Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திருப்புகழ் பஞ்சபூதத் தலங்கள்

சென்ற இதழ் தொடர்ச்சி

திருக்காளஹஸ்தி (வாயு ஸ்தலம்)

ஸ்ரீ காளஹஸ்தியை வழிபட்டது:

கயிலையில் வீற்றிருந்த சிவனார், சிரமாலை, கொன்றை மாலை, இளம்பிறை, கங்கை முதலானவற்றைப் புனைந்து கொண்ட பின் அரவணிகளை எடுத்து அணியலானார். அவற்றில் காளன் எனும் பாம்பு காணப்படவில்லை. காளன் காமநோய் கொண்டு பாதாளம் சென்று பொதுமகளொருத்தியிடம் கூடி இருந்தது. “காமநோய் வசப்பட்ட நீ பூமியில் கயாரண்யம் எனப்படும் காளஹஸ்தியை அடைந்து, சிவபூஜை செய்வாயாக; அப்போது அங்கு வரும் ஒரு யானைக்கும் உனக்கும் பகை ஏற்பட்டு இருவரும் மடிவீர்கள்; பின்னர் உம் இருவருக்கும் முத்தி கிட்டும்” என்று கூறி மறைந்தார் சிவனார். அவ்வாறே காளன் பாம்பாகி பூமியில் வந்து, காளத்திநாதனை வழிபட்டு, யானையால் கொல்லப்பட்டு, பின் முக்தி பெற்றது.

யானை வழிபட்டது:

அத்தி எனும் பூதகணத் தலைவன், ஐயனும் அம்மையும் தனித்திருக்கும் பொழுது, காவலாளி தடுத்தும் கேட்காமல் பரமன் அருகில் சென்றான். மலைமகள், அவனைக் கோபித்து, “அத்தி, நீ மதங்கொண்ட அத்தியாக (யானை) போகக் கடவது” என்று சபித்தாள். பிழை பொறுத்தருளும்படி அவன் வேண்டிய போது, சிவனார் மனமிரங்கி, “கயாரண்யம் எனும் காளஹஸ்தியை அடைந்து, யானை உருவுடன் எம்மை வழிபடுவாய்; அதன் பின் உனக்கு சிவகதி வழங்குவோம்” என்றார்.

அத்தி, யானை வடிவில் அங்கு சென்ற காலத்தில், காளனும் பாம்பு வடிவத்தில் அங்கு வந்தான். யானை தினமும் பொன்முகலி ஆற்றில் நீராடி, துதிக்கையால் நீர் முகந்து வந்து இறைவனுக்கு அபிஷேகித்து, வில்வத் தளிர்களையும் சூட்டி மகிழ்ந்தது. அடுத்த நாள் பாம்பு வந்து, ‘இலைகளையா இறைவனுக்குச் சூட்டுவது?’ என்று கோபித்து அவற்றை எடுத்தெறிந்துவிட்டு, மாணிக்க கற்களைச் சூட்டி வணங்கியது. அடுத்த தினம், யானை வந்து பார்த்துவிட்டு, “சுவாமி மேல் கற்களை வீசிச் சென்றது யாரோ?” என வருந்தி, கற்களை அப்புறப்படுத்தி, வில்வத்தை இட்டு வழிபட்டுச் சென்றது.

கோபமுற்ற பாம்பு, மறுதினம் இவற்றை அகற்றாமல் பூங்கொத்தினுள் மறைந்திருந்தது; யானை வந்து மகிழ்ச்சியுடன் மலரிட்டு, பூஜை செய்ய ஆரம்பித்த போது, பாம்பு, சமயம் பார்த்து அதன் துதிக்கையுள் புகுந்து மத்தகம் வரை போய்க் குடைந்தது. வலி தாங்க முடியாமல், யானை துதிக்கையை ஓங்கி அறைய, பாம்பு, யானை இரண்டுமே மடிந்தன. இப்பிராணிகளின் பக்தியை மெச்சிய சிவனார் இரண்டிற்கும் சிவ சாரூபம் அளித்தார்.

