Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அர்ஜுன உபதேசம்!

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 116 (பகவத்கீதை உரை)

விட்டுக் கொடுக்க கிருஷ்ணன் தயாராக இல்லை. இந்தப் போர் தர்மத்துக்கு சாதகமாக முடிய வேண்டும். கௌரவர்களால் மிகுந்த பாதிப்புக்குள்ளான பாண்டவர்களால்தான் அது முடியும், முடிய வேண்டும். இந்தப் போரில் ஆயுதத்தைக் கையில் எடுப்பதில்லை என்று துரியோதனனுக்கு வாக்களித்திருந்தார், அவர். போர் என்று தீர்மானமாகிவிட்ட பிறகு, தன் ஆதரவைக் கோரி அர்ஜுனனும், துரியோதனனும் தன்னிடம் வர, அப்போது அர்ஜுனன், தங்களுக்கு அவர் துணையாக வரவேண்டும் என்று கேட்டுக் கொள்ள, துரியோதனனோ கிருஷ்ணனின் ஆயுதங்கள் அனைத்தையும் தனக்கு அளிக்க வேண்டும் என்றும், அதோடு அவர் போரில் தங்களுக்கு எதிராக அவர் தாக்குதலில் ஈடுபடக் கூடாது என்றும் வாக்குறுதி பெற்றான்.

அதன்படி, தான் ஒதுங்கிக் கொண்டதால், இது முற்றிலும் பாண்டவர்களின் தனிப்பட்ட முயற்சியால் கிட்ட வேண்டிய வெற்றிதான் என்பது தீர்மானமாகி விட்டது. தன்னுடைய மானசீக ஆதரவு கூடவே இருக்கும்தானென்றாலும், அது யோசனையாகவோ, பாண்டவர்களுக்குச் சாதகமாக இயற்கையின் சில அமைப்புகளை திசை திருப்பி விடுவதாகவோ மட்டும்தான் இருக்கும். இந்த உத்திகள் அவர்களுக்கு உதவும். ஆனால், அதை ஏற்றுக் கொள்ளவும், பயன்படுத்திக் கொள்ளவும் அவர்கள் திட சிந்தனை உடையவர்களாக இருக்கவேண்டும்.

பிற நால்வரைப் போல அல்லாமல் அர்ஜுனன் மனத் தடுமாற்றம் கொள்ளக் கூடியவன் என்பதை ஏற்கெனவே அறிந்திருந்ததால், அவனுக்கு சாரதியாகப் பணியாற்றி, உடனுக்குடன் சில நுணுக்கமான போர் உத்திகளைச் சொல்லித் தர கிருஷ்ணன் விரும்பினார். ஆனால், ரொம்ப சோதனையாக இவன் ஆரம்பத்திலேயே அநியாயத்துக்குக் குழம்பிக் கிடக்கிறானே! இவனைத் தேற்றி சரி பண்ண வேண்டுமே! இவனுடைய தொய்வால் பிற நான்கு சகோதரர்களின் அரிய போர் முயற்சிகள் எல்லாமும் வீணாகிவிடும் போலிருக்கிறதே!

ஆகவே, இவனை முதலில் மனத்தளவில் எழுந்து நிற்கச் செய்ய வேண்டும். பிறகுதான் போர். இதில் வேடிக்கை என்னவென்றால், இதே அர்ஜுனன், ஒரு அரசகுமாரனுக்குப் போர் ஊக்கம் அளித்து அவனுக்கு தேர்ச் சாரதியாகவும் பணியாற்றியதுதான்! அந்தச் சம்பவம் நிகழ்ந்தது பாண்டவர்களின் அஞ்ஞாதவாச காலத்தில்!பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம் முடித்த அவர்கள் துரியோதனனின் மற்றுமொரு சூதாட்ட நிபந்தனையான ‘அஞ்ஞாத வாச'த்தை ஓராண்டு மேற்கொள்ள, விராட மன்னனைத் தஞ்சமடைந்தார்கள்.

எங்கேயும் அவர்கள் தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளக் கூடாது என்பது மிக முக்கியமான விதி! அதன்படியே தருமன், முனிவர் கங்கனாகவும், பீமன், சமையல்காரன் பலாயனனாகவும், அர்ஜுனன், பிருகந்நளை என்ற திருமங்கையாகவும், தாமக்கிரந்தி என்ற குதிரை பராமரிக்கும் ராவுத்தனாக நகுலனும், தந்திரிபாலன் என்ற ஆவினப் பாதுகாவலனாக சகாதேவனும், விரதசாரணி என்ற பணிப்பெண்ணாக திரௌபதியும் பெயர்களையும், தோற்றங் களையும் மாற்றிக் கொண்டு அந்த நாட்டில், விராட மன்னனின் ஆதரவுடன் வாசம் புரிந்தார்கள். அஞ்ஞாதவாச காலம் முடியும் தருணத்தில், துரியோதனன், அங்கிருப்பதை ஒற்றர் மூலமாகத் தெரிந்து கொண்ட துரியோதனன், தன் நண்பன் திரிகர்த்தனை விராட நாட்டின் தென்பகுதியை ஆக்கிரமிக்குமாறு கேட்டுக் கொண்டான்.

