1.2.2025 - சனி வர சதுர்த்தி
தை அமாவாசைக்குப் பிறகு வரும் (வளர்பிறை சதுர்த்தி) முகுந்த சதுர்த்தியாக அனுசரிக்கப்படுகின்றது. துவாபர யுகத்தில், ஸ்ரீவிநாயகர் அவதரித்த தினமான இன்று, ஸ்ரீ சித்தி விநாயகருக்கு பூஜைகள் செய்து வழிபடுவது சிறப்பானதாகக் குறிக்கப்படுகின்றது. சிவசதுர்த்தி என்ற பெயரிலும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்கின்றனர். இது தென்னிந்தியாவில் மாக சதுர்த்தி விரத தினமாகக் கொண்டாடப்படுகின்றது. இன்றைய தினம் முழுவதும் ஸ்ரீவிநாயகருக்கு உபவாசமிருந்து மாலையில் மல்லிகை மாலைகள் சார்த்தி, எள் மோதகம் நிவேதித்து பூஜிப்பது விசேஷம். பூஜை முறைகள்; விநாயக சதுர்த்தி பூஜை முறைகள் போலவேதான், பருவ நிலைகளுக்கு ஏற்றவாறு, நமது பண்டிகைகளின் நிவேதனங்கள் அமைந்திருப்பது நம் தர்மத்தின் சிறப்பு. அதையொட்டியே, தரையைத் துளைக்கும் தை பனிக் காலமான இப்போது, நம் உடலில் உள்ள வெப்பத்தை அதிகரித்து, குளிரைத் தாக்குப் பிடிக்க உதவும் எள்ளால் ஆன பதார்த்தங்கள், இன்றைய தினத்தில் சிறப்பான நிவேதனப் பொருட்களாகின்றன.
2.2.2025 - ஞாயிறு வசந்த பஞ்சமி
தை மாதம் வளர்பிறையில் வருகின்ற இந்த வசந்த பஞ்சமிக்கு சிறப்பான ஏற்றம் உண்டு. வசந்த பஞ்சமி நாளை ரிஷி பஞ்சமி நாள் என்றும், ஸ்ரீ பஞ்சமி நாள் என்றும் அழைக்கிறார்கள். கலைமகள், இந்த வசந்த பஞ்சமி நாளில் அவதரித்ததாகக் கூறப்படுகிறது. மேற்குவங்கத்தில் வசந்த பஞ்சமி நாளில் பிள்ளைகளின் படிப்பை துவங்குகிறார்கள். குஜராத் போன்ற மாநிலங்களில் பட்டங்களைப் பறக்க விடுகிறார்கள். பஞ்சாப், அரியானா, மேற்கு வங்காளம் போன்ற வட கிழக்கு மாநிலங்களில் வசந்த பஞ்சமி நாள் அன்று சரஸ்வதிதேவிக்கு மஞ்சளாடை, மஞ்சள் மலர் மாலைகளை அணிவித்து பூஜை செய்கின்றார்கள்.
ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் என்ற இடத்தில் உள்ள பிரம்மா சரஸ்வதி கோயிலில் வசந்த பஞ்சமி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கர்நாடகத்தில் உள்ள உடுப்பி கிருஷ்ணர் கோயில், ஒரிசாவில் உள்ள புரி ஜெகன்நாதர் கோயில்களில் வசந்த பஞ்சமி நாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. தமிழ்நாட்டில், வசந்த பஞ்சமி நாள் காமதேவன் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. வாழ்வில் வசந்தங்களை சேர்க்கும் இந்த நாளில் நீங்களும் மாலை நேரத்தில் விளக்கேற்றி வைத்து கலைமகளை வணங்கலாம். கலைமகள் பாடல்களைச் சொல்லலாம். திருமலையில் வசந்த பஞ்சமி நாளை (திங்கள்) அனுசரிக்கப்படுகிறது. குடும்ப வழக்கப்படி செய்யவும்.
3.2.2025 - திங்கள் சஷ்டி விரதம்
இன்றைய நாள் சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு உரிய நாள். முருகனை நினைத்து விரதம் இருந்து, மாலையில் முருகன் கோயில் சென்று வழிபடுபவர்களுக்கு நன்மைகள் ஏற்படும். குறிப்பாக, குழந்தைச் செல்வம் இல்லாதவர்கள், இந்த சஷ்டி விரதத்தை அவசியம் இருக்க வேண்டும். நல்ல பலன் கிடைக்கும்.
