Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

திருப்புகழ் பஞ்சபூதத் தலங்கள்

பகுதி 4

திருவண்ணாமலை

(9) கிளி கோபுரம்

கோயிலிலுள்ள ஒன்பது கோபுரங்களுள் இதுவும் ஒன்று. கண நேரம் கம்பத்திளையனாரைத் தரிசித்த அரசன் பிரபுட தேவராயன் கண் பார்வையை இழந்தான். அரசனின் கண்பார்வை மீள வேண்டுமானால் தேவலோகத்திலிருந்து பாரிஜாதம் கொண்டு வந்து கண்களில் வைக்க வேண்டும் என்றான் சம்பந்தாண்டான்.

உடனே, அஷ்டமா சித்திகள் கைவரப் பெற்ற அருணகிரிநாதர், பூத உடலை அடிவாரத்தில் கிடத்திவிட்டு, கிளி ரூபத்தில் தேவலோகத்திற்குப் பறந்து சென்று பாரிஜாதம் கொண்டுவந்து தர, அரசனின் கண் பார்வை மீண்டது. ஆனால், அருணகிரியார் வருவதற்குள், அவர் இறந்துவிட்டார் என்று கூறி, பூத உடலை எரித்துவிட்டிருந்தான் சம்பந்தாண்டான். கிளி ரூபத்திலேயே முருகன் கையில் சென்று அமர்ந்து அவர் பாடிய நூல் தான் கந்தர் அநுபூதி.

திருவேளைக்காரன் வகுப்பில், இதற்கான சான்று கிடைக்கிறது. “ஏழையின் இரட்டை வினையாயதொருடற் சிறை இராமல் விடுவித்தருள் நியாயக்காரனும்” என்கிறார். [இவ்வடிமை முற்பிறவியில் செய்த நல்வினை - தீவினையால் ஏற்பட்ட இந்த சரீரமாகிய சிறைச்சாலை நீங்கும்படி எனக்கு விடுதலை கொடுத்த நீதிமானும் (குறத்தி திருவேளைக்காரனே)].இவ்வரிகளில், முருகப் பெருமான் குருவாய் வந்து ஞான உபதேசம் செய்ததால் ஸ்தூல சரீரம் நீங்கி, கிளிரூபம் பெற்ற தன் வாழ்க்கைக் குறிப்பைப் பாடுகிறார். திருச்செங்கோட்டில் முருகப் பெருமானை, கந்தர் அலங்காரத்தில்,

“தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழும் செழுஞ்சுடரே

வைவைத்த வேற்படை வானவனே!

மறவேன் உனை நான்

ஐவர்க்கு இடம் பெறக் கால் இரண்டு ஓட்டி அதில் இரண்டு

கைவைத்த இந்த வீடு குலையுமுன்னே வந்து காத்தருளே”

- என்று விண்ணப்பித்திருந்தார்.

“இந்த உடம்பில், நான் வாழும்போதே அதன் குலைவினால் வேதனையுறா வண்ணம் நீ எழுந்தருளிவந்து காக்க வேண்டும்” என்கிறார். இவ்வேண்டுதல் பலித்தது. தேவலோகம் சென்று திரும்பு முன்னரே அவர் உடம்பு எரிக்கப்பட்டு விட்டது.

கந்தர் அநுபூதியில்,

“கூ கா என என் கிளை கூடி அழப்

போகா வகை மெய்ப்பொருள் பேசியவா!

நாகாசல வேலவ!”

- என்று நாகாசல (திருச்செங்கோடு) வேலனுக்கு நன்றி சொல்கிறார்.

கந்தர் அநுபூதியில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே இடம் செங்கோடு.கதிர்காமத் திருப்புகழில், “துகள் இல் சாயுச்சியக் கதியை ஈறற்ற சொல் சுக சொரூபத்தை உற்றடைவேனோ” என்று கேட்டிருக்கிறார்.

சுக சொரூபம் - பேரின்ப நிலை / கிளி உருவம்.“இச்சொற்களின் தொனியில் இனிப் பெறுவதற்கிருந்த கிளி உருவ நிலை மறைந்து கிடக்கிறது” என்கிறார் திருப்புகழ் உரை ஆசிரியர் டாக்டர் வ.சு.செங்கல்வராயப் பிள்ளை அவர்கள். கிளிக் கோபுரத்தின் உச்சியில் இதன் அடையாளமாக பச்சை வண்ணத்துடன் கிளியின் உருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது. கிளிக் கோபுரம் என்றமைந்ததன் பெயர்க்காரணமும் இதுவே.