ஆனால், அங்கே விராடன், தன் ஆற்றலாலும், படைபலத்தாலும் திரிகர்த்தனை விரட்டி அடித்தான். விராட நாட்டை ஆக்கிரமித்து, உள்ளே நுழைந்து பாண்டவர்களைக் கண்டு பிடித்து விடலாம் என்ற தன் தந்திரம் பலிக்காமல் போனதால், அந்த நாட்டின் வட பகுதியைத் தானே போய்க் கைப்பற்ற முனைந்தான். தென்பகுதியை மீட்டுக் கொண்டபின் சகஜ நிலைக்குக் கொண்டுவர விராட மன்னன் முயற்சிக்க, அவன் மகனான உத்தரனுக்கு, வட பகுதியில் எதிரிகளை விரட்டியடிக்கும் பொறுப்பு வந்து சேர்ந்தது. என்னதான் ராஜகுமாரன் என்றாலும், இவனுக்குப் போர் என்றாலே பயம், உடல் உதறல். அப்போது பிருகந்நளையான அர்ஜுனன்தான் அவனுக்கு உதவியாக வந்தான். உத்தரனின் போர்த் தேரை செலுத்திக் கொண்டு போர்க்களம் வந்தான்.

ஆனால், தன் எதிரே திரண்டிருந்த எதிரிகளைப் பார்த்து அப்படியே வெலவெலத்துப் போய்விட்டான் உத்தரன். அச்சமயத்தில் அவனுக்கு தைரிய மூட்டியவன், இதே அர்ஜுனன்!

``அஞ்சல் அஞ்சல் நீ பகைவரை ஆருயிர் அடுதல்

துஞ்சல் என்றிவை இரண்டலால் துணிவு வேறுண்டோ

வெஞ்ச மம்தனில் வந்து புண் படாதினி மீண்டால்

வஞ்ச நெஞ்சுடை வஞ்சியர் என் சொலார் மறவோய்’’

- என்று தன் வில்லி பாரதத்தில், வில்லிப்புத்தூர் ஆழ்வார் விவரிக்கிறார்.

‘‘உத்தரா, அஞ்சாதே. இந்தப் போரில் நீ பகைவரை அழிக்க வேண்டும், அல்லது உயிர் துறக்க வேண்டும். இந்த இரண்டே இரண்டு வாய்ப்புகளைத் தவிர இப்போதைக்கு உனக்கு வேறு கதி இல்லை. எதிரிகளுக்கு பயந்து புறமுதுகிட்டு நீ ஓடினால், வஞ்சிக்கும் நெஞ்சுடைய வஞ்சிக் கொடி போன்ற பெண்கள் உன்னைப் பார்த்து எள்ளி நகையாட மாட்டார்களா?’’ என்று வீர அறிவுரை சொன்னவன் அவன்! ஒரு கட்டத்தில் உத்தரன் போர்வழிக்கே வரமாட்டான் என்று தீர்மானமாகத் தெரிந்தபோது, அவனை தேரைச் செலுத்தச் சொல்லி, தான் துரியோதனாதியருடன் திருமங்கையாகவே போரிட்டு விராட தேசத்துக்கு வெற்றியைத் தேடித் தந்தான்.

அதே அர்ஜுனன், இப்போது அந்த உத்தரனின் இன்னொரு பிம்பமாக நிற்கிறான்! தான் உத்தரனுக்கு அறிவுறுத்தியதைதான் கிருஷ்ணன் பலவாறாகத் தனக்கே போதிக்கிறார் என்பதை அவன் ஏன் உணரத் தலைப்படவில்லை? விசித்திரம்தான். அவ்வாறு அவனால் விரட்டப்பட்டவர்கள் துரியோதனன், கர்ணன், பீஷ்மர், துரோணர், விதுரன் மற்றும் கௌரவ தளபதிகள் என்பது இன்னும் விசித்திரமான உண்மை! அந்த அர்ஜுனனா இவன்? தங்களுக்குத் தஞ்சமளித்து காத்த விராடனுக்கு உதவுவதற்காக, அவனுடைய எதிரிகளைக் குறிவைத்துப் பந்தாடியவன், இப்போது அம்புகளற்ற அம்பறாத்தூணிபோல காலியாக, சோம்பி, அடங்கிக் கிடப்பதேன்?

