பகுதி 4
கோயிலில் பிரசித்தி பெற்ற மற்றொரு சந்நதி வட்டப்பாறை அம்மன் சந்நதி. காளி தேவியாக இங்கு விளங்கிய அம்மனின் உக்ரத்தைத் தணிக்கும் பொருட்டு, ஆதி சங்கரர் இங்கு மந்திர யந்திரப் பிரதிஷ்டை செய்தார். வட்டப்பாறை வடிவில் இது அமைந்துள்ளது. மதுரையை எரித்த பின் கோபத்துடன் வந்த கண்ணகியை இறைவன் இங்குள்ள கிணற்றில் விழச்செய்து உக்ரத்தைத் தணித்ததாகவும், அவளே பாறை வடிவில் தோன்றி அமர்ந்தாள் என்பதாகவும் கூறுவர்.
கம்பர், வட்டப்பாறை அம்மனைத் தினமும் பூசித்து வந்தார். கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்க சோழன், கம்பரை ராமாயணத்தைத் தமிழில் எழுதுமாறு பணித்தான். எனவே கம்பர், சதுரானன பண்டிதர் என்பவரிடம் பகல் முழுவதும் ராமாயணத்தை, செவி வழியாகக் கேட்டுவிட்டு, இரவு முழுவதும் அதைத் தமிழில் எழுதி வந்தாராம். இப்படி எழுதுவதற்கு முன், வட்டப்பாறை அம்மனை வணங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அம்மன், தன் பக்தனின் தமிழ்த் தொண்டினை வளரச்செய்ய, சாதாரண பெண் வடிவில் வந்து, அவர் ராமாயணம் எழுதுவதற்கு உதவியாக தீப்பந்தம் ஏந்தி நின்றாள். இப்புகழைக் கம்பர் தமிழில் பாடியுள்ளார்.
பதினெண் சித்தர்களுள் ஒருவரான பட்டினத்தார், ஜீவ சமாதியான இடம் திருவொற்றியூர். ஒற்றியூர் ஈசனைத் தரிசித்து வரும் வழியில், சுவையே இல்லாத பேய்க்கரும்பு இனித்ததை அறிந்த அவர், தான் முத்தி பெற, இதுவே சிறந்த இடம் என்று உணர்ந்து, கடற்கரையில் தங்கினார். மீனவச் சிறுவர்களுடன், சித்து விளையாட்டுகள் விளையாடினார். தன்னை ஓரிடத்தில் மண்ணில் புதைக்குமாறு செய்து, மற்றோரிடத்திலிருந்து வெளி வந்தார்.
மூன்றாவது முறையாக புதையுண்ட பின் அவர் வெளிவரவில்லை. அவ்விடத்தில் ஒரு லிங்கம் தோன்றியது. எண்ணூர் நெடுஞ்சாலையில் சாலை ஓரத்தில் கிழக்கு நோக்கிய பட்டினத்தார் கோயில் உள்ளது. இங்கு, ஆடித் திங்கள் உத்திராட நட்சத்திரத்தில் பட்டினத்தார் குரு பூஜை நடத்தப்படுகிறது.சுந்தர மூர்த்தி நாயனார் வாழ்வில் ஒற்றியூர் ஈசன் முக்கியப் பங்கு வகிக்கிறார். ஆரூரில் பரவை நாச்சியாரை மணந்து சில காலம் தங்கியிருந்து, பின் தான் மட்டும் சிவத்தல யாத்திரை செய்யக் கிளம்பினார் சுந்தரர்.
