Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும் என்பர்..! ஆனால், அதிர்ஷ்டம் பிறக்குமா...?

இது வரையில் "கல்வி கிரகம்", எனப் பூஜிக்கப்படும், புதனின் ஆட்சி வீடான, மிதுனத்தில் சஞ்சரித்துவந்த சூரிய பகவான், இம்மாதத்தில் சந்திரனின் ராசியான, கடகத்தில் வலம் வருகிறார். சூரியனை, "சரீர காரகர்" எனவும், சந்திரனை, "மனோகாரகர்" எனவும், ஜோதிடக் கலைப் போற்றிப் புகழ்கிறது. அதாவது, மனிதப் பிறவியின் சரீரத்திற்கு மூலமாகத் திகழ்வது சூரியனே ஆவார். மனத்திற்கு ஆதாரமாக விளங்குவது சந்திரனாவார். அதாவது, சந்திரனே மனோகாரகராக போற்றப்படுகிறார். சிந்தனைத் திறன், கிரகிப்புத் திறன், நினைவாற்றல் ஆகியவற்றைத் தந்தருள்வது, சந்திரன் கிரகம் ஆவார். ஜனன கால ஜாதகத்தில், சூரியன் பலம் பெற்றிருந்தால், திடகாத்திரமான சரீரத்தையும், சந்திரன் சுப பலம் பெற்றிருந்தால், சிந்தனைத் திறனையும் பெற்று மகிழ்வார்கள் என "ஜோதிடக் கலை" சூரியனையும், சந்திரனையும் போற்றிப் புகழ்கிறது.

ஒருவரின் பிறவி ஜாதகத்தில், சூரியன் சுப பலம் பெற்றிருப்பின், ஆரோக்கியமான சரீரத்தைப் பெறுவார்கள். சந்திரன் பலம் பெற்றிருந்தால், சிந்தனைத் திறனுடன்கூடிய, நினைவாற்றலும் பெற்றுத் திகழ்வார்கள். "சிந்தனைச் சிற்பி" எனப் புகழ் பெறுவார்கள்! இவற்றை ஜோதிடக் கலை விவரித்துள்ளது. நவகிரகங்களில் சூரியனே சரீர காரகர். சந்திரன், மனோகாரகர். விளையாட்டுகள், போட்டிகள் ஆகியவற்றில், வெற்றிபெற்றுத் திகழ்பவர்களின் ஜாதகங்களைப் பார்த்தால், சூரியன் சுப பலம் பெற்றுத் திகழ்வதைக் காணலாம். அதே போன்று, அரசியல் பிரமுகர்கள், ஆசிரியர்கள், சிந்தனைச் செல்வர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் ஜாதகங்களை புதன், சந்திரன், குரு மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் சிறந்த சுபபலம் பெற்று வலம் வருவதையும்் காண முடியும்.

சூரியன் கடக ராசியைக் கடக்கும் ஒரு மாதக் காலமே, "ஆனி மாதம்" எனவும், "கடக மாதம்" எனவும் பூஜிக்கப்படுகிறது.கிரகங்களில் தன்னிகரற்ற சிறப்பைப் பெற்றுள்ள குரு பகவானின் உச்ச ராசி கடக ராசியாகும். இதிலிருந்து, கடக ராசியின் உயர்வை ஊகித்துக் கொள்ளலாம். மனிதப் பிறவியின் சிந்தனைத் திறனை உயர்த்தும் சந்திரனின் ராசிதான், இந்தக் கடகம்! கடக ராசியில் பிறந்துள்ள அன்பர்கள், சிந்தனைத் திறனிலும், நினைவாற்றலிலும், கற்பனை வளத்திலும், எழுத்து வன்மையிலும் திகழ்ந்து விளங்குவார்கள் என சாணக்கியரின், "அர்த்த சாஸ்திரம்" கூறுகிறது. இதிலிருந்து கடக ராசியின் சக்தியையும், பெருமையையும் ஊகித்துக் கொள்ளலாம். மனோ காரகரான சந்திரனே கடக ராசிக்கு அதிபதியாவார். உலக அரசியலில், பிரசித்திப் பெற்ற சர் வின்ட்ஸன் சர்ச்சில், அடால் ஸ்ரீப் ஹிட்லர், ரஷிய அதிபர் ஸ்டாலின் ஆகியோரின் ஜனன கால ஜாதகங்களில் கடக ராசிக்கு சிறந்த சுப கிரகங்களின் ஆதிக்கம் ஏற்பட்டுள்ளதைக் காண முடியும்.