ஒரு வீரன் என்ற வகையில் அவனுடைய வீர உணர்வை உசுப்பேற்றித் தூண்டிவிடுவதைவிட, அவனை ஒரு சாதாரண மனிதனாகவே பாவித்து அறிவுரை சொல்லி மனமாற்றம் நிகழ்த்தலாம் என்றுதான் கிருஷ்ணன் முயன்று வருகிறார்.

``ப்ரசாந்த மனஸம் ஹ்யேனம் யோகினம் ஸுகமுத்தமம்

உபைதி சாந்தரஜஸம் ப்ரஹ்மபூதமகல்மஷம்’’ (6:27)

‘‘சாந்தமான மனம் அடைந்த யோகிக்கு ரஜோ குணம் தலைதூக்குவதில்லை. அப்படி சச்சிதானந்த பரப்பிரம்மத்தோடு ஒன்றிய அவனுக்குள் உத்தமமான ஆனந்தம் நிறைகிறது.’’

தானே பிரம்மமாகிவிடும்போது, ஒரு யோகிக்கு உலகாயதப் பொருட்களில் ஈர்ப்பு இருப்பதில்லை. ஏனென்றால் அவனை, அந்த திட சித்தத்தில் இருள்சேர் இருவினைகளும் தீண்டுவதில்லை. ஒரு விஷயத்தில் ஈடுபட்டு முடிக்கும்போது அதன் விளைவு மோசமானதாக இருந்தால், அதாவது யாருக்கும் இன்பம் தரக்கூடியதாக இல்லாமல் இருந்தால், அல்லது யாருக்கேனும் அதனால் எந்த வகையிலாவது துன்பம் நேர்ந்தால், அது பாப காரியம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஆனால், அது ஒரு படிப்பினையாக அமையாதபோதுதான் இயற்றும் பாபங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. ‘அடுத்த முறை இப்படி நேராது’ என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொள்ளும் சுயநலம், மனதை அடுத்தடுத்த பாபச் செயல்களில் ஈடுபட வைக்கிறது. ஆபரணங்கள் பலவகை. ஆனால் அவற்றின் மூலம் ஒரே உலோகம்தான். விதவிதமான நகைகளைப் போல, விதவிதமான செயல்பாடுகள். விதவிதமான பின்விளைவுகள்.

ஆகவே மூலத்தைப் புரிந்து கொள் என்று அறிவுறுத்துகிறார் கிருஷ்ணன். இதில் தவறிழைத்து விட்டேன், அடுத்ததில் அவ்வாறு நடக்காது என்ற அதீத சுய நம்பிக்கை, தொடர்ந்து தவறுகளைச் செய்யத்தான் துணை போகின்றதே தவிர, எந்த பாவத்தையும் செய்யாமல் தவிர்க்க இல்லை. காரணம், மனசு. அதனால் பரப்பிரம்மத்தோடு ஒன்ற முடிவதில்லை. அதனால் எண்ணங்களில் ஆரம்பிக்கும் சிதறல், பேச்சிலும், செயலிலும் பிரதிபலித்து, துன்பத்தையே வழங்குகிறது. இப்போது கோயிலுக்கு பக்தர்களின் வருகை பிரமிக்க வைக்கிறது.

அத்தனை பக்தர்கள்! கோயிலில் கும்பாபிஷேகம் அல்லது வேறு ஏதேனும் திருவிழா என்றால் கட்டுப்படுத்த முடியாத எண்ணிக்கையில் பக்தர்கள்! இவர்களில் மனதார பக்தி செலுத்தவும், இறைவனைப் போற்றி மகிழவும் பலர் வரலாம்; சிலர், தனக்குக் கிடைத்திருக்கும் ஆதாயம் அந்த இறையருளால் என்ற ‘நம்பிக்கை‘யில் நன்றி காணிக்கை செலுத்த வருபவர்களாக இருக்கலாம். இதில் வேதனை என்னவென்றால், அறம் மீறி செயல் புரிந்து பொருளோ, புகழோ ஈட்டியவர்களும் அவ்வாறு காணிக்கை செலுத்த வருவதுதான்! இதைவிட கேலிக்குரிய வேதனை என்னவென்றால், அவ்வாறு காணிக்கை செலுத்தியது தன்னுடைய அடுத்த அதர்ம செயலுக்கு விசா கிடைத்து விட்டதாக அவர்கள் நினைத்துக் கொள்வதுதான்!

