Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்த வார விசேஷங்கள்

6.8.2026 - வியாழன் ஆடி கிருத்திகை

ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திரம் வரும் என்றாலும் கடக மாதத்தில், வரும் கிருத்திகை நட்சத்திரம் மிகச் சிறப்பானது. கார்த்திகை பெண்கள் அறுவர் சிவனின் நெற்றிக்கண்ணில் உதித்த முருகப் பெருமானை பாலூட்டி வளர்த்த காரணத்தால், அவர்கள் எம்பெருமானுக்கு தாய் என்ற சிறப்பினைப் பெற்றனர்.

அப்போது சிவபெருமான் அவர்களுக்கு ஒரு வரம் அளித்தார். கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழி படு வோர் துன்பங்கள் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள்” என்று வாழ்த்தினார். எனவே ஆடிக் கிருத்திகை மற்ற கிருத்திகை தினங்களை விட எல்லா முருகன் கோயில் களிலும் மிக விசேஷமான அபிஷேக ஆராதனைகள் நடை பெறும்.

கிருத்திகை விரதம் தொடர்ந்து இருப்பவர்களுக்கு, உடலில் நோய் நொடிகள் அகலும். குடும்பத்தில் ஜாதக தோஷத்தால் ஏற்படும் காரியத்தடைகள் நீங்கும். ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம். விரதம் இருப்பவர்கள் உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதமோ, சஷ்டி விரதமோ இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது. மற்ற கிருத்திகையில் விரதம் இருக்க முடியாதவர்கள் குறைந்த பட்சம் ஆடிக்கிருத்திகையில் வழிபட்டால் எல்லா வளமும் கிடைக்கும்.

6.8.2026 - வியாழன் நீலகண்ட அஷ்டமி

தேய்பிறை அஷ்டமியில் உச்சி வேளையில் பைரவருக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி, நெய் தீபம் ஏற்றி, சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து பைரவரை வழிபட்டால் கிரக தோஷங்கள், கடன் தொல்லை ஆகியன நீங்கும். நம்முடைய அச்சத்தை நீக்கி, துன்பங்களில் இருந்து நம்மை காத்தருளும் தெய்வம் தான் பைரவர். கொடிய அபாயங்கள், பகை ஆகியவை நம்மை அணுகாமல் இருக்க பைரவரை வழிபட வேண்டும். அவரை வழிபட வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி, தேய்பிறை சஷ்டி, பரணி நட்சத்திரம், ஞாயிற்றுக்கிழமை அன்று வரும் ராகு காலம் போன்றவை ஏற்ற காலங்களாகும். அஷ்டமி திதி அன்று ஆதிசங்கரர் அருளிய சக்தி வாய்ந்த பைரவாஷ்டகத்தை பாராயணம் செய்யுங்கள். தீராத நோயும் தீரும்.

தேவராஜ ஸேவ்யமான பாவநாங்க்ரி பங்கஜம்

வ்யால யஜ்ஞஸூத்ர மிந்துஸேகரம் க்ருபாகரம்

நாரதாதி யோகி ப்ருந்த வந்திதம் திகம்பரம்

காஸிகா புராதி நாத கால பைரவம் பஜே

7.8.2026 - வெள்ளி மூர்த்தி நாயனார் குருபூஜை

மூர்த்தி நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். பாண்டிய நாட்டில், மதுரை மாநகரில் வணிக குலத்திலே அவதரித்தார். சைவத்தில் ஆழ்ந்த பிடிப்பும், அன்பும் உடையவர். மதுரையம்

பதியில் திருக்காட்சி தரும் சொக்கலிங்கப் பெருமானுக்கு தினசரி சந்தனக்காப்பு சிவத்தொண்டு செய்து வந்தார். அப்பொழுது மதுரையில் பெரும் போர் நிகழ்ந்தது. கர்நாடக தேசத்து அரசன் பாண்டியனை வெற்றி கொண்டான். சமண நெறியைப் பின்பற்றிய அவன் சைவநெறியாளர்களுக்கு மிகப் பெரிய துன்பமும் சங்கடமும் செய்தான். அதனை நேரடியாகச் செய்யாமல், தொண்டு செய்வதற்கு உரிய பொருள் கிடைக்காதபடி உத்தரவு போட்டான்.

