பகுதி 3
சிதம்பரத்தில் பள்ளியறை அருகிலுள்ள சில படிகள் ஏறி, ஆகாய லிங்கத்தைத் தரிசிக்கலாம். உட்சுற்றில் வியாக்ரபாதர், பிட்சாடனர், பதஞ்சலி, காலபைரவர், சந்திரன், சூரியன், சனைச்சரர் மற்றும் நவகிரஹங்களைத் தரிசிக்கலாம். பிரம்ம சண்டிகேசர் தனிச் சந்நதியில் விளங்குகிறார். பிரதட்சிணம் வந்து மீண்டும் நடராஜர் சந்நதிக்கு எதிரே நிற்கிறோம். மேலே நிமிர்ந்து பார்க்கும் பொழுது கண்ணாடித் தடுப்பிற்குள் நடராஜர், சிவகாமி, நாரதர், வியாக்ரபாதர் ஆகியோரின் திருவுருவங்களைத் தரிசிக்கலாம். கனகசபையின் அருகில் தென்புறத்தே ஒரு மேடையில் சித்ரகூடம் எனப்படும் கோவிந்தராஜர் சந்நதி உள்ளது. இதன் வாசலில் நின்று கொண்டு சயன நிலையிலுள்ள கோவிந்தராஜரையும் எதிரே ஆடல் வல்லானையும் ஒருசேரத்
தரிசிக்கலாம்.
திருமால் இங்கு சிவனாரின் நடனத் திருக்கோலத்தைக் கண்டுகளிப்பதற்காகவும், தமது பக்தர்களைக் காக்கவும் சிதம்பரம் வந்தார் என்று ``புண்டரிகபுர மஹாத்மியம்’’ கூறுகிறது. கோவிந்தராஜர் சந்நதியை வலம் வரும் போது, சுதர்சனர், ருக்மிணி, சத்யபாமா ஆகியோருடன் வேணுகோபாலன் மற்றும் பதஞ்சலி, யோகநரசிம்மர், கூரத்தாழ்வார், சக்கரத்தாழ்வார் ஆகியோரைத் தரிசிக்கலாம். மேற்குப் பார்த்த ஆஞ்சநேயர் உள்ளார். கிழக்கு நோக்கிய ஆண்டாள் சந்நதியும் மேடைமேல் உள்ள பெருமான் திருவடிகளும் நமக்கு அருள்பாலிக்கின்றன. வெளியில் தனிக் கொடிமரம், பலிபீடம் தவிரவும் கருடாழ்வார் சந்நதியும் உள்ளன. கோவிந்தராஜர் சந்நதியில் ஒரு சிதம்பரத் திருப்புகழைச் சமர்ப்பிக்கிறோம்.
“கொடுங்கைப் பட்ட மராமரம் ஏழுடன்
நடுங்கச் சுக்ரிவனோடு அமராடிய
குரங்கைச் செற்று மகோததி தூளெழ நிருதேசன்
குலங்கட் பட்ட நிசாசரர் கோவென
இலங்கைக்குள் தழலோன் எழ நீடிய
குமண்டைக் குத்திர ராவணனார் முடி அடியோடே
பிடுங்கத் தொட்ட சராதிபனார் அதி
ப்ரியம் கொள் தக்க நன் மா மருகா
பெரும்பற்றப் புலியூர்தனில் மேவிய பெருமாளே”
[கொடுமைக்கிடமான ஏழு மராமரங்களுடன் சுக்ரிவனும் நடுங்கும் படி, அவனுடன் போர்புரிந்த வாலியை அழித்து, பெருங்கடலானது தூளாகும்படி ராவணனின் குலத்தவர்களான அரக்கர்கள், ‘கோ’ என்று அலற, இலங்காபுரி தீ மூள, பெரும் செல்வச் செருக்கும் வஞ்சக மனமும் உடைய ராவணனின் எல்லா தலைகளும் அறுந்து விழும்படி வில்லைச் செலுத்திய ராமபிரான் மிகவும் அன்பு பாராட்டும் சிறந்த மருகனே!][வியாக்ரபாதர் மிகுந்த அன்புடன் பூஜை செய்த தலமாதலால், ‘பெரும் பற்றப் புலியூர்’ என்று அழைக்கப்படுகிறது].
இப்பாடலில் மனனம் செய்து தினம் கூறத்தக்க வேண்டுகோளையும் இடையே வைத்திருக்கிறார் அருணகிரியார்.