காளத்தீஸ்வரரை வழிபட்டு முத்தி பெற்றவர்களில் தலையாயவர் கண்ணப்ப நாயனார். திண்ணன் என்பது அவர் பெற்றோர் இட்ட பெயர். வேட்டுவ குலத்தில் பிறந்தவன். காளத்தி மலை மேல் சிவனாரது திருவுருவைக் கண்டதும், “இம்மலையில் தன்னந்தனியே இருக்கிறீரே” என்று உருகி நின்றான். அவர் மேல் பச்சிலையும் பூக்களும் இருப்பதைக் கண்டான். உடன் வந்த நாணன், “நீரும் வார்த்து, பூக்களையும் இலைகளையும் இவ்வாறிட்டு ஓர் அந்தணன் பூஜித்து வருவதைக் கண்டேன்” என்றான்.

உடனே திண்ணன், பன்றித் தசையைச் சுட்டெடுத்து, சுவைத்துப் பார்த்துவிட்டு, சுவையானவற்றை ஒரு தொன்னையில் வைத்துக் கொண்டும், அபிஷேகத்திற்கு வேண்டிய நீரைத் தமது வாயில் அடக்கிக் கொண்டும், பூஜைக்கு வேண்டிய மலர்களைக் குடுமியில் செருகிக் கொண்டும், ஒரு கையில் வில் - அம்பும், மறு கையில் நைவேத்தியத்தையும் எடுத்துக்கொண்டு மலை ஏறினான். இறைவன் மீது வாய் நீரை உமிழ்ந்து அபிஷேகித்து மலரிட்டு பூஜை செய்து, இறைச்சியை நிவேதித்தான். தனியாக இருக்கிறாரே என்று இரவு முழுவதும் காவல் காத்தான்.

விடிந்ததும், வழக்கமாய்ப் பூஜை செய்யும் சிவகோசரியார் வந்து பார்த்தபோது, சுவாமி மேல் இறைச்சி கிடப்பது கண்டு அதிர்ந்தார். ‘இப்படி அபசாரம் செய்தவனை நீ தான் அழிக்க வேண்டும்’ என்று இறைவனிடம் கூறிவிட்டு, அவ்விடத்தைச் சுத்தம் செய்துவிட்டுச் சென்றார்; இறைவன் அன்று அவர் கனவில் தோன்றி, “அவன் ஒரு வேடன்; நமது அன்பன்; என் மீது மாறாத பக்தி கொண்டவன்; நாளை நீ ஒளிந்திருந்து அவனது அன்பைக் காண்பாயாக” என்றார்.

சிவகோசரியார் மறு நாள் மறைந்திருந்து பார்த்தார். வழக்கம் போல் இறைச்சி நிவேதனம் கொண்டு வந்த திண்ணன், இறைவனது கண்ணில் ரத்தம் வருவது கண்டு, பதைபதைத்து, பச்சிலைச் சாற்றைக் கண்ணில் பிழிந்தான். ரத்தம் நிற்காததைக் கண்டு, “ஊனுக்கு ஊன் இடுக” எனும் முறைப்படித் தனது கண்ணையே இடந்து இறைவனார் கண்ணில் அப்பினான். ரத்தப் பெருக்கு நின்றது; ஆனந்தக் கூத்தாடினான்.

ஆனால், இறைவனது மற்ற கண்ணிலும் ரத்தம் வருவது கண்டு, தனது இன்னொரு கண்ணையும் தோண்டி எடுத்து வைக்க எண்ணி, இடம் தெரிய வேண்டி இறைவனது திருக்கண்ணில் தனது இடக்காலை ஊன்றி நின்றான். அம்பினால் கண்ணை எடுக்க முயன்ற போது, இறைவன், ‘நில்லு கண்ணப்ப, நில்லு கண்ணப்ப’ என்று கூறி, கையால் தடுத்து நிறுத்தி, ‘கண்ணப்பருக்கு’ சிவகதி அளித்தார். சிவகோசரியார் பிரமித்து நின்றார். ‘இறைவனுக்கு வேண்டியது உண்மையான அன்பு மட்டுமே’ என்றுணர்ந்தார். அன்று முதல் திண்ணன், “கண்ணப்ப நாயனார்” எனப்பட்டார். “வாய் கலசமாக வழிபாடு செய்யும் வேடன் மலராகு நயனம் காய் கணையினால் இடந்து ஈசனடி கூடு காளத்தி மலையே” என்கிறார் சம்பந்தப் பெருமான்.அருணகிரியார், திருப்புகழிலும் கந்தர் அந்தாதியிலும் கண்ணப்ப நாயனார் பற்றிய அழகிய குறிப்புகளை வைத்துள்ளார்.