3.2.2025 - திங்கள் கலிக்கம்ப நாயனார் குருபூஜை
“கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் (கலியன் கழற்சத்தி வரிஞ்சையர்கோன்) அடியார்க்கும் அடியேன்” - என்று சுந்தரமூர்த்தி நாயனார் தமது திருத்தொண்டத்தொகையில் போற்றும் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவர் கலிக்கம்ப நாயனார். திருப்பெண்ணாகடம் என்னும் ஊரில் வணிகர் குலத்தில் அவதரித்தவர். அங்கு தூங்கனை மாடத் திருக்கோயில் எழுந்தருளிய ஈசனை ஒரு நொடிகூட விடாமல் சிவ சிந்தனையோடு வழிபட்டவர். அடியார்களை தேடித் தேடிச் சென்று அவர்களுக்கு இனிய திரு அமுதினை ஊட்டுவதை சிவபூஜையாக நினைத்து இனிமையாக செய்தவர். ஒருநாள் சிவனடியார்களை மகேஸ்வர பூஜைக்காக அழைத்தார். ஒவ்வொரு சிவனடியாராக வர, அவர்களுக்கு கலிக்கம்ப நாயனாரின் மனைவியார், திருவடிகளை விளக்கி, பாதபூஜை செய்து கொண்டிருந்தார்.
அப்போது இவருடைய கடையில் வேலை பார்த்து, வேலையை விட்டுவிட்டு சென்ற ஒருவர் சிவனடியாராக வந்திருந்தார். அவர் வந்து மனைப் பலகையில் நிற்க, அவரைப் பார்த்த இவருடைய மனைவியார், இவர் ஏற்கனவே நம்மிடம் வேலை செய்தவர் அல்லவா, இன்று சிவனடியாராக வந்து நிற்கிறார், இவருக்கு நான் எப்படி பாதபூஜை செய்வது என்று தயங்க, சற்று நேரம் பாதபூஜை நின்றது. இதைக் கண்டு மிகக் கோபம் அடைந்த கலிக்கம்ப நாயனார், உடனே சிவபூஜை செய்யாத தன்னுடைய மனைவியை தண்டித்தார்.
தானே எந்த விதமான சலனமும் இன்றி அடியாரது திருவடிகளை விளக்கி அவருக்கு அமுது படைத்தார். அசஞ்சலமான அவரது சிவபக்தியை பார்த்து வியந்தனர். அப்போது சிவபெருமான் அங்கே தோன்றி அவர் மனைவியாரது மயக்கத்தைத் தீர்த்தார். முன்புபோல் அவர் எழுந்து கணவனாரொடு சிவனடியார்களுக்கு பூஜை செய்து, சிவபதம் அடைந்தார். இவருடைய குருபூஜை நாள் தை மாதம் ரேவதி நட்சத்திரம்.
4.2.2025 - செவ்வாய் பௌமாஸ்வினி
செவ்வாய்க் கிழமை அஸ்வினி நட்சத்திரம் கூடிய சுபதினத்தைதான் ``பெளமாஸ்வினி’’ என்று பெரியோர்கள் தேவி வழிபாட்டை செய்தனர். பௌமன் என்றால் பூமியின் புதல்வர் செவ்வாய். அங்காரகனுக்கு உகந்த நாளான செவ்வாய்க் கிழமையும், அஸ்வினி நட்சத்திரமும் ஒன்றாக இணையும் நாள் பௌமாஸ்வினி புண்யகாலம் எனப்படுகிறது. ஸ்ரீயோக நரசிம்மரை பூஜிக்க வேண்டிய நாள்!
4.2.2025 - செவ்வாய் ரத சப்தமி
மங்களகரமான தை மாதத்தின் ஒவ்வொரு திதியும், ஒவ்வொரு சிறப்புத் தன்மையை கொண்டதாகவே அமைந்திருக்கிறது. வசந்த பஞ்சமி, சஷ்டி, போலவே சப்தமி என்கின்ற ஏழாவது திதி சூரியனுக்கு உரிய நாளாக அமைந்திருக்கிறது. சூரிய பகவான், சப்தமி திதி அன்றுதான் காஷ்யபருக்கும் அதிதிக்கும் மகனாக அவதரித்ததாகச் சொல்கிறது புராணம். எனவே, தை அமாவாசை முடிந்த ஏழாவது நாள், வளர்பிறை சப்தமி. சூரிய தேவனின் ஜெயந்தி நாளாகக் கொண்டாடப்படுகின்றது. தன்னுடைய தெற்கு திசை பயணத்தை முடித்துக் கொண்டு வடக்கு நோக்கி திரும்புகின்ற நாள் ரதசப்தமி நாளாகக் கொண்டாடப்படுகிறது. சூரியனை வழிபடுகின்ற ஒரு மரபு, காலம் காலமாகவே இருந்து வந்திருக்கிறது. காலையில் சூரிய வழிபாடு செய்யாமல் எந்தச் செயலையும் ஒருவர் தொடங்குவது இல்லை.
