Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

இந்த வார விசேஷங்கள்

11.4.2026 - சனி திருவோண விரதம்

திருவோணம் நட்சத்திரமும் சனிக்கிழமையும் ஒன்றாக சேரும் நாள் இன்று. பெருமாள் அருளைப் பெற மிகுந்த புண்ணியமான தினம். இந்த நாள் விரதம் இருந்து பகவானை வழிபடுவதற்கான சிறப்பான வாய்ப்பாகும். வைஷ்ணவ மரபில் திருவோணம் என்பது மகாவிஷ்ணுவின் நட்சத்திரம். சனி பகவானின் நாளான சனிக்கிழமையுடன் இணையும் போது ஆன்மிக மகத்துவம் பல மடங்கு உயர்கிறது. ‘‘ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திரத்தை ஜபித்து மனதை ஒருமுகப்படுத்துவது மிக முக்கியம். முழு உபவாசமாக இருக்கலாம் அல்லது பழம், பால் போன்றவை மட்டுமே உட் கொள்ளலாம். மதியம் அல்லது மாலை நேரத்தில் பெருமாளுக்கு நைவேத்தியமாக அக்காரவடிசல், சர்க்கரைப் பொங்கல் போன்றவை சமர்ப்பிக்கலாம். ஒப்பிலியப்பன் கோயிலில் நடைபெறும் ‘‘சிரவண தீபம்” மிகப் பிரசித்தமானது. அதேபோல பெருமாள் கோயிலுக்குச் சென்று தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பாகும்.

13.4.2026 - திங்கள் பாப விமோசன ஏகாதசி

விரதத்திலேயே மிகச் சிறந்த விரதம் ஏகாதசி விரதமாகும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுஷ்டிக்கும் விரதம் ஏகாதசி விரதம். ஏகாதசி விரதம் நமது முற்பிறவியில் செய்த பாவத்தையும் போக்கும். சிவபெருமானே அன்னை பார்வதி தேவிக்கு ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி எடுத்துக் கூறியுள்ளார். பாப விமோசன ஏகாதசி (பாபமோசனி ஏகாதசி) என்பது சித்திரை மாத தேய்பிறையில் வரும், பாவங்களை போக்கி முக்தி அளிக்கும் மிகச் சிறந்த விரதமாகும். விஷ்ணுவை வழிபட்டு விரதமிருப்பதன் மூலம் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் நீங்கி, குல சாபங்கள், தெய்வ சாபங்கள் விலகி செல்வம் பெருகும். புராணங்களின்படி மஞ்சுகோஷா எனப்படும் தேவலோக பெண் மேதாவி முனிவரை வயப்படுத்தி, அவரின் தவம் வெற்றி பெறுவதை தடுத்தாள். இந்தப் பாவச் செயல் காரணமாக மஞ்சுகோஷா பல துன்பங்களை அனுபவிக்க நேர்ந்தது. அப்போது அவள் சித்திரை மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டு, தனது பாவங்கள் நீங்கப் பெற்று நற்பலன்களை அடைந்தாள்.

14.4.2026 செவ்வாய் திருச்சி உச்சிப்பிள்ளையார் பாலாபிஷேகம்

திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயிலில் தமிழ் புத்தாண்டு தினத்தில் சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் வழிபாடுகள் வெகு சிறப்பாக நடைபெறும். அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்களும், தமிழ் புத்தாண்டு பிறப்பையொட்டி பஞ்சாங்கம் வாசிப்பும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்வுகளும் நடைபெறும்.

15.4.2026 - புதன் மச்ச ஜெயந்தி

உலக மக்களை காப்பதற்காக பகவான் விஷ்ணு அவதாரங்களை எடுத்தார். அதில் முதல் அவதாரம் மச்ச அவதாரம். வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைத்த சோமுகாசுரன் என்ற அசுரனை அழித்து வேதங்களைக் காப்பாற்றுவதற்காக எடுக்கப்பட்ட அவதாரம் மச்ச அவதாரம். இந்த அவதாரங்களுக்கும் உயிர்களின் பரிணாம வளர்ச்சிக்கும் ஒரு தொடர்பு இருப்பதாகப் பெரியவர்கள் கூறுவார்கள். முதல் முதலில் உயிர்கள் நீர் வாழ்வனவாகவே தோன்றியது. அதனால் அவதாரங்களிலும் முதல் அவதாரமாக மச்ச அவதாரத்தை பெருமாள் எடுத்தார். இதற்கு இன்னொரு கதையும் உண்டு. தர்மம் தவறாத, சத்தியவிரதன் தினமும் நீராடி, நீர் நிலைகளில் தன்னுடைய காலை வணக்கத்தை செய்வது வழக்கம். அப்பொழுது அவருடைய கையில் ஒரு மீன் வந்தது. அதை தண்ணீரில் விடுவதற்காக முயன்ற பொழுது, அந்த மீன் தன்னைக் காக்குமாறு சொல்ல, அதை அவர் தன்னுடைய கமண்டலத்தில் விட்டார். ஒவ்வொரு நாளும் அந்த மீன் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது. கடைசியில் ஒரு ஏரியில் விடப்பட்டு, அந்த ஏரியை விட பெரிதாக மீன் வளர்ந்தது. பிறகு அதனை சத்தியவிரதன் கடலில் கொண்டு போய்ச் சேர்த்தார். அப்பொழுது அந்த மீன் பேசியது. ‘‘இன்னும் 7 நாள்களில் இந்த உலகம் பிரளயத்தில் மூழ்கி விடும். அப்பொழுது நீ ஒரு பெரிய ஓடத்தில் ஒவ்வொரு உயிருக்கும் தேவையான விதைகளைச் சேகரித்துக்கொள். அந்த ஓடத்தில் ஏறி தயாராக இரு. உன்னுடன் சப்தரிஷிகளும் அந்த ஓடத்தில் ஏறிக் கொள்வார்கள். அந்த ஓடத்தை என்னுடைய கொம்பிலே கட்டி விட்டால் பிரளய காலம் முடிகிற வரை உங்களை நான் காப்பாற்றுவேன்” என்று சொல்ல அப்படியே சத்தியவிரதன் செய்தார்.

