Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

இந்த வார விசேஷங்கள்

26.4.2026 - ஞாயிறு நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் ஆராதனை

கரூர் அருகிலுள்ள நெரூரில் காவிரி ஆற்றங்கரையில் அமைந் துள்ள சதாசிவ பிரம்மேந்திரர் அதிஷ்டானத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் (மே-ஜூன்) நடைபெறும் ஆராதனை விழா பக்தர்களின் பேராதரவுடன் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் ஆராதனை விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. விழாவின் ஒரு பகுதியாக இசை அஞ்சலி, வேத பாராயணம், சிறப்பு பூஜைகள் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்று, பக்தர்களுக்கு ஆனந்த அனுபவத்தை வழங்குகின்றன. சதாசிவ பிரம்மேந்திரர் 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான். அவர் அத்வைத வேதாந்தி மட்டுமல்லாமல், அட்டாங்க யோக சித்திகளை அடைந்த யோகி, மேலும் கர்நாடக இசை அறிஞராகவும் விளங்கினார். அவரது கீர்த்தனைகள் இன்றும் பக்தர்களின் மனதை உயர்த்துகின்றன. அவர் வாழ்ந்த காலகட்டத்தில் போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் தர வெங்கடேச அய்யாவாள் ஆகிய ஆன்மிக மஹான்களும் வாழ்ந்தனர். புதுக்கோட்டை சமஸ்தான மன்னருக்கு தட்சிணாமூர்த்தி மந்திரத்தை மண்ணில் எழுதி அருளியவர் இவர். அந்த மந்திரத்தின் சின்னம் இன்றும் புதுக்கோட்டை அரண்மனை தட்சிணாமூர்த்தி கோயில் உள்ள கோயிலில் பாதுகாக்கப்படுகிறது. திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவில் ராகு தலத்தில் கணபதி இயந்திர மந்திரத் தகட்டை எழுதிப் பதித்தவர்.

26.4.2026 - ஞாயிறு மீனாட்சி பட்டாபிஷேகம்

தமிழகத்தின் மிகப் பிரசித்தி பெற்ற ஆன்மிக விழாக்களில் ஒன்றான மதுரை சித்திரைத் திருவிழா, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், ஏப்ரல் 26, 2026 அன்று நடைபெற உள்ளது. இந்நாளில், மீனாட்சி அம்மனுக்கு கிரீடம் சூட்டப்பட்டு, செங்கோல் வழங்கி, மதுரையின் அரசியாக முடிசூட்டப்படுகிறது. இது மீனாட்சி அம்மன் தெய்வீக ஆட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாகக் கருதப்படுகிறது.

28.4.2026 - செவ்வாய் மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்

தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்யும் மிகப்பெரிய ஆன்மிக-கலாச்சார விழாவாக விளங்குவது மதுரை சித்திரைத் திருவிழா. இந்த அற்புதமான திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை மையமாகக் கொண்டு, 12 நாட்களிலிருந்து ஒரு மாதம் வரை நீள்கிறது. இந்த விழா இரண்டு முக்கிய பகுதிகளாக நடைபெறுகிறது:

முதல் 15 நாட்கள் - மீனாட்சி அம்மன் திருவிழா.

அடுத்த 15 நாட்கள் - கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா.

இன்றைய தினம் மதுரை அரசியாக பட்டாபிஷேகம் செய்யப் பட்ட மீனாட்சி அம்மன்- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்த தெய்வீகத் திருமணம், சக்தியும் சிவமும் இணையும் பரம ஆன்மிக தருணம். இந்த நாளில், திருமணமான பெண்கள் தங்கள் மாங்கல்யத்தை (தாலி) மாற்றிக் கொள்வது பாரம்பரியமாகும். கணவன் ஆயுள் நீட்சி, குடும்ப வளம், சாந்தி ஆகியவற்றை வேண்டி செய்யப்படும் ஒரு நம்பிக்கை வழக்கம் இது.

28.4.2026 - செவ்வாய் திருவாச்சூர் மதுரகாளியம்மன் சித்திரை விழா காப்பு கட்டுதல்

பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் சக்தி வழிபாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில். இங்கு அருள்பாலிக்கும் மதுரகாளியம்மன் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் தாயாகப் போற்றப்படுகிறார். சித்திரை மாதத்தில் நடைபெறும் இக் கோவிலின் ஆண்டு திருவிழா, இன்று காப்பு கட்டுதல் நிகழ்வுடன் துவங்குகிறது. இதன் மூலம் ஊருக்கு ஒரு தெய்வீக பாதுகாப்பு வளையம் அமைக்கப்படுகிறது என்று நம்பப்படுகிறது. இதைத் தொடர்ந்து தீய சக்திகள் ஊருக்குள் நுழையாதபடி நடத்தப்படும் சந்தி மறித்தல் எனும் சடங்கும். அம்மனை ஊருக்கு அழைத்து வருவதை குறிக்கும் குடியழைத்தல்:நிகழ்வும் நடைபெறும். இதனுடன்,தேர்த் திருவிழா (தேரோட்டம்),அம்மன் வீதி உலா பல்வேறு வாகனங்களில் அம்மன் தரிசனம் போன்ற நிகழ்வுகள் பக்தர்களின்

பேரானந்தத்தில் நடைபெறும்.

