புரட்டாசி வந்து விட்டாலே, வேங்கடவன் மனதில் விரும்பி வந்து அமர்ந்து விடுவான். ‘‘திருப்பதி சென்று திரும்பி வந்தால், திருப்பம் நேருமடா, உந்தன் விருப்பம் கூடுமடா’’ என்று பல ஆண்டுகளுக்கு முன்னால், கவியரசு கண்ணதாசன், தன்னுடைய சொந்த அனுபவமாக, திருப்பதி வேங்கடவனின் பெருமையை, ஒரு திரைப்படப் பாடலில் பாமரனுக்கும் புரியும் படியாகப் பாடினார். லட்சக்கணக்கான மக்களின் அனுபவமும் உண்டு. அந்த வேங்கடவனின் எல்லையற்ற மகிமைகளையும் புரட்டாசியின் பெருமைகளையும் கொஞ்சம் பார்ப்போம் வாருங்கள்.
வேங்கடாத்ரி
திருமலைக்கு பல திருநாமங்கள் உண்டு. வேங்கடாத்ரி, வ்ருஷபாத்ரி, அஞ்சனாத்திரி, நாராயணாத்ரி, சேஷாத்திரி. இந்தப் பெயர்கள் ஒவ்வொரு யுகத்திலும் நடந்த ஒரு நிகழ்ச்சியின் காரணமாக அமைந்த பெயர்கள். திருமலைக்கு வேங்கடாத்ரி என்று பெயர் எப்படி அமைந்தது? பொருள் என்ன?
‘‘வேங்கடம் ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே’’ என்பது ஆழ்வார் பாசுரம். இது மூன்று சொற்கள் கூடியது. வேம்+கடம்+அத்ரி = வேங்கடாத்ரி. கடம் என்றால் வினைகள், பாவங்கள். வேம் என்றால் எரிக்கக் கூடியது. வினைகளை. பாவங்களை எரிக்கக் கூடிய சக்திவாய்ந்த மலை வேங்கடாத்ரி. (அத்ரி என்றால் மலை).
கருடாத்ரி
ஒரு காலத்தில் மகா பிரளயம் ஏற்பட்டு, உலகம் முழுவதும் கடல் நீரின் அடியில் மூழ்கி விட்டது. இரண்யாட்சன் என்ற அசுரன், பூமியை எடுத்துக் கொண்டு போய் மறைத்து வைத்து விட்டான். அப்போது பெருமாள் வராக அவதாரம் எடுத்து, இரணியாட்சனுடன் போர் புரிந்து, பூமியை மீட்டு வெளிக் கொணர்ந்தார். பூமாதேவிக்கு எந்தத் தொந்தரவும் வராமல் காக்க வேண்டும் என்று நினைத்தார். அதற்காக கருடனை அழைத்து வைகுண்டத்திற்குச் சென்று ஒரு மலையை எடுத்து வரும்படியாக உத்தர விட்டார். கருடாழ்வார் உடனடியாக வைகுந்தத்தில் இருந்து வண்ண மயமான ஒரு பொன்மலையை எடுத்துக்கொண்டு வந்து இங்கு வைத்தார். பெருமாள், அந்த திருமலையின் மீது ஏறி, திருக்குளத்தின் கரையில் எழுந்தருளினார். அப்படி கருடனால் கொண்டுவரப்பட்ட மலைக்கு கரு டாத்ரி என்று பெயர். இத்தலம் வேங்கடவன் சன்னதியாக இருந்தாலும் ஆதியில் இது “வராகத் திருத்தலம்”.