எனவே, உலகை பிரளய அழிவிலிருந்து காப்பதற்காக, பகவான் எடுத்த அவதாரம் மச்ச அவதாரம் என்பார்கள். சித்திரை மாத சுக்ல பட்சத்தில் திரயோதசி திதியில் ஸ்ரீ மன் நாராயணன் உலகத்தைக் காப்பதற்காக மீன் உருவம் எடுத்தார்.  மச்ச மூர்த்தி ஆலயங்கள் குறைவு. ஊத்துக்கோட்டை, நாகலாபுரத்தில் வேத நாராயண ஸ்வாமி எனும் பெயரில் சேவை சாதிக்கிறார். அற்புதமாக மச்சாவதாரக் கோலத்திலே அருள்புரியும் திருத்தலம். மூலவராக மச்சாவதார மூர்த்தி வேதநாராயணப் பெருமாளாக, ஸ்ரீ தேவி பூதேவியுடன் தனி சந்நதி கொண்டு அருள்புரிவது இங்கு மட்டுமே. மூலவர் திருப்பாதங்கள் மீனின் அடிப்புறம் போலவே அமைந்துள்ளது. மச்ச ஜெயந்தி காலத்தில் வேதம் படித்தவர்கள் மட்டுமல்ல, கல்வி கற்கின்ற எல்லோரும், கல்வியை சொல்லித் தருகின்ற ஆசிரியர்கள், கலைகளை சொல்லித் தருகின்ற ஆசிரியர்கள், பத்திரிக்கை ஆசிரியர்கள், எல்லோரும் அவசியம் பெருமாள் கோயிலுக்குச் சென்று வணங்கி, அர்ச்சனை செய்வதன் மூலமாக, அவர்கள் தங்கள் தொழிலில் மிகப்பெரிய ஏற்றத்தை பெறலாம். கல்வியில் முன்னேறலாம்.

15.4.2026 - புதன் ஒப்பிலியப்பன் கோயில் விடையாற்றி உற்சவம்

கும்பகோணம் அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் சித்திரை மாத விழாவின் ஒரு பகுதியாக, உற்சவர் திருமஞ்சனம், அன்னப் பெரும் படையல், மற்றும் விடையாற்றி உற்சவத்துடன்(இன்று) விழாக்கள் நிறைவு பெறுவது வழக்கம். இந்த விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் தாயார் வீதிஉலா காட்சிகள் நடைபெறும்.

17.4.2026 - வெள்ளி அமாவாசை

பராபவ ஆண்டின் முதல் அமாவாசை இந்த அமாவாசை என்பதாலும் சூரியன் உச்ச ராசியான மேஷ ராசியில் இருக்கக்கூடிய நிலையில் வருகின்ற அமாவாசை தினம் என்பதாலும், நீத்தார் கடன்களை முறையாக நிறைவேற்றுவது முக்கியம். தில (எள்) தர்ப்பணம் அவசியம் செய்ய வேண்டும். என்னதான் அன்னதானம் போன்ற மற்ற விஷயங்களைச் செய்தாலும் எள்ளும் நீரும் முன்னோர்கள் சடங்கில் மிக முக்கிய பங்கினை வகிப்பது என்பதால், இன்று எள்ளும் நீரும் முறையாக தர்ப்பணம் செய்து நீத்தார் கடமையை நிறைவேற்றுவதன் மூலமாக நாம் முன்னோர்களின் ஆசிகளைப் பெறலாம். தெய்வத்தின் ஆசி பலிக்க வேண்டும் என்று சொன்னால் முன்னோர்களுடைய ஆசி மிகவும் முக்கியம் என்பதை மறந்துவிட வேண்டாம்.