Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

துருவ சரித்திரம் சொல்லும் உண்மைகள் விஷ்ணு புராணம் காட்டும் தத்துவங்களும் நீதிகளும்

பகுதி -7

விஷ்ணுபுராணத்தில் உள்ள துருவன் சரித்திரம் அதி அற்புதமான கதை. சாதாரணமாக படிப்பவர்களுக்கு, பகவான் மீது ஆழமான பக்தியையும், துருவன் மீது மிகப் பெரிய கொண்டாட்டத்தையும் தரும் கதை. மனதை உருக்கும் கதை. இதை உபன்யாசகர்கள் மேடையில் சொல்லும் பொழுது, பற்பல ஸ்லோகங்களைச் சொல்லி, உருக்கமாக விளக்குவார்கள். ஆனால், இந்த கதைக்குள் எத்தனை அற்புதமான கருத்துக்கள், வாழ்வியல் நம்பிக்கைகள், போராடும் குணங்கள், நேர்மறை சிந்தனைகள், எக்காலத்திலும் விட்டுவிடாத முயற்சிகள் இருக்கின்றன என்பதை அறியும் பொழுது, இன்றைய விஞ்ஞான யுகத்தில்கூட, துருவன் கதை நமக்கும் நம் பின்னால் வரும் சந்ததிகளுக்கும் நம்பிக்கை வெளிச்சத்தை பாய்ச்சுகிறது என்பதை மறந்துவிடவோ, மறுத்துவிடவோ முடியாது. முதலில் கதையைப் பார்ப்போம்.

துருவன் கதை

ஸ்வயம்புவ மனுவின் புதல்வர்கள் இரண்டு பேர். ஒருவன் பிரிய விரதன். மற்றொருவன் உத்தானபாதன். இரண்டு பேருமே மகாவீரர்கள். நீதிமான்கள். உத்தானபாதன், ராஜாவானான். அவனுக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவி சுநீதி, இளைய மனைவி சுரூசி. தசரதன் எப்படி இளைய மனைவியான கைகேயியிடம் அதிகமான பிரியம் வைத்திருந்தானோ, அதைப் போலவே உத்தானபாதனும் இளைய மனைவி சுரூசியிடம் மிகுந்த அன்பு வைத்து, அவள் சொன்னதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தான். அதனுடைய விளைவாக, மூத்த மனைவியிடம் அத்தனை ஆர்வமும் ஆசையும் காட்டவில்லை. சற்று ஒதுக்கியே வைத்திருந்தான். இரண்டு மனைவிகளுக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர்.

மூத்த மனைவி சுநீதியின் மகன் துருவன். இளைய மனைவி சுரூசியின் மகன் உத்தமன். ஒருநாள், அரசனின் மடியில் இளைய மனைவியின் குமாரனான உத்தமன் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தான். ஐந்து வயதாகிய துருவன், இதைப் பார்த்தான். தன் தந்தையின் மடியில் தானும் உட்கார ஆசைப் பட்டான். இயல்பாக தந்தையின் மடியில் ஏறி அமர்வதற்கு முயன்றான். அப்பொழுது ராஜாவின் பக்கத்தில் இருந்த இளைய மனைவி சுரூசி, அவனை இழுத்துத் தள்ளினாள். சுரூசி, துருவனைப் பார்த்துக் கடுமையாகப் பேசினாள்.

``நீ ராஜா மடியில் உட்காரத் தகுதியில்லாதவன்! நீ என் வயிற்றில் பிறந்திருந்தால் மட்டுமே அந்த பாக்கியம் கிடைக்கும். உனக்கு ராஜாவின் மடியில் உட்காரும் பேராசை வேண்டாம். அந்தத் தகுதி உனக்கு இல்லை. உடனே இந்த இடத்தை விட்டுப்போய்விடு’’ என்று காரசாரமாகப் பேசி விரட்டிவிட்டாள். கீழே விழுந்த குழந்தையைப் பார்த்த ராஜா, அவனைத் தூக்கவுமில்லை, ஏன் தள்ளினாய் என்று சுரூசியிடம் கேட்கவுமில்லை. தனக்கு ஒரு சம்பந்தமும் இல்லாததை போல், மவுனமாக வாய் மூடி உட்கார்ந்திருந்தான்.

