி’’ மிகவும் பிரசித்தி பெற்றது. அது இன்று.

14.10.2026 - புதன் ஆன்மிக சித்தர் எட்டுக்குடி நாகை குருபூஜை

எட்டுக்குடி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முருகப் பெருமான் குடிகொண்டுள்ளார். இதே தலத்தில்தான் வான்மீக சித்தர் ஜீவ சமாதி அடைந்துள்ளதாக ஆன்மிக வரலாறு கூறுகின்றது. வான்மீக சித்தரின் குருபூஜை விழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சித்தர்களின் குருபூஜை நாட்களில், இவரை நினைத்து வழிபடுவதால் ஆன்மிக ஞானம், வாக்கு வன்மை மற்றும் சகல தோஷ நிவர்த்தி உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

14.10.2026 - புதன் புதனனுராதா

ஜோதிடக் கணிப்புப்படி, புதன்கிழமையும் அனுஷம் நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாள் மிகவும் புனிதமான மற்றும் மங்களகரமான நாளாகக் கருதப்படுகின்றது. அனுஷம் நட்சத்திரத்திற்கு அதிபதி சனி பகவான் ஆவார், மேலும் இத்தினம் புதனின் ஆதிக்கமும் இணைவதால் கல்வி, கலை, வியாபாரம் மற்றும் அறிவுசார் முயற்சிகளில் வெற்றி பெற உகந்த நாளாகும். அன்றைய தினம் விஷ்ணு

பகவான், மகாலட்சுமி மற்றும் நவகிரகங்களில் புத பகவான் மற்றும் சனி பகவானை வழிபடுவது வாழ்வில் உயர்ந்த பலன்களைத் தரும்.

15.10.2026 - வியாழன் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் குருபூஜை

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சித்துகளில் ஒன்றைக் கொண்டு விளங்கிய மகான் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் ஆவார். இவர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள வண்டியூர் மற்றும் சுருளிமலை போன்ற பகுதிகளில் தவம் புரிந்து அருள்பாலித்த மகா சித்தர் ஆவார். தன் கையில் எப்போதுமே ஒரு ‘சூட்டுக்கோல்’ வைத்திருப்பார். இவரின் குருபூஜை விழா ஆண்டுதோறும் குருவின் ஜீவ சமாதி ஸ்தலங்களிலும், இவரைப் போற்றும் ஆன்மிக மையங்களிலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவரின் குருபூஜை நாளில் சுவாமிகளை மனதார நினைத்து தியானம் செய்வதால், மன அமைதியும், கர்ம வினைகள் நீங்கி நற்கதியும் கிட்டும் என்பது ஐதீகம்.

16.10.2026 - வெள்ளி சஷ்டி விரதம்

மாதந்தோறும் வரும் வளர்பிறை சஷ்டி மற்றும் தேய்பிறை சஷ்டி நாட் களில் முருகப் பெருமானை நினைத்து விரதம் இருப்பது வழக்கம். இந்த விரதத்தை மேற்கொள்வதன் மூலம் வாழ்வில் ஏற்படும் தடைகள், எதிரிகளின் தொல்லைகள் மற்றும் கர்ம வினைகள் நீங்கும். குழந்தைப் பேறு வேண்டுபவர்களும், நீண்ட நாட்களாகத் தீராத நோய்களால் அவதிப்படுபவர்களும், சஷ்டி விரதம் இருந்தால் விரைந்து பலன் பெறலாம். சஷ்டி விரத நாட்களில் அருகிலுள்ள முருகப் பெருமான் கோயிலுக்குச் சென்று, மூலவருக்குச் சாற்றப்பட்ட செவ்வரளி மாலைகளைப் பெற்று அணிவதும், முருகனுக்குத் தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்வதும் மிகவும் விசேஷமானது.