ரதசப்தமி நாளன்று, ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வடகிழக்கு திசையை நோக்கி பயணத்தை சூரியபகவான் மேற்கொள்ளுகின்றார். அவருடைய சாரதியாக அருணன் விளங்குகின்றார். அந்தத் தேரின் 7 குதிரைகள் வாரத்தின் ஏழு நாட்களைக் குறிப்பதாகவும், அந்த ரதத்தில் உள்ள 12 ஆரங்கள் 12 ராசிகளை குறிப்பதாகவும் கூறப்படுகின்றது.
ரதசப்தமி நாளில் சூரியனுக்கு பொங்கல் வைத்து படைப்பதன் மூலமாக மிகச் சிறந்த பலன்களை பெறலாம். ஆத்ம சக்தி அதிகரிக்கும். பேராற்றல் பிறக்கும். தைரிய, வீரிய குணங்கள் வளரும். அறிவு கூர்மையாகும். ஞானம் வளரும். வித்தைகள் மேம்படும். கல்வியில் மிகச் சிறந்த வளர்ச்சி கிடைக்கும்.
திருமலை திருப்பதியில், ரதசப்தமி நாளன்று ``ஏகதின பிரம்மோற்சவம்’’ நடைபெறும். அன்று மலையப்பசுவாமி தேவி பூதேவி தாயாருடன் காலை முதல் இரவு வரை ஏழு வாகனங்களில் நான்கு வீதிகளிலும் பவனிவருவார். இவ்விழா ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், திருவயிந்திபுரம் முதலிய திவ்ய தேசங்களிலும் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்று எப்படி விரதம் இருக்கலாம் என்பதை சுருக்கமாகக் காணலாம்.
பீஷ்மர் கங்கையின் புதல்வன். மகாபாரதத்தில் வருகின்ற முக்கியமான பாத்திரம். அஷ்ட வசுக்களில் ஒருவர். மரணமில்லா பெருவாழ்வு வாழ்ந்தவர். பகவான் கண்ணனையே எதிரில் அமர வைத்து விஷ்ணு சகஸ்ர நாமம் சொன்னவர். உத்தராயணத்தில்தான், தான் உயிர் துறப்பேன் என்று அம்புப் படுக்கையில் காத்திருந்து, தை மாத வளர்பிறைஅஷ்டமி நாளில் நம்முடைய உடலை நீத்து சொர்க்க வாழ்வை பெற்றவர்.
ரத சப்தமி நாளில் அவரை வியாசர் வந்து பார்க்க, அவரிடம் தன் பாவங்கள் நீங்கி முக்தி அடைய வழி கேட்டார். அப்போது வியாசர், எருக்க இலைகளைக் கொண்டுவந்து, பீஷ்மரின் மேனியில் வைத்து அவரின் வேதனையைத் போக்கினார். எருக்க இலை சூரிய பகவானுக்கு உரியது. சூரியனுக்கு அர்க்கன் என்பர். எருக்க இலைக்கு அர்க்க பத்ரம் என்ற பெயரும் உண்டு.
