Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்புகழ் பஞ்சபூதத் தலங்கள்

பகுதி 5

திருவண்ணாமலை

“கவுதம புனித முனி தொழ

அருணையில் அறம் வளர் கருணை உமை”

- என்று திருப்புகழில் குறிப்பிட்டுள்ளார் அருணகிரியார்.

பிரம்மா, விஷ்ணு முதலானோர் ஆசிரமத்தில் தேவியைச் சந்தித்து, மஹிஷாசுரனால் தாங்கள் படும் துன்பங்களை விவரித்தார்கள். தேவி, துர்கையை அழைத்து, “நீ யுத்த களத்தில் மஹிஷாசுரன் வல்லமை கெட, உடனே கொன்று விடு” என்று உத்தரவிட்டாள். மிகக் கடுமையான போர் நடந்தது. [எல்லப்ப நாவலர் ஐம்பதுக்கும் மேற்பட்ட செய்யுள்களில் இப்போரை விவரித்துள்ளார்!]அளவில்லா மாயா ரூபங்கள் கொண்டு, பெரும் யுத்தம் செய்த அசுரனை, சூலத்தினால் குத்திக் கொன்றாள் துர்கை.

உமையம்மை கூறியபடி, அவனது ஆயுதங்களை விலக்கி, வாளால் அவன் தலையை வெட்டித் தள்ளி, காலினால் மிதித்துக் கொன்றாள். ஆனால் அவனது சிவப்பான கண்டத்தில் ஜோதிர்மயமான படிகலிங்கம் மட்டும் அப்படியே இருந்தது. துர்கை நடந்ததையெல்லாம் விவரித்து, லிங்கத்தைத் தேவியிடம் கொடுத்தாள். பரமேசுவரனும், அன்னையின் செந்தாமரையை ஒத்த கையை விடாமல் கெட்டியாக அமர்ந்துவிட்டார்.

இத்தருணத்தில், கௌதமர், அசுரன் கண்டத்தில் லிங்கம் வந்த விதத்தை விவரித்தார். “அந்த லிங்கம் இருந்த கண்டத்தை உடையவனும் சிவ சொரூபன் தானே! அவனைக் கொன்றபடியால் இந்தப் பாவம் சம்பவித்தது” என்றார். “நவ தீர்த்தங்களில் நீராடி வந்தால் இப்பாவம் போகும்” என்றும் கூறினார். மிகவும் பக்தியுடைய கௌதமர் இவ்வாறு கூறிய அளவில், “பாவம் தீர ஆடுவதற்கு ஒன்பது தீர்த்தங்களும் இவ்விடத்தில் வரும்படிச் செய்” என்ற அசரீரி வானில் தோன்றியது.

துர்கை, தன் வாளினால் பூமியைப் பிளந்த போது, ஒன்பது தீர்த்தங்கள் உண்டாயின. ஒரு மாத காலம் அம்மை தவம் செய்ய, கையைப் பற்றியிருந்த லிங்கமும் அவளை விட்டு நீங்கியது.

சிவனார் கட்டளைப்படி, அம்மை மலையைப் பிரதட்சிணம் செய்த போது, அவர் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார். பின் அவள் கிழக்குத் திசைக்கு வந்த போது, மீண்டும் காட்சி அளித்த சிவனார், அம்பிகையைத் தன் இடப்பாகத்தில் இருக்கும்படி அணைத்துக் கொண்டார்.

[“மங்கையே! நமது இடப்புறத்து உறை’ என மகிழ்வுற்று, அங்கையால் அணைத்தருளினன், உருகி ஒன்றானார்” - அருணாசல புராணம்]

“அருமறையவர், அந்தரம் உறைபவர்

அன்புடையவர் உய, அன்றறமேவும்

அரிவையும் ஒரு பங்கிடமுடையவர், தங்(கு)

அருணை” என்றும்...

“திரிபுர தகனார் இடமதில் மகிழ்வார் திரிபுரை” என்றும் அருணையில் பாடுகிறார்.

