Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உணர்ச்சிகளில் உயிர் இருக்கிறது!

காலை ஒன்பது மணி. அலுவலகம் வழக்கம்போல் இயங்கிக் கொண்டிருந்தது. கணினி திரைகள் ஒளிர, கீபோர்ட்களின் ஒலி இடைவிடாமல் கேட்டது. அந்த நீண்ட டேபிளின் ஒரு மூலையில் ஒரு சிறிய குடுவை. அதில் இருந்த செடி கருகி, உயிர் இல்லாதது போல நின்றது. அது சாதாரண செடி இல்லை; அது அனுவின் செடி. ஒருகாலத்தில் பசுமையாக இருந்த அந்தச் செடியை, அனு தினமும் தண்ணீர் ஊற்றி, மெதுவாக பேசிக் கவனித்தாள். அது அவளது டேபிளின் ஒரு அலங்காரம் அல்ல, அவளது மனநிலையின் பிரதிபலிப்பு.

ஆனால், கடந்த 15 நாட்கள் எல்லாம் மாறிவிட்டது. அனு அலுவலகத்திற்கு வந்தாலும், அவள் முன்பு இருந்த அனு இல்லை. சிரிப்பு மங்கியது, பார்வை சோர்ந்தது, உள்ளம் எதையோ சுமந்தது.

வேலை மட்டும் செய்து அமைதியாக அமர்ந்திருந்தாள். முதல் நாள் தண்ணீர் ஊற்ற மறந்தாள்; “நாளைக்கு பார்க்கலாம்” என்ற எண்ணம். அடுத்த நாள் அந்த உணர்வும் மறந்துவிட்டது. மூன்றாம் நாளிலிருந்து, அவள் மனம் வேறு உலகத்தில் தொலைந்து போனது. அந்த 15 நாட்களில் செடி மட்டும் இல்லை, அனுவும் மெதுவாக கருகிக் கொண்டிருந்தாள்.

ஒரு மாலை, அலுவலகம் காலியாகும் நேரம். அனைவரும் கிளம்பிய பின், அனு மட்டும் அமைதியாக அமர்ந்திருந்தாள். அவள் பார்வை திடீரென்று அந்தக் குடுவையைத் தொட்டது. அருகே சென்று பார்த்த போது, கருகிய இலைகள், உலர்ந்த மண். அவளது கவனக்குறைவின் சாட்சியை கண்டு, தன் கையை நீட்டி தண்டைத் தொட்டாள்; இன்னும் சிறிது உயிர் இருந்தது.

“மன்னிச்சுக்கோ…” என்று அவள் மெதுவாக கண்களில் கண்ணீர் வழிய சொன்னாள். அந்தச் சொல் செடிக்காக மட்டும் அல்ல, அவளது உள்ளத்திற்கும் ஒரு ஒப்புதலாக அமைந்தது. அது முதல் அனு மாற ஆரம்பித்தாள். தினமும் தண்ணீர் ஊற்றி, உலர்ந்த இலைகளை அகற்றி, மெதுவாக பேசினாள். வெளியே மாற்றம் தெரியவில்லை, ஆனாலும் ஒரு நம்பிக்கைதான். அலுவலகத்திலும் ஒரு மென்மையான மாற்றம். யாரோ ஒருவர் ஜன்னலைத் திறந்தார், எங்கிருந்தோ ஒளி உள்ளே வந்தது. அந்தச் செடியைச் சுற்றி இருந்த காற்றே மாறியது. அனுவின் மனமும் மெதுவாக உயிர் பிடித்தது. ஒரு காலை, சூரிய ஒளி நேராக அந்தச் செடியின் மேல் விழுந்தது. அனு செடியின் அருகே வந்து பார்த்த போது, தண்டின் ஓரத்தில் ஒரு சிறிய பச்சை முனை, அதில் சிறிய புதிய இலை. அந்த நிமிடம், அவள் நீண்ட நாட்களுக்கு பிறகு உண்மையாக சிரித்தாள்.

“நாம இருவரும் பிழைத்துவிட்டோம்” என்று மெதுவாக சொன்னாள். அந்தச் செடி மீண்டும் வளரத் தொடங்கியது. அனுவின் உள்ளமும் மீண்டும் உயிர் பெற்றது.

ஆம், உணர்ச்சிகள் இல்லாத இடத்தில் எந்த உயிர் இருப்பினும் அது கருகும்; ஆனால் அக்கறை, நம்பிக்கை, மகிழ்ச்சி இருந்தால் உடைந்த மனமும் ஏன் உடலும்கூட மீண்டும் மலரும். இறைமக்களே, உங்கள் சூழ்நிலையை கரிசனை, அன்பு, மகிழ்ச்சியால் நிரப்புங்கள். உங்கள் மன உணர்ச்சி உங்களை மட்டும் அல்ல, உங்கள் வீட்டையும், உங்கள் அலுவலகத்தையும், உங்களைச் சுற்றியுள்ள எல்லா மனிதர்களையும் மெதுவாக தொட்டு மாற்றும். எனவே, நாம் எந்த மனநிலையை விதைக்கிறோமோ, அதையே சூழ்நிலையாக அறுவடை செய்கிறோம்.

“மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்’’ (நீதி. 17:22) என இறைவேதம் கூறுகிறது. இதன் பொருள் என்னவெனில் ``மகிழ்ச்சியான இருதயம் மருந்துபோல் ஆரோக்கியம் தரும்; உடைந்த ஆவி எலும்புகளைக் காய்க்கும்’’ என்பதாகும்.

- அருள்முனைவர் பெ.பெவிஸ்டன்.