புகழ் ஏணியின் உச்சியில் ஏற்றிவைக்கும் சக்தியும், பெருமையும் கடக ராசிக்கு உள்ளது. இத்தகைய சக்திவாய்ந்த கடகம், மனோ காரகரான சந்திரனின் ராசியாகும். அரசியல், போர்கள், எழுத்து வன்மை, வீரம், தியாகம் ஆகியவற்றில் புகழ் பெற்ற சரித்திரப் பெரியோர்களின் ஜாதகங்களில் கடக ராசியும், அந்த ராசிக்கு உரிய சந்திரனும் சுப பலம் பெற்றிருப்பதை இன்றும் காண முடியும்.பாரதப் புண்ணிய பூமியின் புகழிற்குப் பெருமை சேர்த்த, சர்தார் வல்லபாய் பட்டேல், ஜான்ஸி ராணி லட்சுமிபாய், தியாகி பகத்சிங், மாவீரன் சத்ரபதி சிவாஜி, சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரின் ஜனன கால ஜாதகங்களில், கடக ராசி சுப பலம் பெற்றிருப்பதைக் காணலாம். இது ஒரு சில உதாரணங்கள்தான்! மேலும், ஏராளமான உதாரணங்கள் உள்ளன. இதிலிருந்து கடக ராசியின் பெருமையை ஓரளவு உணர்ந்து கொள்ளலாம்.கடக ராசியில் பிறந்து,பாரதப் புண்ணிய பூமிக்கு ஈடிணையற்ற தியாகம் செய்து, பெருமை சேர்த்த மாவீரர்கள், மகான்கள், ஆகியோர், ஏராளம், ஏராளம்!!

ஆடி மாதம்தான், தேவர்களின் உலகமாகிய சொர்க்கத்தில், இரவு நேரம் ஆரம்பமாகும் காலத்தைக் குறிக்கிறது. சுருங்கச் சொல்ல வேண்டுமாகில், பித்ருகாரகராகிய சூரிய பகவான், வட திசை நோக்கி வலம் வருதல் என்பது, தேவர்களுக்குப் பகல் நேரமாகின்றபடியால், அது உத்திராயணம் எனவும், அதே சூரிய பகவான், தென்திசைநோக்கிச் செல்வதை தட்சிணாயனம் அதாவது, தேவர்களுக்கு இரவு நேரமாகவும் கணக்கில் கொள்ளப்படுகிறது. தேவர்களுக்கு ஒரு நாள் என்பது, நமக்கு ஒரு வருடக் காலமாகும். இம்மாதத்திலிருந்து, அடுத்துவரும் ஆறு மாதக் காலம், தட்சிணாயனம் எனப்படுகிறது. அடுத்துவரும், சுமார் ஆறு மாதக் காலம் தேவர்களுக்கு இரவு நேரமாகும்.

இந்த தட்சிணாயனம் எனப்படும் ஆறு மாதக் காலம், சொர்க்கத்தில், தேவர்களும், மகரிஷிகளும், கந்தர்வர்களும், தாங்கள் செய்துவரும் ஹோமங்கள், தவம் ஆகியவற்றை தங்கள் தவ வலிமையினால் நிறுத்தி வைப்பதாக புராதன நூல்கள் விவரித்துள்ளன.இனி இம்மாதத்தில் நிகழவிருக்கும் முக்கிய நிகழ்வுகளைக் காண்போம்!