மதுராந்தகத்தில், “சயிலாங்கனைக்கு உருகி இடப்பக்கம் கொடுத்த கம்பர்” என்று போற்றுவது நினைவுக்கு வருகிறது. கோயிலில் கார்த்திகை தீப தரிசனத்தன்று ஆடிய வண்ணம் வெளியே வந்து வேகமாக உள்ளே சென்று விடுகிறார் அர்த்தநாரீஸ்வரர். [உலகிலேயே மிக அழகான அர்த்தநாரீஸ்வரர் சிற்பத்தைத் திருச்செங்கோட்டில் கண்டு மகிழலாம்].ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள், பூர்வாசிரமத்தில் அர்த்தநாரி என்ற பெயரைக் கொண்ட வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் - இம்மூன்று மகான்களின் வாழ்க்கையிலும் திருப்புகழும், திருவண்ணாமலையும் முக்கிய இடங்கள் வகிக்கின்றன என்பது பற்றி இனிப் பார்ப்போம்.

சிறு வயதிலேயே ஊரை விட்டு வந்துவிட்டார் ரமணர். திருவண்ணாமலைக் கோயிலில் ஆயிரங்கால் மண்டபத்தில் அன்ன ஆகாரமின்றி அச்சிறுவன் சுருண்டு கிடப்பதைக் கண்ட சில விஷமக்காரச் சிறுவர்கள், பலவாறு கத்திக்கொண்டு ஓட்டுச் சல்லிகளையும் சிறு கற்களையும் அச்சிறுவன் மீது விட்டெறிந்து சித்ரவதை செய்தார்கள். பால ரமணரின் மோன தவத்துக்கு இடையூறுகள் அதிகமாகியதால், அவர் அங்குள்ள பாதாள லிங்கத்தை அடைக்கலம் புகுந்தார். அவ்விடம் கீழே ஒரு பள்ளம் இருந்தது.

அங்கு எறும்பும் பூச்சிகளும் குளவிகளும் குடியிருந்தன. அவை கடித்ததால் உடல் எங்கும் ரணகளமாயின. அப்போதும் ரமணருக்கு எந்த உணர்ச்சியும் இருக்கவில்லை. நல்ல மனம் கொண்ட பல அன்பர்கள், கற்சிலை போல் அமர்ந்திருந்த பாலனை அப்படியே தூக்கிக் கொண்டு வந்து கோபுரத்து இளையனார் சந்நதியில் அமர வைத்துப் பரிவோடு கவனித்துக் கொண்டனர். இவ்வாறு சிவனும் சிவசுதனும் ரமண மகரிஷியை நமக்கு மீட்டுத் தந்தனர். பாதாள லிங்க குகை, ராஜாஜி அவர்களால் திறந்து வைக்கப்பட்டு, ஜே. எச். தாராபூர் அவர்களின் நன்கொடையால் புதுப்பிக்கப்பட்டது.

பூர்வாசிரமத்தில் அர்த்தநாரி என்ற பெயர் கொண்டிருந்த சச்சிதானந்த சுவாமிகள், ஒரு முறை, ரமணரைத் தரிசிக்க திருவண்ணாமலை வந்திருந்தார். ஆசிரமத்தில் தங்கியிருந்த போது, ரமணர் விருப்பப்படி திருப்புகழ் பாடினார். ஆங்காங்கே சில திருத்தங்களைச் செய்தார் மகரிஷி. பல்வேறு திருத்தலங்களையும் தரிசித்து, பின்னர் 1916 இல் மீண்டும் திருவண்ணாமலை வந்தார் அர்த்தநாரி. பவழக் குன்றில் பத்து நாட்கள் கூடத் தங்கியிருக்க மாட்டார், திடீரென ரமணர் ஒரு நாள் அவரை மலையை விட்டு இறங்கச் சொல்லிப் பணித்தார். ‘ஏதேனும் குற்றம் செய்துவிட்டேனோ?’ என்று எண்ணிக் கலங்கிய வண்ணம் மலையை விட்டுக் கீழே இறங்கலானார் அர்த்தநாரி.

