பெண் தெய்வங்கள்
வீழும் தண்ணருவியின் குளிர்ச் சாரலைப் போல அம்பிகை பராசக்தி, குற்றாலம் திருத்தலத்தில் அருள்பாலிக்கிறாள். பராசக்தி என்பது பொதுப் பெயராக இருந்தாலும், அன்னை, ‘திரிகூட பராசக்தி’ என்றே வழங்கப்படுகிறாள். திருக்குற்றாலமும், அதைச் சார்ந்த பகுதிகளும் அமைந்திருக்கும் மலை, மூன்று சிகரங்களைக் கொண்டது என்பதாலேயே இங்கே உறையும் ஈசன், திரிகூட நாதர் என்றும், அம்பிகை, திரிகூட பராசக்தி என்றும் பெயர் கொண்டிருக்கிறார்கள். இந்த மலை இமயமலைக்கு ஒப்பானதாகச் சொல்லி புராணம் வியக்கிறது. ஆமாம், இமயமலையில் வெள்ளி, தங்கம், தாமிரம் என்று மூன்று சிகரங்களைக் கொண்டிருக்கிறது. அதேபோல இங்கும் மூன்று சிகரங்கள்!
திரிகூடம் என்பது மூன்று கூடங்களையும் குறிக்கும் என்றும் இன்னொரு தகவல் கிடைக்கிறது. அம்பிகை, இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளின் சங்கமமாக விளங்குகிறாள். மனித உயிரியல் ரீதியாக நம் உடலில் உள்ள பிரதான நாடிகளான இடகலை, பிங்கலை மற்றும் சுழுமுனை ஆகியவற்றின் மையப்புள்ளியாக மூலாதாரம் விளங்குகிறதே, அதைப்போன்றது. அதாவது, அம்பிகை நம் உடல் சார்ந்தும் நமக்குள்ளே வீற்றிருக்கிறாள் என்ற இறைத் தத்துவம்.
இந்தத் தலம் சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது-பராசக்தி பீடம். பூமியின் வடிவம் போல இந்த பீடம் ஸ்ரீசக்ர அமைப்பில் காட்சியளிக்கிறது. பராசக்தி தவிர குழல்வாய் மொழி அம்மன் என்றும் இன்னொரு அம்சமாக அம்பிகை இங்கே அருள்பாலிக்கிறாள். அதாவது, புல்லாங்குழல் இசையை விட இனிமையான குரலுடையவள் என்று பொருள்.கயிலாயத்தில் சிவபெருமான்-பார்வதி திருமண வைபவத்தில் கலந்து கொள்வதற்காக, முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷிகளும், தபஸ்விகளுமாக சென்று சேர, அந்த பாரம் தாங்காமல் வடபகுதி தாழ்ந்து, தென் பகுதி உயர்ந்துவிட்டது. இவ்வாறு சமநிலை பிறழ்வது இயற்கைக்கு முரணானது என்பதால், அகத்திய மாமுனிவரை தென்பகுதிக்குச் சென்று தம் தவ ஆற்றலால் அதனைத் தாழ்த்தி சமநிலையை உருவாக்குமாறு பணித்தார், கயிலைநாதன்.
அகத்தியருக்கோ, அனைவருக்கும் காணக் கிடைக்கும் கயிலைநாதனின் திருமணக் காட்சியைத் தன்னால் காண இயலாது போய்விடுமே என்ற ஏக்கம் பெருகியது. அதைப் புரிந்து கொண்ட ஐயன், தன் திருமணக் கோலத்தை தென்பகுதிக்குச் செல்லும் அவருக்கு, அங்கே காட்டுவதாகவும், அதைக் கண்டுகளிக்கலாம் என்றும் ஆறுதல் அளித்தார்.
ஈசன் ஆணையிட்டபடி திரிகூடத்துக்கு வந்த முனிவர், இங்கே திருமால் உறைந்திருக்கும் கோயிலை சிவத்தலமாக மாற்றி, இங்கேயே மஹாதேவனின் மணக்கோலத்தைக் காண விரும்பினார். அதன்படி, கோயிலுக்குள் சென்று திருமாலை நோக்கி உளமுருக வணங்கினார். இவருடைய பிரார்த்தனையை ஏற்றார் திருமால். உயர்ந்து நின்ற திருமாலின் தலையில்
தன் கைவைத்து கீழ்நோக்கிக் குறுக்கி லிங்க வடிவமாக்கினார், குறுமுனி அகத்தியர்.