ஆனி 31-ந் தேதியிலிருந்து (15-7-2026 - புதன்கிழமையிலிருந்து, ஆடி மாதம் 6-ந் (22-7-2026) தேதி வரை - ஸ்ரீ வராஹி நவராத்திரி - இக்காலகட்டங்களில், மாலை வேளையில், கலசத்தில் அம்பிகையை ஆவாஹனம் செய்து, பூஜை செய்து, செளந்தர்யலஹரி, அம்பிகை ஸ்தோத்திரம், தேவி பாகவதம் சொல்லி அல்லது சொல்லக் கேட்க வேண்டும். ஆதி பராசக்தியின் பரிபூரண அருளுக்குப் பாத்திரராவீர்கள். கல்வி, செல்வம், வீரம் இம்மூவகைச் செல்வங்களையும் நீங்கள் அடைவதுடன், உங்கள் சந்ததியினரும் இப்பேரருளைப் பெற்று மகிழ்வர்.

ஆடி 1, (17-ந் தேதி) வெள்ளிக்கிழமை : இன்றைய தினம் தட்சிணாயனப் புண்ணிய காலம். தேவர்களின் உலகில் இரவு நேர ஆரம்பம். பித்ருக்களைப் பூஜிக்க வேண்டிய புண்ணிய தினமாகும். இன்றைய தினத்திலிருந்து மூன்று நாட்கள் பாரதப் புண்ணிய பூமியின் அனைத்து நதிகளிலும் இந்நாட்களில் நதிதீரங்களில் நீராடுதல் கூடாது.

ஆடி 2, (18-7-2026) சனிக்கிழமை : சமீகௌரி விரதம் - இந்நன்னாளில் கலசம் வைத்து, தேவியை ஆவாகனம் செய்து, லலிதா சஹஸ்ரநாமம், துர்கா ஸப்தஸதீ, சௌந்தர்ய லஹரி, அபிராமி அந்தாதி, இவைகளில் எவையெவை உங்களால் முடிகின்றதோ அவற்றை பக்தி சிரத்தையுடன் சொல்லி பூஜித்தும், மாலை நேரத்தில் அம்பாள் கோயிலுக்குச் சென்று, மூன்று மண் அகல் விளக்குகளில் நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட பிரிந்திருந்த தாயும் - சேயும் நலமுடனும் சகல வளங்களுடனும் ஒன்று சேர்ந்து மகிழ்வர், உடல் உபாதைகள் வெகுவாகக் குறைவதையும், முழுமையாக அகலுவதையும் அனுபவத்தில் காணலாம். இத்தினத்தில், மூன்று சுமங்கலிப் பெண்களுக்கு, புடவை அல்லது ரவிக்கைத் துண்டு, வெற்றிலை, பாக்கு தாம்பூலம் கொடுத்து உபசரித்தால் மேற்கூறிய பலாபலன்களை நீங்கள் அடைவது திண்ணம்.

ஆடி 3, (19-7-2026) ஞாயிற்றுக்கிழமை : சஷ்டி விரதம் - ஸ்கந்த பஞ்சமி.

ஆடி 6, (22-7-2026) புதன்கிழமை: ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமி அவதரித்த ஸ்வாதி திருநட்சத்திரம். இன்றைய தினத்தில் ஏலக்காய், சுக்குப் பொடி, வெல்லம் கலந்த பானகத்தை ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு அமுது செய்வித்துவிட்டு, கோயிலுக்குச் சென்று, பக்தகோடிகளுக்கு விநியோகம் செய்வித்தல் மகத்தான புண்ணிய பலன்களைப் பெறுவீர்கள். மேலும், இன்றயை தினத்தில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் திருநட்சத்திரம்.

ஆடி 9, (25-7-2026) சனிக்கிழமை: சர்வ ஏகாதசி.

