Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திருப்புகழ் பஞ்சபூதத் தலங்கள்

* சிதம்பரம்

அருணகிரியார் பாடியுள்ள பஞ்சபூதத் தலங்களில், காஞ்சிபுரம், திருவானைக்காவல், திருவருணை, திருக்காளத்தி ஆகிய தலங்களைத் தொடர்ந்து இறுதியாக நாம் காணவிருப்பது ஆகாயத் தலமான தில்லை எனப்படும் சிதம்பரம். முற்காலத்தில் தில்லை, மரங்கள் அடர்ந்த காடாக இருந்தமையால் ``தில்லை’’ என்று பெயர் பெற்றது. “தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்கிறார் சுந்தரர். [பண்டைய ஊர் எல்லையிலுள்ள காளிகோயிலில், தேவி, தில்லைக் காளி என்றே அழைக்கப்படுகிறாள்].

சிதம்பரம், எல்லா க்ஷேத்திரங்களுக்குள்ளும் முதன்மை பெற்று விளங்குவதால், யாதொரு அடைமொழியும் இல்லாமல் “கோயில்” என்றாலே சைவப் பெருமக்களுக்கு அது தில்லை நடராஜர் கோயிலையே குறிப்பதாக விளங்குகிறது. சித் - அறிவு, ஞானம்; அம்பரம் - வெட்டவெளி, ஆகாயம்; சிதம்பரம் - ஞான ஆகாயம் என்று பொருள்படுகிறது. ஏட்டிலே எழுதும் போதும், பேச்சுக்களைத் தொடங்கும் போதும், ‘திருச்சிற்றம்பலம்’ எனும் மந்திர ஒலியை எழுப்பும் பக்தி மரபு பல நூற்றாண்டுகளாக சைவ சமய நடைமுறையில் இருந்துவருகிறது.

திரு = அடைமொழி. மேன்மை மிக்க எல்லாவற்றையும் தன்னுள்ளே அடக்கி நிற்கும் சிறப்புத் தமிழ்ச் சொல். சிறு = மிக நுண்ணிய; அம்பலம் = வெட்டவெளி (அ) சபை. அம்பலத்தில் ஆடிய இறைவன் அம்பலவாணன் எனப்படுகிறான். நுண்ணியனான சிவபெருமான், ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்தொழில்களையும் இயக்க நடனம் புரியும் சித்சபையைக் குறிக்கிறது திருச்சிற்றம்பலம் எனும் சொல்.

“தானே புணர்ந்து தானே அறிந்து,

தானே மகிழ்ந்து அருளூறித்,

தாய் போல் பரிந்த தேனோடுகந்து,

தானே தழைந்து சிவமாகித்,

தானே வளர்ந்து தானே இருந்த

தார்வேணி எந்தை”

- என்று பாடுகிறார் அருணகிரியார்.

மாதவ சிவஞான யோகியர், காஞ்சிப் புராண நூலை இயற்றிய போது, “சங்கேந்து மலர்க் குடங்கை” எனத் தொடங்கும் சிதம்பரேசர் துதியை முதல் கடவுள் வாழ்த்துச் செய்யுளாக வைத்துவிட்டு, “தணந்த பெரும் துயர்க்கடலில்” என வரும் ஏகாம்பரேசர் துதியை அடுத்ததாக வைத்துப் பாடினார். அங்கு கூடிய தமிழறிஞர்கள் இது தவறு என்று வாதிட்டனர்.

மாதவ சிவஞான யோகியர், தன் சீடரான கச்சியப்ப முனிவரை, இவர்களுக்குத் தக்க பதிலடி கொடுக்கும்படிக் கேட்டுக் கொண்டார். கச்சியப்பர் அனைவரையும் ஏகாம்பரேசுவரர் கோயில் மண்டபத்தில் அமரச் செய்தார். காஞ்சி புராணத்தை விளக்கத் தொடங்குபவர் போல், அங்குள்ள ஓதுவா மூர்த்திகளிடம், “காஞ்சித் தலத்திற்குரிய தேவாரப் பதிகமொன்றை ஓதுங்கள்” என்றுகூற, அவர்கள் “திருச்சிற்றம்பலம்” என்று தொடங்கினர்.