வழியில் சேஷாத்ரி சுவாமிகள் வந்து கொண்டிருந்தார். அர்த்தநாரியைப் பார்த்ததும், “வா, உனக்காகத் தான் காத்துக்கொண்டிருக்கிறேன்” என்றார். அர்த்தநாரிக்கு ஒன்றுமே புரியவில்லை. முக்காலமும் உணர்ந்த ஒரு ஞானி, மற்றொரு ஞானியிடம் இவரை அனுப்பி வைத்தது முருகன் திருவிளையாடலே! [இருவரும் ஒருவரை ஒருவர் இதற்கு முன்பு சந்தித்ததும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது]. ஆதிசங்கரரின், “சிவமானஸ பூஜா” தோத்திரத்திலிருந்து, பின்வரும் ஸ்லோகத்தை அதன் பொருளோடு எடுத்துரைத்தார் சுவாமிகள்.

“ஆத்மா த்வம்; கிரிஜா மதி:

ஸஹ சரா ப்ராணா: சரீரம் க்ருஹம்;

பூஜாதே விஷயோப போக ரசனா

நித்ரா ஸமாதி ஸ்திதி:

ஸஞ்சார பதயோ: ப்ரதக்ஷிண விதி:

ஸ்தோத்ராணி ஸர்வா கிரோ

யத் யத் கர்ம கரோமி

தத் தத் அகிலம், சம்போ தவாராதனம்”

[நீயே என் ஜீவாத்மா; என் புத்தியே பார்வதி; தச வாயுக்கள் உன் பரிவாரங்கள்; என் உடம்பே உன் வீடு [கோயில்]; நான் ரசிக்கும் விஷய போகங்கள் எல்லாம் உன் பூஜை; என் தூக்கமே ஸமாதி நிலை; நான் நடப்பதுவே உன்னை வலம் வருதல்; என் வாயிலிருந்து வரும் சொற்களனைத்தும் உன் தோத்திரங்கள்; நான் செய்யும் அனைத்துச் செயல்களும் உனக்குச் செய்யும் வழிபாடுகளே!]

பின் அர்த்தநாரியைப் பார்த்து, “உன்னுடைய சிந்தனை, சொல், செயல் இம்மூன்றையும் இறைவனுக்கே அர்ப்பணித்து வாழ்வாயானால், ‘நான்’, ‘எனது’ எனும் அகங்கார மமகாரம் உன்னை விட்டு நீங்கும். ப்ரும்ம தத்துவத்தை நீ உணர்வாய்” என்று கூறினார்.தொடர்ந்து, “இது போன்ற உயர்ந்த கருத்துகளை உடைய திருப்புகழ் ஏதாவது சொல்லு பார்ப்போம்” என்றார். உடனே, அர்த்தநாரி, “அமலவாயு” எனத் தொடங்கும் திருப்புகழைப் பாடி, பின் வரும் அடிகளின் பொருளை விளக்கினார்.

“எமனை மோதி ஆகாச கமன மா மனோ பாவம்

எளிது சால மேலாக உரையாடும்

எனது யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும்

இதய பாவனாதீதம் அருள்வாயே”

[யமனையும் தாக்குவது போன்று மேலெழுந்து ஆகாயம் வரைக்கும் உயரப் பறக்கும் வேகம் வாய்ந்த மனத்தின் தன்மையால், மிக எளிய வகையில் மேலெழுந்து அகங்காரத்துடன் பேசுகின்ற, ‘என்னுடையது’ எனும் மமகாரமும், ‘நான்’ எனும் அகங்காரமும், அதாவது, புறப்பற்று, அகப்பற்று இவை நீங்கி, பிறர் எவரும், பிற பொருள்கள் எவையும் நானே எனும் உயர்ந்த நிலையை அடைந்து அதற்கும் எட்டாத பெரு

நிலையைத் தந்தருள்வாயாக].