விருஷபாத்ரி
ஒரு காலத்திலே வ்ருபாசூரன் என்ற அசுரன் இருந்தான். அவன் பகவானை நோக்கி கடும் தவம் இருந்தான். தினசரி புஷ்பம் சமர்ப்பிக்கும் போது, தன்னுடைய தலையையும் வெட்டி சமர்ப்பித்து வந்தான். பெருமாள் அவனுடைய தலை, உடனடியாக, புதிதாக முளைக்கும் படியாக வரம் அளித்தார். ஆயினும் இவன் விடாமல் ஏதோ ஒரு நோக்கத்திற்காக செய்து வருகின்றான் என்று தெரிந்தவுடன், ‘‘என்ன காரணத்திற்காக தவம் செய்கிறாய்?’’ என்று கேட்க, அசுரன் சொன்னான்.
‘‘வெகு நாட்களாக போர் செய்ய முடியாததால் என் தோள்கள் தினவெடுக்கின்றன. எனவே நீங்கள் என்னோடு போர் செய்ய வேண்டும். என்னுடைய போர் ஆசையைத் தணிக்க வேண்டும்” என்று பேராசையை வெளியிட்டான். பகவானும் வேறுவழியின்றி, அவனோடு வெகுகாலம் போர் புரிந்தார். அவன் ஆசை தீர்ந்தபோது, முடிவில் பிரார்த்தனை செய்தான்.
‘‘பகவானே! நாம் சண்டையிட்ட இந்த மலையில், தாங்கள் என்றைக்கும் இருந்து மக்களுக்கு அருள் புரிய வேண்டும். இந்த மலை என்னு டைய பெயரில் வழங்கவேண்டும்.’’ என்று கேட்டான்.அன்றிலிருந்து இந்த குன்றுக்கு “விருஷபாத்திரி” என்று பெயர் ஏற்பட்டது.
அஞ்சனாத்ரி
கேசரி என்பவன் சிவபெருமானைக் குறித்து தவம் செய்தான். அந்த தவத்தின் பயனால் அவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தப் பெண் குழந்தைக்கு அஞ்சனை என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். அந்த அஞ்சனை மிகவும் பக்தி மிக்கவள். திருமலையில் ஆகாச கங்கை என்ற புனித தீர்த்தக் கரையில் வெகுகாலம் தவமிருந்தாள். உண்ணாது உறங்காது அவள் தவம் இருக்கும் பொழுது, அவள் மீது பரிவு கொண்ட வாயு பகவான், அவளுக்கு தினசரி ஒரு பழத்தை பிரசாதமாகக் கொடுத்தான். அந்தப் பழத்தின் சக்தியினால் அஞ்சனாவுக்கு ஒரு ஆண் குழந்தை வானர வடிவில் பிறந்தது. மிகுந்த சக்தி வாய்ந்த அந்தக் குழந்தை அப்போது உதயமாகிக் கொண்டிருந்த சூரியனை, சிவந்த பழமாகக் கருதி உண்ணுவதற்கு சென்றது. அப்பொழுது தேவர்கள் பிரம்ம தேவனிடம் முறையிட, பிரம்மதேவன் தனது தண்டத்தால் அக்குழந்தையின் தலையில் தட்ட, அது மூர்ச்சித்து விழுந்தது. தாயான அஞ்சனாதேவி பதறி, பிரம்மனைக் குறித்து தவம் செய்ய, பிரம்மன் அக்குழந்தையை ஆசீர்வதித்து, பெரும் புகழ் பெறும் சிரஞ்சீவியாக இருப்பான் என்று வரமளித்தார். திருமலையில் அஞ்சனா தேவி தவம் செய்து, வாயுபுத்திரன் அனுமன் பிறந்ததால் “அஞ்சநாத்ரி” என்று பெயர் வழங்கலாயிற்று.