உடனே கச்சியப்பர், முன்பு தனது குருநாதரிடம் வாதிட்ட அறிஞர்களை நோக்கி, “இவர்கள் திருச்சிற்றம்பலம் என்று கூறித் தொடங்குவது உங்களுக்கு ஏற்புடையதா? இத்தலத்திற்குரிய பதிகங்களை ‘பிருத்வி அம்பலம்’ என்றுகூறி வணங்கித் தொடங்கலாமே” என்று கேட்டதும், முன்பு கேள்வி கேட்டவர்கள் வாய் மூடி மௌனியாக நின்றார்கள்.

“உயிர்களின் போகம் மற்றும் வீடு பேற்றிற்குக் காரணமான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்தொழில் நடனம் செய்தருளும் சிற்றம்பலத்தவனின் துதி கூறுதலே முறையானது என்று அவர்களுக்கு விளக்கினார், கச்சியப்பர். ஐந்தொழிலாற்றி ஆனந்தத் தாண்டவமாடும் அற்புதக் கூத்தனைக் காணச் சிதம்பரம் செல்வோம்.

[ஊர்ப் பெயர் தில்லையானாலும், இன்று கோயில் பெயராலே ஊர்ப் பெயரும் அறியப்படும் ஒரு சில திருத்தலங்களில் இத்தலமும் ஒன்று.]

“கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என்று கூறுவது தில்லைக் கோபுரங்களுக்கு மிகவும் பொருந்தும். காரணம், சிவனாரைத் துதித்து இறையடி சேர்ந்த திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் எனும் நால்வரும் முறையே தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு கோபுரங்கள் வழியாகத் தில்லைக் கோயிலுக்குள் இறைவனைத் தரிசிக்க வந்தனர் என்று கூறுவர். அவர்கள் நடந்த வழியில் நாமும் செல்கிறோம் என்றுணர்கையில் புல்லரிப்பு உண்டாகிறது. இத்தலத்தில், 67 பாக்களைப் பாடியுள்ள அருணகிரியார், சில பாக்களில் முருகனை, “நாலு கோபுர வாசலில் மேவிய பெருமாளே” என்று பாடுகிறார்.

“ஞான பூமியதான பேர் புலி,

யூரில் வாழ் தெய்வயானை மானொடு,

நாலு கோபுர வாசல் மேவிய பெருமாளே”

இதிலிருந்து, கோயிலிலுள்ள மற்ற முருகன் திருவுருவங்கள் தவிர நான்கு கோபுரங்களை ஒட்டியும் முருகன் சந்நதிகள் அமைந்திருந்தன என்பது புலனாகிறது.

கிழக்கு கோபுர வாசலில் விநாயகரையும், முருகனையும் வணங்கி உள்ளே வருகிறோம். ஏழு நிலை மாடங்கள் கொண்ட இக்கோபுரம், 1138 ஆம் ஆண்டில் இரண்டாம் குலோத்துங்கனால் கட்ட ஆரம்பிக்கப்பட்டது என்பர். இக்கோபுரத்தின் தனிச் சிறப்பு, நுழைவாயிலிலுள்ள நிலைகளில் அடுக்கடுக்காக பரத சாத்திரத்தில் விஸ்தரித்திருக்கும் 108 நாட்டிய பேதச் சிற்பங்கள் கற்றூண்களில் செதுக்கப்பட்டுள்ளன.

மேலும், ஏராளமான உயிரூட்டமுள்ள சிற்பங்களும் உள்ளன. குறிப்பாக கஜ சம்ஹாரமூர்த்தி, யானை அருகில் சிவனைக் காணவில்லையே என்று பயந்து நிற்கும் தேவி, சூரியனால் செலுத்தப்படும் ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் அமர்ந்திருக்கும் சிவா - விஷ்ணு, பதஞ்சலி, வியாக்ரபாதர், அர்த்தநாரீஸ்வரர், ஊர்த்துவ தாண்டவர் ஆகியோரைக் காணலாம்.  மற்ற கோபுர வாசல்களைப் போலவே இதன் உட்புறமும் தனி முருகன் சந்நதி அமைந்திருந்ததாகவும், கலகக்காரர்களால் அது சிதைக்கப்பட்டுவிட்டது என்றும் தெரிய வருகிறது. இவ்விடத்திலும் ஒரு திருப்புகழை சமர்ப்பிக்க விரும்புகிறோம்.