(10) யானை திறை கொண்ட விநாயகர்

சிவப்பிரகாசரின் ‘சோண சைல மாலை’ எனும் நூலில் காப்புச் செய்யுளில் திருவண்ணாமலைக் கோயிலில் உள்ள, ‘யானை திறை கொண்ட விநாயகர்’ வரலாறு தரப்பட்டுள்ளது. “யானை திறை கொண்டவனை என்னுள்ளத்தே கொண்டு” என்று பாடுகிறார். முகிலன் எனும் அரசன், அடியார்களுக்குத் துன்பம் விளைவித்து வந்தான். குகை நமச்சிவாய தேசிகர் எனும் அடியார், அருணாசலேஸ்வரரைத் துதித்தார்.

“சூலம் கரத்திருக்க சோதி மழு வாளிருக்க

ஆலம் உண்ட காலத்து அருள் இருக்க

மேலே எரித்த விழி இருக்க

இந்நாட் சோணேசர் தரித்தது என்ன காரணமோதாம்?”என்று பாடினார். சிவபெருமானின் கட்டளையால், விநாயகர், எண்ணற்ற யானைகள் உருவில், முகிலனின் கனவில் தோன்றி, அவனுக்கு அச்சத்தை விளைவித்தார். முகிலன் தன் தவற்றை உணர்ந்து, அடியார்களுக்கு இடையூறு விளைவிப்பதை நிறுத்தினான். பிராயச்சித்தமாக, பல யானைகளை திருவண்ணாமலைக் கோயிலில் மூலவர் சந்நதி அமைந்திருக்கும் மண்டபத்திற்கு வெளியே, இடப்புறத்தில் வீற்றிருக்கும் விநாயகருக்குக் காணிக்கையாகச் செலுத்தினான். அதனால் இவர், “யானை திறை கொண்ட விநாயகர்” என்று பெயர் பெற்றார்.

கந்தர் அந்தாதி நூலின் முதல் காப்புச் செய்யுளில்,“வயல் அருணை வாரணத்தானை திறைகொண்ட யானையை வாழ்த்துவனே” என்று பாடுகிறார் அருணகிரிநாதர். இதற்கு, “வயல்கள் சூழ்ந்த அருணாசலத்தில், யானை முகத்தை உடைய கஜமுகாசுரனை வெற்றி கொண்ட யானை முக கணபதியை வணங்குகிறேன் என்ற பொருளும் உண்டு.

(11) சம்பந்த விநாயகர்

கொடி மரம், பலி பீடம் இவற்றின் வடபுறம், சம்பந்த விநாயகர், தண்டபாணி, வள்ளி தெய்வயானையுடன் கூடிய சுப்ரமணியர் காட்சி தருகின்றனர். கஜமுகாசுரனைக் கொன்று ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டதால் விநாயகர், சிவந்த திருமேனியுடன் காட்சி அளிக்கிறார்.

(12) இரண்டாம் பிராகாரம்

நாயன்மார் திருவுருவங்கள், தேவர்கள் பூஜித்த பல்வேறு லிங்கங்கள், சோமாஸ்கந்தர் முதலான உற்சவ மூர்த்திகள், ராதை - ருக்மிணியுடன் கூடிய கோபாலகிருஷ்ணர், கருடாழ்வார், ஆஞ்சநேயர், ஆறுமுகர் ஆகியோரின் திருச்சந்நதிகள் இப்பிராகாரத்தில் காட்சி அளிக்கின்றன. ஆறுமுகன் சந்நதியில் திருவருணைத் திருப்புகழ் ஒன்றைச் சமர்ப்பிக்கிறோம்.

