Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திருப்புகழ் பஞ்சபூதத் தலங்கள்.

பகுதி 2

வியாக்ரபாதர், சிறு வயதில், மத்யந்தனன் என்ற பெயருடன் விளங்கிய தந்தையிடமிருந்து சிவ ஆராதனைகளைக் கற்று சிவ பெருமானைப் பூசித்து வந்தார். இறைவனுக்கு, வண்டுகளும் சுவைக்காத தேன் விளங்கும் அன்றலர்ந்த மலர்களைப் பறித்துப் பூஜை செய்வதற்கு வேண்டி, அவரை வேண்டி, புலிக்கால்களையும் இருட்டிலும் நன்கு தெரியும் கண்களையும் பெற்றார்.பெருமானின் தாருகாவன ஆனந்தத் தாண்டவத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, தனக்கும் அந்தத் தரிசனம் தில்லையில் கிடைக்கவேண்டி, அங்கேயே தவம் செய்துவந்தார்.

புலிக்கால்களை உடைய அவர் வியாக்ரபாதர் [புலிக்கால் முனிவர்] என்று பெயர்பெற்றார். பெரும் பற்றுடன் சிவனைப் பூஜித்ததால் சிதம்பரமும் பெரும்பற்றப்புலியூர் என்றும் புலியூர் என்றும் அழைக்கப்படலாயிற்று. சரீரத்தின் மேல் பாகம் மனித ரூபமும், கீழ்ப்பாகம் பாம்பு வடிவமும் கொண்டு சிறிய சரீரத்துடன் வந்த பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாதரும் காண நடராஜர், தை மாதம் பூச நன்னாளில் இருவருக்கும் ஆனந்தத் தாண்டவக் காட்சி அளித்தார் என்பது புராணம்.நடராஜரின் ஆனந்த தாண்டவம் பற்றிய குறிப்பு ஒன்றை, அருணகிரிநாதர் கந்தர் அலங்காரம் செய்யுள் 68 இல் குறிப்பிடுகிறார்.

“சாடும் சமரத் தனிவேல் முருகன் சரணத்திலே

ஓடும் கருத்தை இருத்தவல்லார்க்கு உகம் போய்ச் சகம்போய்

பாடும் கவுரி பவுரிகொண்டாடப் பசுபதி நின்று

ஆடும்பொழுது பரமாய் இருக்கும் அதீதத்திலே”

[பகைவர்களையும் தீவினைகளையும் அழிக்கவல்ல ஒப்பற்ற வேலாயுதத்தை உடைய முருகனின் திருவடிகளில், ஓடித்திரியும் மனத்தை நிலைநிறுத்தும் ஆற்றலுடையவர்களின் மனமானது, கால அளவற்று, உலக வாசனை நீங்கி, உமாதேவியார் புகழ்ந்து பாட, பசுபதியாகிய சிவபெருமான், நடராஜராக ஆனந்தத் தாண்டவத்தை நிகழ்த்தும் இறுதிக்காலத்திலும் கூட அழியாமல் மேன்மைபெற்று ஆனந்தமயமாய் விளங்குகிறது].

முருகப்பெருமானும் சிவனாரும் ஒருவரே என்ற கருத்துடன் அருணகிரியார் பல பாடல்களைப் பாடியுள்ளார்.‘அவகுண விரகனை’ எனத் தொடங்கும் சிதம்பரத் திருப்புகழில் பின்வருமாறு பாடியுள்ளார்.

“மவுலியில் அழகிய பாதாள லோகனும்

மரகத முழுகிய காகோத ராஜனும்

மநுநெறியுடன் வளர் சோணாடர் கோனுடன் உம்பர்சேரும்

மகபதி புகழ் புலியூர் வாழு நாயகர்

மடமயில் மகிழ்வுற வானாடர் கோவென

மலைமகள் உமை தரு வாழ்வே மனோகர மன்றுளாடும்

சிவசிவ ஹரஹர தேவா நமோநம

தெரிசன பரகதியானாய் நமோநம

திசையினு மிசையினும் வாழ்வே நமோநம செஞ்சொல்சேரும்

திருதரு கலவி மணாளா நமோநம

திரிபுரம் எரிசெய்த கோவே நமோநம

ஜெயஜெய ஹரஹர தேவா சுராதிபர் தம்பிரானே”

