Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அரியணையில் அமர வைத்த அற்புதக் கனவு

கனவு காண்பது எத்தனை சுகமானது. கனவில் பல வகைகள் உள்ளன. லட்சியக் கனவு, வாழ்க்கைக் கனவு, வேலைக் கனவு, பணக் கனவு, நிறைவேறாத ஆசைகள் வந்து அலைக்கழிக்கும் கனவு, பகல் கனவு, செத்தவர்கள் வந்து பயமுறுத்தும் ஆவிக் கனவு, பிடித்த நடிகர்-நடிகைகளோடு குடித்தனம் நடத்தும் கவர்ச்சிக் கனவு என்று கனவுகள் ஆயிரம்...! ஆயிரம்...!!

இஸ்லாமிய வாழ்வியல் கனவு குறித்துப் பேசுகிறதா? ஆம். இறுதி வேதம் குர்ஆனிலும் நபிமொழிகளிலும் கனவுகள் பற்றி நிறைய செய்திகள் உள்ளன. “நல்ல கனவுகள் நபித்துவத்தின் ஒரு பகுதி” என்று நபிகளார்(ஸல்) கூறியுள்ளார்கள்.

யூசுப் எனும் இறைத்தூதரின் வரலாற்றைக் கூறுகிறது குர்ஆன். இறைத்தூதர் யாகூப்பின் மகன்தான் யூசுப். யார் என்ன கனவு கண்டாலும் அதற்குரிய சரியான விளக்கத்தைச் சொல்லும் ஆற்றல் இறைத்தூதர் யூசுபிற்கு அருளப்பட்டிருந்தது.

ஒரு நாள் யூசுப் ஓர் அழகான கனவு கண்டார். சூரியனும் சந்திரனும் பதினோரு நட்சத்திரங்களும் அவருக்குப் பணிவதாக அந்தக் கனவு அமைந்தது.

பின்னாளில் யூசுப் எகிப்தின் ஆட்சியாளராய் மாறியபோது இந்தக் கனவு நனவானது. சூரியன் போன்ற அவருடைய தந்தை யாகூப், நிலவு போன்ற அவருடைய தாய், நட்சத்திரங்கள் போன்ற அவருடைய பதினோரு சகோதரர்கள் ஆகிய அனைவரும் யூசுபின் அரசவையில் பணிந்து நின்றனர்.

இறைத்தூதர் யூசுப் எப்படி ஆட்சியாளர் ஆனார்? அரியணையில் அமர வைத்ததும் ஓர் அற்புதக் கனவுதான். எகிப்தின் மன்னராக இருந்தவர் ஒரு கனவு கண்டார். அது குறித்துத் திருக்குர்ஆன் கூறுகிறது:

“அரசன் கூறினான்-“நான் ஒரு கனவு கண்டேன். ஏழு கொழுத்த பசுக்களை ஏழு மெலிந்த பசுக்கள் தின்றுகொண்டிருக்கின்றன. மேலும் பசுமையான ஏழு தானிய கதிர்களையும் காய்ந்த ஏழு தானிய கதிர்களையும் நான் கண்டேன். அவையோரே, கனவிற்கான விளக்கத்தை நீங்கள் தெரிந்தவர்களாய் இருந்தால் என் கனவிற்கான விளக்கத்தைக் கூறுங்கள்.”

(குர்ஆன் 12:43-44)

சபையில் இருந்த பிரமுகர்கள் யாருக்கும் இந்தக் கனவின் விளக்கம் தெரியவில்லை. “இப்படிக் குழப்பமான கனவு கண்டால் யாரால் விளக்கம் சொல்லமுடியும்? எங்களுக்குத் தெரியாது” என்று கையை விரித்துவிட்டனர்.

சில காரணங்களால் இறைத்தூதர் யூசுப் அப்போது சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கனவுகளுக்கு விளக்கம் சொல்லும் ஆற்றல் அவருக்கு இருப்பதால் அவரிடம் அந்தக் கனவு குறித்து விளக்கம் கேட்கப்பட்டது.

யூசுப் கூறினார்:“ஏழு ஆண்டுகள் வரை தொடர்ந்து நீங்கள் விவசாயம் செய்துகொண்டிருப்பீர்கள். அந்த ஏழு ஆண்டுகளில் நீங்கள் அறுவடை செய்வதில் உங்கள் உணவுக்குப் பயன்படும் சிறு பாகத்தைத் தவிர மற்றவற்றை அவற்றின் கதிர்களிலேயே விட்டுவையுங்கள். அதன் பின்னர் மிகக் கடினமான ஏழு ஆண்டுகள் வரும். அப்போது அந்த நேரத்திற்காக நீங்கள் சேகரித்து வைத்திருந்த அனைத்தும் உட்கொள்ளப்பட்டுவிடும். அவற்றிலிருந்து நீங்கள் தனியே பாதுகாத்து வைத்திருந்ததைத் தவிர, பின்னர் மீண்டும் ஓர் ஆண்டு வரும். அப்பொழுது அருள்மாரி பொழியப்பட்டு, மக்களின் துயரங்கள் களையப்படும். அன்று அவர்கள் பழரசங்கள் பிழிவார்கள். (செழிப்பாக வாழ்வார்கள்)” (குர்ஆன் 12:47-49)

இந்த விளக்கத்தைக் கேட்டதும் மன்னர் மகிழ்ந்து சிறையிலிருந்து யூசுபை விடுதலை செய்தார். ஆட்சிப் பொறுப்பிலும் அவரை அமர்த்தினார்.

இறைத்தூதர் யூசுப் சொன்னபடியே அனைத்தும் நடந்தன. பஞ்ச காலத்தைத் தம் சிறப்பான நிர்வாகத்தின் மூலம் சமாளித்து மக்கள் செழிப்பாக வாழும் நிலையை உருவாக்கினார்.

நல்ல கனவுகள் கண்டால் இறைவனுக்கு நன்றி செலுத்துவோம். கெட்ட கனவுகள் கண்டால் அவற்றின் தீங்கிலிருந்து இறைவனிடமே பாதுகாப்புத் தேடுவோம்.

இந்த வார சிந்தனை

“எவர்கள் நம்பிக்கை கொண்டு இறைவனுக்கு அஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு மறுமையின் கூலி மிகச் சிறப்புடையதாகும்.” (குர்ஆன் 12:57)

- சிராஜுல் ஹஸன்.