Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பக்தி செலுத்த கட்டணம் இல்லை

பெங்களூருவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் சர்க்கிள் மாரியம்மா கோயிலும் ஒன்று. அனேகமாக தினமும் கல்லூரி மாணவ, மாணவிகளின் கூட்டம் இந்தக் கோயிலில் அதிகமாக இருக்கும். இந்தக் கோயிலுக்கு எதிரிலேயே கல்லூரி அமைந்திருப்பதும் ஒரு காரணம். அதைவிட மாரியம்மா, மாணவர்களுக்கு மிகவும் வேண்டப்பட்ட தாயாகவும், ஆசானாகவும் விளங்குவது இன்னமும் பொருத்தமான காரணம். இந்த எதிர் கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல், பெங்களூருவின் பிற கல்லூரி மாணவர்களும் இந்த அம்மனை தரிசித்து வேண்டிக் கொள்வதிலிருந்து, இதனைத் தெரிந்து கொள்ளலாம். இந்த மாணவர்களுக்கு படிப்பு மட்டுமல்லாமல், அவரவர்களுடைய குடும்ப பிரச்னைகளுக்கும் அம்மனின் கடைக்கண் பார்வை பல நல்ல தீர்வுகளை அளித்திருக்கிறது என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

மாணவர்கள் என்றில்லாமல், முப்பது வருடங்களுக்கும் மேலாக, வருடந்தோறும், பல கிலோமீட்டர் தொலைவிலிருந்து வரும் நெடுநாளைய பக்தர்களும் இருக்கிறார்கள். பொது பக்தர்கள் பலரும் தத்தமது பிரச்னைகளுக்குப் பரிகாரம் தேடி இங்கே வருகிறார்கள். திருடுபோன, அல்லது காணாமல்போன பொருட்களை மீட்டுத் தரும்படி கேட்டுக் கொள்ளும் பக்தர்களுக்கு, அவை திரும்பக் கிடைத்திருக்கின்றன என்கிறார்கள்.

இக்கோயில் அலுவலக வாசலில் எலுமிச்சம்பழம், பூக்கள், தேங்காய், சூடம், வெற்றிலைபாக்கு, குங்குமம் அனைத்தும் அர்ச்சனைத் தட்டில் வைத்து பக்தர்களிடம் அர்ச்சனை செய்யப்படுவதற்காகக் கொடுக்கிறார்கள். இதற்காக பக்தர்கள் எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. ஆமாம், இலவசம்தான்! கோயில் நிர்வாகமே இந்தச் செலவை மேற்கொள்கிறது!

``பூஜை பொருட்களுக்கு நாங்கள் பணம் வசூலிப்பதில்லை; அர்ச்சனை செய்து கொடுப்பதற்கும் தட்சணை வாங்குவதில்லை. புதிதாக வரும் பக்தர்கள் பலருக்கு இது அதிசயமாகப் படுகிறது. ஆனால், இந்தக் கோயிலுக்கென்று விதிக்கப்பட்டிருக்கும் தர்மகோட்பாடு அது. ஆனாலும், பல பக்தர்கள், ஏதாவது காணிக்கை செலுத்தினால்தான் தங்கள் மனம் திருப்தியடையும் என்றுகூறி முடிந்த தொகையை அளிக்கிறார்கள். நாங்கள் பெற மறுத்தாலும், வலுக்கட்டாயமாகக் கொடுத்துவிட்டுப் போய் விடுகிறார்கள். இவர்களையும் சரி, எங்கள் தர்ம நோக்கத்தைப் புரிந்து கொண்டு, பூஜை, அர்ச்சனைக்காக கட்டணம் கொடுக்காமல், மனம் நிறைந்து தரிசனம் செய்துவிட்டுப் போகும் பக்தர்களையும் சரி, நாங்கள் ஒன்றுபோலத்தான் பாவிக்கிறோம். மாரியம்மனின் அருளை பக்தர்கள் மனப்பூர்வமாக அனுபவிக்க வேண்டும்; அவர்களுடைய எந்தத் துன்பமும் அன்னையின் அருளால் விலகவேண்டும் என்பதுதான் எங்கள் பிரார்த்தனை’’ என்று அலுவலக அதிகாரி விளக்கம் தருகிறார்.

அர்ச்சனை முடிந்து பக்தர்கள் வெளிவரும்போது வாழைப்பழம், தேங்காயை பிரசாதமாகக் கொடுக்கிறார்கள். அதை அவர்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். கூடவே ஒரு தட்டில் அன்றைய நிவேதமான பொங்கல் அல்லது புளியோதரையை பிரசாதத்தையும் கொடுக்கிறார்கள் இந்த சுற்றுவட்டாரத்தில் யாராவது புது வாகனம் ஏதாவது வாங்கினால், அதை இந்தக் கோயிலுக்குக் கொண்டு வந்து வெளியே நிற்க வைக்க, அர்ச்சகர் அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, மாலை சாத்தி, மணியடித்து தீபாராதனையும் காட்டுகிறார்.

இந்த சேவைக்கும் எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை. இங்கு இவ்வாறு மாரியம்மனுக்கு முன்னால் பூஜை செய்யப்பட்ட வாகனங்கள் தம்மை நிதானமாக ஓட்டும் பக்குவத்தை தம் சொந்தக்காரர்களுக்குக் கொடுப்பதோடு, எந்த சிறு விபத்திலும் சிக்கிக் கொள்வதில்லை என்றும் கூறுகிறார்கள்.

பெங்களூரு போக்குவரத்து நெரிசலில் இது அதிசயம்தான்! ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் சுமார் 100 வாகனங்கள் பூஜைக்கு வருகின்றனவாம்! இந்தக் கோயிலுக்கு எல்லா மதத்தினரும் வந்து போகிறார்கள். பெங்களூரு மல்லேஸ்வரம் 18வது கிராஸ் வளைவு பகுதியில் அமைந்துள்ளது இக்கோயில்.