இத்துடன், “வாதினை அடர்ந்த”

எனத் தொடங்கும் திருப்புகழில் வரும்,

“ஜோதி உணர்கின்ற வாழ்வு சிவம் என்ற

ஸோஹமது தந்து எனை ஆள்வாய்”

- எனும் அடிகளின் கருத்தையும்

விளக்கினார் அர்த்தநாரி.

[ஜீவ போதம் இழந்தவுடன் ஆணவ மலம் நீங்கி, சிவபோதம் ஏற்படும். ஸ: + அஹம் = ஸோஹம் = அது நான்; ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று எனும் பாவனை தந்து எனை ஆள்வாயாக!]

சேஷாத்ரி சுவாமிகள் மிகவும் வியந்து போய், “வேதங்களில் கூறப்பட்டுள்ள கருத்துகளுக்கிணையான அரிய கருத்துகளைத் திருப்புகழில் எவ்வளவு எளிமையாக எடுத்துரைக்கிறார் அருணகிரிநாதர்” என்று கூறி, “உனக்குரிய மந்திரம் திருப்புகழ் ஒன்றே; அதுவே உன்னை முருகன் திருவடியில் சேர்க்க வல்லது; அதனால் இதனை மனதில் உறுதியாகப் பற்றி, வள்ளிமலை சென்று தங்கு; பின்னாளில் யாமும் அங்கு வருவோம்” என்றார்.அர்த்தநாரி, திருப்புகழை உலகெங்கும் பாடிப் பரப்புவதற்கே அவதரித்தவர் என்று அவரது அவதார ரகசியத்தை முன் கூட்டியே குறிப்புணர்த்திய சேஷாத்ரி சுவாமிகள் முக்காலமும் உணர்ந்த முழு ஞானியே என்பதில் ஐயம் ஏதுமில்லை.

“பூர்வ பச்சிம தட்சிண உத்தர திக்குள

பத்தர்கள் அற்புதம் என ஓதும்

சித்ர கவித்துவ சத்த மிகுத்த

திருப்புகழைச் சிறிது அடியேனும்

செப்பென வைத்துலகில் பரவத்

தெரிசித்த அநுக்ரக மறவேனே”

- என்று அருணகிரிநாதர் பாடிவைத்த அனுபவம், இனி இந்த அர்த்தநாரிக்கும் கிட்டவுள்ளது என்பது அன்றே புலனாயிற்று. “ஆடும் பரி வேல் அணி சேவல் எனப் பாடும் பணியே பணியா அருள்வாய்” என்பதே அவருக்குக் கிட்டிய உபதேச வாக்கியமாயிற்று.இதன் பின் வள்ளிமலை சென்ற அர்த்தநாரி, ‘வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள்’ என்றே அறியப்படலானார். மலை வாழ் மக்கள் அனைவருக்கும் திருப்புகழ் கற்றுக் கொடுப்பதையே வாழ்நாள் தொண்டாகச் செய்தார். நாடெங்கும் பயணித்து, திருப்புகழ் பாடி வந்தார். அவர் விருப்பப்படியே வள்ளிமலையிலேயே அவரது சமாதியும் அமைந்தது. வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு வள்ளி மணவாளனின் ஆசியால் அமைந்த அவரது வள்ளிமலை வாழ்க்கைக்கான வித்து அண்ணாமலையில் இடப்பட்டது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

“அடிமுடி காண முடியாத நித்தியமான சத்திய ஒளியில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் அருணாசலத்தின் மகிமைக்கு முடிவேது?” என்கிறார் ‘அருணாசல மகிமை’ நூலாசிரியரான பரணீதரன் அவர்கள்.