மூர்த்தியாருக்கு சந்தனக் காப்பு பணிசெய்ய சந்தனக் கட்டைகள் கிடைக்க வில்லை. மனம்தளர்ந்து இறைவரது திருக்கோயிலுக்கு வந்தார். தன்னுடைய முழங்கையையே சந்தனப் பாறையில் தேய்த்தார். ‘‘இப்படிப்பட்ட கொடுமையை உன்னால் தடுக்க முடியாதா?” என்று சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்ய, அன்று இரவே கொடுமை செய்த மன்னன் மாண்டு போனான். உடனடியாக அடுத்த அரசனைத் தேர்ந் தெடுக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தது. யானையிடம் மாலையைக் கொடுத்து அது யார் கழுத்தில் சூட்டுகிறதோ அவரை அரசராக தேர்ந்தெடுக்க நிச்சயித்தனர்.

மதுரை சொக்கநாதர் திருக்கோயிலின் முன்வந்து மூர்த்தியார் நின்று கொண்டிருந்தார். அவர் கழுத்தில் மாலை சூட்ட, சொக்கனின் திருவருளால் அவரே மன்னரானார். எந்தத் துன்பமும் இன்றி சைவத்தைப் பரப்பினார். நல்லாட்சி புரிந்த பின்னர் சிவனின் திருவடியை அடைந்தார். அவருடைய குருபூஜை இன்று.

7.8.2026 - வெள்ளி புகழ்ச்சோழ நாயனார் குருபூஜை

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் புகழ்ச்சோழ நாயனார். உறையூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டவர். சைவத்தில் மிகுந்த பற்றுடையவர். சிவாலயங்களில் சிறந்த பூஜை நடக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் புகழ்ச்சோழ நாயனார்.

ஒரு முறை எறிபத்த நாயனார், மன்னரின் மனைவியை, சிவ பூஜைக்கு அபராதம் நிகழ்ந்ததாகக் கருதி தண்டிக்க, “இதற்குக் காரணமான தன்னை அல்லவா தண்டிக்க வேண்டும்” என்று அவரிடம் தன் வாளை எடுத்துத் தந்தார் புகழ்ச்சோழ நாயனார்.

சிற்றரசர்களிடம் திறைப் பணம் வசூலித்து அவர்களுக்கு ஆட்சி உரிமையை அந்தந்த பகுதிகளுக்குத் தந்து கொண்டிருந்தார். அப்பொழுது ஒரே ஒரு சிற்றரசன், அதிகன் என்பவன் மட்டும், திறை பணம் செலுத்தவில்லை. உடனே அவனை வென்று வருமாறு கட்டளையிட்டார். அமைச்சர்கள் சேனையுடன் அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர்.

சிற்றரசன் அதிகன் தப்பிக் காட்டுக்குள் ஓடிவிட்டான். அமைச்சர்கள் பல பொருள்களுடன் கொல்லப்பட்ட தலைக்குவியல்களையும் அரசன் முன் கொண்டுவந்தனர். அவ்வாறு கொண்டு வந்த தலைக் குவியல்களுள் ஒரு சிவனடியாரின் தலையும் திருநீறு பூசிய நெற்றியுடன் இருந்ததைக் கண்டு நடுங்கினார் நாயனார். ‘‘தாம் சிவநெறி வளர்த்த அழகா இது?” என்று வருந்தி, தன்னுடைய புதல்வனுக்கு முடி சூட்டும் படி சொல்லிவிட்டு, தான் செய்த சிவ அபராதமாகிய பழிக்குத் தன் உயிரை மாய்த்துக் கொள்வது தான் ஒரேவழி, என்று நெருப்பில் புகுந்தார். இவருடைய பெருமையை ‘‘பொழிற் கருவூர்த் துஞ்சிய புகழ்ச் சோழற் கடியேன்” என்று சுந்தரர் பாடுகிறார் அவருடைய குருபூஜை ஆடி கிருத்திகை நட்சத்திரம்.

7.8.2026 - வெள்ளி திருத்தணி முருகன் தெப்பம்

அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ஆடி மாதத்தில் ஆடி கிருத்திகை தெப்ப உற்சவம் 4.8.2026 முதல் 8.8.2026 வரை நடைபெறும். வள்ளி, தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும். பின்னர் உற்சவ மூர்த்திகள் மலர்கள், மின் விளக்குகள் மற்றும் வண்ண அலங்காரங்களால் அழகுபடுத்தப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி, மலை அடிவார சரவணப் பொய்கை திருக்குளத்தில் வலம் வருவார்கள்