“கரிமுகக் கடகளிற்றதிக கற்பக மதக்

கஜமுகத்தவுணனைக் கடி யானை

கடலையெட் பயறுநற் கதலியிற் கனிபலக்

கனி வயிற்றினில் அடக்கிய வேழம்

அரிமுகத்தினன் எதிர்த்திடு களத்தினின் மிகுத்(து)

அமர்புரிக் கணபதிக்(கு) இளையோனே

அயிலெடுத்(து) அசுரர் வெற்பலைவுறப் பொருது வெற்

றியை மிகுத்(து) அறுமுகக் குமரேசா

நரிமிகுக் கிளைகளைப் பரியெனக் கடிவளக்

கையில் பிடித்தெதிர் நடத்திடும் ஈசன்

நடனம் இப்படியிடத்தினும் இசைத் தரையினிற்

கரியுரித்(து) அணிபவற்(கு) ஒரு சேயே

துரிபெறச் சரிபொழிற் கனவயற்(கு) அழகுளத்

துரியமெய்த் தரளமொய்த்திட வீறிச்

சுரர் துதித்திட மிகுத்(து) இயல் தழைத்(து) அருணையிற்

சுடரயிற் சரவணப் பெருமாளே.

கஜமுகாசுரனை விநாயகர் அடக்கிய வரலாறு, வேலைச் செலுத்தி அசுரர் கூட்டம் அலைச்சலுறும்படி வெற்றி கொண்ட அறுமுகனின் வீரம், மாணிக்கவாசகருக்காக நரிகளைப் பரிகளாக்கியும், யானைத் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டதுமான வீரட்டச் செயல்களைச் செய்த சிவனாரின் திருவிளையாடல்கள் இவற்றைப் பற்றிய குறிப்புகளை இப்பாடலில் உணர்ந்து மகிழலாம்.

திருவண்ணாமலையின் இயற்கை எழிலையும் பாடியிருக்கிறார்.

“காய் கனிகளின் சுமையால் சரிகின்ற பொழில்களும், பெருமை வாய்ந்த வயல்களும், தூய முத்துக்களும் நெருங்கிக் கிடக்க, தேவர்கள் துதி செய்ய, புலவர்கள் இயல் தமிழால் பாடிப் போற்றும் திருவண்ணாமலையில் ஒளிமிகுந்த வேலை ஏந்தியுள்ள சரவணபவனே!” என்கிறார்.அருணாசலத்தில் முருகனாலும் வள்ளியாலும் தான் ஆட்கொள்ளப்பட்டதைப் பின்வரும் பாடல் வரிகளில் குறிப்பிடுகிறார்.

“மருளும் அறிவினன் அடிமுடி அறிகிலன்

அருணை நகர்மிசை கருணையொடருளிய

மவுன வசனமும் இருபெரு சரணமு மறவேனே”

“கடையேன் இருவினை நோய் மல மாண்டிட

தீண்டிய ஒண் சுக மோகினி வளிநாயகி”

இவ்வரிகளின் மூலம் அவரது இரு வினைகளும் நோயும் மும்மலங்களும் அழிந்து போகும்படி வள்ளியம்மை ஸ்பர்ச தீக்ஷை அளித்தாள் என்பது புலப்படுகிறது.

(13) கருவறை

திருமுடி அடி பார்த்திடும் என இருவர்க்கு அடி தலை தெரியாப்படி நின்ற அண்ணாமலையாரைத் தரிசிக்க கருவறை நோக்கிச் செல்கிறோம். பிரதோஷ நந்தியை வணங்கி கருவறையில் அமைதியே வடிவாக, லிங்க ரூபத்தில் விளங்கும் இறைவனை வணங்குகிறோம். “திரிபுர மங்க, மதனுடல் மங்க திகழ் நகை கொண்ட விடை ஏறிச் சிவம் வெளியங்கணருள் குடி கொண்டு திகழ நடஞ் செய்தெமையீண, அரசி இடங்கொள் மழுவுடை எந்தை அமலன்” கண் முன் காட்சி அளிக்கிறான்.

மேரு சக்கரம் எனப்படும் பள்ளியறை சுவாமி, சற்று வித்தியாசமாகத் தெரிகிறார். சிவமே மலை, மலையே சிவம் என்பதால் மேரு மீது லிங்கம் வைக்கப்பட்டுள்ளது வேறு எங்கும் காணக் கிடைக்காதது. பள்ளியறையில் யோக சக்தி அம்மனின் செப்புத் திருமேனியும் உள்ளது. கருவறையைச் சுற்றி வரும் போது, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்ம துர்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோரை வழிபடலாம். சண்டிகேஸ்வரர் சந்நதி அருகே அமைந்துள்ள ‘வைகுண்ட வாசல்’ வழியே வெளிவந்து அம்மன் சந்நதியை அடையலாம்.