நாராயணாத்ரி
நாராயண முனிவர் என்றொரு முனிவர் இருந்தார். அவர் வெகு காலம் தவம் இருந்தார். பிரம்ம தேவன் அவர் முன்தோன்றி அவர் தவத்துக்கு காரணம் கேட்டார். தான் விஷ்ணு பகவானை தரிசிக்க வேண்டும் என்று சொல்ல, “அப்படியானால் நீ திருமலைக்குச் சென்று தவமியற்று” என்று சொல்லி, பிரம்மன் மறைந்தார். அவரும் திருமலைக்கு வந்து வெகுநாட்கள் தவம் இயற்றினார். முனிவரின் தவத்திற்கு இரங்கிய பகவான், அவர் முன்தோன்றி, அவருக்கு முக்தி வரம் அளித்ததோடு, அவர் தவம் செய்த மலை அவருடைய திருநாமத்தால் “நாராயணாத்ரி” என்று வழங்கப்படும் என்ற வரமும் அளித்தார். பகவான் ஸ்ரீமன் நாராயணன் நிரந்தரமாக தங்கி அருள் தரும் மலை என்பதாலும் நாராயணாத்ரி என்ற பெயர் பொருந்தும்.
சேஷாத்திரி
என்னதான் விஷ்ணுவினுடைய பக்தர்களாக இருந்தாலும் கூட, அவர்களுக்கும் சில நேரத்தில் கர்வம் வந்து விடுவது உண்டு. சில திருவிளையாடல்களின் மூலமாக பகவான் அந்த கர்வத்தை நீக்கி உணர வைத்து, அவர்களுக்கு உரிய புகழையும், திருவிளையாடலின் மூலம் உறுதிப்படுத்துவது உண்டு.
அந்த வகையில் ஒருமுறை ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும், ‘‘நீ பெரியவனா, நான் பெரியவனா?’’ என்கின்ற சண்டை வந்துவிட்டது. வைகுந்தத்தில் இருந்த ஒரு மலைச் சிகரத்தை ஆதிசேஷன் இறுக்கிப் பிடித்துக் கொள்ளவேண்டும். வாயு அதை அசைத்து விட வேண்டும். யாருடைய முயற்சி வெற்றி பெறுகிறதோ, அவர்களே வென்றவர்கள் என்று முடிவாயிற்று. பகவான் தன் அன்பனான ஆதிசேஷனுக்கு தற்காலிகமாக வந்திருக்கக்கூடிய கர்வத்தையும் அழிக்க வேண்டும். அதே சமயம் அவனுடைய பெருமைக்கும் எந்தக் குறையும் வந்து விடக் கூடாது என்பதற்காக, திருவிளையாடலை நடத்தினார்.
ஆதிசேஷன் ஒரு மலையை இறுக்கமாக பிடித்துக் கொள்ள, வாயு பகவான் அதை அசைக்க முயன்று முடியாமல் போகவே பகவானிடம் பிரார்த்தனை செய்ய, பகவான் நாரதர் மூலம் ஆதிசேஷனுக்கு ஒரு போக்கு காட்ட, அந்த இடைவெளியில், வாயுபகவான் ஆதிசேஷனோடு, மலையைத் தூக்கி பூலோகத்தில் போட்டார். அந்த மலை விழுந்த இடம் தான் திருமலை. இது ஒரு காலத்தில் வைகுந்தத்தில் இருந்தது. ஆதிசேஷன் சுற்றிய மலை என்பதால் இதற்கு சேஷாசலம் அல்லது சேஷாத்திரி என்று பெயர். திருமலையப்பனுக்கும் சேஷாத்திரி என்ற பெயர் உண்டு.
பலப்பல பெயர்கள்
திருமலைக்கு பலப்பல பெயர்கள் உண்டு. பக்தர்களின் எண்ணங்களை ஈடேற்றுவார் என்பதால் “சிகாமணி” என்று பெயர். ஞானத்தை அளிப்பார் என்பதால் ஞானாத்திரி என்று பெயர். சகல புண்ணிய தீர்த்தங்களும், இத்திருத் தலத்தில் நூற்றுக்கணக்கில் இருப்பதால் “தீர்த்தநாத்திரி” என்று பெயர். தங்க மயமாக சிகரங்கள் இருப்பதால் கனகாத்திரி என்று பெயர். ஒரு காலத்தில் நரசிம்ம அவதாரம் எடுக்க பகவான் அவதரித்ததால் நரசிம்மாத்திரி என்று பெயர். வைகுண்டத்தில் இருந்து திருமலை இங்கே வந்து இருப்பதால் வைகுண்டாத்திரி என்றும் பெயருண்டு. அகலகில்லேன் இறையுமென்று, மகாலட்சுமி தாயார், மாலவன் மார்பில் ஒரு நொடியும் பிரியாமல் உறைவதால், திருமகள் வாழும் இதயத்தை கொண்ட பகவான் அருள் புரியும் இடம் என்ற பொருளில், “ ஸ்ரீநிவாசம்” என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு.