ஆடி 10, (26-7-2026) ஞாயிற்றுக்கிழமை: பிரதோஷம் - மாதந்தோறும் வரும் சுக்லபட்ச கிருஷ்ணபட்ச பிரதோஷமன்று பகல் முழுவதும் நிர்ஜலமாக (நீர்கூட பருகாநிலை) உபவாசமிருந்து, பிரதோஷ நேரமாகிய மாலை 4.30 மணிக்கு மேல் சாம்பசிவ மூர்த்தியை, ரிஷபாரூடராக தரிசனம் செய்தால் சகல சௌபாக்கியங்களையும் பெறுவீர்கள். மேலும், இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமையுமாகையால், ஆயுள் உடல் ஆரோக்கியம் மேம்படும். பிரதோஷ தினத்தின் மகிமைகளைப் பற்றியும், அதன் மேன்மைகளைப் பற்றியும் கூறாத புராணங்கள் இல்லை என்றே கூறலாம். அவ்வளவு சிலாக்கியமானதும், பரம பவித்திரமானதுமாகும் இவ்விரதம். மேலும், இன்று சாதூர்மாத விரத ஆரம்பம்.

ஆடி 13, (29-7-2026) புதன்கிழமை: பெளர்ணமி விரதம், குரு பூர்ணிமா- வியாஸ பூஜை. மேலும் இன்று கோகிலா விரதம் இவ்விரதத்தைக் கைக்கொள்வார்க்கு நல்ல சரீரம் (குயிலினும் இனிய குரல் வளத்தைப் பெறுவர் அதனால், நற் பெயரும், புகழும், செல்வ வளமும் உண்டாகும். மேலும், இன்றைய தினம் "ஆகாமாவை" நாள். ஆஷாடம், கார்த்திகை, மாகம் (மகம்), வைகாசம் இவையனைத்தும் தமிழ் மாதங்களின் பெயர்களே! இந்நன்னாட்களில் விடியற்காலையில் பிச்சமாக மீதமாக பௌர்ணமி திதி இருப்பதால், அதிகாலை நேரத்தில், நதிதீரங்களில் ஸ்நானம் செய்தால், அதீதமான நற்பலன்களை அள்ளித்தரவல்லது. இந்நாளில் ஒரு முறை முயற்சித்துப் பாருங்கள்... அந்த மாதம் வழக்கமான மாதமாக இருந்திடாது! ஏதோ ஒன்று புதிதாக அமையப்பெற்றிருப்பதை அறிவீர்கள் உணர்வுப்பூர்வமாக!

ஆடி 14, (30-7-2026) வியாழக்கிழமை : ஸ்ரீ ஹயக்ரீவ பகவானுக்கு உகந்த சிரவண விரதம். "திருவோணத்தான் உலகாளும் என்பார்களே...!" என்பது ஆழ்வார் பெருமக்களின் திருவாக்கு!! ஸ்ரீ மகாவிஷ்ணுவிற்கு உரிய நட்சத்திரமாகையால், இந்நன்னாளில் உபவாசமிருந்து, ஸ்ரீ விஷ்ணு பகவானை துளசி தளத்தினால் அர்ச்சிக்க வேண்டும். இவ்விரதத்தைக் கடைப்பிடிப்போர்களின் பாபங்களனைத்தும் தீயினிற் தூசாகிடும். நம் வாரிசுகளாகிய நம் மக்கள் செல்வங்கள் பதினாறு வகையான செல்வங்களையும் பெற்று, உடல் நலத்துடனும், மனவளத்துடனும் வைய்யத்துள் வாழ்வாங்குவாழ்வர் என புராணங்கள் அறுதியிட்டு உறுதிபடக் கூறுகின்றன.

ஆடி 17, (2-8-2026) ஞாயிற்றுக்கிழமை: சங்கடஹர சதுர்த்தி

ஆடி 18, (3-8-2026) திங்கட்கிழமை: ஆடி 18ம் பெருக்கு. தமிழகத்தின் புண்ணிய நதியான காவிரியைப் பூஜிக்க வேண்டிய புனித தினம்.