“நறுமலர் இறைவி அரிதிரு மருக,

நகமுதவிய பார்ப்பதி வாழ்வே,

நதிமதி இதழி பணியணி கடவுள்,

நடமிடு புலியூர்க் குமரேசா,

கறுவிய நிருதர் எறிதிரை பரவு,

கடலிடை பொடியாப் பொருதோனே,

கழலிணை பணியும் அவருடன் முனிவு,

கனவிலுமறியாப் பெருமாளே”

[தறுகணன் மறலி - சிதம்பரம்]

கீழைவாசல் வழியாகத்தான் மாணிக்கவாசகர் கோயிலுள் நுழைந்தார் என்பதைக் குறிக்கும் விதமாக, அவரைத் தீட்சிதர்கள் வரவேற்கும் காட்சி, சுதைச் சிற்பமாக கோபுரத்தின் உட்புறம் மேலே வைக்கப்பட்டுள்ளது. கோபுரவாசல் வழி நுழைந்து, நீண்ட வெளியைக் கடந்து, கோயிலின் உள்ளே நுழைகிறோம். பல படிகள் இறங்கி உள்ளே செல்கையில், எதிரே விராட புருஷனின் இதயமாகக் கருதப்படும் திருச்சிற்றம்பலத்தின் பொன் வேய்ந்த விமானம் சூரிய ஒளியில் பளபளவென்று மின்னுவதைக் காண்கிறோம். இங்கு அமைந்துள்ள 21,600 தங்க முலாம் பூசிய ‘செப்பேடுகள்’ மனிதன் ஒவ்வொரு நாளும் விடும் சுவாசங்களின் எண்ணிக்கையைக் காட்டுவதாகும். இவற்றில் பஞ்சாட்சரம் எழுதப்பட்டுள்ளது.

சிற்றம்பலம் எனும் கருவறை உள்ள இடம் சற்று உயர்ந்த மேடையுடன் கூடியதாகக் காணப்படுகிறது. பக்கவாட்டுப் படிகள் வழியே ஏறி கனகசபை எனப்படும் மேடையில் நின்று பெருமானைத் தரிசிக்கலாம். கருவறைக்குள் செல்ல பஞ்சாட்சரப் படிகள் எனும் வெள்ளித் தகடுகளால் போர்த்தப்பட்ட ஐந்து படிகள் உள்ளன. சைவ சித்தாந்த நூல் ஒன்றை இப்படியில் வைத்தபோது, யானை எடுத்து அதை நடராஜர் காலடியில் வைத்ததால், அந்த நூல் திருக்களிற்றுப் படியார் எனப்படுகிறது. கருவறைக்குள் தேவி சிவகாமசுந்தரியுடன் எழிலுற வீற்றிருக்கும் ஆடல் வல்லான் நம்மைக் கருணையுடன் நோக்குகிறான்.

“குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்,

பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்,

இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்,

மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே”

- எனும் அப்பர் வாக்கு மிகப் பொருத்தமானதே!

“குமரேசன் இரு தாளும், சிலம்பும், தண்டையும், ஷண்முகமும், தோளும், கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடின், நாள் என் செயும், வினை என் செயும், எனை நாடி வந்த கோள் என் செயும்” என்று முருகப் பெருமானைக் கண்டு அருணகிரியார் பாடுவதும் இங்கு நமக்கு நினைவுக்கு வருகிறது. “தெற்கே பார்க்கும் சுவாமிகள் இருவர்தாம்; ஒருவர் சிதம்பரம் நடராஜர்; மற்றவர் ஸ்ரீ ரங்கத்திலிருக்கும் ரங்கராஜர்; நடராஜர் ஆனந்தமாகக் கூத்தாடிக் கொண்டிருக்கிறார்; ரங்கராஜர் ஆனந்தமாகத் தூங்கிக் கொண்டிருக்கிறார். இரண்டுமே ஆனந்தத்தின் எல்லைகள். தெற்கைப் பார்த்த இவ்விரு ராஜாக்களை வணங்குபவர்களுக்கு எமவாதனை இல்லை” என்று கூறுகிறார் மஹாபெரியவா! [காரணம் தெற்கில் யமன் ஆட்சி செய்கிறான்].