ஆசிகளைப் புரட்டித் தரும் புரட்டாசி
தட்சிணாயன காலம் என்பதால், தென்புலத்தார் வழிபாட்டுக்கு உரிய மாதமாகவும், இரவில் தேவர்கள் இறைவனை வழிபடும் மாதமாகவும் சாஸ்திரத்தில், புரட்டாசி மாதத்தின் பெருமை சொல்லப்பட்டிருக்கிறது. புரட்டாசியில் வரும் மஹாளய பட்ச காலத்தில் நமது முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து வழிபாடுகள் நடத்துவது, பித்ரு தோஷங்களை நீக்கி வம்சத்திற்கு வழிகாட்டும் முன்னோர்களின் பூரண ஆசியைப் பெற்றுத் தரும். அம்பிகையின் அருளைப் பெறுகின்ற நவராத்திரி திருவிழாவும் இந்த மாதத்திலேயே தொடங்கி வீடுகளிலும் ஆலயங்களிலும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. திருப்பதி திருவேங்கடவன் கோவில் உள்ளிட்ட பல திவ்ய தேசங்களிலும், பெருமாள் திருக்கோயில்களிலும் பிரம்மோற்சவம் நடைபெறும் புண்ணிய மாதம் இதுவாகும். முதலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பைப் பார்ப்போம்.
புரட்டாசி சனிக்கிழமை விரதம்
சனி தோஷங்களின் தாக்கம் குறையவும், பெருமாளின் பூரண அருளைப் பெறவும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் மிகவும் உகந்தது. இந்நாளில் அதிகாலையில் நீராடி, பூஜையறையில் கோலம் போட்டு விளக்கேற்றி, பெருமாள் தாயார் படத்திற்கு துளசி மாலை அணிவித்து, நாள் முழுவதும் உபவாசம் இருந்து பெருமாளை வழிபட வேண்டும். ‘‘சனியைப் போல் கொடுப்பவனும் இல்லை, கோவிந்தனைப் போல் காப்பவனும் இல்லை” என்ற பழமொழிக்கேற்ப, புரட்டாசி சனியன்று விரதமிருந்து நாமசங்கீர்த்தனம் செய்வதால் குடும்பத்தில் பிணக்குகள் நீங்கி, நோய்நொடிகள் அகன்று, செல்வம் பெருகிடும்
உணவுக் கட்டுப்பாடு
புரட்டாசி மாதம் முழுவதுமே அசைவ உணவைத் தவிர்த்து சுத்த சைவ உணவை மட்டுமே உண்பது தென் இந்திய பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றிய ஒன்றாகும். வழக்கமாக அசைவ உணவை விரும்பும் குடும்பங்கள் கூட, இம்மாதம் முழுவதும் அசைவத்தைத் தொடுவதில்லை. புரட்டாசி என்பது ‘வர்ஷருது’ எனப்படும் மழைக்காலத்தின் தொடக்கமாகும். இக்காலத்தில் பூமி குளிர்ந்து, மனித உடலில் செரிமான சக்தி (ஜடராக்னி) சற்று குறையும். எனவே, செரிக்கக் கடினமான அசைவ உணவுகளைத் தவிர்த்து, லேசான சைவ உணவுகளையும், பெருமாள் பிரசாதமான சுண்டல், துளசி தீர்த்தம், பருப்பு சாதம் போன்றவற்றை உண்பது உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தைத் தரும். ஒருமாதம் முழுவதும் அசைவத்தைத் தவிர்ப்பது என்பது புலனடக்கத்தையும், உடலையும் மனதையும் தூய்மைப்படுத்தும் நோன்பாகவும் கருதப்படுகிறது. இறை வழிபாடு, முன்னோர்களின் ஆசி, ஆரோக்கியமான வாழ்வியல் முறை என அனைத்து நன்மைகளும் இணையும் மாதம் இப்புரட்டாசி மாதம்.