29.4.2026 - புதன் உமாபதி சிவாச்சாரியார் குருபூஜை

உமாபதி சிவாச்சாரியர் சைவ சித்தாந்த நூலாசிரியர்களுள் முக்கியமானவர். நாயன்மார்களுக்குப் பின் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளைப் பரப்பியவர்களுள் முக்கியமானவராக இவர் விளங்குகிறார். சைவர்களால் சந்தான குரவர்கள் என போற்றப்படும் நால்வருள் இவரும் ஒருவர். மெய்கண்ட சாத்திரங்கள் எனப்படும் சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கில் சிறிதும் பெரிதுமான எட்டு நூல்களை இயற்றியவர் இவரே. 13 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும், 14 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த இவர் சிதம்பரத்திலே தில்லைவாழ் அந்தணர் மரபில் பிறந்தவர். இவர் மெய்கண்ட தேவரின் மாணவரான மறைஞான சம்பந்தரைக் குருவாகக் கொண்டு அவரிடம் சைவ நூல்களைப் பயின்றவர்.மெய்கண்ட சாத்திரங்களுள் அடங்கும் சிவப்பிரகாசம், திருவருட் பயன், வினா வெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் என்னும் எட்டு நூல்கள் இவரால் இயற்றப்பட்டவை. இவை தவிர, சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தைச் சுருக்கித் திருத்தொண்டர் புராண சாரம் என்னும் பெயரிலும், சேக்கிழாரின் வரலாற்றைச் சேக்கிழார் புராணம் என்னும் பெயரிலும் எழுதினார். சிதம்பரம் கோயிலின் வரலாற்றைக் கோயிற் புராணம் என்னும் பெயரில் 100 பாடல்களால் பாடியுள்ளார்.இவரின் குரு பூஜை இன்று சித்திரை -அஸ்தம்.

29.4.2026 - புதன் திரு உத்தரகோசமங்கையில் திருக்கல்யாணம்

திரு உத்தரகோசமங்கையில் இறைவன் மங்களநாதர் மற்றும் அம்பாள் மங்களேசுவரிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் மற்றும் மாலை மாற்றுதல் போன்ற நிகழ்ச்சிகள் விமர்சையாக நடைபெறும்.

30.4.2026 - வியாழன் மதுரகவி ஆழ்வார் திருநட்சத்திரம்

எல்லோரும் இறைவனைப் பாடிய பொழுது, இறைவனைப் பாடிய நம்மாழ்வாரை தம்முடைய குருவாக அடைந்து, அவர் மேல் பிரபந்தம் பாடி புகழ் பெற்றவர் மதுரகவியாழ்வார். தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள திருக்கோளூர் என்னும் தலத்தில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் அவதரித்தவர். நம்மாழ்வார் தமிழ் பாசுரங்களைப் பட்டோலை கொண்டவர். நாடு முழுதும் அதனைப் பரப்பியவர். அவருடைய திருநட்சத்திரம் இன்று.

1.5.2026 - வெள்ளி சித்ரா பௌர்ணமி

சித்ரா பௌர்ணமி சித்திரையில், பௌர்ணமி அன்று கொண்டாடப்படும் பண்டிகை. மனிதர்களின் பாவம்-புண்ணியக் கணக்குகளை எழுதும் எமலோக கணக்காளர் சித்ரகுப்தனை வணங்கும் நாளாகவும், திருவண்ணாமலை கிரிவலம் போன்ற சிறப்பு வழிபாடுகளுக்கு உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து, சித்ரகுப்தனை வேண்டி, தானம் செய்வது நற்கதி தரும்.புனித நீராடி, நாள் முழுவதும் விரதம் இருந்து, சித்ரகுப்தன் கதை கேட்டு, நிலவு உதயமானதும் வழிபாட்டை முடிப்பார்கள். மாக்கோலம் இட்டு, ஏடு-எழுத்தாணி வைத்து, சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து, எருமைப்பால் பாயசம் படைத்து, விளக்கேற்றி பூஜை

செய்வார்கள்.