Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

இந்த வார விசேஷங்கள்

21-2-2026 - சனி விருத்தகிரீஸ்வரர் கோயில்மாசி விழா

விருத்தாசலத்தில் அமைந்துள்ள அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் கோயில், பழமலைநாதர் கோயில் என்று அழைக்கப்படும். தேவாரப் பாடல் பெற்ற சிவாலயமான இந்த ஆலயம் 3.5 கோடி ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது. இக்கோயில், மணிமுக்தா நதிக் கரையில் அமைந்துள்ளது. இங்கு மாசித் திருவிழா விசேஷம். பிரசித்தி பெற்ற மாசிமகத் திருவிழா இன்று காலை 11.45 முதல் 12.45 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதற்கு முன்னதாக ஆழத்து பிள்ளையார் விழா தீர்த்தவாரியுடன் நேற்று நிறைவு பெற்றது.ஆறாம் திருவிழாவான வரும் வியாழக்கிழமை(26.2.26) காலை 11:00 மணிக்கு மேல் விபசித்து முனிவருக்கு இறைவன் காட்சி அளிக்கிறார் . மார்ச் 1-ஆம் தேதி தேர் திருவிழாவும் இரண்டாம் தேதி மாசி மகமும் 3 ஆம் தேதி தெப்பத் திருவிழாவும் நடைபெறுகிறது.

21-2-2026 - சனி - சதுர்த்தி

சதுர்த்தி விரதம் என்பது விநாயக பெருமானை வழிபடுவதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு புனிதமான விரதம். இந்த விரதத்தை மேற்கொள்வதால், நமது வாழ்வில் நேரும் சங்கடங்கள் நீங்கி, செல்வம், செழிப்பு, நல்ல ஆரோக்கியம் மற்றும் மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை.இன்று சதுர்த்தி.விநாயகர் கோவிலுக்கு சென்று 11 முறை வலம் வந்து வணங்குவது சிறந்தது. இல்லையெனில், வீட்டில் விநாயகர் சிலையை வைத்து, அருகம்புல் மற்றும் வெள்ளெருக்கு மலர்களால் மாலையிட்டு வழிபாடு செய்து விரதத்தை தொடங்கலாம். நாள் முழுவதும் விரதம் இருக்கலாம்; முடியாதவர்கள் பால் மற்றும் பழங்களை மட்டும் உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

21-2-2026 - சனி பெருவயல் முருகப்பெருமான் விழா

இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ள பெருவயல் ரணபலி முருகன் கோயில் (சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்) பிரசித்தி பெற்ற கோயில்.இக்கோயில் ராமநாதபுரம் மன்னர கிழவன் சேதுபதியால் உருவானது, இங்குள்ள முருகப் பெருமான் வேலில் முருகனின் திருவுருவம் பொறிக்கப்பட்ட அரிய வடிவத்தில் உள்ளார். இந்த வேல் இராமநாதபுரம் அரண் மனையிலேயே வைத்து பாதுகாக்கப்படும் வருடம் ஒருமுறை நடக்கும் மாசித்திருவிழா 10 நாட்கள் மட்டுமே இந்த வேலை நாம் கோயிலில் பார்க்கலாம் மற்ற நேரத்தில் பார்க்க முடியாது. மாசி மாதம் நடைபெறும் திருவிழாவின்போது, தேரோட்டம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், வீதியுலா ஆகியவை நடைபெறும்.இன்று மாசி மக விழா தொடக்கம்.

22-2-2026 - ஞாயிறு திருக்கோட்டியூர் சௌமிய நாராயண பெருமாள் உற்சவம்

திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் திருப்பத்தூர் வருவாய் வட்டத்தில் திருகோஷ்டியூர் தலத்தில் அமைந்த 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. மூலவர் பெயர் சௌமிய நாராயணன்; தாயார் மகாலட்சுமி.ஓம் நமோ நாராயணாய எனும் மூன்று சொற்களை உணர்த்தும் விதமாக இக்கோயிலின் அஷ்டாங்க விமானம் மூன்று தளங்களாக அமைந்துள்ளது. விமானத்தின் கீழ் தளத்தில் நர்த்தன கிருஷ்ணர் (பூலோக பெருமாள்), முதல் தளத்தில் ஆதிசேஷன் மீது சயனகோலத்தில் சௌமியநாராயணர் (திருப்பாற்கடல் பெருமாள்), இரண்டாவது அடுக்கில் நின்றகோலத்தில் உபேந்திர நாராயணர் (தேவலோக பெருமாள்), மூன்றாம் அடுக்கில் அமர்ந்த கோலத்தில் பரமபதநாதர் (வைகுண்ட பெருமாள்) என சுவாமி நான்கு நிலைகளில் அருளுகிறார். இங்கு மாசி தெப்ப விழா பெருவிழாவாக 10 நாள்கள் நடக்கும்.இன்று காலை சுவாமி கல்யாண மண்டபம் எழுந்தருள்கிறார்.தொடர்ந்து த்வஜா ரோஹணம் எனும் கொடியேற்றம் நடக்கிறது. இரவு பல்லக்கில் திருவீதி புறப்பாடு நடக்கிறது.மார்ச் 3ம் தேதி புகழ்பெற்ற தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.