“பொக்கணத்து நீற்றையிட்டொருத்தனார்க்கு

புத்தி மெத்த காட்டு புனவேடன்

பச்சிலைக்கும் வாய்க்குள் எச்சிலுக்கும் வீக்கு

பைச் சிலைக்கும் ஆட்கொளரன் வாழ்வே”

[மச்ச மெச்சு - சிதம்பரம் திருப்புகழ்]

[விபூதிப் பையிலிருக்கும் விபூதியை இட்டு விளங்கின ஒப்பற்ற சிவகோசரியார் எனும் அந்தணர்க்கு “இறைவனுக்கு அன்பே பிரதானம்” எனும் உண்மை அறிவை நன்கு காட்டிய மலைக் கொல்லை காட்டு வேடனாம் திண்ணன் (கண்ணப்பர்) தந்த பச்சிலைப் பூஜைக்கும், அவன் வாயிலிருந்து உமிழ்ந்த எச்சிலாம் அபிஷேகத்திற்கும், அவர் வைத்திருந்த அம்புறாத் துணிக்கும் வில்லுக்கும் மகிழ்ந்து அவனை ஆட்கொண்டு நற்கதி அளித்த சிவனாருடைய செல்வ குமரனே!]

“இதவிய காண் இவை ததை என வேடுவன்

எய்திடும் எச்சில் தின்று

லீலாசலமாடும் தூயவன் மைந்த”

[வதன சரோருக - வெள்ளிகரம் திருப்புகழ்]

[‘இனிப்புள்ள இவை, நிறைய நெருங்கியுள்ளன’ என்று வேடுவன் (கண்ணப்பன்) கூறக் கேட்டு, அவன் அளித்த எச்சில் உணவைத் தின்று, பின்பு கண்ணிலிருந்து ரத்தம் ஒழுகுவது போன்ற பொய்ம்மையான விளையாடலை நடத்திய சுத்த மூர்த்தியாம் சிவனது குமாரனே!]

“கூசாது வேடன் உமிழ்தரு நீராடி ஊனுண் எனுமுரை

கூறாமன் ஈய அவனுகர் தரு சேடங்

கோதாம் எனாமல் அமுது செய் வேதாகமாதி

முதல் தரு கோ”

[ஆசாரவீனன் - பொதுத் திருப்புகழ்]

[அஞ்சாமல் வேடன் வாயினின்றும் உமிழ்ந்த நீர் அபிஷேகத்தைப் பெற்று, “இந்த ஊன் சுவைப்புளது இதை உண்டருள்” என்று கூறி நிரம்பக் கொடுக்க [மன் ஈய] அந்த வேடன் எச்சில் செய்து கொடுத்த பாக்கியை, ‘இது குற்றம், தகாது’ என்று பாவிக்காமல் அமுது செய்தவரும், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் ஆதி முதல்வருமான சிவபெருமான் பெற்றருளிய தலைவனே!]

கந்தர் அந்தாதியில்,“சிலை வேட்டுவன் எச்சில் துமிக்கும் அரவு அணி முடியான் மகன்” [வில்லை உடைய வேடன் திண்ணன் (கண்ணப்பன்) சுவை பார்த்துவிட்டு நிவேதித்த எச்சிலை மகிழ்வுடன் உண்டவரும், மேன்மையான பாம்பு ஆபரணத்தைத் தரித்த முடியை உடையவருமான சிவபெருமானது மைந்தன்] என்று பாடுகிறார்.அறிஞர் உ.வே.சா அவர்கள் 1912 ஆம் ஆண்டு தம் கைப்பட எழுதிவைத்துள்ள குறிப்புகளில், கோயிலிலும், மலைமேலும் கண்ணப்பர் வடிவமுள்ள ஐந்து இடங்களைப் பற்றிப் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

* கீழ்க்கோயிலின் மூலஸ்தானத்தின் அர்த்த மண்டபத்தின் வழிக்கு வலப்புறத்தே தெற்கு நோக்கியது. முதலில் இவருக்குப் பூஜையான பின்பு தான் சுவாமிக்குப் பூஜை.

* மேற்படி ஆலயத்தின் இரண்டாவது பிராகாரத்தின் கிழக்குப் பிராகாரத்தின் கிழக்கே தளத்திற்கு மேலே உயரத்தில் உள்ள மண்டபத்தில் வடக்கு நோக்கியுள்ளார். மிக அழகான வடிவம்.