புரட்டாசியும் கோவிந்தனும்
‘கோவிந்தா’ என்னும் திருநாமம் விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் 187-வது நாமமாகவும், விஷ்ணுவின் பன்னிரு முக்கிய திருநாமங்களில் (துவாதச நாமங்கள்) நான்காவது நாமமாகவும் திகழ்கிறது. பாற்கடலைக் கடைந்த போது எழுந்த அமுதத்தை தேவர்களுக்கு வழங்கி, உலகைக் காத்த எம்பெருமான் பூலோகத்தில் வேங்கடவனாக அவதரித்த மாதம் இதுவே. ‘‘கோவிந்தா” என்ற சொல்லுக்கு ‘பசுக்களைக் காப்பவன்’, ‘வேதங்களால் அறியப்படுபவன்’ மற்றும் ‘துன்பப்படும் ஆத்மாக்களைக் கரைசேர்ப்பவன்’ என்று பல பொருள்கள் உண்டு. கோவிந்த நாமத்தில் பத்து அவதாரமும் உண்டு.புரட்டாசி மாதத்தில் கோவிந்த நாமம் சொல்லி வழிபடும்போது, நம் மனதிலுள்ள அகந்தை அழிந்து பக்தியும் அமைதியும் பெருகுகிறது.
கோவிந்தா கோவிந்தா
சமஸ்கிருதத்தில் ‘கோ’ என்னும் சொல்லிற்குப் பல ஆழ்ந்த பொருள்கள் உண்டு. வேதங்களால் அறியப்படுபவன் கோவிந்தன். ‘கோ’ என்றால் மறைநூல்களான வேதங்கள்; ‘விந்த’ என்றால் அறிதல் அல்லது அடைதல். வேத வாக்கியங்களாலும், உபநிடதத் தத்துவங்களாலும் உணரப்படும் பரம்பொருள் கோவிந்தன்.. புலன்களை அடக்குபவன் என்ற பொருளும் உண்டு. ‘கோ’ என்றால் மனிதனின் இந்திரியங்கள் (ஞானேந்திரியங் கள்/புலன்கள்). நமது புலன்களைத் தன் வசப்படுத்தி, மனதைக் கட்டுப்படுத்தும் பேராற்றல் கொண்ட இறைவன் ‘கோவிந்தன்’ எனப்படுகிறான். கோவிந்தன் வாக்கிற்கு அதிபதி: ‘கோ’ என்றால் சொல் அல்லது வாக்கு. மனிதனுக்குப் பேசும் சக்தியையும் சற்குணங்களையும் அருளும் நாயகன் கோவிந்தன்.