குழந்தை துருவன் துடித்துப் போய்விட்டான். ஒருபக்கம் அழுகை. ஒரு பக்கம் அவமானம். அவனுடைய தந்தை, அவனை எடுத்து ஆறுதல் சொல்லி இருந்தால்கூட மனம் ஆறி இருக்கும்.

ஆனால், அதைச் செய்யாதது அந்த பிஞ்சு உள்ளத்திலே மிகுந்த கவலையையும் துன்பத்தையும் அழுகையையும் தந்தது. அழுது கொண்டே தன் அன்னையிடம் ஓடினான்.

அழுதுகொண்டே தன் தாயாரிடம் வந்த துருவனிடம், சுநீதி காரணத்தைக் கேட்டாள். அவள் ஏற்கனவே, அரசனின் இளைய மனைவியால் அவமதிப்பைச் சந்தித்து கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தாள். தன் மகனும் இப்படிப்பட்ட அவமானத்தைச் சந்தித்து வந்து நிற்கிறான் என்பதை அந்தத் தாயால் தாங்க முடியவில்லை. தலைவிதியை நொந்து கொண்டாள். இதற்கெல்லாம் காரணம் தாங்கள் செய்த பாவமே என்று அந்தப் பிஞ்சுப் பிள்ளையிடம் விளக்கிக் கொண்டிருந்தாள்.

``மகனே! சுரூசி சொன்னதில் என்ன தப்பு? நான் பாபம் செய்தவள். என்னிடத்திலே பிறந்த நீயும் பாபத்தையே செய்திருக்கிறாய். பாபத்தைப் பண்ணிவிட்டு உயர்ந்த பலனை அடைய நாம் விரும்பலாமா? இருப்பதைக் கொண்டுதான் நீ திருப்தி அடைய வேண்டும். இல்லாவிட்டால் உயர்ந்த புண்ணியத்தை அடைய முயல வேண்டும். நீ புண்ணியத்தைச் சம்பாதித்தால் அதற்கான பலனை அடையலாம்’’ இப்பொழுது துருவன் கேட்டான்; ``சரி நான் பாவம் செய்ததாகவே இருக்கட்டும் அம்மா, புண்ணியம் செய்வதற்கு என்ன வழி? அதைச் சொல்’’ இப்பொழுது மகனிடம் தாய் பேசினாள்; ``மகனே.. புண்ணியத்தை அடைவதற்கு பிரார்த்தனையும் தவமும்தான் வழி. அந்தப் புண்ணியம்தான் நீ கேட்டதை எல்லாம் கொடுக்க வல்லது.

பள்ளத்தை நோக்கி தண்ணீர் பாய்வது போல, புண்ணியம் இருக்கும் இடத்தை நோக்கி எல்லா செல்வங்களும் வந்து சேரும். அதற்கு மனிதர்களிடம் கெஞ்சுவதைவிட, இந்த உலகத்திற்கே தந்தையான அந்தப் பரம்பொருளிடம் பிரார்த்தனை செய். அவர் உனக்கு வழிகாட்டுவார்’’ என்று மகனை கட்டிக்கொண்டு ஆறுதல் கூறினாள். அப்பொழுது துருவன் சொன்னான்;

``அம்மா நீ சொன்ன வார்த்தைகள் என் புண்பட்ட மனதில் நிலைக்கவில்லை. நான் இந்த அவமானத்தைச் சகித்துக் கொள்ளப் போவதில்லை. நான் யாராலும் அடைய முடியாத உயர்ந்த நிலையை அடையவே விரும்புகின்றேன். அதற்காக நான் வீட்டை விட்டு வெளியேறுகின்றேன். இந்தப் பிறவிக்கு தந்தையான உத்தானபாதனிடம் கிடைக்காததை, எந்தப் பிறவிக்கும் தந்தையான எம்பெருமானிடம் நான் பெறப் போகிறேன் என்று உறுதியாகச் சொல்லிவிட்டு காட்டிற்குப் புறப்பட்டான்.

