* சென்ற இதழ் தொடர்ச்சி
வீரபத்திரர் வழிபட்டது:
“பங்கயனார் பெற்றிடும்” எனத் தொடங்கும் காளத்தி திருப்புகழில், வீரபத்திரரும் காளத்தியில் தவம் செய்து தம் தீவினை தீரப் பெற்றார் என்று குறிப்பிடுகிறார் அருணகிரியார். இரணியனை வதைக்கும் பொருட்டுத் திருமால் நரசிங்கமாகத் தோன்றி, அவனது உதிரத்தைக் குடித்து, வெறி கொண்டு உயிர்களுக்குத் துன்பத்தை உண்டாக்கினார். சிவனார் ஆணையினால் வீரபத்திரர், சரபப் பறவையாகத் தோன்றி நரசிங்கத்தின் வெறியை அடக்கி அருளினார். [சிம்புள் (பறவை) - சரபப்பட்சி].
முன்பு ஒருமுறை, சிவனாரை மதிக்காது தட்சன் நடத்திய யாகத்தில் பங்கு பெற்ற ஒரு சூரியனின் பற்களையும் மற்றொரு சூரியனின் கண்களையும் வீரபத்திரர் பறித்தார். சூரியன் சிவபெருமானின் கண் என்ற காரணத்தினால், சூரியனுக்கு அளித்த தண்டனை வீரபத்திரருக்குத் தீவினையாயிற்று. சிவன் ஆணைப்படி திருக்காளத்தியில் தவமியற்றி தம் தீவினை தீரப் பெற்றார் என்கிறார் அருணகிரியார்.
“சிங்கம் அதாகத் திரிந்த மால்கெருவம்
பொடியாகப் பறந்து சீறிய
சிம்புளதாகச் சிறந்(து) ‘அகா’ என வருகோமுன்
செங்கதிரோனைக் கடிந்த தீவினை
துஞ்சிடவே நற்றவம் செய்தேறிய
தென்கயிலாயத்(து) அமர்ந்து வாழ்வருள்
பெருமாளே”
[“நரசிங்கமாகத் திரிந்த திருமாலின் அகந்தை பொடிபட்டழியப் பறந்து கோபித்த சரபப் பட்சியாக உருவெடுத்து விளங்கி ‘ஹஹா’ என்று சப்தித்து வந்த வீரனாம் வீரபத்திரர், முன்பு, தட்ச யாகத்தில் சூரியர்களைத் தண்டித்த தோஷம் நீங்க, நல்ல தவமியற்றிய தட்சிண கயிலை எனப் போற்றப்படும் திருக்காளத்தியில் வீற்றிருந்து அடியார்க்கு வாழ்வருளும் பெருமையனே!]
திருக்காளத்தியில் அருள்பாலிக்கும் அம்பிகை ஞானப் பிரசூன்னாம்பிகை என்று ஏற்கனவே பார்த்தோம். இத் திருப்புகழில்
“சங்கரர் வாமத்(து) இருந்த நூபுர
சுந்தரி ஆதித் தரும் சுதாபத
தண்டையனே குக்குடம் பதாகையின் முருகோனே”
- என்று முருகனைப் போற்றுகிறார். அம்பிகை நின்ற கோலத்தில் இருக்கிறாள். திருவடியில் ஸ்ரீ சங்கர பகவத் பாதரால் பிரதிஷ்டை செய்யப் பெற்ற அர்த்த மேரு உள்ளது. இடுப்பில் ஒட்டியாணத்தில் கேதுவும், எதிரில் சிம்மமும் உள்ளது. சந்நதிக்கு வெளியில் தலைக்கு மேற்புறத்தில் ராசி சக்கரம் வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளது. அம்பாள் கருவறையை வலம் வருகையில் வட்டமாகத் தரையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள இடத்தில் மூலையில் மூன்று தலைகள் சேர்ந்திருப்பது போன்ற சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இதனடியில் சக்தி வாய்ந்த யந்திரம் இருப்பதால் இங்கு அமர்ந்து தியானம் செய்வது விசேஷமாகக் கருதப்படுகிறது.
தேவி ஞானாம்பிகை எவ்வாறு இங்கு தோன்றினாள் என்பதற்கான விடை, ‘தெய்வத்தின் குரல்’ முதல் பகுதியில் கிட்டுகிறது. அதன் சுருக்கத்தை இங்கு பார்ப்போம். தேவாசுர யுத்தத்தில் ஜெயித்த தேவர்கள், அனைத்தும் தங்கள் முயற்சியாலேயே நடந்தது என்று தருக்குற்றனர். பரமாத்மா அவர்கள் இறுமாப்பை அடக்க ஒரு பெரிய ஜோதி சொரூபமாக நின்றார். தமக்குப் புரியாத அவ்வடிவை, தேவர்கள் யட்சம் என்றார்கள்.
அக்னி, வாயு இருவரும் கூட அதன் அருகில் சென்று தோற்றுத் திரும்பினார்கள். இந்திரனுக்கு மட்டும், “தங்களை விட ஒரு பெரிய சக்தி இருக்கிறது” என்று அறிவு உண்டாகி, அகம்பாவம் மறைந்தது. அவன் யட்சத்தை விநயத்துடன் நெருங்கிய போது, அவ்வடிவம், இந்திரனுக்கு ஞான அனுக்கிரஹம் செய்வதற்காக திவ்ய ஸ்த்ரீ ரூபத்தில் நின்றது. யட்சம் நின்ற அந்த ஆகாயத்திலேயே மகத்தான சோபை பொருந்திய ஹைமவதியாக உமாதேவி பிரகாசித்தாள் என்கிறது உபநிஷத்.
