Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வரன் அமைய வேண்டிக்கொண்ட மங்கை!

29 மகான்

சில இதழுக்கு முன்பு, ``காலமெல்லாம் காப்பாற்றும் கம்பாளு ராமச்சந்திர தீர்த்தர்’’ என்னும் தலைப்பில், மகான் ஸ்ரீ கம்பாளு ராமச்சந்திர தீர்த்தரை பற்றி தெரிந்துக் கொண்டோம் அல்லவா! அவரின் குருதான் ``ஸ்ரீ ஸ்ரீ பதி தீர்த்தர்’’. இவரும், வேலூர் மாவட்டத்தில் உள்ள சேண்பாக்கம் என்னும் இடத்தில் பிருந்தாவனம் ஆனவர். இவரைப் பற்றிய தகவல்களை இந்த தொகுப்பில் காண்போம்!

கம்பாளு ராமச்சந்திர தீர்த்தரின் குரு

மத்வாச்சாரியாருக்கு பின் ஏழாவது பீடாதிபதியாக இருந்தவர், ஸ்ரீ வித்யாதிராஜதீர்த்தர். இவருக்கு பின் சுமார் 1388 - ஆம் ஆண்டு காலகட்டத்தில், ஸ்ரீ ராஜேந்திரதீர்த்தர் என்னும் மகான் எட்டாவது பீடாதிபதியாக இருந்தார். அவரின் மூலமாகவே ``வியாசராஜமடம்’’ உருவானது.

அதன் பிறகு, ஸ்ரீ ஜெயத்வஜாதீர்த்தர், ஸ்ரீ புருஷோத்தம தீர்த்தர், ஸ்ரீ பிரம்மண்ய தீர்த்தர், ஸ்ரீ வியாசராஜதீர்த்தர், ஸ்ரீ ஸ்ரீ நிவாசதீர்த்தர், ஸ்ரீ ராமாதீர்த்தர், என பல மத்வ மகான்கள் வியாசராஜமடத்தை அலங்கரித்துள்ளனர். அந்தவகையில், ஸ்ரீ ஸ்ரீ பதி தீர்த்தர், வியாசராஜமடத்தின் வழிவந்த 16வது பீடாதிபதியாவார். இவரின் காலம், 1598 - ஆம் ஆண்டு முதல் 1612 - ஆம் ஆண்டுகள் வரை. தன் சீடன் ஸ்ரீ கம்பாளு ராமச்சந்திர தீர்த்தரின் மீது அலாதி அன்புக் கொண்டவர்.

அதன் காரணமாகவோ என்னவோ... தன் பிருந்தாவனம் அருகிலேயே சீடர் கம்பாளு ராமச்சந்திரதீர்த்தரின் பிருந்தாவனமும் உள்ளது. அதாவது, குரு - சீடனின் மூலபிருந்தாவனங்கள் அருகருகே இருக்கின்றன.

அரசு கொடுத்த காணிக்கை

ஸ்ரீ பதிதீர்த்தரின் பிரபாவமும், கருணையும் சொற்களுக்குள் அடங்காதவை! அடிக்கடி தன் சீடனை அழைத்து அவருக்கு உபநிஷத் போன்ற வேதங்களை கற்றுக்கொடுத்தார். அதன் பயனாக, மிக பெரிய மகானாக உருவெடுத்தார், கம்பாளு ராமச்சந்திரதீர்த்தர். அதனை நாம் கடந்த இதழ்களில் கண்டோம். யாரேனும் பக்தர்கள், பிணி என்று ஸ்ரீ பதிதீர்த்தரிடத்தில் வந்து நின்றால், அவர்களுக்கு அட்சதையினை கொடுத்து அனுக்கிரகம் செய்வார். உடனடியாக அவர்களுக்கு பீடித்திருந்த பிணி நீங்கிவிடுமாம்! அத்தகைய மிகப் பெரிய தவ வலிமை பெற்ற மகான். இவரின் காலத்தில்தான், வேலூர் சேண்பாக்கம் கோயில் மற்றும் அதன் சார்ந்த வளாகங்கள், அரசு மானியம் கொடுத்து, காணிக்கையாக பெறப்பட்டது.

இங்கு சாதுர்மாதம் விரதமும் மேற்கொண்டிருக்கிறார், ஸ்ரீ பதிதீர்த்தர்! மத்வர் காலடிப்பட்ட இடம் சேண்பாக்கம் என்பதனை நன்கு உணர்ந்த ஸ்ரீ பதிதீர்த்தர், தனது பிருந்தாவன பிரவேசம், இங்கேயே அமைக்க எண்ணினார். அதன்படி, 1612 - ஆம் ஆண்டில், ஆஷாட சுத்த துவாதசி அன்று சேண்பாக்கத்தில், ஸ்ரீ பதிதீர்த்தர் பிருந்தாவன பிரவேசமானார்.