திருவொற்றியூர் வந்தடைந்தார். இறை சிந்தனையில் மட்டுமே ஊறி, கன்னிமாடத்திலமர்ந்து இறைவனுக்காகப் பூமாலை தொடுத்துக் கொண்டிருந்த சங்கிலி நாச்சியார் மீது காதல் கொண்டார் சுந்தரர். “சங்கிலியை மணந்து கொள்ள அவளிடம், ‘நின்னைப் பிரியேன்’ என்று உன் முன் சபதம் செய்ய வேண்டியிருப்பதால், நான் சங்கிலியுடன் இங்கு வரும் வேளை, மகிழ மரத்தடியில் சென்று இருந்துவிடு” என்று இறைவனிடம் கூறினார் தம்பிரான் தோழர். திருவிளையாடல் புரிய எண்ணிய பெருமான், சங்கிலியின் கனவில் தோன்றி, “நாளை சுந்தரன் சபதம் செய்ய வந்தால், ‘கருவறையில் வேண்டாம், மகிழ மரத்தடியில் சபதம் செய்தாலே போதும்’ என்று கூறிவிடு” என்று சொல்லி மறைந்தார்.
அதன் படியே சுந்தரரை மகிழ மரத்தடியில் சபதம் செய்யச் செய்தாள் சங்கிலி. வேறு வழியின்றி அவ்வாறே செய்த சுந்தரர், அவளைத் திருவொற்றியூரில் திருமணம்செய்து கொண்டார். கோயிலில் மகிழ மரத்தையும் திருமண மண்டபத்தையும் காணலாம். தலவிருட்சமான மகிழ மரத்தடி சங்கிலி நாச்சியாரின் மனதிற்குகந்த இடமாக விளங்கியது. மணம் வீசும் மங்கிய மஞ்சள் நிற மலர்கள் கொண்ட அழகிய மரம் இது. அதன் மணத்தைச் சிறப்பித்து, ஔவையார்,
“மடல் பெரிது தாழை, மகிழ் இனிது கந்தம்”
என மூதுரையில் பாடுகிறார்.
தாழை மடல் பெரிதாய் இருப்பினும் அதனை விட சிறியதான மகிழ மலர், மணத்தில் கூடியது என்கிறார்.திருவண்ணாமலைத் தலபுராணத்தின் படி, மகிழம் (இதுவே வகுளம் எனவும் அழைக்கப்படுகிறது) என்பது, மங்கலத்தைக் குறிக்கும் எனவும், மகிழ மரத்தின் கீழ் அமர்ந்து சிவனைத் தியானிப்பவர்களுக்கு வாழ்வில் எல்லா நலன்களும் பெருகும் எனவும் சொல்லப்படுகிறது.
மாசி பௌர்ணமி தீர்த்த விழாவை ஒட்டி ஒன்பதாம் திருநாள் நடக்கும் மகிழடி சேவை மிகவும் பிரபலமான விழா ஆகும்.
அருணகிரியார் 15 திருப்புகழ்ப் பாக்களில் சுந்தர மூர்த்தி நாயனார் பற்றிய குறிப்புகளைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒற்றியூர் ஈசன், ‘எழுத்தறியும் பெருமான்’ என்றும் அழைக்கப்படுகிறார். “பஞ்சம் ஏற்பட்ட காலத்தில், சோழ மன்னன் ஒருவன், எல்லாத் தலங்களின் படித்தரத்தையும் குறைத்தனுப்பிய கட்டளை ஓலையில், இவ்வூர் இறைவன், ஒருவரும் அறியாதபடி, ‘ஒற்றியூர் நீங்கலாக மற்றையூர்க்கிக்கட்டளை’ என்று எழுதியபடியால், எழுத்தறியும் பெருமான் எனப்படுகிறான்” என்கிறார் தமிழ்த் தாத்தா திரு. உ.வே.சா அவர்கள்.
[படித்தரம் - தினசரி கட்டளைக்கான பொருட்கள்]பஞ்சம் காரணம் அரசன் வரிகேட்டு ஓலை அனுப்பியபோது, இறைவன் இவ்வாறு எழுதினான் என்றும் கூறுவதுண்டு. இதை, “ஏட்டு வரியில் ஒற்றியூர் நீங்கல் எழுத்தறியும் நாட்டமலரும் திருநுதலார்” என்கிறார் சேக்கிழார்.
சித்ரா மூர்த்தி