இப்பாடலில் சிதம்பரத்தில் பூசித்துப் பேறு பெற்றவர்கள் பற்றிய குறிப்புகளை அளித்துள்ளார்.மணிமுடிகள் அழகாக உடைய, ஆயிரம் பாரமுடிகளை உடைய பாதாள லோகனாகிய ஆதிசேடனும், உடல் முழுதும் பச்சை நிறம் கொண்ட சர்ப்பராஜனாகிய பதஞ்சலியும், மநு நெறி வழாது ஆட்சி செய்யும் சோழநாட்டரசனும், தேவர்களுடன் சேர்ந்து வரும் இந்திரனும் (மகபதி) புகழ்கின்ற பெருமை உடைய புலியூர் எனப்படும் சிதம்பரத்தில் வாழ் சபாநாயகர் என்று நடராஜரைக் குறிப்பிடுகிறார்.

‘சோணாடர் கோன்’ என்பது இரணியவர்மரைக் குறிப்பதாகக் கொள்ளலாம். வடக்கே கௌட தேசத்தை அரசுபுரிந்த மனு என்பவனின் மூத்த குமாரன். இவன் உடல் சிங்க நிறம் உடையதாயிருந்ததால் தல யாத்திரை செய்து தெற்கே உள்ள தில்லைக்கு வந்தான். வியாக்ரபாதர் உதவியால் சிதம்பரம் கோயிலிலுள்ள சிவகங்கைத் தீர்த்தத்தில் பொன்னிற மேனியைப் பெற்று, அதனால் இரணியவர்மன் எனப் பேர் பெற்றான். இத் தீர்த்தத்தைப் பற்றிப் பாடும்போது,

“அன்பர் ஓது செந்தமிழ் ஞான தடாகமென் சிவகங்கை அளாவும்

மஹா சிதம்பர திண்சபை மேவு மனோ

சவுந்தர தம்பிரானே”

- என்று கூறுகிறார்அருணகிரியார்.

“தீர்த்தம் என்பது சிவகங்கையே

ஏத்தரும் தலம் எழில் புலியூரே

மூர்த்தி அம்பலக் கூத்தனது உருவே”

- என்று போற்றுகிறது

“சிதம்பரம் செய்யுட் கோவை”.

இரணியவர்மன், வியாக்ரபாதர் கூறியபடி அந்தர் வேதியிலிருந்து [கங்கைக்கும் யமுனைக்கும் நடுவேயுள்ள சமபூமி] மூவாயிரம் முனிவர்களை நடராஜப் பெருமானது பூஜைக்காகத் தில்லைக்கு அழைத்து வந்தான்.தில்லை வந்து சேர்ந்து எண்ணிப் பார்க்கையில் ஒரு முனிவரைக் காணாது திகைத்தான். அப்போது அசரீரி அவர்கள் எம்மை ஒப்பவர்கள்; யாம் அவர்க்கு ஒப்பு; நாம் அவர்களில் ஒருவன்; எனக் கூறக் கேட்டு யாவரும் மகிழ்ந்து பணிந்தனர். தேவர்கள் பூமாரி பொழிந்தனர். [ஆதாரம் - கோயிற் புராணம்].

“மூவாயிர மேன்மை வேதியர் மிகவு பூசனை புரி கோவே” என்று பாடுகிறார் அருணகிரிநாதர்.

இரணியவர்மன் கௌட தேச அரசாட்சியைத் தம்பியர்க்குக் கொடுத்து, தான் தில்லையிலேயே திருக்கூத்தைத் தரிசிக்க விரும்பியதால், வியாக்ரபாதர் அவனைச் சோழ ராஜனாக்கிப் புலிக்கொடியையும் கொடுத்தார்.நடராஜப் பெருமான் வேறு - முருகன் வேறு என்னும் வேற்றுமை இல்லாது, “உமைதரு வாழ்வே - திரிபுரம் எரிசெய்த கோவே - மன்றுளாடும் சிவசிவ ஹரஹர தேவா நமோநம” என்றும் பாடுகிறார்.