கோவிந்த பட்டாபிஷேகம்
பல்வேறு புராண நிகழ்வுகளில் பகவான் ஆற்றிய அற்புத லீலைகளின் மூலமாக கோவிந்த திருநாமம் நிலைபெற்றது. இந்திரனின் அகந்தையை அடக்கக் கண்ணன் கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்து, ஆயர்பாடியையும் பசுக்களையும் பெருமழையிலிருந்து காத்தார். இதன்பின் தன் தவறை உணர்ந்த இந்திரன், காமதேனுவுடன் வந்து கண்ணனுக்குத் திவ்ய அபிஷேகம் செய்து, ‘‘பசுக்களையும் உலக உயிர்களையும் காக்கும் தலைவன்” என்ற பொருளில் ‘கோவிந்த பட்டாபிஷேகம்’ செய்து இத்திருநாமத்தைச் சூட்டினான் என்கிறது பாகவதம். வராஹ அவதாரம் (பூமி மீட்டல்) என்பது கோவிந்த நாம மகிமையைச் சொல்லும் அவதாரம்தான்... ‘கோ’ என்றால் பூமி. பிரளயக் கடலில் மூழ்கிய பூமா தேவியை வராஹ மூர்த்தியாக அவதரித்து மீட்டெடுத்ததால், மகாபாரத சாந்தி பருவத்தின்படி பகவானுக்கு கோவிந்தன் என்று பெயர் அமைந்தது. மத்ஸ்ய அவதாரமும் கோவிந்த நாம பெருமையைத்தான் சொல்லுகிறது. அசுரனால் மறைக்கப்பட்ட வேதங்களை (‘கோ’) மீட்டுத் தந்தவன் என்பதால் ‘கோவிந்தன்’ என்று போற்றப்படுகிறான்.
ஏழு மலை ஏன் சுமக்கிறது?
நம்மாழ்வார்
“குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான், பரன்
சென்று சேர்திரு வேங்கட மாமலை,
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே” என்று பாசுரம் பாடி இருக்கிறார்.
இதில் திருவிக்கிரம அவதாரத்தையும், கிருஷ்ண அவதாரத்தில் கோவர்த்தன கிரியைத் தூக்கி குடை பிடித்து ஆயர்களைக் காப்பாற்றிய வரலாறும் சொல்லி, அவன் விரும்பி வந்து நின்ற மலை என்பதால், அந்த மலையை வணங்கினாலே உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் என்கிறார்.
அதில் கிருஷ்ணாவதாரத்தில் மலையை ஏழு நாட்கள் தன்னுடைய விரலால் அவன் சுமந்து கொண்டு இருந்தான்.
அந்த மலை தான் இங்கே ஏழு மலைகளாக மாறி, எம்பெருமானை நன்றி கடனாகச் சுமந்து கொண்டிருக்கிறது என்று பல பெரியவர்களும் சொல்கிறார்கள்.
இன்னொரு கோணமும் இருக்கிறது.
பகவானிடம் ஒரு பழக்கம் உண்டு. நாம் ஒரு மடங்கு வைத்தால், அவன் உடனடியாக ஒன்பது மடங்கு வைப்பான். இராமாவதாரத்தில் தம்பியாக பிறந்து, வாழ்நாள் முழுவதும் தன்னுடைய வாழ்க்கையைக் கூட தியாகம் செய்து சேவை செய்த லட்சுமணனுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே, கிருஷ்ணாவதாரத்தில் தனக்கு அண்ணனாக பலராமனை பிறக்க வைத்து, “மூத்த நம்பி” என்று பெயர் கொடுத்து, கைங்கரியம் செய்து மகிழ்ந்தான் பகவான்.
அதாவது “நம்முடைய செயல், அவனுடைய எதிர் செயல்” (Reaction to action) என்பதாகவே அமைந்திருப்பதை கணித்தால், தன்னைத் தாங்கிய மலையை, கிருஷ்ணாவதாரத்தில் ஏழு நாட்கள் தூக்கிக் கொண்டான் என்பதுதான் இன்னும் பொருத்தமாக இருக்கும்.
காரணம் கோவர்த்தனகிரியை குடையாக எடுத்தது கிருஷ்ணாவதாரத்தில். ஆனால் அதற்கு முன், வராக அவதாரகாலத்திலிருந்தே, திருமலை எம்பெருமானைச் சுமந்து ஆனந்தமடைந்தது.
“தன்னைத் தாங்கிய மலையைத் தான் தாங்கினான்” என்பது இன்னமும் பொருத்தமாக இருக்கும்,
திருமலைக்கு செல்ல நினைத்தால் என்ன செய்ய வேண்டும்?