“மனதாலே இறந்திட்டுப் பெறவே கதியாயினும்
இருந்திட்டுப் பெறவே மதியாயினும்
இரண்டில் தக்கதொர் ஊதியம் நீ தர இசைவாயே”
[என் மனமானது லயம் அடைந்து, அதனாலே நல்ல கதி எனப்படும் மோட்சத்தை அடையவாவது அல்லது பூமியில் வாழும் பொழுதே நல்ல அறிவை அளித்து அதனால் மனது உத்தமனாகி, அதன் மூலம் பெரு வாழ்வைப் பெறவாவது, இவ்விரண்டிலும் எந்த ஊதியம் எனக்குத் தரத்தக்கது என்று முடிவு செய்து, அதை எனக்குத் தந்தருள்வாயாக] கோவிந்தரை வணங்கி வெளியே வரும்போது, வலப்புறம் அடுத்த பிராகாரத்தில் நடராஜர் சந்நதிக்கான கொடிமரத்தைக் காணலாம். கொடிமரத்தின் தெற்குப் பக்கத்தில் நிருத்த சபை உள்ளது. தேர் அம்பலம் என்றும் கூறுவர். பாய்ந்து செல்லும் குதிரைகள் பூட்டப் பெற்ற தேர் அமைப்பைக் கொண்டு விளங்குகிறது. மிக அழகான ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியும் நடனம் செய்யும் காளியும் உள்ளனர்.
“உக்ர வீர பத்ரகாளி வெட்க மகுடாம்
ஆகாச முட்ட வீசி விட்ட காலர்”
[வேதவெற்பிலே…]
“திட்டென எதிர்வரு மாகாளியினொடு
திக்கிட தரிகிட தீதோம் என வரு
சித்திர வெகுவித வாதாடிய பதமலராளன்” [எட்டுடன்…]
“மாகாளி நாண முனம் அவைதனில் நடித்தோனை” [தலைவலி…]
- என்றும் பாடுகிறார் அருணகிரியார்.
கோயிலில் நாம் காணும் மூன்றாவது முருகன் திருவுருவம், ஊர்த்துவ தாண்டவர் சந்நதி வாசலில் உள்ளது. தென்மேற்கில் வடக்கு நோக்கிய சரப மூர்த்தி எழுந்தருளியுள்ளார்.
“செம்பொற் பெயர் அசுரேசனை உகிராலே
நந்தக் கொந்திச் சொரிகுடல் சோர்வர
நந்திக் கம்பத்தெழு நர கேசரி
நஞ்சக் குண்டைக் கொருவழி ஏதென மிகநாடி
வெஞ்சச் சிம்புட் சொருபம தானவர்”
[செஞ்சொற்…]
[“இரணியன் எனும் அசுரனை நகத்தாலே அழிந்து போம்படிக் குத்திக் கிழித்து, சொரிந்து விழும் குடல் தளர்ச்சியுற, தூணிலே தோன்றி வெளிவந்த நரசிங்கமூர்த்தி நைந்து அடங்கிக் குறுகுவதற்கு வழி யாதென்று மிக யோசித்து, கடுமை கொண்டவராய் சரபப்பட்சியின் சொருபம் கொண்டவர்” என்று சிவபெருமானைத் துதிக்கிறார்.]
நிருத்த சபையின் எதிரே மேற்கு நோக்கி மடைப்பள்ளியும், அதன் வாயிலில் அன்னபூரணி இருப்பதையும் காணலாம். முன் மண்டபத்தில் கால சம்ஹார மூர்த்தியின் சற்றே வித்தியாசமான திருவுருவத்தைக் காணலாம். நடராஜரின் தூக்கிய திருவடி அருளல் தொழிலைக் குறிக்கும் ‘அனுக்ரஹ பாதம்’ என்பதாலும், இடப்புறம் அம்பிகை உறைவதாலும், ஐயன், எமனை வலக்காலால் உதைப்பதாக இங்கு காட்டப்பட்டுள்ளது என்பர்.
