Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

இந்த வார விசேஷங்கள்

15.8.2026 - சனி அரவிந்தர் தினம்

“மனிதன் இப்போது இருப்பதைவிட உயர்ந்த நிலையை அடையப் பிறந்தவன்.” என்று சொன்ன அரவிந்தர், 1872 - ஆகஸ்ட் 15 அன்று கொல்கத்தாவில் பிறந்தார். விடுதலைப் போராட்ட வீரர், தத்துவ ஞானி, கவிஞர், யோகி, கல்வியாளர் எனப் பல துறைகளில் சிறந்து விளங்கினார். பின்னர், புதுச்சேரியில் ஆன்மிக வாழ்வை மேற்கொண்டு முழுமை யோகம் என்ற உயர்ந்த ஆன்மிகக் கொள்கையை உலகிற்கு அளித்தார். மனிதனின் உடல், மனம், அறிவு, ஆன்மா ஆகிய அனைத்தும் உயர்ந்த நிலையை அடைவதே அவரது தத்துவத்தின் மையக் கருத்தாகும். இந்நாளில் அரவிந்தரின் திருவுருவத்திற்கு மலரஞ்சலி, தியானம் மற்றும் அமைதி பிரார்த்தனை, அவரது நூல்களிலிருந்து வாசிப்பு மாணவர்களுக்குக் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஆன்மிகச் சொற்பொழிவுகள் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

15.8.2026 - சனி ஸ்வர்ண கௌரி விரதம்

ஸ்வர்ண கௌரி விரதம் என்பது பார்வதி தேவியை ஸ்வர்ண கௌரி (பொன்னொளி பொருந்திய கௌரி) என்ற திருநாமத்தில் வழிபடும் சிறப்பான விரதமாகும். குடும்ப நலம், நீண்ட சுமங்கலி பாக்கியம், நல்ல கணவன், மகப்பேறு, செல்வவளம் ஆகியவற்றை வேண்டி பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். பார்வதி தேவி, சிவபெருமானை கணவராகப் பெற கடுமையான தவம் மேற்கொண்டார்.

அவரது பக்தியையும் தவத்தையும் கண்டு சிவபெருமான் அருள்புரிந்து திருமணம் செய்துகொண்டார். அந்த நினைவாகவே கௌரிதேவியை வழிபடும் இந்த விரதம் உருவானது என்று புராணங்கள் கூறுகின்றன. திருமணமான பெண்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காகவும், திருமணமாகாத பெண்கள் நல்ல துணை அமையவும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

காலையில் நீராடி, வீடு மற்றும் பூஜை அறையைச் சுத்தம் செய்ய வேண்டும்.மஞ்சளால் கௌரி தேவியின் உருவம் செய்து அல்லது அம்மன் படத்தை வைத்து அலங்கரிக்கலாம்.மஞ்சள், குங்குமம், பூக்கள், மங்களப் பொருட்கள், பழங்கள், தேங்காய், வெற்றிலை, பாக்கு முதலியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். கௌரி அஷ்டோத்திரம், லலிதா சஹஸ்ரநாமம் அல்லது பார்வதி ஸ்துதிகளைப் பாராயணம் செய்யலாம்.நைவேத்தியம் செய்து தீபாராதனை காட்டி, சுமங்கலிப் பெண்களுக்கு தாம்பூலம் வழங்குவது வழக்கம்

16.8.2026 - ஞாயிறு ஆதித்ய ஹஸ்தம்

ஆதித்ய ஹஸ்தம் என்பது ஹஸ்தம் (அஸ்தம்) நட்சத்திரமும் ஞாயிற்றுக் கிழமையும் ஒரே நாளில் சேர்ந்து வரும்போது அனுஷ்டிக்கப்படும் ஒரு புண்ணிய நாளாகும். இந்த நாளில் சூரிய பகவானை வழிபடுவது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இன்றைய தினம் அவசியம் சூரிய வழிபாடு செய்ய வேண்டும். அதுவும் ஆவணி தனது சொந்த ராசியில் சூரியன் ஆட்சி பெறும் மாதம். சூரியனுக்கு கோதுமை, வெல்லம், சிவப்பு நிறப் பழங்கள் போன்றவற்றை நைவேத்தியமாக சமர்ப்பிக்கலாம். ஆதித்ய ஹ்ருதயம், சூரிய காயத்ரி, அல்லது ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரௌம் ஸஹ ஸூர்யாய நம: என்ற மந்திரத்தை ஜபிக்கலாம். இதனால் ஆயுளும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். உயர் பதவிகள் கிடைக்கும்.