கனவில் அட்சதை

வேலூர் சேண்பாக்கத்தில், ஸ்ரீ பதிதீர்த்தர், கம்பாளு ராமச்சந்திர தீர்த்தர், உட்பட ஏழு மூலபிருந்தாவனமும், ஒரு ராகவேந்திரஸ்வாமியின் மிருத்திகா பிருந்தாவனமும் இருப்பதால், இவ்விடத்தை ``நவ பிருந்தாவனம்’’ என்றே அழைக்கிறார்கள். அதே போல் இக்கோயிலில், வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமனும் அருள்பாலித்து வருகிறார். இத்தகைய சாந்நித்யம் நிறைந்த இவ்விடத்தில், பலரும் பிரார்த்தனைகளை ஸ்ரீ பதிதீர்த்தரிடத்தில் முன்வைக்கிறார்கள். அதனையும் ஸ்ரீ பதிதீர்த்தர் நிறைவேற்றிக் கொடுத்தார், கொடுத்தும் வருகிறார். அதே போல், எதிர்பாராத பலருக்கும்

அருள்பாலித்தார்.

1992 - 93 - ஆம் ஆண்டு காலகட்டத்தில் சேண்பாக்கம் நவபிருந்தாவனம் புணரமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்த சமயத்தில், புனரமைக்க உதவிய சிலரது கனவில் தோன்றிய ஸ்ரீ பதிதீர்த்தர், அவர்களுக்கு மந்திராட்சதை கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்தினார்.

பாடம் நடத்தும் ஸ்ரீ பதிதீர்த்தர்

1995 - ஆம் ஆண்டில், பெற்றோரால் கைவிடப்பட்ட ஒரு குழந்தை, தினமும் ஸ்ரீ பதிதீர்த்தரிடத்தில், ``ஸ்வாமி.. எனக்கு தாய் தந்தை என யாருமில்லை. நீயே எனக்கு தாய் - தந்தை எல்லாம். என் பாடபுத்தகத்தில் ஒரு கேள்விக்கு சரியான பதில் எனக்கு தெரியவில்லை. அது என்னவென்றால்....’’ என்று தன் பாடபுத்தகத்தில் இருக்கக்கூடிய கேள்விகளை ஸ்வாமிகளிடம் கூறுவாள். இதற்கு ஸ்வாமியும், தந்தை ஸ்தானத்தில் இருந்து, குழந்தையின் கனவில் தோன்றி பதிலளிப்பார். இப்படியே... தினமும் அக்குழந்தை ஸ்ரீ பதி தீர்த்தரிடத்தில் கேள்வியை கேட்கும்.

அதற்கு ஸ்வாமிகளும் கனவில் பதில் கூறுவார். இப்படியே.. அக்குழந்தை தன் படிப்பை முடிக்கும் வரையில், பாடத்தில் உள்ள தன் சந்தேகங்கள் அனைத்தையும் ஸ்வாமிகளிடமிருந்தே தெளிவுபடுத்திக் கொள்வார். இதே போல், 1998 - ஆம் ஆண்டில், சேண்பாக்கத்தில் அமைந்துள்ள மூலபிருந்தாவனங்களுக்கு தன்னால் முடிந்த சிறு சேவையினை இளைஞர் ஒருவர் செய்துள்ளார். உடனே அவர் வேண்டியபடி அருளாசியினை வழங்கியிருக்கிறார்.

அமெரிக்க மாப்பிள்ளை

மேலும், ஒரு இளம் மங்கைக்கு அமெரிக்க குடியுரிமைபெற்ற மணமகனை திருமணம் செய்துக்கொள்ள ஆசை. 16 வாரங்கள் தினமும் ஸ்ரீ பதி தீர்த்தரை மனமுருகி வேண்டுகிறாள். சில நாட்களிலேயே அவளுக்கு அமெரிக்க மாப்பிள்ளை வரன் அமைந்து இன்று அமெரிக்காவிலும் ஸ்ரீ பதிதீர்த்தரை நினைத்துக்கொண்டே வாழ்கிறாள். இப்படி இன்றும் வேலூர் சேண்பாக்கத்திற்கு வந்து ஸ்ரீ பதிதீர்த்தரை வேண்டிக்கொள்பவர்கள் ஏராளம். அவர்களின் மன துன்பங்களை போக்கி இன்பமயமாக்குகிறார், ஸ்ரீ பதிதீர்த்தர்.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை: 9.00 முதல் 11.00 வரை, மாலை: 5.00 முதல் 7.30 வரை.எப்படி செல்வது: வேலூர் பேருந்து நிலையத்தில் இருந்து சேண்பாக்கம் ``நவ பிருந்தாவனம்’’ கோயிலுக்கு செல்ல ஆட்டோக்களின் மூலமாகவே பயணிக்க முடியும்.

ரா.ரெங்கராஜன்