நிருத்த சபையின் ஒரு புறம் மகாலட்சுமியின் உருவத் திருமேனி உள்ளது. சபைக்கு அருகில் கிழக்கு நோக்கியவாறு மகாலட்சுமியின் தனிச் சந்நதி உள்ளது. இவரைப் புண்டரிகவல்லித் தாயார் என்றழைக்கின்றனர். இது தவிர யாகசாலை மண்டபம், கண்ணாடி அறை பத்மாவதி திருக்கல்யாண மண்டபம் ஆகியவையும் உள்ளன.நடராஜரின் கொடி மரத்திற்கருகிலிருந்து பிராகார வலம் வரலாம். மிகப் பழைமையான பால தண்டாயுதபாணி திருச்சந்நதியைக் காண்கிறோம். [இத் திருவுருவம் கோயிலில் நாம் தரிசிக்கும் முருகனின் நான்காவது திருவுருவம் ஆகும்]. ஏராளமான திருப்புகழ்ப் பாக்கள் கல்வெட்டு களாகப் பதிக்கப்பட்டுள்ளன. ஒரு சிதம்பரத் திருப்புகழை இங்கு சமர்ப்பிக்கிறோம்.
“சூடாமணிப் பிரபை ரூபா கனத்த வரி
தோலாசனத்தி உமை அருள்பாலா
தூயா துதித்தவர்கள் நேயா எமக்கமிர்த
தோழா கடப்பமலர் அணிவோனே
ஏடார் குழற்சுருபி ஞானாதனத்தி மிகும்
ஏராள் குறத்தி திரு மணவாளா
ஈசா தனிப்புலிசை வாழ்வே சுரர்த்திரளை
ஈடேற வைத்த புகழ் பெருமாளே”
[நாடாபிறப்பு…]
முருகனைக் ‘குருநாதா’ என்றும் ‘எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ தான்’ என்றும் குறிப்பிடும் அருணகிரிநாதர், இப்பாடலில் முருகனை உரிமையுடன் ‘தோழா’ என்று கூறியிருப்பது ரசிக்கத்தக்கது. முருகனை வணங்கிச் செல்லும் பொழுது, தூணில் ரிஷபாரூடர், விநாயகர் ஆகியோரைத் தரிசிக்கிறோம். பன்னிரு திருமுறைகளும் உலகிற்குக் கிடைக்கச் செய்த பெருமை கொண்டது தில்லையம்பதிதான். இதற்கு மூல காரணமாக இருந்தவர், நிருத்த சபையை ஒட்டிய திருச்சுற்றிலுள்ள பொள்ளாப்
பிள்ளையாரே ஆவார்.
இவர் மறைகாட்டிய விநாயகர் என்றும் திருமுறை கண்ட விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். உமாபதி சிவாச்சாரியார் இயற்றிய ‘திருமுறை கண்ட புராணம்’ எனும் நூல் திருமுறைகள் கண்டெடுக்கப்பட்டு, தொகுக்கப்பெற்ற செய்தியை விரிவாக விளக்குகிறது.நேரிலேயே பேசும் அளவு, திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையாரிடம் பக்தி பூண்டவர் நம்பியாண்டார் நம்பி. அதுவரை வாய்மொழியாகப் பாடப் பட்டுவந்த தேவாரப் பாக்களை கேட்க நேர்ந்த முதலாம் ராஜராஜசோழன், நம்பியின் பெருமைகளைக் கேள்விப்பட்டு, பிள்ளையாரிடம் வேண்டித் திருமுறை நூல்கள் இருக்குமிடத்தைக் காட்டிக் கொடுக்குமாறு அவரைக் கேட்டுக் கொண்டான்.
சம்பந்தப் பெருமான், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் வைத்த கைமுத்திரையோடு திருமுறைச் சுவடிகள் தில்லை நடராஜர் சந்நதியின் வலது புறத்தில் ஒரு அறையில் வைக்கப்பட்டுள்ளன என்று பிள்ளையார் நம்பிக்கு உணர்த்தினார். அரசன் தீட்சிதர்களிடம் சென்று இதனைக் கூறியபொழுது, “மன்னா! ஏடுகள் தில்லை அம்பலவாணனிடம் மூவர்களால் ஒப்படைக்கப்பட்டவை; அவர்கள் வந்தால்தான் அறையைத் திறந்து எடுக்க முடியும்” என்று சொல்லிவிட்டனர்.