ஆடி 21, (6-8-2026) வியாழக்கிழமை : ஆடி கிருத்திகை விரதம். மேலும், இன்று நீலகண்டாஷ்டமி இந்நன்னாளில் காலை நேரத்த்ில், சிவ பெருமானையும், மாலை நேரமாகிய சூரிய அஸ்த்தமிக்கும் சமயத்தில் ஸ்ரீ பைரவரையும் பக்தி சிரத்தையுடன் வணங்கி வழிபட்டால், குழந்தைகள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர். அனைத்துத் துறைகளிலும் எவ்விதத் தடங்கலுமின்றி வெற்றி மேல் வெற்றி பெறுவர்.

ஆடி 24, (9-8-2026) ஞாயிற்றுக்கிழமை: சர்வ ஏகாதசி

ஆடி 25, (10-8-2026) திங்கட்்கிழமை : சுக்கில பட்ச பிரதோஷம்.

ஆடி 26, (11-8-2026) செவ்வாய்க்கிழமை : மாத சிவராத்திரி , ஏகாதசி விரதத்திற்கு அடுத்தபடியாக ஏற்றமிகு விரதமாக இவ்விரதத்தை மட்டுமே குறிப்பிடுகின்றன, அனைத்து புராணங்களும். பகற் பொழுதில் உபவாசமிருந்து, மாலை நேரத்தில் இரண்டாம் முறையாகக் குளித்து, உடலில் விபூதியை தரித்துக் கொண்டு, ருத்ராட்சங்களை அணிந்து கொண்டு, ஒவ்வொரு ஜாமத்திலும், அனைத்துவகை திரவியங்களினால் (தேன், பால், தயிர், கரும்புச் சாறு, தேங்காய் துருவல், மா, பலா, வாழை கொண்டு பஞ்சாமிருதம் தயாரித்து) அபிஷேக, ஆராதனை செய்வித்தல் வேண்டும். இதனைச் செய்விக்க இயலாதவர்கள், திருக்கோயிலுக்குச் சென்று, அங்கு நடைபெறும் திருமஞ்சனத்தில் கலந்து கொண்டு, தங்களால் இயன்ற திரவியங்களைக் கொடுத்து உதவிடல் மிக நன்று. புண்ணிய பலன்கள் உங்களை வந்தடையப்போவது திண்ணம். முக்கியமாக, இன்றைய தினத்தில் வில்வ தளத்தினால் அர்ச்சிக்க வேண்டும். இவ்வாறு செய்ய முடியாதுபோனாலும்கூட, அன்றைய தினத்தில் இரவில் உறங்கிடாது விழித்திருந்து, இறைவனின் திருநாமத்தை ஜெபித்த வண்ணம் இருந்தாலும் அளப்பரிய புண்ணிய பலன்களை அள்ளித்தரவல்லது இவ்விரதம். இவ்விரதத்தின் மகாத்மியத்தைப் பற்றி ஸ்கந்த புராணத்தில் சிலாகித்துக் கூறப்பட்டுள்ளது. இன்று கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி.

ஆடி 27, (12-8-2026) புதன்கிழமை: சர்வ அமாவாசை.

ஆடி 29, (14-8-2026) வெள்ளிக்கிழமை : திருவாடிப்பூரம். ஆண்டாள் அவதரித்த புண்ணிய தினம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் தரிசனம் விசேஷ நன்மைகளைப் பெற்றுத் தரும். மணமாலைக்குக் காத்துள்ள கன்னியர்கள், கீழ்க்காணும் நாச்சியார் திருமொழியை பக்தி சிரத்தையுடன் பாடினாலோ அல்லது காதாரக் கேட்டாலோ, மனத்திற்கேற்ற மணாளன் அமைந்து, இல்வாழ்க்கைப் பயன்கள் இனிதே ஈடேறும்.