(14) உண்ணாமுலை அம்மன்  (அபீத குசாம்பாள்)

“செம்பொன் மேரு

அனையன கனவித சண்ட கோபுர

அருணையில் உறையும் மருந்து உணாமுலை

அபிநவ வனிதை தரும் குமர!”

- என்று குமரனைப் போற்றுகிறார் அருணகிரியார்.

[செம்பொன் மேரு மலைக்குச் சமானமான, பருத்த வலிமையான கோபுரங்களை உடைய திருவண்ணாமலையில் வீற்றிருப்பவளும், மருந்து - அமுதம் போன்றவளும், வாய் வைத்து அருந்தாத தனங்களை உடையவளும், என்றும் புதியவளும் ஆகிய பார்வதியம்மை பெற்ற குமரனே!] தேவியின் கோயில், வெளியே தனிக் கோயிலாக அமைந்துள்ளது.கோயில் வாசலில் விஜயராகவ விநாயகர் வீற்றிருக்கிறார். முன் பகுதியில் பெரிய மண்டபம் உள்ளது. கொடிமரம், நந்தி, நவக்கிரகங்கள் உள்ளன. அபூர்வமான சித்ர குப்தர் சந்நதியும் உள்ளது. [மனிதர்களின் பாவ புண்ணியங்களைக் கணக்கெடுப்பார் சித்ர குப்தர்].

கருவறைக்கு முன்னால் துவார பாலகர்கள் உள்ளனர். தேவி, கருவறையில் மூன்றடி உயரத்துடன் கருணாம்பிகையாகக் காட்சி அளிக்கிறாள். தேவ கோட்டத்தில் சுற்றிலும் ஐந்து தேவியர் காட்சி அளிக்கின்றனர். கருவறைக்கு வெளியே உள்ள மண்டபத்தில் ஒவ்வொரு தூணிலும் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் உள்ளன. தூண்களில் அஷ்ட லட்சுமியர் இருப்பதனால் அஷ்ட லட்சுமி மண்டபம் எனப்படுகிறது. ஆடிப் பூர விழாவின் போது, பத்தாம் நாள் உற்சவத்தில் அம்மன் சந்நிதிக்கு எதிரே நள்ளிரவில் தீமிதி விழா சிறப்பாக நடத்தப்படுகிறது. தேவியைப் போற்றும் திருவருணைத் திருப்புகழின் ஒரு சில பாடல் அடிகளை இங்கு சமர்ப்பிக்கிறோம்.

“தருண சததள பரிமள பரிபுர

சரணி, தமனிய தநுதரி, திரிபுர

தகனி, கவுரி, பவதி, பகவதி, பயிரவி, சூலி,

ஜடிலதரி, அநுபவை, உமை, திரிபுரை,

சகல புவனமும் உதவிய பதிவ்ருதை,

சமய முதல்வி”

[என்றும் இளமையொடு கூடியதாய், தாமரை போன்ற நறுமணம் வீசுவதாய், சிலம்பணிந்ததாயுள்ள திருவடிகளை உடையவள்; பொன் சிகரங்களைக் கொண்ட மேருவை வில்லாக ஏந்தியவள், திரிபுரங்களை எரித்தவள், கவுரி, பவதி (தேவி), பகவதி, பயிரவி, சூலம் ஏந்தியவள், ஜடை தரித்தவள், போகங்களை நுகர்விப்பவள், உமை, திரிபுரை, எல்லா உலகங்களையும் ஈன்றருளிய பதிவ்ரதை, எல்லா சமயங்களுக்கும் முதல்வி ஆகிய பார்வதி தேவி]மற்றொரு திருப்புகழில் தேவியை முப்பத்து மூன்று நாமங்களால் போற்றுகிறார்.