ஞான ஒளியாக ஜ்வலித்துக் கொண்டிருந்த அம்பாளை நமஸ்கரித்த இந்திரன், “சற்றுமுன் தோன்றிய யட்சவடிவம் என்ன” என்று கேட்டான். அவனுக்கு ஆசார்ய ஸ்தானம் வகித்து அம்பிகை ஞானோபதேசம் செய்தாள். “பிரம்மமே யட்சவடிவம்; இவ்வளவு பிரபஞ்சத்திற்கும், சகல தேவ அசுரர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் அகண்ட சக்தி அதுவே” என்றாள். “எல்லாவற்றையும் அறிகிற அறிவான ஸர்வக்ஞ தத்துவமான பரமேஸ்வரருடன் இரண்டறச் சேர்ந்திருக்கும் ஞான சொரூபிணியே தேவி” என்கிறார் ஆதிசங்கரர்.
தொடர்ந்து உபநிஷத் கதைக்கும் காளஹஸ்திக்கும் உள்ள தொடர்பைப் பற்றியும் பின்வருமாறு கூறுகிறார் மஹா பெரியவா:“நான் காளஹஸ்திக்குப் போயிருந்த போது, கிரிப் பிரதட்சிணம் செய்தேன். வழியில் ஒரு மலை மேல் ஏறி, அங்கு வனத்திலுள்ள சிவலிங்கத்தைத் தரிசனம் செய்துகொண்டேன். அந்த லிங்கம் ஸஹஸ்ரலிங்கம் - அதாவது, லிங்காகாரமான ஒரே சிலைக்குள் சின்னச்சின்னதாக ஆயிரம் லிங்கங்கள் வடித்திருக்கும். அந்த ஸஹஸ்ரலிங்க ஆலயத்தில், ‘யட்ச லிங்கம்’ என்று ஒன்றைச் சொல்கிறார்கள்.
இந்திர லிங்கம் என்றும் ஒன்று இருக்கிறது. காளஹஸ்தி பெரிய கோயிலில் இருக்கிற அம்பாளின் பெயரோ ஞானாம்பிகை அல்லது ஞானப்ரஸூனாம்பிகை. ப்ரஸூனம் என்றால் பூ. ஞானப்ரஸூனாம்பிகையை ஞானப் பூங்கோதை என்பார்கள். இதையெல்லாம் சேர்த்துப் பார்த்தால், கேன உபநிஷத்தில் சொல்லொயிருக்கிற சம்பவம் - யட்சம் தோன்றினதும் பிறகு அம்பாள் ஆவிர்பவித்து, இந்திரனுக்கு ஞானோபதேசம் செய்ததும் இந்தக் காளஹஸ்தியில் தான் நடந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது” என்கிறார்.
தொடர்ந்து, “தேவியின் சரீரம் நாத மயம், சப்த மயம், வாக்கு மயம் - ஐம்பத்தோர் அட்சரங்களுமே அவளுக்கு சரீரமாக இருக்கிறது. அதில் முழுக்க முழுக்க அறிவே வியாபித்திருக்கிறது. அந்த அறிவைத்தான் ஞானாம்பிகை என்கிறோம். சாசுவதமாக உள்ள ஒரே வஸ்துவை அதற்கு வேறாக நான் என்று தனியாக ஒன்று இல்லை என்று அனுபவத்தில் தெரிந்து கொள்வதுதான் உண்மையான அறிவு. இந்த அறிவைத் தருகிற பராசக்தி ஞானாம்பிகையாகி திவ்ய மங்கள சொரூபிணியாக விளங்குகிறாள். அவளை எந்நாளும் தியானம் செய்து, அனுக்கிரஹம் பெறுவோம்” என்றும் விளக்கமளித்துள்ளார் மஹா பெரியவா.
“மலை உச்சியிலிருந்த குடுமித் தேவர் வழிபாடே கண்ணப்ப நாயனார் செய்தது என்பதும், மலைமேல் ஏறியே தேவார மூவர் வழிபட்டனர் என்பதும் பெரிய புராணத்தால் அறியப்படுகிறது. ஆனால் நாம் இப்போது, பொன்முகலி ஆற்றங்கரையில் ஊர்த் தரை மட்டத்திலுள்ள கோயிலுக்குள் இருக்கும் மூர்த்தியையே வணங்குகின்றோம். ஆற்றிலிருந்து சில படிகளேறி ஆலயம் செல்வதால் இப்போதுள்ள ஆலயமும் மலைமீதுள்ளது என்பர் சிலர்” என்பது அறிஞர் உ.வே.சா அவர்களின் குறிப்பு.புராணங்களாலும் ஆன்றோர்களாலும் போற்றப் பெற்ற பெருமை உடைய காளஹஸ்தி திருத்தலத்தை நாமும் கண்டு வணங்குவோம்.
சித்ரா மூர்த்தி