ரத சப்தமி நாளில் ஏழு எருக்க இலைகளை சேகரித்து, நீராடும்முன், மூன்று இலைகளைத் தலையிலும், இரண்டு இலை வலது தோள்பட்டையிலும், இரண்டு இலை இடது தோள்பட்டைகளிலும் வைத்து சூரியனை மனதார வேண்டி நீராட வேண்டும். ஆண்கள் நீராடும் போது இலைகளில் கொஞ்சம் விபூதியை இட்டும், பெண்கள் கொஞ்சம் மஞ்சள் பொடி இட்டும் நீராடுவது சிறந்தது. இவ்வாறு நீராடினால் பாவங்கள் விலகும். அடுத்த நாள் பீஷ்மர் முக்தி அடைந்தார். அந்த நாளில் புண்ணிய நதிகளில் நீராடி விரதம் இருந்தால் புத்திர பேறு உண்டாகும் என்று சொல்லப்படுகின்றது. அன்று பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது. நாம் நதிகளில் நீராட முடியாவிட்டாலும், நாம் நீராடுகின்றன தீர்த்தத்தை புனித நதிகளாக பாவித்து, பீஷ்மரையும் நினைத்துக் கொண்டு, நீராடி பிரார்த்தனை செய்வதன் மூலமாக பல்வேறு நன்மைகளை பெறலாம்.
5.2.2025 - புதன்பீஷ்ம அஷ்டமி
பீஷ்மாஷ்டமி அன்று, ஒருவர் தன்னுடைய முன்னோர்களுக்குச் செய்யும் தர்ப்பணம், பீஷ்மருக்கானதாகவும் மாறுகிறது. பீஷ்மர் இறுதிவரை பிரம்மச்சரியத்தை கடைப் பிடித்தவர். இதனால், ‘அவருக்கு பித்ரு கடன் செய்வது யார்?’ என்று வருந்தினான், யுதிஷ்டிரன். அப்போது வியாசர், “தர்மம் ஒழுக்கம் தவறாத பிரம்மச்சாரிக்கும், தூய்மை விலகாத துறவிக்கும் பித்ரு கடன் அவசியமே இல்லை. அந்த வகையில் பீஷ்மர், சொல் தவறாத நேர்மையாளர், தூய்மையானவர். வரும் காலத்தில் பீஷ்மருக்காக இந்த பாரத தேசமே பித்ரு கடன் செய்யும். அதற்கான புண்ணியத்தை அனைவரும் அடைவர்” என்றார். ``பீஷ்ம அஷ்டமி நீராடல்’’ இந்த நாளில் கடைப் பிடிக்கப்படும் ஒரு முக்கியமான சடங்கு. புனித நீரில் நீராடுவது மிகவும் புண்ணியமானது. இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர், சங்கல்பம் செய்து அர்க்கியம் செய்வார். அர்க்கியத்தின் போது; பீஷ்ம அஷ்டமி மந்திரம் சொல்லலாம். இந்த நாளில் தந்தை உயிருடன் இருந்தாலும், அவர்களும் பீஷ்மருக்கு தர்ப்பணம் செய்யலாம்.
6.2.2025 - வியாழன் தை கிருத்திகை
இன்றைய தினம் வெகு விமர்சையாக அனைத்து முருகன் கோயில்களிலும் தை கிருத்திகை திருநாள் கொண்டாடப்படுகிறது. கிருத்திகை நட்சத்திரம் ஒவ்வொரு மாதமும் வந்தாலும், ஆடி கிருத்திகை மற்றும் தை கிருத்திகைக்கு சிறப்பம்சம் உண்டு. சித்திரை முதலாகத் தொடங்கும் பன்னிரு மாதங்களில் பத்தாவது மாதமாக மலர்வது ‘தை’ மாதம். பத்து மாதம் கருவுற்று, பிள்ளைச் செல்வம் பெற வேண்டிய பெண்மணிகள், பத்தாவது மாதமான தை கிருத்திகையில் முருகனை மனதார நினைத்து விரதம் இருந்து வழிபட்டால், அவர்களின் மூடிய கருப்பை திறக்கும்; கட்டாயம் குழந்தை பிறக்கும். எனவே இந்த தைக் கிருத்திகை தினத்தில் விரதமிருந்து கந்தவேலை வணங்க அனைத்து கவலைகள், பிரச்னைகள், தொல்லை, தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். தை கிருத்திகை விரதம் இருந்தால் உயர் பதவி கிடைக்கும். செவ்வாய் தோஷத்தினால் ஏற்படும் திருமணத்தடை நீங்கும்.
5.2.2025 - புதன் - திருவிடைமருதூர் தை உற்சவம் சிவபெருமான் வெள்ளி யானை வாகனத்தில் உலா.
6.2.2025 - வியாழன் - திருப்பதி கோவிந்தராஜன் தெப்ப உற்சவம் 6.2.2025 முதல் 12.2.2025 ஆம் தேதி வரை.
7.2.2025 - வெள்ளி - காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் புறப்பாடு.

