Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

இந்த வார விசேஷங்கள்

30.8.2026 - ஞாயிறு ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ஆராதனை

ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் வரும் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் ஆராதனை நாள், பக்தர்களால் மிகவும் புனிதமான நாளாகக் கொண்டாடப் படுகிறது. மனித வாழ்க்கையில் குருவின் இடம் மிகவும் உயர்ந்தது. இறைவனை அடைவதற்கான வழியைக் காட்டுபவரே குரு. அந்த வகையில், தம்முடைய வாழ்நாள் முழுவதும் பக்தி, தர்மம், ஞானம் ஆகியவற்றை போதித்து, இன்றும் தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் மகான் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்.

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் 16 - ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான். இவர், வேதம், சாஸ்திரம், தர்க்கம், மீமாம்சை, இசை உள்ளிட்ட பல துறைகளில் ஆழ்ந்த புலமை பெற்றவர். பின்னர் சந்நியாசம் ஏற்று, பக்தி மார்க்கத்தையும் தர்மத்தையும் மக்களிடையே பரப்பினார். ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள், மந்த்ராலயத்தில் துங்கபத்ரை நதிக்கரையில் உள்ள இடத்தைத் தமது பிருந்தாவனத்திற்காகத் தேர்ந்தெடுத்தார். கி.பி. 1671 - ஆம் ஆண்டு, அவர் ஜீவசமாதி அடைந்தார். அந்த நாளே அவருடைய ஆராதனை நாளாக பக்தர்களால் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.

“நான் பிருந்தாவனத்தில் இருந்தாலும், என்னை நாடி வரும் பக்தர்களுக்கு என்றும் அருள்புரிவேன்” என்ற நம்பிக்கையைத் தமது சீடர்களுக்கு அளித்தவர், ஸ்ரீ ராகவேந்திரர். அதனால்தான் இன்றும் மந்த்ராலயம் செல்லும் பக்தர்கள், பிருந்தாவனத்தின் முன் நின்று, தங்களுடைய துயரங்களையும் வேண்டுதல்களையும் மனம் திறந்து கூறுகின்றனர்.

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் வழிபாட்டில் மிக முக்கியமானது குருபக்தி. இறைவனை அடைய வேண்டும் என்றால், முதலில் மனம் தூய்மையாக வேண்டும். மனம் தூய்மையாக வேண்டும் என்றால், தர்மமான வாழ்க்கை வேண்டும். அந்த வாழ்க்கையை நமக்குக் கற்றுக் கொடுப்பவரே குரு. குரு என்பவர் வெறுமனே மந்திரத்தை உபதேசிப்பவர் அல்ல. நாம் தவறும்போது திருத்துபவர். நாம் தளரும்போது நம்பிக்கை கொடுப்பவர்.

நாம் இருளில் இருக்கும்போது வழியைக் காட்டுபவர். நாம் இறைவனை மறந்தாலும், இறைவனை நினைவுபடுத்துபவர். அதனால்தான் நமது பாரம் பரியம் குருவை இறைவனுக்கு நிகராகப் போற்றுகிறது.

ஆராதனை நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் படத்திற்கு மலர் சூட்டி, விளக்கேற்றி வழிபடலாம். “ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ” என்ற மந்திரத்தை பக்தியுடன் ஜபிக்கலாம். ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் அஷ்டோத்திரம், ஸ்தோத்திரங்கள் அல்லது அவரைப் பற்றிய மந்திரங்களைப் பாராயணம் செய்யலாம். முடிந்தால் அன்று ஒரு ஏழைக்கு உணவு வழங்குவது, பசுவிற்கு உணவு அளிப்பது, தேவையுள்ள ஒருவருக்கு உதவுவது போன்ற தர்மச் செயல்களைச் செய்வது சிறப்பானது.

31.8.2026 - திங்கள் மகாசங்கடஹர சதுர்த்தி / சுந்தரானந்தர் குருபூஜை

இன்று, சங்கடஹர சதுர்த்தி. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்குப்பின் வரும் தேய்பிறை சதுர்த்தி நாளில், விநாயகப் பெருமானை வேண்டி அனுசரிக்கப் படும் ஒரு சிறப்பான விரதமாகும். `சங்கட’ என்றால் துன்பம், `ஹர’ என்றால் அழித்தல் என்று பொருள். எனவே துன்பங்களை நீக்கும் இந்த நாளில், விநாயகரை வழிபடுவது வாழ்வில் பல நன்மைகளைத் தரும்.