“கனகசபை மேவும் எனது குருநாத;

கருணை முருகேசப் பெருமாள் காண்”

[கனகசபை]

“ஆயும் வேத கீதம் ஏழிசை பாட அஞ்செ

ழுத்தழங்க முட்ட நின்று துன்றுசோதீ

ஆதி நாதரொடு நாடக சாலை அம்ப

லச் சிதம்பரத்தமர்ந்த தம்பிரானே”

[காயமாய]

“அண்டமுற் பார் புகழும் எந்தை பொற்பூர் புலிசை

அம்பலத்தாடுமவர் தம்பிரானே”

[நஞ்சினைப் போலு]

நடராஜர் பெருமை பற்றி மஹா பெரியவா கூறியிருக்கும் குறிப்புகள் நம் அகக்கண்களைத் திறந்துவைக்கின்றன.

“நடராஜரால் நிகழ்த்தப்பெறும் ஆனந்தக் கூத்து, ஆன்மாக்களின் பொருட்டு ஓயாமல் நிகழ்கிறது. அவன் ஆடாவிட்டால் உலகில் எதுவுமே ஆடாது. பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு ஒரு டான்ஸ்; சூரியனைச் சுற்றி வருவதான டான்ஸ்; இரண்டும் ஒரே நேரத்தில் நிகழ்கிறது. மற்ற க்ரஹங்களும் இப்படியே சூரியனைச் சுற்றி வருவதால் இது விஸ்வாதார டான்ஸ். மனிதர்களாகிய நம்மை எடுத்துக்கொண்டாலோ, ரத்தம் துடிதுடித்துப் பாய்கிற டான்ஸ்; சுவாசம் ஏறி இறங்கும் டான்ஸ்; வயிற்றுக்குள்ளே அன்னபானங்களைச் சுழற்றிச் சுழற்றி ஜீரணிக்கும் டான்ஸ், பலவிதமான சுரப்பிகள் சுரந்து கொண்டே இருக்கும் டான்ஸ் என்று பலவகை நடனங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

இதற்கும் மேலே சித்தத்திற்குள் இருக்கும் ஆசை, கோபம் இவற்றிலிருந்து தோன்றும் நூறாயிரம் உணர்ச்சிகளின் டான்ஸ் - இந்த எல்லாவித ஆட்டங்களை நடக்கவைத்து இறுதியில் அவற்றை அடக்கி ஒடுக்குகிற டான்ஸ் தான் அவனுடையது” என்று நெற்றிப் பொட்டில் அறைவது போல் சொல்கிறார் மஹாபெரியவா!திருவண்ணாமலையில் வாழ்ந்து வந்த குகை நமசிவாயரது சிஷ்யர் குருநமசிவாயர், சிதம்பரநாதனுக்கு, சிலம்பும் கிண்கிணியும் செய்வித்துப் பூட்டி அழகு பார்த்தார். சில நாத்திக வாதிகள், “ஓ! ஆடுவாரோ சிலம்பொலிக்க உங்கள் அரசர்?” என்று கேலி செய்தனர். அது கேட்டு, குரு நமசிவாயர்,

“அம்பலவா! இன்னொருக்கால் ஆடினால் ஆகாதோ?

உம்பரெலாம் கண்டது உனக்கொப்பாமோ? சம்புவே!

வெற்றிப் பதஞ்சலிக்கும் வெம்புலிக்கும் தித்தியென

எற்றுப் பதஞ்சலிக்குமே!” [பதம் சலிக்குமே]

- என்று பாடினார்.

கலகலவென்ற நடம் அப்போதே காட்சியானது.

“போதும் பிரபு போதும்!

தூக்கியகால் நோகாதோ? துஷ்ட முயலகன் மேல்

தாக்கியகால் தானும் சலியாதோ? வாக்கா!

தினவரதா! தில்லைத் திருத்தாண்டவா! நீ

அனவரதம் கூத்தாடி னால்”

- என்று உடனே பாடினார் குரு நமசிவாயர்.

ஆட்டக்காரனிடம், ஆதிரையானிடம், பாப விநாச முதலியார் என்பவர் பாடிய நிந்தாஸ்துதிப் பாடலை, தான் சொல்ல ப்ரியப்படுவதாகக் கூறுகிறார் மஹா பெரியவா.

நடனமாடி அப்படி ஆடிய படியே சுற்றித் திரிந்த நீ இப்படி ஒரு காலைத் தூக்கிக்கொண்டு ஏன் அப்படியே ஒரே போஸில் எத்தனையோ வருஷமாக நின்றுவிட்டாய்? ஒரு கால் பிரயோஜனப் படாமல் போனது இன்ன காரணத்தாலா, இன்ன காரணத்தாலா என்று அடுக்கடுக்காகக் கேட்கிறார் முதலியார் அவர்கள்.காம்போதி ராகத்தில் அமைந்த அப் பாடல் பின்வருமாறு.