திருமாலின் கையில் இருந்த சங்கு மறைந்து அங்கே, சிவனின் அம்சமான மான் தோன்றியது. துளசி அணிந்திருந்த தலையில் சந்திரன் உதித்தது. திலகம் அணி செய்த நெற்றியில், கண் ஒன்று தோன்றியது. நவரத்தின ஆரம் அணிந்திருந்த மார்பில் அதற்கு பதிலாக நாகப் பாம்பு காட்சி தந்தது. சுவாமிக்கு வலப்பக்கத்தில் விளங்கிய ஸ்ரீதேவி, குழல்வாய்மொழி நாயகியாகவும், இடப்பக்கம் இருந்த பூதேவி, பராசக்தியாகவும் மாறினார்கள்.
(இவ்வாறு பூமாதேவியே பராசக்தியாக மாறியதால், இத்தலம் தரணி பீடம் என்றும் அழைக்கப்படுகிறது) இவ்வாறு சிவத்தலமாக மாறிய இந்தக் கோயிலில் சிவபெருமானின் திருமணக் காட்சியைக் கண்டுகளித்தார் அகத்தியர். (புராண காலத்து சாட்டிலைட் நேரலை ஒளி-ஒலிபரப்புச் சம்பவம்!)தரணி பீடம் என்பதால் அதாவது, ஒன்பது அம்பிகையரின் அம்சமாகத் திகழ்வதால் பௌர்ணமி அன்று இங்கே அம்பிகைக்கு நவசக்தி பூஜை செய்யப்படுகிறது. அப்போது பாலும், வடையும் நைவேத்தியமாக படைக்கிறார்கள். இந்த அம்பிகை உக்கிரம் மிகுந்தவள் என்பதால், இவளை சாந்தப்படுத்தும் நோக்கில் எதிரே சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். இந்த லிங்க வடிவம், காமகோடீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது.
காஞ்சி மஹா ஸ்வாமிகள், அன்னை பராசக்தியை உள்ளம் நெகிழ்ந்து வர்ணித்துச் சொல்லி மகிழ்கிறார்: ‘‘சிவபெருங்கோணமாம் நான்கு முக்கோணங்களும், சிற்பரையான ஸ்ரீபராசக்தியின் கோணங்களான ஐந்து பெருங்கோணங்களும் இணைய, நவகோணமாக விரிந்த ஸ்ரீலலிதா மஹா திரிபுரசுந்தரியின் ஸ்ரீசக்ர வடிவாகவே திருக்குற்றால தரணிபீட காமாக்ஷி ஒளிர்கிறாள்.’’
இந்தப் பராசக்தியின் தோற்றம் எப்படி இருக்கிறதாம்?
‘‘ ‘பிந்து த்ரிகோண வஸுகோண தசாரயுக்ம மன்வச்ர நாகதல ஸம்யுத ஷோடசாரம் வ்ருத்தத்ரயம் ச தரணீஸ்தனத்ரயம் ச ஸ்ரீசக்ரமேத துதிதம் பரதேவதயா’ என்ற சம்ஸ்கிருத ஸ்லோகத்தில் சொல்லியிருப்பது போல நவகோணங்களுக்கு மேல், எட்டு இதழ்கள் கொண்ட தாமரையும், அதன்மேல் பதினாறு இதழ்கள் கொண்ட கமலமும், அதற்கும் மேலே மூன்று வளையங்களும், இன்னும் மேலே மூன்றுக் கோட்டுப் பூபுரமும் ஆக ஒன்பது ஆவரணங்கள் சூழ தானாகத் தோன்றிய தரணி மஹாபீடத்தில் ‘ஸ்ரீபராசக்தி’ எனும் நாமத்துடன் மஹாயோக பீடத்திலே
ஸ்ரீலலிதாம்பிகை என்ற ஸ்ரீமஹா த்ரிபுரஸுந்தரி ஒளிர்கிறாள்.’’
பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரையும் ஒவ்வொரு கற்பந்தோறும் ஈன்றெடுக்கும் இந்தப் பராசக்தி வீற்றிருப்பதால் திரிகூடம் என்றே இந்த க்ஷேத்திரத்துக்குப் பெயர்.
அதனாலேயே ஆதிசக்தியான அம்பாளுக்கும் திரிகூடப் பராசக்தி என்றே திருநாமம்.
பராசக்தியின் மந்த்ர பீஜாக்ஷரங்கள்
கர்பிதமான ஸ்ரீமேரு வடிவிலேயே அம்பாளின் ஸ்வரூபம் அமைந்துள்ளது. கற்பந்தோறும் மும்மூர்த்திகளை ஈன்றெடுக்கும் ஸ்ரீலலிதாம்பாள், திரிகூட க்ஷேத்திரத்தில் தொட்டிலில் இட்டு அந்த மும்மூர்த்திகளை தாலாட்டிய ‘தாணுமாலயன் பூந்தொட்டில்’ திருக்குற்றாலத்தின் பெருஞ்சிறப்பாக விளங்குகிறது.