22-2-2026 - ஞாயிறு குடந்தை சக்கரபாணி கோயில் உற்சவம் தொடக்கம்

கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற வைணவத் தலங்களில் ஒன்று சுதர்சனவள்ளி, விஜயவள்ளி தாயார் சமேத சக்கரபாணி சுவாமி திருக்கோயில். காவிரியாற்றுக்குச் சற்று தெற்கில் உள்ள இக்கோயிலில் எழுந்தருளியுள்ள பெருமாள் சக்கர வடிவமான தாமரைப்பூவில், அறுகோண எந்திரத்தில் காட்சி தருகிறார். எட்டு ஆயுதங்களை எட்டுத் திருக்கரங்களிலும் ஏந்திக் காட்சி தருகிறார். சூரியன் பூசித்ததால் இத்தலம் பாஸ்கர சேத்திரம் என்றழைக்கப்படுகிது. சக்கரபாணி சுவாமி தனிக்கோயில் கொண்டு வீற்றிருப்பது இத்தலத்தில் மட்டுமே வேறு எங்கும் இல்லை. இங்கு மாசிமக பெருவிழா இன்று தொடக்கமாகிறது. விழாவையொட்டி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து, 10 நாட்கள் உற்சவம் நடைபெறும்.

23-2-2026 - திங்கள் - சஷ்டி

இன்று. சஷ்டி திதி.சஷ்டி விரதம் இருக்க வேண்டிய தினம். மன உறுதியையும், நினைத்த காரியத்தில் வெற்றியையும், குழந்தை வரத்தையும் தரக்கூடிய அற்புதமான விரதம் சஷ்டி விரதம். ஆறாவது திதி சஷ்டி திதி. முருகப்பெருமான் ஆறு முகங்களை உடையவன். ஆறு தலைகளால் “ஆறுதலை” வழங்குபவன். செல்வம், கல்வி, ஆயுள், ஆரோக்கியம், புகழ், ஞானம் என்ற ஆறு பொருள் களையும் அள்ளி அள்ளித் தருபவன். கூர்மையான வேல் கொண்டு, அகப்பகையையும் புறப்பகையையும் விரட்டு பவன் . சஷ்டி விரதம் முதல் நாள் பஞ்சமியில் தொடங்கி, மதியம் உணவுக்கு பின், இரவு பால் பழங்களை மட்டும் உண்டு, மறுநாள் முழுக்க உபவாசம் இருந்து ,மாலையில் முருகப்பெருமானுக்கு விளக்கேற்றி வைத்து, புஷ்ப மாலைகளைச் சாற்றி, படையல் போட்டு, பின் உணவு உண்டு, விரதத்தை முடிப்பது சாலச் சிறந்தது.

23-2-2026 - திங்கள் திருக்கண்ணபுரம் - மாசிமக உற்சவம் தொடக்கம்

108 வைணவத் தலங்களில் கீழை வீடு என்று சொல்லப்படும் திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோயிலில் (நாகப்பட்டினம் மாவட்டம்) ஆண்டுதோறும் மாசிமகப் பெருவிழா 15 நாட்களுக்கு வெகுவிமரிசையாக நடைபெறும். கொடியேற்றத் துடன் தொடங்கும் இவ்விழாவில், மாசி பௌர்ணமி நாளில் பெருமாள் திருமலைராயன்பட்டினம் கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி கொடுப்பது சிறப்பு.

23-2-2026 - திங்கள் காரமடை அரங்கநாதர் விழா துவக்கம்

அருள்மிகு காரமடை அரங்கநாத சுவாமி கோயில் கோயம் புத்தூரில் எங்கு கேட்டாலும் தெரியாத ஆட்களே கிடையாது என்றே சொல்லலாம். கோயம்புத்தூரில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. மேட்டுப்பாளையத் தில் இருந்து 07 கிலோ மீட்டர் தூரம் இந்த கோயில் உள்ளது. இங்கு அரங்கநாதர் சுயம்பு மூர்த்தியாக அருள் புரிகிறார். இவரை காண முக்கிய திருவிழாக்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக வருவர். அதில் வைகுண்ட ஏகாதசி, மாசி மகம் மற்றும் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய ஐந்து சனிக்கிழமைகளில் மிகவும் விசேஷமாக இருக்கும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத் தேர்த்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். பிப்ரவரி 23 இல் தொடங்கி மார்ச் 6 வரையும் திருவிழாக்கள் நடைபெறுகின்றது. இதில் மார்ச் 02 ஆம் தேதியன்று திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.