“குமரி, காளி, வராகி, மகேசுரி,

கவுரி, மோடி, சுராரி நிராபரி,

கொடிய சூலி, சுடாரணி, யாமளி, மகமாயி,

குறளுரூப முராரி சகோதரி,

உலகதாரி, உதாரி, பராபரி,

குரு பராரி, விகாரி, நமோகரி, அபிராமி

சமர நீலி, புராரி தன் நாயகி,

மலை குமாரி, கபாலி, நல் நாரணி,

சலில மாரி, சிவாய மனோகரி, பரையோகி,

சவுரி வீரி, முநீர் விட போஜனி,

திகிரி மேவுகையாளி, செயாள், ஒரு

சகல வேதமுமாயின தாய், உமை”

கந்தர் அந்தாதி இரண்டாவது காப்புச் செய்யுளில் பின்வரும் குறிப்பு உள்ளது.“நம் அருணை வெற்பாள், உண் ஆம் முலையும், ஐ மை தாசர நந்தனமும், ஒப்பில் உண்னாமுலை”[நாம் அடைக்கலம் புகுதற்கு இடமான அருணகிரியில் எழுந்தருளியுள்ள அம்மை; மிகுதியாகப் பெருகும் கற்புடைமைக்கும், அழகிய அஞ்சனம் தீட்டிய காதுவரை தாவிய விழிகளின் கிருபைக்கும், ஒப்புவமை இல்லாத உண்ணாமுலை என்ற பெயர் கொண்ட பார்வதி தேவி]அம்பிகையைத் தொழுது வெளிவரும் நாம், தேவி, இறைவனைப் பூஜித்து திருவண்ணாமலையில் அவரது இடப்பாகத்தைப் பெற்ற வரலாற்றை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். சைவ எல்லப்ப நாவலரின், “ஸ்ரீ அருணாசல புராணம்” இதன் விரிவை அளிக்கிறது.

அகத்தியர் முதலான ஐம்பது ரிஷிகள் வரமுனி என்பவரது ஆசிரமத்திற்குச் சென்றிருந்தபோது, முனிவர் அகந்தை காரணமாக அவர்களை உபசாரம் செய்யாமல் அவமதித்தார். வந்த ரிஷிகள் அவரை, ‘எருமைக் கடா முகத்துடன் பிறப்பாயாக’ என்று சபித்தனர். தெரியாமல் தவறு செய்துவிட்டதாகக் கூறி, மன்னிப்பு கேட்ட வரமுனியிடம், மற்ற ரிஷிகள், “எருமை முகம் பொருந்திய அரசனாகி அரசாளும் காலத்தில் சுவாமியின் இடப்பாகம் பெற வேண்டி தவம் செய்து கொண்டிருக்கும் உமை, உன் சாபத்தைத் தீர்ப்பாள்” என்று கூறினர். அவர்கள் சபித்தபடி வரமுனி, அசுர குலத்தில் எருமை முகத்துடன் பிறந்து மஹிஷாசுரன் என்ற பெயரில் கொடுங்கோலரசு செய்தான். எதிரில் வந்த மன்னத ரிஷியை, அவர் கையிலிருந்த லிங்கத்துடன் சேர்த்து விழுங்க, லிங்கம் மஹிஷாசுரனின் கண்டத்தில் சிக்கிக்கொண்டு காட்சி அளித்தது.

இக்கால கட்டத்தில் அம்பிகை, சிவனுடைய இடப்பாகம் பெற வேண்டி, கௌதம முனிவருடைய ஆசிரமம் வந்தடைந்தாள். [பிருங்கி முனிவர் சிவனை மட்டுமே வலம் வருபவராக விளங்கியதால், தேவி இறைவனுடன் ஒன்று சேர்ந்து பிரியாதபடி காட்சி அளிக்க விரும்பினாள்]. “நீ மெய்ம்மையான தவம் செய்தால், ரிஷப வாகனத்தின் மேல் எழுந்தருளி பரமசிவன், உனக்கு இடப்பாகம் கொடுப்பார்” என்றார் கௌதமர்.

செம்மை நிறமுள்ள அருணாசலத்தின் கிழக்குப் பாகத்தில், புதிதாகப் பர்ணசாலை அமைத்து, சப்த மாதர்களைப் புறங்காவலாகவும், எட்டுப் பயிரவர்கள் நான்கு வாயில்களையும், விநாயகரும் முருகரும் இரு புறமும், துர்கை உட்பக்கம் காக்கவும் அம்பிகை தவம் செய்தாள்.

(தொடரும்)

சித்ரா மூர்த்தி