* இரண்டாவது பிராகாரத்தின் மேற்கு வாயிலின் வெளியே வலப்புறத்தே தெற்கு நோக்கிய வடிவமாக உள்ளது.

* முதற் பிராகாரத்தில் நந்திக்கு மேற்கே உள்ளது.

* மலையின் மேல் மேற்கு நோக்கி நின்ற வடிவமாக உள்ளது.

நக்கீரர் வழிபட்டது:

மதுரையை ஆண்ட சூடாமணிப் பாண்டியன் கண்ட சுத்தியுடன் பாடும் கவிஞர்க்கு ஆயிரம் பொன்னடங்கிய கிழியைத் தருவதாக உறுதியளித்தான். புலவர்கள் முயற்சி அனைத்தும் வீணாயின. சிவனார் தமது சிறந்த பக்தனும், வறியவனுமான தருமி என்பவனிடம், தாமே அருந்தமிழ்ப் பாடல் ஒன்றை எழுதிக் கொடுத்து அனுப்பினார். பாடலின் சிறப்பைக் கண்டு, மன்னன் தருமிக்கே பொற்கிழியைக் கொடுக்க ஆணையிட்டான். ஆனால் அப்பாடலில் பொருட்குற்றம் கண்டு செருக்குடன் வாதிட்டார் நக்கீரர். புலவராகத் தோன்றி வாதிட்ட சிவனாரிடம், “உடலெல்லாம் கண்ணாகக் காட்டினாலும் நும் பாடல் பொருட்குற்றம் உடையது தான் என்று சொல்வேன்” என்று ஆணவத்துடன் கூறிய நக்கீரருக்கு குட்ட நோய் வரவும், கயிலை தரிசனத்தால் பின் அது தீரவும் மறக்கருணையுடன் அருளினார் சிவபெருமான்.

வழியில், திருப்பரங்குன்றம் சென்று கற்கிமுகி பூதத்தினால் குகையில் அடைக்கப்பட்ட நக்கீரர் முருகனை வேண்டி, ‘திருமுருகாற்றுப்படை’ எனும் நூலைப் பாட, முருகன் அகமகிழ்ந்தான். “தென் கயிலையாம் காளத்தியைத் தரிசித்தாலே நோய் தீரும்” என்று கூறியருளி, ஒரு பொய்கையில் மூழ்கி, திருக்காளத்தியில் எழுமாறு அருள்புரிந்தான்.

அவ்வாறே கீரரும், காளத்தியில் எழுந்து நோய் நீங்கிய திருமேனியுடன் ஞானப்பூங்கோதையுடன் வீற்றிருக்கும் காளத்திநாதரைத் தரிசித்து, ‘கயிலை பாதி, காளத்தி பாதி’ எனும் நூலை இயற்றினார். இது பதினோராம் திருமுறையிலுள்ள ஒரு அந்தாதி நூலாகும். கயிலைமலை மற்றும் திருக்காளத்தி இரு தலங்களையும் மாறி மாறிப் பாடும் வகையில் நூறு வெண்பாக்களால் ஆனது. சொல் திரியாகவும், உட்பொருள் நெய்யாகவும், இடும் சில் தன் நாவாகவும் கொண்டு பெண்பாகற்கு விளக்கேற்றிவிட்டு பாடத் தொடங்குவது மிக அழகாக உள்ளது. சிவகுமரனருளால் காளத்தி வந்து முக்தி அடைந்தார், நக்கீரர்.

காளத்தியில் அன்னை ஞானப்பூங்கோதை; அவள் குமரன், அருணகிரியார் வாக்கில் “ஞான பண்டித சாமி”; அவன் மனம் கவர்ந்த வள்ளி - “சுந்தர ஞான மென் குறமாது”. இந்திரன் மனமுவந்து அவனுக்களித்த பெண் தெய்வயானை - “ஞான சுர ஆனை”. அவன் திருக்கை வேல் - “ஞான பூரண சக்தி”. அடியாரது அவஞானம் கழல வைக்கும் அழகிய திருவடிகள் - “சிவஞான செம்பொற் கழல்கள்”. எனவேதான் காளத்தித் திருப்புகழில், “சிவஞானம் பொற்கழல் தாராய்” என்றும், “ஞானம் பொன் திருக்காளத்திப் பதிவாழ் கந்தப் பெருமாளே” என்றும் பாடியுள்ளார்.

(தொடரும்)

சித்ரா மூர்த்தி