16.8.2026 - ஞாயிறு மதுரை ஆவணி திருவிழா

மதுரையில் உள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக் கோயில் நடைபெறும் ஆவணி மூலத் திருவிழா தமிழ்நாட்டின் மிகவும் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும். அது இன்று தொடங்குகிறது. ஆவணி மாதம், மூலம் நட்சத்திரத்தை மையமாகக் கொண்டு நடைபெறும் இவ்விழா, சிவபெருமான் மதுரையில் நிகழ்த்திய திருவிளையாடல்களை நினைவுகூரும் வகையில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னருக்கும், மதுரை மக்களுக்கும் சிவபெருமான் அருளிய திருவிளையாடல்களில் பல நிகழ்வுகள் இத்திருவிழாவில் நாடக வடிவிலும், ஊர்வலங்களாகவும் நடைபெறுகின்றன.

17.8.2026 - திங்கள்  பெருமிழலை குறும்பர் குருபூஜை

பெருமிழலைக் குறும்ப நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். செல்வச் செழிப்புடன் வாழ்ந்தாலும், தமது வாழ்நாள் முழுவதையும் சிவ பக்தர்களுக்குத் தொண்டு செய்வதற்கே அர்ப்பணித்தார். சிவனடி யார்களுக்கு உணவு, உடை, தேவையான உதவிகள் செய்து, அவர்களை சிவபெருமானாகவே கருதி வழிபட்டார். அவர் சுந்தர மூர்த்தி நாயனார் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார். சுந்தரர் கயிலாயம் செல்லவிருப்பதை யோக திருஷ்டியால் அறிந்து, அவருக்கு முன்னதாகவே சிவபெருமானின் திருவடியை அடைந்ததாக பெரியபுராணம் கூறுகிறது. அவர் குருபூஜை இன்று.

17.8.2026 - திங்கள் ஆடி அறுதி

ஆடி அறுதி என்பது ஆடி மாதத்தின் கடைசி நாள் ஆகும். ஆடி மாத வழிபாடுகளை நிறைவு செய்து, அடுத்த மாதமான ஆவணியை வரவேற்கும் நாளாக இது தமிழகம் முழுவதும் பல குடும்பங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆடி மாதத்தில் மேற்கொண்ட அம்மன் வழிபாடுகள், விரதங்கள் ஆகியவற்றை நிறைவு செய்யும் நாள். குலதெய்வம் மற்றும் குடும்பத் தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். சில பகுதிகளில் முன்னோர்களை நினைவுகூர்ந்து தர்ப்பணம் அல்லது படையல் செய்வதும் உண்டு. குடும்பத்தினர் ஒன்றுகூடி சிறப்பு உணவு தயாரித்து இறைவனுக்குப் படைத்து

உண்ணுவர்.

17.8.2026 - திங்கள் விஷ்ணுபதி புண்ணிய காலம்

விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் மகாவிஷ்ணு வழிபாடு, துளசி அர்ச்சனை, தானம், ஜபம், பாராயணம் ஆகியவை பலமடங்கு புண்ணியத்தை அளிக்கும் என்று சமயநூல்கள் கூறுகின்றன. இந்நேரத்தில் செய்யும் தர்மங்களும் இறைவழிபாடும் நீண்டகால நற்பலன்களைத் தரும் என்று நம்பப்படுகிறது.

21.8.2026 - வெள்ளி குலச்சிறை நாயனார் குருபூஜை

குலச்சிறை நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும், சிவபக்தியின் சிறந்த முன்மாதிரியாகவும் போற்றப்படுகிறார். ஆவணி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் இவரது குருபூஜை சைவத் திருக்கோயில் களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. குலச்சிறை நாயனார் பாண்டிய நாட்டில் அமைச்சராகப் பணியாற்றினார். சிவபெருமானிடமும் சிவனடியார்களிடமும் அளவற்ற பக்திகொண்டிருந்தார். சமண சமயம் செல்வாக்கு பெற்றிருந்த காலத்தில், சைவசமயத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

பாண்டிய மன்னன் நெடுமாறன் (கூன் பாண்டியன்) சமண சமயத்தின் தாக்கத்தில் இருந்தபோது, மங்கையர்க்கரசியார் உடன் இணைந்து திருஞானசம்பந்தர் அவர்களை மதுரைக்கு வரவழைத்தார். திருஞானசம்பந்தர் அருளால் மன்னன் சிவநெறியை ஏற்றுக்கொண்டார். இதன் மூலம் சைவசமயம் மீண்டும் மதுரையில் தழைத்தோங்கியது