23-2-2026 - செவ்வாய் கார்த்திகை

இன்று கிருத்திகை விரதம். முருகனுக்குரிய செவ்வாய்க்கிழமை வருவது விசேஷம். வைத்தீஸ்வரன் கோயில் போன்ற முக்கியமான ஆலயங்களில் இன்று முருகனுக்கு மகா அபிஷேகம் நடைபெறும். வைணவத்திலும் கார்த்திகை மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். காரணம் திருமங்கை ஆழ்வார் ஜன்ம நட்சத்திரம் கார்த்திகை. பெரும்பாலான பெருமாள் கோயில் களில் திருமங்கையாழ்வார் சன்னதி இருக்கும். அங்கே இன்று திருமங்கையாழ்வாருக்கு திருமஞ்சனமும் சிறப்பு ஆராதனையும் நடைபெறும்.

27-2-2026 - வெள்ளி ஆமலகி ஏகாதசி

ஏகாதசி விரதம், புண்ணிய பலன் தரும் அற்புதமான விரதமாகும். எவர் ஒருவர் ஏகாதசி விரதம் இருந்து, பெருமாளை மனதார பக்தியுடன் வழிபடுகிறாரோ, அவர் வாழும் போதும் அனைத்து நலன்களையும், வாழ்க்கைக்கு பிறகு தன்னுடைய திருவடி களையும் வந்து அடைவார்கள் என கிருஷ்ணரே கூறி இருக்கிறார். ஒரு வருடத்தில் வரும் 24 ஏகாதசிகளையும் எவர் ஒருவர் கடைபிடிக்கிறாரோ அவருக்கு மறு பிறவியே கிடையாது என்பது ஐதீகம். இந்த நாளில் நெல்லிக்காய் மரத்திற்கும், ஸ்ரீஹரிக்கும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. இந்த நாளில் நெல்லிக்காய் மரத்தில் பெருமாள் எழுந்தருளி வாசம் செய்வதாக ஐதீகம். அதனால் அதன் பெயரிலேயே இது ஆமலகி ஏகாதசி என அழைக்கப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து மகா விஷ்ணுவை பக்தியுடன் வழிபடுபவர்களுக்கு பாவங்களில் இருந்து விமோசனம் கிடைக்கும் என புராணங்கள் குறிப்பிடு கின்றன.

27-2-2026 - வெள்ளி குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்

ஆழ்வார்கள் பன்னிருவரில் குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில், இன்றைய கேரள நாடு திருவஞ்சிக்களம் என்னும் ஊரில் அவதரித்தவர். குலசேகர ஆழ்வார் இராமாயணத்தில் இராமர் குணங்களில் “கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ” என ஈடுபட்டவர். அவர் பாடிய பாசுரங்களின் தொகுப்பை நாதமுனிகள் பெருமாள் திருமொழி என்று தலைப் பிட்டு முதல் ஆயிரத்தில் சேர்த்தார். இராமருடைய அவதார நட்சத்திரம் புனர்பூசம். குலசேகர ஆழ்வார் நட்சத்திரம் புனர்பூசம். இருவருமே அரச குடும்பத்தில் அவதரித்தவர்கள். தசரதனுக்கு வெகுகாலம் குழந்தை பேறு இன்றி தவமிருந்து, பெற்ற பிள்ளையாக இராமன் அவதரித்தது போலவே குலசேகர ஆழ்வாரின் தந்தைக்கும் பலகாலம் பிள்ளைப் பேறு இன்றி செல்லப்பிள்ளையாக குலசேகரர் அவதரித்தார். வைணவ மரபில் இராமனை பெருமாள் என்று அழைப்பது மரபு. காரணம் அவருடைய குலதெய்வமாக திருவரங்கநாதன் விளங்கினார். பெருமாளான இராமன் வணங்கிய பெருமாள் என்பதால் திருவரங்கநாதனை பெரிய பெருமாள் என்று அழைப்பார்கள். வைணவ மரபில் குலசேகர ஆழ்வாரை குலசேகரப் பெருமாள் என்று அழைப்பதும், அவர் பாடிய பாசுரங்களின் தொகுப்பு “பெருமாள் திருமொழி” என்றும் அழைப்பார்கள்.