கனகசபையில் நின்றபடி ஆடல்வல்லான், அழகியாம் சிவகாமசுந்தரி, தவிரவும் ஸ்படிகலிங்கம், ரத்ன சபாபதி, பாதுகை, சொர்ணாகர்ஷண பைரவர், சிதம்பர ரகசியம் அனைத்தையும் காண்கிறோம். பெருமானது வலப்புறம் சிதம்பர ரகசியம் உள்ளது. இங்கு மூர்த்தியோ, லிங்கமோ இல்லை. எனவே இங்கு பெருமான் உருவம் [நடராஜர்], அருவுருவம் [ஸ்படிக லிங்கம்] மற்றும் அருவம் [சிதம்பர ரகசியம்] எனும் மூன்று நிலைகளிலும் காட்சி அளிக்கிறார். சிதம்பர ஆகாயத் தலமாதலால், அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசிக்கும் இறைவனின் அருவ நிலையைத் திரையை விலக்கி வெட்ட வெளியாகத் தரிசிக்கலாம். [ஆண்டுக்கு ஒருமுறை புனுகுச் சட்டம் பூசப்பட்டு, திரை மாற்றப்படுகிறது].

தங்க வில்வமாலைகள் தொங்குகின்றன.மாயை எனும் திரையை நமக்கு முன்னே தொங்கவிட்டுக்கொண்டு, பார்வையற்றவன் போல், ‘ஆனந்தம் எங்கே?’ என்று கேட்கும் நமக்கு அஞ்ஞானமாகிய திரையை விலக்கி, பரவெளியைக் காட்டி, “அருவமாய் நிற்கும் ஈசனைக் காண்பாய்” என்ற தத்துவத்தையே சிதம்பர ரகசியம் நமக்கு உணர்த்துகிறது. இங்கு திருவம்பலச் சக்கரம் எனும் அன்னாகர்ஷண சக்கரம் உள்ளது. தைப்பூச நன்னாளில் நடராஜருக்கு முன் அன்னம் செய்து பரப்பி ஆராதனை செய்வர்.

“அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்,

பொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை,

என் அன்பு ஆலிக்குமாறு கண்டு இன்புற,

இன்னம் பாலிக்குமோ

இப்பிறவியே” - அப்பர்

[அன்னம் - சோறு / மோட்சம்]

அன்னை சிவகாமிக்குரிய ஸ்ரீ சக்ரமும், சிவனுக்குரிய பஞ்சாட்சரமும் மந்திர ஸ்வரூபமாகவே அமைக்கப்பட்டுள்ளது. கனகசபையிலுள்ள நந்தியம் பெருமானை வணங்கிய பின்னரே நடராஜரை வணங்குவது மரபு. இச்சபையில் சந்திரமௌலீஸ்வரருக்கு (ஸ்படிக லிங்கம்) நாள்தோறும் ஆறுகால பூஜை நடைபெறும். ரத்தினசபாபதிக்கு நாள்தோறும் இரண்டாம் காலத்தில் அபிஷேகங்கள் நடைபெறும். கற்பூர ஆரத்தி காண்பிக்கையில், இவரது ஜோதி ஸ்வரூப நிலை கண்டு மகிழலாம். இவ்விரு சபைகளையும் சேர்த்துப் போடப்பட்டிருக்கும் தங்க விமானத்தை சோழ மன்னர்களும், பாண்டிய மன்னர்களும் அவ்வப்போது புதுப்பித்து வந்துள்ளனர். ஆடல்வல்லானின் நடனம் குறித்து அருணகிரியார் பல பாடல்கள் பாடியுள்ளார். ஒரு சிலவற்றை இங்கு காண்போம்.

“அகரமாதியாம் அக்ஷரங்கள் அவனி கால் விண் ஆர் அப்பொடு அங்கி,

அடைய ஏக ரூபத்தில் ஒன்றி முதலாகி,

அமரர் காணவே அத்த மன்றில் அரிவை பாட ஆடிக் கலந்த,

அமல நாதனார்” [“முகமெலா” திருப்புகழ்]

[அவனி - பூமி, கால் - காற்று, விண், அப்பு - நீர், அங்கி - தீ எனும் பஞ்சபூதங்கள்]

அத்தம் = பொன். அத்த மன்று = பொன்னம்பலம்

“திக்குக்குத் திக்குத் திகுதிகு,

டுட்டுட்டுட் டுட்டுட் டுடுடுடு,

தித்தித்தித் தித்தித் திதியெனெ நடமாடும் சித்தர்” [“மைக்குக்கை” திருப்புகழ்]