சோழன் தன் நுண்ணறிவால், நடராஜப் பெருமானுக்கு விழா எடுத்து, மூவரையும் சிலைத் திருமேனிகளாகப் பல்லக்கில் எழுந்தருளச் செய்து, தீட்சிதர்கள் முன்பு கொண்டு நிறுத்தினான். அரசனின் யுக்தியை மெச்சிய தீட்சிதர்கள், அறையைத் திறந்த போது, அதிர்ந்தனர். காரணம், ஏடுகளின் பெரும்பகுதி கரையானால் அரிக்கப்பட்டிருந்தது. தமிழின் பெருமையை நீர் அறியும்; நெருப்பறியும் என்பர்; இங்கு கரையான்களுக்கு இது தெரியாமல் போயிற்று என்றுதான் சொல்ல வேண்டும்! கிடைத்த ஏடுகளைச் சீராக்கி, நம்பியாண்டார் நம்பி தொகுத்தளித்தார். இத் திருப்பாடல்களைச் செப்பேடுகளில் எழுதிச் செப்பமுறக் காத்தவன் முதலாம் குலோத்துங்கனுடைய படைத்தலை வனான மணலிற்கூத்தன் கலிங்கராயன் என்பவன் என்ற செய்தி, தில்லைக் கல்வெட்டு ஒன்றில் உள்ளது என்பர்.
தொடர்ந்து செல்லும் போது தாயுமானவர், சுப்பிரமணியர் ஆகியோரைத் தரிசிக்கிறோம். [இம் முருகன், கோயிலில் நாம் காணும் ஐந்தாவது திருவுருவமாகும்]. மூலையில் திருமுறைக் கோயில், சந்தானாச்சாரியார்களான மெய்க்கண்டார், அருள்நந்தி சிவம், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவம் ஆகிய நால்வர் விளங்கும் சந்நதிகளையும் தரிசிக்கலாம்.இரண்டாம் சுற்றின் வடக்குப்புறம், துண்டி விநாயகர், விசுவநாதர், விநாயகர், வைத்தியநாதர் - தையல் நாயகி, சண்டிகேஸ்வரர், கால பைரவர், அறுபத்து மூவர், அர்த்தநாரீஸ்வரர், மஹாலிங்கம் மற்றும் பார்வதியை வணங்கலாம். துவாரபாலகர் திருவுருவங்களை அடுத்து, நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் ஆகியோரையும் காணலாம்.
கோயிலின் உற்சவ மூர்த்தி நடராஜர் என்றால், மூலவர் யார் என்ற கேள்வி எழும். இரண்டாம் சுற்றின் கிழக்குப் பகுதியில் இதற்கான விடை கிடைக்கிறது. அருணா சலேஸ்வரர் சந்நதிக்கு எதிரே ‘திருமூல நாதர்’ சந்நதி உள்ளது. சிதம்பரம் கோயிலின் மூலவர் இவரே. இவ்விடம் ‘மூலட்டானம்’ எனப்படும். உயிர்களுக்கு அருள் புரிய இறைவன் மேற்கொள்ளும் எல்லாவற்றிற்கும் மூலகாரணமாக அமைந்த திருமேனி உள்ள அறை மூலட்டானம் எனப்படுகிறது.
திருமூலநாதர், ஆதிமூலமாய், சுயம்பு மூர்த்தியாக சிவலிங்க வடிவத்தில் அமைந்துள்ளார். பாதாளத்தில் உள்ள ஒரு பர்வதத்தின் கொழுந்தே திருமூலட்டானேசுவரர். ஆலமர நிழலில் இருந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. வியாக்ரபாதர், பதஞ்சலி இருவரும் இவரையே பூசித்துப் பேறு பெற்றனர். திருமுறைகள் ஓதப்படும் பொழுது, ‘திருச்சிற்றம்பலம்’ என்று கூறும் முறை ஏற்பட்டதற்குக் காரணம், அர்த்தசாம பூஜை முடிந்தவுடன் எல்லாக் கோயில்களிலும் உள்ள சிவகலைகள் அனைத்தும் இங்குள்ள சிவலிங்கமூர்த்தத்தில் ஒடுங்குவதாக ஐதீகம்.
கிழக்கு நோக்கி அமர்ந்துள்ள முருகன் [ஆறாவது திருவுருவம்], விநாயகர் ஆகியோரை வணங்குகிறோம். திருமூலர் சந்நதிக்கு முன்னால் அழகே உருவமாக அம்மை உமையபார்வதி தரிசனம் தருகிறார். மூலட்டானர் கருவறையின் தெற்கு வெளிச் சுவரில் தட்சிணாமூர்த்தியும், வல்லப கணபதியும் காட்சி அளிக்கிறார். அர்த்தசாம அழகர், நவகிரஹங்கள் மற்றும் சனைச்சரரை வணங்கி, தேவசபை எனப்படும் பேரம்பலம் வழியாக மீண்டும் கனகசபையை நோக்கி வருகிறோம்.
