தேர்த் திருவிழாவின் தத்துவம்
தேர்த் திருவிழாவே உற்சவத்தின் உச்சபட்சத் திருவிழா. இத்திருவிழாவானது ‘சமதர்மப் பொருளாதாரம்’ ஏற்படுவதற்கு ஏற்படுத்தப்பட்டதாகும். தேர்த் திருவிழாவில் திருக்கோயில்கள் முதல் திருவீதிகள் வரை அனைத்து இடங்களும் தூய்மையாகும் அனைத்துப் பணியாளர்களுக்கும் வேலை கிடைக்கும். உயர்ந்தவர்களிடத்தில் இருக்கும் செல்வமானது, ஊரார் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். ஆகவே, ‘வறுமையை ஒழிக்க வந்ததே இத்தேர்த் திருவிழா.’மேலும், தீண்டாமையை ஒழிப்பதும் இவ்விழாவே, எத்தனையோ எடையுள்ள தேரை, எல்லோரும் சேர்த்து இழுத்தால்தான் நகரும். அப்படி இழுக்கும்போது, உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற வேறுபாடுகள் அனைத்தும் நீங்கி, ‘அனைவரும் சமம்’ என்ற சமத்துவம் உருவாகும்.இதைத்தான் ‘ஊர் கூடித் தேர் இழுத்தல்’ என்பார்கள். ஆகவே, இது சமயத் திருவிழா என்பதைவிட சமுதாயப் பெருவிழா எனலாம். இந்தத் தேரானது நான்குவகைப் படைகளுள் ஒன்று.
அரசனுக்கு இருக்கும் நான்கு படைகளுள் முதன்மையான தேர்ப்படையானது, அரசனுக்கு இறைவனுக்கு் மட்டுமே இருப்பதாகும். தேரைத் தவிர குதிரை. மற்றும் யானைப் படைகளில் அரசனைத் தவிர வேறு நபர்கள் பயணிக்கலாம். ஆனால், தேரில் அரசன் மட்டுமே பயணிக்க முடியும்.தேர் என்பது ஆண்டவனும் அரசனும் மட்டுமே செல்லும் அற்புத ஊர்தி. எதைக் காட்டுகிறது என்றால் முறை செய்து காப்பாற்றும் அரசனே மக்களுக்கு இறைவனைப் போன்றவன் என்பதைக் காட்டுகிறது.அப்படித் தேரை வைத்தே முறை செய்து உயிர்களை காத்தவர்கள், மனுநீதிச்சோழனும் வள்ளல் பாரியும். ஆகவே, தேர்த்திருவிழா பொருளாதாரச் சமநிலையும் அருளாதாரச் சமநிலையும் ஏற்பட அமைந்த அற்புத ஏற்பாடு.