“குமுதபதி வகிரமுது சிந்தச் சிந்தச்,

சரணபரி புரசுருதி கொஞ்சக் கொஞ்சக்,

குடிலசடை பவுரிகொடு தொங்கப் பங்கிற்,

கொடியாடக் குலதடினி அசையஇசை பொங்கப்,

பொங்கக் கழலதிர டெகுடெகுட டெங்கட் டெங்கத்,

தொகுகுகுகு தொகுகுகுகு தொங்கத் தொங்கத் தொகுதீதோ,

திமிதமென முழவொலிமு ழங்கச் செங்கைத்,

தமருகம ததிர்சதியொ டன்பர்க் கின்பத்,

திறமுதவு பரதகுரு” [“அமுதுததி” திருப்புகழ்]

“அரி அயன் அறிந்திடாத அடியிணை சிவந்த பாதம்,

அடியென விளங்கி ஆடு நடராஜன்” [“இருவினை புனைந்து” திருப்புகழ்]

`‘அவகுண விரகனை’’ எனத் தொடங்கும் சிதம்பரத் திருப்புகழில் நடராஜரைக் கண்டு வணங்கியோர் பற்றிய குறிப்புகள் வருகின்றன. கனகசபையில் ஒரு தைப்பூச நன்னாளில் பரமன், ஆதிசேஷனின் அவதாரமான பதஞ்சலி முனிவருக்கும் வியாக்ரபாதருக்கும் தனது ஆனந்த தாண்டவத்தைக் காட்டி அருளினார்.

“பாம்புருவான முநி வாம் புலியான பதன்,

ஏய்ந்தெதிர் காண நடமிடு பாதா” [சாந்துடனே…]

“இனிய முது புலிபாதன் உடன் அரவு சதகோடி

இருடியர்கள் புகழ் ஞான பெருமாளே” [சுடரனைய…]

இது பற்றிய புராணக் குறிப்பைக் காண்போம். ஒரு சமயம் ஆதிசேஷனாகிய படுக்கையில் சயனித்திருந்த மஹாவிஷ்ணு, பத்மாசனத்தில் எழுந்தமர்ந்து, சிரசின் மேல் கைகளைக் கூப்பி தியானத்தில் ஆழ்ந்தார். பகவானின் அந்த நிலையினால் திடீரென்று தன் மீது கனம் அதிகம் ஆகவே, ஆதிசேஷன் பயபக்தியுடன் அதற்கான காரணத்தை வினவினார்.

“பிட்சாடனர் ரூபம் தாங்கிய பரமேஸ்வரன் தாருகா வன முனிவர்கள் அபிசார ஹோமம் (தீங்கு விளைவிக்கும் வேள்வி) செய்து தன் மேல் ஏவிய புலி, பாம்பு, முயலகன் ஆகியோரை அழித்து அவற்றைத் தன்வசப்படுத்தினார். முனிவர்கள் மன்னிப்பு கோரியதனால், அவர்களை ரட்சிக்க புலியாடையுடன், பாம்பை ஆபரணமாகவும், முயலகனைக் காலடியில் அழுத்தியும் தேவர் புடைசூழத் தாண்டவம் ஆடினார். அக்காட்சியை எண்ணி எல்லையில்லா மகிழ்ச்சிப் பூரிப்பில் ஆழ்ந்துவிட்டேன்.

என் உடலும் உள்ளமும் நிறையவே நீ அதன் கனத்தை உணரப் பெற்றாய்” என்று கூறினார் திருமால். இந்த திவ்ய நடனக் காட்சியைத் தானும் காண விரும்பிய ஆதிசேஷன், திருமால் கூறியபடி சிவனாரைக் குறித்துக் கடுந்தவம் இயற்றினார். சிவனார் தோன்றி, “உன் முற்பிறவியில் அத்ரி முனிவரின் மனைவி அனுசூயாதேவியின் கைகளில் நீ ஐந்து தலை நாகமாய் சிறிய வடிவில் தோன்றிய போது, அவள் பயத்துடன் உன்னைப் பூமியில் போட்டதால் உனக்கு ‘பதஞ்சலி’ என்ற பெயர் ஏற்பட்டது. அந்த சிறிய நாக வடிவம் கொண்டு சிதம்பரம் செல்வாயாக; அங்கு என்னைக் குறித்து சதா தவம் இயற்றும் நான் விரும்பும் பக்தன் வியாக்ரபாதர் இருக்கிறார். அங்கு சென்று அவருடன் சேர்ந்து தவம் செய்வாயாக” என்று கூறினார்.

சித்ரா மூர்த்தி