விதியை ஜெயித்தவர்கள் இல்லை! விதியால் ஜெயித்தவர்கள் உண்டு!
விதிப்படி வாழ்வதா? மதிப்படி வாழ்வதா? என்ற கேள்வி அடிக்கடி எழும். விதிப்படி வாழ வேண்டும் என்றால் மதி எதற்கு? மதிப்படி வாழ வேண்டும் என்றால் விதிக்கு என்ன வேலை? ஆனால் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். மதி வேறு; விதி வேறு அல்ல. மதியை இயக்குவதும் விதிதான்.
``விதியை வெல்ல முடியுமா?’’ என்ற கேள்விக்கு கவியரசு கண்ணதாசன் ஒரு முறை சொன்னார்;
``வெல்ல வேண்டும் என்ற விதி இருந்தால் விதியை வெல்ல முடியும்’’
ஆம். விதியை வெல்வதற்கும் விதிதான் துணை செய்ய வேண்டும்.
என்னிடத்திலே ஒரு அன்பர் கேட்டார்;
``ஒரு ஜாதகம் பார்க்கிறோம். ஒருவருக்கு வாகன விபத்து கண்டம் என்று ஒரு காலத்தை நிர்ணயித்துச் சொல்கிறார்கள். இது விதி. சாலையில் சென்றால் தானே கண்டம். நாம் பிரயாணம் செய்வதையே குறிப்பிட்ட நாள்களுக்கு விட்டுவிட்டால் அந்தக் கண்டம் என்ன செய்யும்? எனவே மதியால் தப்பித்துவிட முடியுமே?’’ என்றார்.
``அப்படியா, சரி இதற்கு விளக்கமாக இந்தக் கதையைக் கேளுங்கள்’’ என்றேன்.
``வராகிமிகிரர் உஜ்ஜெயினில் வாழ்ந்த சிறந்த வானியல் விஞ்ஞானி. கணித மேதை. ஜோதிட சாஸ்திர நிபுணர். இவருடைய தந்தை ஆதித்யதாசனும் ஒரு வாணியலாளர். மால்வா என்ற பிரதேசத்தில் யசோதர்மன் விக்ரமாதித்யனின் அவையில் நவரத்தினங்களில் ஒருவராக விளங்கியவர்’’ அந்த நாட்டு மன்னனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் ஜாதகத்தை வராகிமிகிரர் கணித்தார்.
``அரசே, இந்தக் குழந்தைக்கு 8 வயதுதான் ஆயுள். ஒரு வராகத்தால் உயிர் போய்விடும்’’ என்றார். மன்னர் திகைத்தார்;
``அப்படியா சரி, இதற்கு என்ன மாற்று ஏற்பாடுகள் செய்வது’’ என்று சிந்தித்தார். சாலையில் போனால் தானே விபத்து வரும், சாலையில் போகாமல் இருந்தால்......? என்று அன்பர் சொன்னபடி சிந்தித்தார். வராகத்தால் அதாவது பன்றியால் உயிர் போகும் என்று சொன்னால், வராகங்கள் இருந்தால் தானே என்று சிந்தித்து, அந்தப் பகுதியில் ஒரு பன்றிகூட இல்லாமல் அப்புறப்படுத்த உத்தரவிட்டார். அந்தப் பகுதியில் இப்பொழுது எந்தப் பன்றியும் இல்லை.
இளவரசனை ஒரு மண்டபத்தில் தங்க வைத்து 24 மணி நேரமும் ஒரு ஈறு எறும்புகூட அணுகாத வண்ணம் காவல் போட்டு காப்பாற்ற ஏற்பாடுகள் செய்தார். வராகிமிகிரர் சொன்ன காலமும் வந்தது. அன்றைய நாள்தான் அவர் இளவரசனுக்குக் குறித்துக் கொடுத்த நாள். மிகக் கடுமையான காவல்கட்டுப்பாட்டில் இளவரசன் மற்றவர்களோடு ஒரு மண்டபத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்.
ஒவ்வொரு நிமிடமும் அந்த இடத்திலிருந்து இளவரசனின் ஆரோக்கியம் குறித்தும், ஆபத்துக்கள் இருக்கிறதா என்பது குறித்தும் மன்னருக்கு செய்திகள் தெரிவிக்க ஏற்பாடு செய்திருந்தனர். வராகிமிகிரர் கொடுத்த அந்த நாழிகைக்கு முதல் நாழிகை வரைக்கும் இளவரசன் மகிழ்ச்சியோடு விளையாடிக் கொண்டிருந்தான். மன்னர், வராகிமிகிரரைப் பார்த்தார்.