மலைவலம்:

அம்பிகை, அண்ணாமலையை வலம் வந்து இறைவனிடம் இடப்பாகம் பெற்றதைப் போற்றி மகிழும் வகையில், மலையே சிவம் - சிவமே மலை என்ற தாத்பர்யத்துடன் எண்ணற்ற மக்கள், குறிப்பாக பௌர்ணமி தினத்தன்றும் மற்ற விசேஷ நாள்களிலும் மலையை நடந்து வலம் வருகின்றனர். 14 கி.மீ. தூரம் உள்ளது கிரிவலப் பாதை. “அருணாசலத்தைப் பிரதட்சிணம் செய்தல், அகில உலகத்தையும் பிரதட்சிணம் செய்தலுக்கு நிகரென்று சொல்லப்படும்; அதாவது அகில உலகும் அருணாசலத்தில் அடக்கமென்றவாறாம்; அருணாசலேஸ்வரர் ஆலயப் பிரதட்சிணமும் அவ்வாறே சாலச் சிறப்புடையதாம்;” என்று கூறியுள்ளார் ரமண மகரிஷி.

மலைவலப் பாதையில் குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம், இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம் ஆகிய எட்டு லிங்கங்கள் விளங்கும் தனிக் கோயில்களைத் தரிசித்து மகிழலாம். அக்னி லிங்கம் உள்ள இடத்தை அடுத்து அக்னி தீர்த்தம், சேஷாத்ரி சுவாமிகள் ஆச்ரமம், ரமணாச்ரமம் ஆகிய இடங்களைத் தரிசிக்கலாம். நிருதி லிங்கத்தைத் தரிசித்து, தொடர்ந்து நடக்கும் பொழுது, பழநி ஆண்டவர் கோயில், ராஜராஜேஸ்வரி ஆலயம், கௌதமர் ஆச்ரமம் ஆகிய இடங்களைக் காணலாம்.

மலைவலம் வரும் பாதையில் மிகவும் பிரபலமாக உள்ளது இடுக்குப் பிள்ளையார் கோயில். கோயில் என்று எதுவும் தனியாக இல்லை. நேர் கோட்டில் அமையாத மூன்று வாசல்கள் உள்ளன. பக்கவாட்டில் இருபுறமும் சுவர்கள் உள்ளன. பின்பக்க வாசல் வழியே நுழைந்து ஒருக்களித்துப் படுத்து, கைகளை உந்தி, தவழ்ந்த வண்ணம் வெளியே வர வேண்டும். இதனால் பில்லி, சூனியம் அகலும்; குழந்தை பாக்கியம்கிட்டும் என்று பரவலாக நம்பப்படுகிறது.

மலைவலம் வரும் போது, இறை சிந்தனையுடன் தான் நடக்க வேண்டும். ரமண மகரிஷியுடன் மலைவலம் வரும் போது, வள்ளிமலை சுவாமிகள், அருணகிரியாரின் ‘வேடிச்சி காவலன்’ வகுப்பைப் பாடிய வண்ணம் நடந்தார் என்று கேள்விப்படுகிறோம்.அத்திரி முனிவரின் புதல்வரான துர்வாசருடைய சாபத்தினால் குதிரையும், புனுகுப் பூனையுமான இரண்டு வித்யாதரர்கள் மலைவலம் வந்த புண்ணியத்தினால் தத்தம் சாபம் நீங்கப் பெற்ற தலம் அருணை மாநகரம்.

காந்திசாலி, கலாதரன் என்னும் இரண்டு வித்யாதரர்கள் துர்வாச முனிவரின் ஆச்ரமத்தில் இருந்த நந்தவனத்தில் நுழைந்தனர். காந்திசாலி அங்கிருந்த புதர்களை மிதித்தான்; கலாதரன் மலர்களைப் பறித்தான். கோபமுற்ற முனிவர், “காந்திசாலியைக் குதிரையாகவும், கலாதரனைப் புனுகுப் பூனையாகவும் போகும்படிச் சபித்தார். அதிர்ந்து போன இருவரும் தங்களுக்குச் சாப விமோசனம் எப்போது கிட்டும் என்று பணிந்து கேட்டனர். “நீங்கள் இருவரும் திருவண்ணாமலையை பாண்டிய மன்னன் காரணமாக வலம் வர வேண்டி வரும்; அப்போது உங்கள் சாபம் தீரும்” என்றார்.

(தொடரும்)

சித்ரா மூர்த்தி