துருவன் செய்த தவம்

ஐந்து வயதே ஆன துருவன், கடவுளைக் காண வேண்டும் என்ற ஒரே லட்சியத்தோடு காட்டுக்குக் கிளம்பினான். காட்டின் இருள் அவனை பயமுறுத்தவில்லை. அங்கும் இங்கும் ஓடும் கடுமையான விலங்குகள் அவனை அச்சுறுத்தவில்லை. பசி தாகம் எதுவும் அவனுடைய உறுதியை அசைக்கவில்லை. அவன் காட்டுக்குள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான். அப்பொழுது சில ரிஷிகள் தவம் செய்வதைக் கண்டான்.

ரிஷிகளைக் கண்டு, வணக்கத்துடன் அவர்களைப் பணிந்தான். தன்னைப்பற்றி அவர்களிடம் கூறினான்.``என் பெயர் துருவன். உத்தானபாதனின் மகன். சுநீதி என்பவள் என் தாய். எனது சித்தம் நிம்மதியற்று இருக்கிறது. நான் உங்களிடம் வந்திருக்கிறேன்’’ ரிஷிகள் திகைத்தார்கள். அவனுடைய பொலிவான முகமும், ஏதோ ஒன்றைச் சாதித்தே தீரவேண்டும் என்ற தணியாத வேட்கையும், உறுதியான மனமும், அந்த ரிஷிகளை என்னவோ செய்தன. ஐந்து வயதுச் சிறுவன் இப்படி ஆவேசத்துடன் இருக்கிறானே என்று நினைத்தார்கள்.

``ராஜகுமாரனே.. உனக்கு என்ன வருத்தம் ஏற்பட முடியும்? உனக்கு நான்கு அல்லது ஐந்து வயதுகூட ஆகியிருக்காது. தந்தையோ ராஜா. உனக்கு பிரியமான எதையும் இழந்திருக்க நியாயமில்லை. உன் உடம்பில் எந்த நோயும் இல்லை. அப்படியிருக்க, உனக்கு கவலை எப்படி ஏற்பட்டது?’’ துருவன் தன் மாற்றாந்தாய் சுரூசியிடம் தனக்கேற்பட்ட அவமானத்தைக் கூறினான். விவரங்களைக் கேட்ட முனிவர்கள், அரச குலத்தில் தோன்றிய சிறுவனின் தன்மான உணர்ச்சியைப் பார்த்தார்கள். இச்சிறுவனின் மனத்திலிருந்து மாற்றாந்தாய் பேசிய கடும் சொற்கள் அகலவில்லை என்பதை உணர்ந்தார்கள். அவர்கள் ஆறுதலாக, துருவனிடம் அவன் தங்களிடமிருந்து என்ன உதவி வேண்டும் என்று கேட்டார்கள்.

துருவன் கூறினான்; ``முனிவர்களே! நான் பணத்தையோ, ராஜ்யத்தையோ வேண்டவில்லை. எவருமே இதுவரையில் அடைந்து அனுபவித்திராத ஒரு மகோன்னதமான உயர்வை விரும்புகிறேன். அந்த நிலை எல்லாவற்றுக்கும் மேம்பட்டதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஸ்தானத்தை எட்டிப் பிடிக்கும் வழியை தாங்கள்கூற வேண்டும்’’ இதைக் கேட்ட மகரிஷிகள் எழுவரும் தனித் தனியே துருவனுக்கு தங்கள் அறிவுரைகளை உபதேசித்து அருளினார்கள்;``கோவிந்தனை ஆராதிக்காமல் மனிதனால் எந்த உயர்ந்த பதவியையும் அடைய முடியாது. அச்யுதனையே ஆராதனம் செய். பராபரனான ஜனார்த்தனன், பரமபுருஷன் எவனிடத்தில் பிரீதி கொள்கிறானோ அவனே குறைவு ஏதுமில்லாத அட்சய ஸ்தானத்தைப் பெறுவான்.