``உங்கள் ஜோதிட சாஸ்திரம் என்ன ஆயிற்று? இதோ உங்கள் கணக்கு தவறப் போகிறது. விதியை நான் மதியால் வெல்லப் போகிறேன்’’ என்பது போல பார்வை மன்னர் இருக்கிறது. வராகிமிகிரர்,
``இந்தப் பிரபஞ்சத்தின் கணக்கு என்பது ஒரு சாதாரண மனிதனின் பலத்தைவிட கோடி மடங்கு பலமானது என்பதை மன்னர் அறியாமல் இருக்கிறார்’’ என்று நினைத்துக் கொண்டு, குறித்துக் கொடுத்த அந்த வினாடிக்காகக் காத்துக் கொண்டிருந்தார். தான் சொன்னது பலிக்காமல் போய்விட்டாலும்கூட நல்லதுதான் என்று நினைத்தார். எப்படியாவது இளவரசன் காப்பாற்றப் பட்டால் சரிதான். ஆனால், சாத்திரம் பொய்த்து விடாதே, அது நிஜமாகத்தானே இருக்கும் என்றும் எண்ணினார். அப்பொழுது இளவரசன் இருந்த மண்டபத்திலிருந்து காவலாளிகள் ஓடி வந்தார்கள்.
``மன்னா, தவறு நடந்துவிட்டது. இளவரசன் திடீரென்று மாண்டு போனான்’’ என்ற செய்தியை அழுது கொண்டே சொன்னார்கள்.
``ஏன், எதனால் இளவரசன் இறந்தான்? காவல் கட்டுப்பாடு மீறி ஏதாவது நடந்து விட்டதா? எங்கேயோ இருந்து தவறிப்போய் வராகம் உள்ளே புகுந்து விட்டதா?’’ என்று கேட்கும் பொழுது அவர்கள் சொன்னார்கள்;
``எந்த வராகமும் மண்டபத்திற்குள் வரவில்லை. ஆனால் மண்டபத்தின் ஒரு தூணின் மேல் இருந்த வராக சிற்பம் ஒன்று இடிந்து திடீரென்று இளவரசனின் தலையில் விழுந்து இளவரசன் மாண்டு போனான். எங்களால் அந்த நொடியை தடுக்க முடியவில்லை’’ இந்தக் கதையைக் கேட்டுவிட்டு நண்பர் ஒரு கேள்வி கேட்டார்;
``அப்படியானால் விதியே விதியே என்று வாழ்ந்துவிட வேண்டியது தானா, விதிப்படி என்ன நடந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு எந்த முயற்சியும் இல்லாமல் வாழ்ந்துவிட வேண்டியது தானா?’’ நான் சொன்னேன்;
``விதியை ஏற்றுக் கொண்டவர்கள் முயற்சியை கைவிட வேண்டும் என்று எங்கேயும் சொல்லப்படவில்லை. சமூகத்தில் நீங்கள் எத்தனையோ விதிகளுக்கு (Rules) உட்பட்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். பொது இடத்தில் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும். குடும்பத்தில் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும். மற்றவர்களோடு பேசும் பொழுது இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும். அரசாங்க விஷயத்தில் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும். போக்குவரத்து விஷயத்தில் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும். விளையாட்டு விஷயத்தில் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று ஒவ்வொன்றையும் விதியோடு அனுசரித்துதான் நீங்கள் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். விதியை அனுசரித்து முயற்சியோடு வாழ்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள்’’
நமக்கான தீமையை மட்டும் செய்வதுதான் விதி என்று நினைப்பதால் நமக்கு மிகப்பெரிய சங்கடம் வருகிறது. நமக்கான நன்மையைச் செய்வதும் விதிதான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
எப்பொழுதும் விதி என்பது பிரிக்காது. கூட்டி வைக்கும். உங்கள் செயலுக்கேற்ப நன்மையைக் கூட்டி வைக்கும். விதிக்கு இணக்கமாக நடந்து கொண்டால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். ஒவ்வொரு நாட்டுக்கும் சட்டம் இருக்கிறது. அந்த சட்டப்படி நீங்கள் வாழும்பொழுது உங்களுக்கு பெரும்பாலும் சிரமங்கள் வராது. சட்டமீறல்தான் சிரமத்தைக் கொடுக்கும். சட்டப்படி நீங்கள் சம்பாதிக்கலாம். இன்பமாக இருக்கலாம். ஆடம்பரப் பொருளை
வாங்கலாம்’’
``இதேதான் விதியாக சாஸ்திரத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. அறம், பொருள், இன்பம், வீடு என்ற நாலில் அறத்தோடு வாழ்தல், அறத்தோடு இன்பம் துய்த்தல் என்பதெல்லாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அப்படி அறத்தின்படி வாழ்கின்ற ஒருவனுக்கு எந்தத் துன்பங்களும் வருவதில்லை. இது செய்தால் பாவம், இது செய்தால் புண்ணியம் என்று சாஸ்திரம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. அதன்படி வாழுங்கள். விதி உங்கள் செயல்களுக்குத் துணை புரியும். விதியை யாரும் ஜெயிக்க முடியாது. ஆனால், அந்த விதியை ஜெயிக்க வைக்க, நாம் விதியோடு அனுசரித்து நடந்து கொள்ளும் பொழுது விதியே நம்மை ஜெயிக்க வைக்கும். அதற்கான ஆற்றல் விதிக்கு உண்டு. விதியை ஜெயித்தவர்கள் இல்லை. ஆனால் விதியால் ஜெயித்தவர்கள் உண்டு. அதில் ஒருவராக நீங்கள் இருங்கள்.