நடமாடித் திரிந்த உமக்கு இடதுகால் உதவாமல்

முடமானது ஏனென்று சொல்வீரையா!

திடல் மேவும் தில்லை நகர் மருவு பேரானந்தச்

சடை விரித்தாடினவா! தேவசிற்சபை அறிய (நடமாடித்)

திருநீற்றைச் சுமந்தீரோ, நெருப்பான மேனிதனில்,

சீதத்தினால் மிகுந்த வாதகுணமோ?

ஒருமையுடன் மார்க்கண்டற்கு

உதவியாய் மறலிவிழ

உதைக்கச் சுளுக்கேறி உண்டகுணமோ?

பரவைதன் தெருவாசற்படி இடறிற்றோ?

எந்தன் பாபமோ? என் சிவனே?

மூவர்க்கும் முதல்வனென (நடமாடித்)

பக்தி செய்யும் பெரியோர்கள்

பாபநாசனமாகும்

பரமபதம் இது என்று தூக்கி நின்றதுவோ?

சத்தி சிவகாமவல்லி தன் பாதம் நோகுமென்றே

தரையில் அடி வைக்கத் தயங்கி நின்றதுவோ?

ஸத்ய லோகாதிபதி தாளத்திற்கு ஏற்க நடம்

தாக்கியே ஒரு காலைத் தூக்கி நின்றதுவோ?

நடராஜர் வடிவத்தில் அவரது ஊன்றிய திருவடியின் கீழ் கிடக்கும் பூதம் முயலகன் எனப்படுவான். இறைவன் அருளுக்கு மாறான தன்மை உடைய அவன் ஆணவமலத்தின் வடிவமாக விளங்குகிறான். தமது பத்தினிகளின் கற்பைக் கலைத்தார் சிவபெருமான் என்று கோபித்த தாருகா வனத்து முனிவர்கள் ஆபிசார வேள்வி செய்து, அவ்வேள்வியில் எழுந்த புலி, மான், பூதங்கள் முதலியவற்றை அவர் மேல் ஏவினர். பின்னும் அந்த வேள்வியில் எழுந்த முயலகன் எனும் பூதத்தைச் சிவபிரான் மீது ஏவினர். இடது காலைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் நடராஜர், வலது காலை அபஸ்மார புருஷனென்றும், தமிழில் முயலகன் என்றும் குறிப்பிடப்படும் அந்த அசுரன் போன்ற ரூபத்தின் மேலே அழுந்த வைத்திருக்கிறார். அவன் முதுகின் மீது திருவடியை ஊன்றி நின்றாடினார். அருணகிரியார் பின்வருமாறு பாடுகிறார்:

“உடலு முயலகன் முதுகு நெறு நெறென எழு திமிர

உரகர் பில முடிய ஒரு பதமோடி

உருவமுது ககனமுகடிடிய மதிமுடிபெயர

உயர அகில புவனம திரவீசிக்

கடககர தலமிலக நடனமிடும் இறைவர்”

[விடமளவி…]

[உடலும் பகைத்துக் கோபத்துடன் வந்த முயலகன் என்னும் பூதத்தின் முதுகு நெறு நெறு என்று முறிய, இருள் பரந்த நாகலோகம் முழுதும் ஒப்பற்ற அடி ஓடிச் செல்லவும், பழமையான ஆகாயத்தின் உச்சி இடியவும், சந்திரனுடைய முடிபெயரவும், உயரும் போது சகல உலகங்களும் அதிர்ச்சி உறவும் வீசி கங்கணம் அணிந்த திருக்கை விளங்க நடனம் இடுகின்ற கூத்தபிரான்]

“கொடியதொரு முயலகன் மீதாடுவார்” [உறவின்முறை…]கனகசபை பற்றி தெய்வத்தின் குரலில், மஹாபெரியவா, பின்வருமாறு கூறியுள்ளார்.