"வாரண மாயிரம் சூழவ லம்செய்து

நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்

பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்

தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான்.

நாளை வதுவை மணமென்று நாளிட்டு

பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்

கோளரி மாதவன் கோவிந்த னென்பான் ஓர்

காளை புகுதக் கனாக்கண்டேன் தோழீ, நான்.

இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்

வந்திருந் தென்னை மகட்பேசி மந்திரித்து

மந்திரக் கோடி யுடுத்தி மணமாலை

அந்தரி சூட்டக் கனாக்கண்டேன் தோழீ, நான்."

தேய்பிறை முடிந்து, வளர்பிறை ஆரம்பிக்கும் இந்நாளில் முதன் முறையாக சந்திர பகவான் வானில் பிரகாசிப்பதால், மாலை நேரத்தில், மேற்குக் கீழ்வானில் தோன்றும் சந்திரோதயத்தைத் தரிசனம் செய்திடல் வேண்டும். இந்நாள் முதற்கொண்டு, வரும் மாதம் வரை வாழ்வில் நல்முன்னேற்றத்தைக் காண்பதை அனுபவத்தில் காண்பீர்கள். மேலும், நோய் நொடியின்றி, ஆயிரம் பிறைகளைக் காணும் மகத்தான பேரினைப் பெற்று, உங்கள் கண்ணெதிரே உங்கள் சந்ததியினர் ஆலம் விருட்சம்போல், விசாலமாக வளர்ந்திருப்தைக் கண்ணுற்ற நீங்கள் மனத்தளவில் மகிழ்ச்சியின் விளிம்பில் நிற்பீர்கள் உவகையுடன் மட்டற்ற மகிழ்ச்சியுடன்!

ஆடி 30, (15-8-2026) சனிக்கிழமை: சுவர்ண கெளரி விரதம் இவ்விரதத்தை பக்தி சிரத்தையுடன் கடைப்பிடிப்பார்க்கு, அவர்கள் எதிர்பாராமலேயே சுவர்ணம் (தங்கம்) அவர்களை வந்தடையும். இதனை அனுபவத்தில் காணலாம். மேலும் இன்றைய தினம் இந்திய சுதந்திர தினம்.

ஆடி 31, (16-8-2026) ஞாயிற்றுக்கிழமை: சதுர்த்தி விரதம். மேலும், இன்று நாக சதுர்த்தி.

ஆடி 32, (17-8-2026) திங்கட்கிழமை: நாகபஞ்சமி, கருட பஞ்சமி. இன்றைய தினம் பெரிய திருவடியாக ஸ்ரீ கருடபகவானுக்கு உகந்த புண்ணிய தினம். இன்றைய தினத்தில் ஒரு வேளை மட்டும் உணவருந்தி, நாகர்களை ஆவாஹனம் செய்வித்து, பூஜை செய்து, கற்கண்டு பால் பாயசம் செய்வித்து நைவேத்தியம் செய்து, சுமங்கலிகளுக்கு, வளையல், வெற்றிலை பாக்கு தாம்பூலம் கொடுத்து வணங்கினால், மணமான பெண்கள் நித்திய சுமங்கலிகளாகவும், மணமேடைக்குக் காத்துள்ள கன்னியருக்கு மனத்திற்குகந்த மணாளனும் அமையப்பெற்று மகிழ்வுடன் இல்வாழ்க்கையில் பரிமளிப்பதாக, "விரத சூடாமணி" அறுதியிட்டு, உறுதிபடக் கூறுகிறது. நமக்குத் தேவை பக்தியுடன் கூடிய நம்பிக்கை மட்டுமே! மேலும், இன்று பணி கௌரி விரதம் சுய தொழில் புரிவார்க்கு, தொழிலில் நிலவி வந்த சுணக்க நிலை மாறும், அதன் மூலம் வருமானம் பெருகும். செல்வச் செழிப்புடனும், பிணியற்ற நல்வாழ்வும் உண்டாகும்.