இன்று இன்னும் ஒரு சிறப்பு. மதுரை சுந்தரானந்தர் சித்தர் குருபூஜை. ஆவணி மாதம் ரேவதியில் நடக்கிறது. இவர் சட்டைமுனி சித்தரின் சீடர் என்று சொல்கிறார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் “எல்லாம் வல்ல சித்தர்” என்ற பெயரிலும் அவருக்கு சந்நதி உள்ளது. சுந்தரானந்தர் மதுரையில் வாழ்ந்து சித்துகள் பல புரிந்து, முக்தியடைந்ததாகவும், அவர் வாழ்ந்த இடத்திலேயே ஜீவசமாதி அமைக்கப்பட்டதாகவும் செய்திகள் உண்டு. குறிப்பாக, அவரது குருபூஜை நிகழ்ச்சியில் திருமுறை பாராயணம், புஷ்பாஞ்சலி, சிறப்புரை, அன்னதானம் நடைபெறுகிறது.

3.9.2026 - வியாழன் சீதளா விரதம்

``சீதளா” என்றால் குளிர்ச்சியைத் தருபவள் என்று பொருள். சீதளாதேவி, நோய்களை, குறிப்பாக அம்மை போன்ற தொற்று நோய்களிலிருந்து மக்களைக் காப்பவள். சீதளாதேவி துர்க்கையின் ஒரு அம்சமாகவும், மக்களின் நோய்களை நீக்கி ஆரோக்கியத்தை வழங்கும் தெய்வமாகவும் போற்றப்படுகிறாள். வாகனம் கழுதை. கையில் துடைப்பம், வேப்பிலை, நீர்க்குடம் போன்றவற்றுடன் காட்சியளிக்கும் வடிவம் பரவலாகக் காணப்படுகிறது. இதில் ஒவ்வொன்றுக்கும் ஒரு குறியீடு இருப்பதாகக் கருதப்படுகிறது.

வேப்பிலை - நோய் எதிர்ப்பு மற்றும் தூய்மை,

நீர்க்குடம் - குளிர்ச்சி மற்றும் ஆரோக்கியம்,

துடைப்பம் - அசுத்தத்தை அகற்றுதல்.

எனவே சீதளா வழிபாடு என்பது வெறும் நோய் தீர வேண்டும் என்ற வேண்டுதல் மட்டுமல்ல; சுற்றுப்புறத் தூய்மை, உடல் ஆரோக்கியம், சுகாதாரம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் நினைவூட்டும்.

4.9.2026 - வெள்ளி பெரியவாச்சான் பிள்ளை திருநட்சத்திரம்

பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் மிக முக்கியமான ஆச்சார்யர்களில் ஒருவர். ஆழ்வார்களின் அருளிச் செயல்களுக்கு விரிவான வியாக்கியானங்களை அருளியதால், “வியாக்கியானச் சக்கரவர்த்தி” என்று போற்றப்படுகிறார். கும்பகோணம் அருகே சேங்கனூரில் அவதரித்தார். அவருடைய திருநட்சத்திரம், ஆவணி ரோகிணி. பெற்றோர்கள், ஸ்ரீ கிருஷ்ணபாதர் எனப் பெயரிட்டனர். கண்ணனே நம்பிள்ளையிடம் (திருமங்கையாழ்வார் அம்சம்) பாசுர விளக்கங்களை கேட்க, கண்ணன் அம்சமாக அவதரித்தார். இன்று எல்லா வைணவ ஆலயங்களிலும் இவர் திருநட்சத்திரம் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். நயினாராச்சான் பிள்ளை (இவரது மருமான்), பரகால தாசர், பின்பழகிய பெருமாள் ஜீயர் (ஸ்ரீ ரங்காச்சாரியார்) ஆகியோர் இவரது சீடர்கள்.

4.9.2026 - வெள்ளி ஸ்தாணு அஷ்டமி

ஸ்தாணு அஷ்டமி என்பது ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி நாளாகும். இந்த நாளில் காலபைரவர் மற்றும் சிவபெருமானை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். சிவ ஆலயங்களிலுள்ள பைரவருக்கு நல்லெண்ணெய் அல்லது நெய் தீபம் ஏற்றி, வடை மாலை சாற்றி, அரளி அல்லது செவ்வந்தி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடலாம். இந்த நாளில், இயலாதவர்களுக்கு உதவுவதும், ஏழை எளியவர்களுக்கு அல்லது தெரு நாய்களுக்கு உணவளிப்பது பைரவரின் அருளைப் பெற்றுத் தரும்.

4.9.2026 - வெள்ளி நைனாராச்சான் பிள்ளை திருநட்சத்திரம்

நாயனார் அச்சன் பிள்ளை, இவர் ஸ்ரீரங்கத்தில் அவதரித்தார். பெரிய வாச்சான் பிள்ளையின் வளர்ப்பு மகன். வைணவ சம்பிரதாயத்தில் மிகச் சிறந்த அறிவாற்றல் கொண்ட ஆளுமையாகப் போற்றப்படுபவர். திருநட்சத்திரம் ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரம் (சில நூல்களில் சித்திரை மாதம்).