அந்தக் கோவிந்தனையே முதன்மையான ஸ்தானத்தைப் பெற நாட வேண்டும். ஹரியே பரப்ரம்மம். அவனே பரந்தாமன். அவனே பரமாத்மா. அந்த ஹரியை ஆராதித்தால் கிடைக்க முடியாத பதவியைப் பெறலாம். விஷ்ணுவை ஆராதித்துத்தான் தன்னுடைய மேலான இந்திர பதவியைப் பெற்றான். ஆகையால் நீயும் அந்த விஷ்ணுவையே ஆராதி. அந்த ஜனார்த்தனன், பிரீதியடைந்தால் உலகில் அடைய முடியாதது எதுவுமில்லை. விஷ்ணு பகவானை ஆராதித்தால் மனத்தினால் எதைக் கற்பனை செய்தாலும் அதை அடைந்துவிடலாம்.

குழந்தாய்! அப்படியிருக்க, மூன்று உலகத்திற்குட்பட்ட உத்தமோத்தமான ஸ்தானத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமா?’’ மஹரிஷிகளின் உபதேசங்களைக் கேட்ட துருவன், அவர்கள் கூறிய விஷ்ணுபகவானின் ஆராதனையை எப்படிச் செய்ய வேண்டும் என்று கேட்டான். அவர்கள் கூறினார்கள்; ``முதன்முதலில் மனத்திலிருந்து புற விஷயங்களை அப்புறப்படுத்த வேண்டும். பிறகு மனத்தை ஒருமுகப்படுத்தி, அந்த ஜகன்னாதனின் மீது நிலை நிறுத்த வேண்டும். ஏகாக்ர சித்தத்துடன் அவனை தியானித்து வர, அவனுடன் தன்மயத்தை அடையலாம்.

அப்பொழுது ``ஓம் ஹிரண்ய கர்ப்பரே! ரூபமானவரே! அவ்யக்த ஸ்வரூபியே! சுத்த ஞான புருஷனே! பிரதான வடிவானவரே! வாஸுதேவனே! உமக்கு நமஸ்காரம்’’ என்று நினைத்து அவரை தியானம் செய்து வரவேண்டும். சங்கு சக்கரத்தைக் கையில் வைத்துக்கொண்டு, மார்பிலே கௌஸ்துப மணியுடன் திவ்ய மங்கள ரூபத்துடன் கூடிய பரமாத்மாவைப் பூஜி’’ என்றுகூறி, ‘`ஓம் நமோ பகவதே வாசுதேவாய’’ என்ற 12 எழுத்து மந்திரத்தை அக்குழந்தையின் செவியில் உபதேசம் செய்தார்கள்.

துருவன் யமுனை நதிக்கரைக்குச் சென்றான். மதுவனம் எனும் புண்ணியமான இடத்தைத் தேர்ந்தெடுத்தான். அங்கே இருந்த புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, சர்வேஸ்வரனான பகவான் விஷ்ணுவை தன்னுடைய இதயக் கமலத்தில் தியானம் செய்து, வேறு எதைப் பற்றியும் கவலைப்படாமல், ``ஓம் நமோ பகவதே வாசுதேவாய’’ என்ற ஒரே மந்திரத்தை திரும்பத் திரும்ப உச்சரித்து தவம் செய்யத் தொடங்கினான்.

முதல் மாதம் பழத்தை மட்டும் சாப்பிட்டுத் தியானம் செய்தான்.

இரண்டாவது மாதம் இலை, தழை சாப்பிட்டுத் தியானம் செய்தான்.

மூன்றாவது மாதம் தீர்த்தம் மட்டும் பருகிவிட்டுத் தியானம் செய்தான்.

நான்காவது மாதம் வாயுவை மட்டும் எடுத்துக்கொண்டு தியானம் செய்தான்.

ஐந்தாவது மாதம் எதையும் உட்கொள்ளாது நின்றுகொண்டு தியானம் செய்தான்.

அதன் விளைவு என்ன தெரியுமா? அடுத்த இதழில்...

(தொடரும்)

முனைவர் ஸ்ரீ ராம்