முகிண்முலை ஆதிசக்தி
மூவரைப் பயந்ததாலும்
திகழு மூவிசேடத்தாலும்
திரிகூடமென்னும் நாமம்
நிகழ்வது தவத்துக்குகந்த
நி மலை சந்நிதிக்கு
செகமெலாந் தொழநின்றாடுந்
தாணுமாலயப் பூந்தொட்டில்
- என்று பாடி மகிழ்கிறார் திரிகூடராசப்பக் கவிராயர்.
தாணுமாலயனாகிய மூவரை ஈன்று, தொட்டிலிலிட்டு ஆட்டிய பராசக்தி அங்கே நவகோண வாஸினியான ஸ்ரீவித்யா பரமேச்வரியாகவே விளங்குகிறாள்.
‘‘மூன்று மஹாசக்திகளின் வடிவில் திரிகூடமான குற்றாலத்தில் அம்மை பொலிவது திரிகூடத்தின் பெருமையைக் காட்டுகிறது.
மஹாசண்டிகையாக, பதினெட்டு கரங்களில் பதினெட்டு ஆயுதந்தாங்கி, அரக்கன் உதும்ப்ரனை ஸம்ஹரித்து ஸித்தவனமான செண்பக வனத்தில் ஸ்ரீசக்ர பீடத்தில் ‘ஸ்ரீசெண்பகா தேவி’ என செண்பகப் பூங்கோதை பிரகாசமாக விளங்குகிறாள். ’’கோயில் பிராகாரத்தில் காணப்படும் முருகன் சந்நதி குறிப்பிடத்தக்கது. இங்கே வள்ளி, தெய்வானையுடன் அருள்புரிகிறார் குமரன். இந்த சந்நதியில் வள்ளியும், தெய்வானையும் ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் பார்த்துக் கொள்வது போல சிற்பங்கள் அமைந்திருப்பது வித்தியாசமாகவே தோன்றுகிறது.
இதேபோல மூலவர் சந்நதிக்கு முன்னால் இருக்கும் துவார பாலகர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடியே நின்றிருக்கிறார்கள். ‘அகத்தியர் நேற்று வந்தாரா?’ என்று ஒருவர் கேட்பதாகவும், ‘அவர் வரவில்லை’ என்று அடுத்தவர் பதிலளிப்பதுமாக, இந்தத் தோற்றத்துக்கு வேடிக்கையான விளக்கம் அளிக்கிறார்கள். திருமாலைக் குறுக்கி திரிபுரம் எரித்தவனாக மாற்றியது போல எங்கே தங்களையும் அகத்தியர் குறுக்கி விடுவாரோ என்ற அச்சம் போலிருக்கிறது!
பிராகாரத்தில் ‘மணக்கோல நாதர்‘ அருள்புரிகிறார். கயிலையில் அம்பிகையை மணமுடித்தாரே, அந்தக் காட்சியை இங்கே அகத்தியருக்குக் காட்டுவதற்காக மேற்கொண்ட கோலம் இது. அதனாலேயே இவருக்கு அந்தப் பெயர். இந்தக் கோயிலில் நடைபெற்ற அந்தத் திருமணத்தை பிரம்மன், மஹாவிஷ்ணு, மஹாலக்ஷ்மி ஆகியோர் நடத்தி வைப்பதாகவும், அந்தத் திருக்காட்சியை அகத்தியரும், பிருங்கி முனிவரும் கண்டு களிப்பதாகவும் விளக்கும் கவினுறு சிற்பத் தொகுதி ஒன்று அமைந்திருக்கிறது.
வயது காலத்தில் நடைபெற வேண்டிய திருமணம் என்ன காரணத்தாலோ தள்ளிப் போட்டுக் கொண்டே போவதால்,வருத்தமுறும் பக்தர்கள் இந்த சந்நதிக்கு வந்து, இந்த ஏழு மூர்த்திகளையும் தரிசித்து, அவர்கள் அனைவருக்கும் பன்னீர் மற்றும் மஞ்சள் அபிஷேகம் செய்து, மணமிகு மாலையை அணிவித்து அர்ச்சனை செய்கிறார்கள். கூடவே பாயச நிவேதனமும் செய்து வளமான திருமணத்தை நிறைவேற்றி வைக்குமாறு வேண்டிக் கொள்கிறார்கள். தம் கோரிக்கை நிறைவேறியவர்கள், மீண்டும் இந்த சந்நதிக்கு வந்து அபிஷேகமும், அர்ச்சனையும் செய்து நன்றிக் கடனைச் செலுத்துகிறார்கள்.