“பரமேஸ்வரன் அர்ச்சா ரூபத்தில் விக்ரஹ உருவில் பரிபூரணமாக விளங்கிக் கொண்டிருக்கிற சிதம்பரத்தில் அவருடைய சந்நதிக்கு சபை என்று பெயர். அது கனகசபை. அது தவிர தாம் ஆடிக்கொண்டே லோகங்களை எல்லாம், சேதன - அசேதனங்களை எல்லாம் ஆட்டிவைத்துக்கொண்டு ஆட்சி நடத்துகின்ற அந்த திரிபுவன சக்கரவர்த்திக்கு மேலும் நாலு சபைகள் (ரஜத சபை - மதுரை, தாமிர சபை - திருநெல்வேலி, சித்ர சபை - திருக்குற்றாலம், ரத்ன சபை - திருவாலங்காடு). இந்த சபைகளுக்கெல்லாம் “ப்ரிஸைட்” பண்ணும் “ஸ்பீக்கர்”, அதாவது “டான்ஸர்” ஆக - சபாபதியாக நடராஜர் இருக்கிறார்.

ஆனால், சிதம்பரக் கோயிலை குறிப்பிட்டுச் சொல்லும் போது “சபாநாயகர் கோயில்” என்றே கூறுவர். அவரது சபையும் ஈஸ்வர ரூபமே என்று மதித்து அதற்கு ருத்ரம், ‘நமஸ்காரம்’ தெரிவிக்கிறது. யஜுர் வேதத்தில் எல்லா சேதன அசேதனங்களையும் சொல்லி, அவை ஒவ்வொன்றுக்கும் ‘நமோநம’ என்று நமஸ்காரம் பண்ணப்படுகிறது. எதனால் என்றால், அது ஒவ்வொன்றிலும் “விஸ்வ வியாபி”யான பரமாத்மா நிறைந்திருப்பதால் எல்லாம் சிவஸ்வரூபம் என்று இப்படி சொல்லிக்கொண்டே போகிறபோது, சபைகளுக்கெல்லாம் நமஸ்காரம், சபாபதிகளுக்கெல்லாம் நமஸ்காரம் என்று சொல்லப்படுகிறது;”.

நடராஜர் சந்நிதியைத் தரிசித்து, கனக சபையிலிருந்து கீழே இறங்கி வருகிறோம். முதற்சுற்றில், நர்த்தன விநாயகர், லிங்கோத்பவர் இவர்களை வணங்கி வள்ளி, தெய்வயானை சமேத சுப்ரமண்யரைக் காண்கிறோம். கிழக்குக் கோபுர வாயிலில் முருகனைத் தரிசித்தோம்; [இங்குள்ள சுப்ரமண்யர் கோயில், நாம் காணும் இரண்டாவது முருகன் திருவுருவம்]. மனக்கண்ணில் அருணை முனிவரின் ஒரு சிதம்பரப் பாடல் ஓடுகிறது.

“தித்தி மன்னு தில்லை நிர்த்தர் கண்ணினுள்

உதித்து மன்னு பிள்ளை முருகோனே

சித்தி மன்னு செய்ய சத்தி துன்னு கைய

சித்ர வண்ண வல்லி அலர் சூடும்

பத்த ருண்மை சொல்லுள் உற்ற செம்மல் வெள்

இபத்தர் கன்னி புல்லு மணிமார்பா

பச்சை வன்னி அல்லி செச்சை சென்னி உள்ள

பச்சை மஞ்ஞை வல்ல பெருமாளே”

[அத்தன் அன்னை…]

[தித்தி என்னும் தாள ஜதி நிலை பெற்று விளங்கும் தில்லைக் கூத்தனின் நெற்றிக் கண்ணினின்றும் உதித்து நிலைபெற்றுள்ள பிள்ளை முருகனே! சகல சித்திகளுக்கும் இடமாய் விளங்கும் சக்தி வாய்ந்த வேலாயுதம் விளங்கும் கையனே! அழகிய அல்லி மலர்களை இட்டுப் பணியும் பக்தரது மெய் பொருந்திய திருவாக்கில் விளங்கும் பெரியோனே! வெள்ளை யானையை உடைய தேவேந்திரனது மகள் தெய்வயானை அணையும் மார்பனே! பச்சை வன்னி இலையையும் அல்லிப்பூ, வெட்சிப்பூ இவற்றைத் தன் சிரசில்கொண்ட பெருமையனே! பச்சை மயிலை நடாத்த வல்ல பெருமாளே!]