கோயிலின் கலைப் பொக்கிஷங்களும் உற்சவ மூர்த்திகளும் பஞ்ச மூர்த்திகளும் தேவசபையில் உள்ளனர். கோயிலின் வெளிச் சுற்றிற்கு வந்து, சொக்கசீயன் எழுநிலைக் கோபுரம் எனப்படும் தெற்கு கோபுரத்தை அடைகிறோம். 1240 - ஆம் ஆண்டு கட்டப்பட்டது, இக்கோபுரம். நடராஜர் வீற்றிருக்கும் திசையை நோக்கியவாறு அமைக்கப்பட்டிருப்பதால், இதன் வாயில் வழியாக கோயிலுள் நுழைவது மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. இங்கு வடக்கு நோக்கிய மாடத்தில், மிகப் பெரிய ஆறுமுகசுவாமியைத் தரிசிக்கலாம். [இது கோயிலில் நாம் காணும் ஏழாவது முருகன் திருவுருவமாகும்]. இவர் குடியிருக்கும் பகுதியின் முன்புறத்தைச் சற்றுப் பெரிதாக்கிக் கட்டியுள்ளார்கள். கருவறையில் முருகன் ஆனந்த சபாநாயகர் இருக்கும் திசையை நோக்கிய வண்ணம் இருக்கிறார். தட்சிணாமூர்த்தி மற்றும் சுதைச் சிற்பமான பெரிய நந்தியை வணங்குகிறோம். தெற்குக் கோபுர வாயிலில் மேவிய முருகனை அருணகிரியார் பாடியுள்ளார். [இப்பாடலிலும் தாளங்கள் பற்றிய அழகிய குறிப்பு உள்ளது].
“தக்கத் தோகிட தாகிட தீகிட
செக்கச் சேகண தாகண தோகண
தத்தத் தானன டீகுட டாடுடு என தாளம்
தத்திச் சூரர் குழாமொடு தேர்பரி
கெட்டுக் கேவலமாய் கடல் மூழ்கிட
சத்திக்கே இரையாமெனவே விடு கதிர்வேலா
திக்கத் தோகண தாவெனவே பொரு
சொச்சத் தாதையர் தாமெனவே திரு
செக்கர்ப் பாதமதே பதியா சுதியவை பாடச்
செப்பொற் பீலியுலா மயில் மாமிசை
பக்கத்தே குற மாதொடு சீர் பெறு
தெற்குக் கோபுர வாசலில் மேவிய பெருமாளே”
[அக்குப் பீளை - சிதம்பரம் திருப்புகழ்]
[“தக்கத் தோகிட தாகிட தீகிட செக்கச் சேகண தாகண தோகண தத்தத் தானன டீகுட டாடுடு” எனும் தாளங்களின் ஒலியை எழுப்பி, சூரர்கள் கூட்டத்துடன் அவர்களது தேர்களும், குதிரைகளும் அழிந்து இழிநிலை அடைந்து கடலில் மூழ்கும்படியும், சத்தி வேலுக்கே அனைத்தும் உணவாயின எனும்படியும், ஒளி மிக்க வேலாயுதத்தைச் செலுத்தியவனே!
[“திக்கத் தோகண தா” என்று நடனம் செயும் உனது தந்தையாகிய நடராஜ மூர்த்தியே.. நீ என்று சொல்லும்படியாக அழகுமிக்க சிவந்த பாதங்களைப் பூமியில் பதித்து, அவை இசை ஒலிகள் எழுப்ப, செம்பொன் மயில் மீது வள்ளியுடன் நடனமாடிச் சிறப்புற்று தில்லையில் தெற்குக் கோபுரவாயிலில் வீற்றிருக்கும் பெருமாளே!]
தெற்குக் கோபுரத்தின் வழியாகக் கோயிலினுள்ளே வந்தால், வெளிப் பிராகாரத்தில் மூலையில் முக்குறுணி விநாயகர் கோயிலைக் காணலாம். தெற்கு வாயிலே கோயில் முகப்பு என்பதால், விநாயகர் முகக்கட்டண விநாயகர் எனப்பட்டார். இதுவே காலப் போக்கில் “முக்குறுணி விநாயகர்” என்றாகிவிட்டது என்பர் ஆராய்ச்சியாளர்கள். இதனால் முக்குறுணி அளவு அரிசிக்கு ஒரே மோதகம் செய்து வழிபடுவதும் வழக்கமாகிவிட்டது.
சித்ரா மூர்த்தி