மனநலம் பிறழ்ந்தவர்களும், சரும நோயால் பாதிக்கப்பட்டவர்களும் குற்றால அருவியில் நீராடி உபாதையின் தாக்கம் தணியப் பெறுகிறார்கள். முக்கியமாக, தீராத தலைவலி, குறிப்பாக ஒற்றைத் தலைவலி பிரச்னை உள்ளவர்கள், இக்கோயிலில் தரப்படும் தைல பிரசாதத்தைப் பெற்று தினமும் தலையில் தடவிக் கொண்டு வந்தால், அந்தப் பிரச்னையும் எளிதாக விலகுகிறது என்கிறார்கள்.
சிவபெருமானுக்கே இந்தத் தலைவலி இருந்ததாம். அதாவது, அகத்தியர் தன் கையால் அழுத்தி லிங்கமாக உருமாற்றினாரல்லவா, அப்போது ஏற்பட்டதாம். இந்தத் தலைவலி போக, ஈசனுக்கு தினமும் காலை 9.30 மணி பூஜையில், லிங்கத்தின் தலை மீது தைலம் தடவுகின்றனர்.
பசும்பால், சந்தனம், இளநீர் மற்றும் 42 வகை மூலிகைகளைச் சேர்த்து 90 நாட்களுக்கு வேகவைத்து, இத்துடன் செக்கில் ஆட்டி எடுத்த தூய நல்லெண்ணெயையும் சேர்த்து தைலத்தைத் தயாரிக்கிறார்கள். இந்தத் தைலமே பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தக் கோயிலில் திருமாலுக்கும் தனி சந்நதி அமைந்துள்ளது. இவரை ‘நன்னகரப் பெருமாள்’ என்று பக்தியுடன் அழைக்கிறார்கள். தன்னை வணங்கும் பக்தர்களுக்கு நன்மைகள் பலவற்றை வாரி வழங்கும் அருளாளர் என்பதால் இவருக்கு இந்தப் பெயர். இதே சந்நதியில் அழகுமிகு கிருஷ்ணரையும் தரிசிக்கலாம்.
கோயிலின் தலவிருட்சம் பலா மரம். இதைச் சுற்றி உள்ள மேடை அமைப்பில் ‘ஆதிகுறும்பலநாதர்’ என்ற ஈசன் பீட வடிவில் எழுந்தருளியுள்ளார். குறிப்பிட்ட சீசன் என்றில்லாமல், எல்லா நாளும் இந்த மரத்தில் பலாக்காய்கள் காய்ப்பது விசேஷமானது. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், இந்த பலாக்காயை பிளந்தால், ஒவ்வொரு சுளையும் சிவலிங்க வடிவில் இருப்பதுதான்! சற்றுத் தொலைவில் முதிய பலாமரம் ஒன்றும் காணப்படுகிறது. பல்லாண்டு வயதுடைய இந்த மரத்தை சிவபெருமானாகவே பக்தர்கள் பாவிக்கிறார்கள். இதற்கு நிவேதனப் பொருட்களை சமர்ப்பித்து, தீபாராதனை காட்டி வணங்குகிறார்கள்.
இந்தக் கோயிலின் அமைப்பே வித்தியாசமாக இருக்கிறது. வழக்கமான சதுர, செவ்வக வடிவாக இல்லாமல் ஒரு சங்கு போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது. அதாவது, ஆதி திருமாலின் அம்சம்.
சிவபெருமான் நடனமாடிய ஐந்து சபைகளில் ஒன்றான சித்திர சபை இதே தலத்தில் அமைந்துள்ளது. இச்சபையில் பொலிவு மிக்க சுவர் ஓவியங்களைக் காணலாம். இவற்றில் ஈசன் - அம்பிகை திருமண காட்சியோடு, மஹாவிஷ்ணுவின் அனந்தசயனக் கோலம் மற்றும் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் இரண்டிலும் இடம் பெறும் சில காட்சிகள், தத்ரூபமாக ஓவியப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தத் திருக்கோயிலில் ஆடி அமாவாசை அன்று லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. இதனை பத்ரதீபத் திருவிழா என்று அழைக்கிறார்கள். நவராத்திரி கொண்டாட்டம் இங்கே பராசக்திக்கான பத்து நாள் திருவிழாவாக அனுசரிக்கப்படுகிறது. ஐப்பசி மற்றும் பங்குனி மாதங்களில் பிரம்மோற்சவம் காண்கிறது இத்திருத்தலம். அதேபோல மார்கழி மாதத்து திருவாதிரை நட்சத்திரம், தை மாத மக நட்சத்திர நாட்களில் தெப்போற்சவம் கண்கொள்ளா காட்சியாகப் பொலிகிறது.
ப்ரபுசங்கர்