திருமங்கையாழ்வார் திருவேங்கடத்தில், பாசுரம் பாடுகின்ற பொழுது வித்தி யாசமாகச் சிந்திக்கின்றார். எத்தனையோ ஆயிரக்கணக்கான மக்கள், இந்த நாட்டில் இருந்தாலும், எல்லோரும் திருமலையைச் சென்று சேவிப்பது இல்லையே!
தனக்கு மட்டும் எப்படி இந்த ஆர்வம் வந்தது என்பதை சிந்தித்த, திருமங்கையாழ்வார் இப்படி பாசுரம் பாடுகிறார்.
கொங்கலர்ந்த மலர் குருந்தம் ஒசித்த கோவலன் எம்பிரான்
சங்கு தங்கு தடங்கடல் துயில் கொண்ட தாமரைக் கண்ணினன்
பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் தம்மிடம் பொங்கு நீர்ச்
செங்கயல் திளைக்கும் சுனைத் திரு வேங்கடம் அடை நெஞ்சமே
ஒருவன் திருமலைக்கு செல்ல வேண்டும் என்று நெஞ்சார நினைத்தால் ஒழிய அந்த பாக்கியம் கிடைப்பது இல்லை.
முயற்சியால் மட்டும் நடப்பது இல்லை என்று சொல்லி, இப்பதிகம் முழுக்க, தன்னுடைய நெஞ்சிற்கு அறிவுரை சொல்லுகின்றார். “நெஞ்சகமே! அங்கு செல்ல வேண்டும் என்று நினை! நெஞ்சார நினைத்தால் தான் போகலாம். உன் ஒத்துழைப்பு இன்றிப் போக முடியாது.”
பலர் திருமலை செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். ஏதோ ஒரு தடை வரும். ஆனால், அதே நேரத்தில் நினைத்த நேரத்தில் சென்று தரிசனம் செய்து விட்டு வருகின்ற அன்பர்களும் இருக்கின்றார்கள். இந்த உளவியலை பல்லாண்டுகளுக்கு முன்னர் பாசுரத்தில் திருமங்கை ஆழ்வார் பாடி இருக்கிறார் என்பதுதான் வியப்பு.
அவன் அருளை எதிர்பாருங்கள்
சென்னியோங்கு தண் திருவேங்கட முடையாய்! உலகு
தன்னைவாழ நின்ற நம்பீ! தாமோதரா! சதிரா! என்னையும்
என்னுடைமையையும் உன் சக்கரப்பொறியொற்றிக்கொண்டு
நின்னருளே புரிந்திருந்தேன் இனிஎன் திருக்குறிப்பே,
என்பது பெரியாழ்வார் பாசுரம்.
பயிர்களுக்கு உயிரானது மழை. இந்த மழை வருமா வராதா என்பதை விவசாயி அண்ணாந்து பார்த்து, மேகங்கள் திரண்டு இருக்கிறதா? திரண்ட மேகங்கள் கருத்து இருக்கிறதா? கருத்த மேகங்கள் மறுபடியும் குளிர்ச்சியுடன் இருக்கிறதா? என்று நோக்குவான்.
அந்த விவசாயி போலவே, ஒருபக்தனும் எம்பெருமானுடைய அருளை நோக்கவேண்டும். அவனை அண்ணாந்து பார்க்க வேண்டும். அப்படி அண்ணாந்து பார்க்கக் கூடிய உயர்ந்த மலையில் இருப்பவன் திருவேங்கடவன்.
பெரியாழ்வார் மழையை எதிர் பார்ப்பது போலவே ‘‘நின் அருளை நான் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்\” என்று பாசுரத்தில் பாடுகின்றார். இங்கே மக்களும் திருவேங்கடவனின் திருவருளை எதிர்பார்த்து அவருடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுதும் பக்தர்கள் தலையை தூக்கி அண்ணாந்து பார்த்து “கோவிந்தா, கோவிந்தா” என்று கோஷம் எழுப்பி வணங்குவதை இப்பாடளோடு இணைத்து பாருங்கள்.