புராணத்திலும் இப்படிப்பட்ட கள்வர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களில் காலதூஷகன் என்பவனை உதாரணமாகச் சொல்லலாம். அவனுக்குச் செய்யும் தொழிலே தெய்வம்!  ஆமாம், ஸ்ரீவைகுண்டம் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீவைகுண்டப் பெருமாளை வழிபட்ட பிறகுதான் தினமும், கூட்டாளிகளுடன் தன் தொழிலை தொடங்குவான்.  அதோடு, தான் திருடி வரும் சொத்தில் பாதியை இந்தப் பெருமாளுக்கே அர்ப்பணித்து விடுவான்! செய்வது திருட்டுத் தொழில்தான் என்றாலும் அதிலும் தெய்வ நம்பிக்கையோடு ஈடுபடுவது, அந்த நம்பிக்கை தரும் வெற்றிக்கு ‘நன்றி காணிக்கை’ செலுத்துவது என்று ‘நாணயத்துடன் நடந்து கொண்டான் அவன்!

ஒருமுறை அவன், கூட்டாளிகளுடன் அரசனின் கஜானாவிலேயே கைவைத்து விட்டான். காவலர்கள் கொள்ளையர்களைப் பிடிக்க முனைந்தபோது காலதூஷகன் தப்பி ஓடிவிட, அவனது கூட்டாளிகள் சிக்கினார்கள். விசாரணையின்போது தங்கள் தலைவன் காலதூஷகன் என்றும் தங்களுடன் வந்தால் அவனைக் காட்டிக் கொடுப்பதாகவும் கூட்டாளிகள் தெரிவித்தார்கள். இதைக் கேள்விப்பட்ட காலதூஷகன் உடனே போய் பெருமாளைச் சரணடைந்தான். அவனைக் காக்கும் வகையில் பெருமாளே அவன் உருவில் போய் மன்னர் முன் நின்றார்.

கொள்ளை கும்பல் தலைவனின் தோற்றம் சற்று வித்தியாசமாக அரசனுக்குப் பட்டது மன்னனுக்கு. அவனை உற்றுப் பார்த்தபோது அங்கே பெருமாள் காலதூஷகனான நின்றிருந்தார்! அதைக் கண்டு திகைத்த மன்னன், அவர் இப்படிச் செய்ய என்ன காரணம் என்று வினவினான். ‘ஓரிடத்தில் குவிக்கப்பட்டிருக்கும் செல்வத்தில் ஒரு சிறு பகுதியாவது தர்ம காரியங்களுக்குப் பயன்படாவிட்டால் அங்கே அந்தச் செல்வம் நீடித்திருப்பது தகாது. என் பக்தன் காலதூஷகன் கொள்ளையன்தான் என்றாலும் அவன் தர்மத்துக்கென்று ஒதுக்கப்படாத மிகையான பொருட்களைத்தான் திருடினான். அதோடு தர்மத்துக்குச் சேர வேண்டிய தொகையை என்னிடம் கொடுத்து என் மூலம் பல தர்ம விஷயங்கள் நடைபெறச் செய்தான்.

உன்னிடமிருந்த செல்வத்தில் பெரும் பகுதி மக்கள் வரியாக செலுத்தியதுதான். ஆனால், நீயோ அதே மக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தர மறந்துவிட்டாய். ஆகவே அந்தப் பங்கை உன்னிட மிருந்து திருடி என்னிடம் சேர்த்து நீ செய்ய வேண்டிய கடமையை ஆற்றும்படி என் பக்தன் காலதூஷகன் என்னைக் கேட்டுக் கொண்டான். இதுதான் நடந்தது’’ என்று விளக்கம் கொடுத்தார் பெருமாள். அதைக் கேட்டு வெட்கித் தலைகுனிந்தான் மன்னன்.

அந்தக் கணமே தன் மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய உத்தரவிட்டான். அதோடு தனக்கு இவ்வாறு அறிவுக் கண்ணைத் திறந்த பரம்பொருள், அதே கோலத்திலேயே உலகோர் அனைவருக்கும் தரிசனம் அருளுமாறும் கேட்டுக் கொண்டான். அவர்தான் தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் வைகுண்டநாதப் பெருமாள். பொதுவாக, நியாயத்துக்குப் புறம்பானது என்று நன்கு தெரிந்தே ஒரு செயலில் ஈடுபடுவது, மனம் பக்குவப்படாததைத்தான் காட்டுகிறது. அதிலிருந்து மனதை மீட்க, அதனை பரமாத்மாவோடு இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டாக வேண்டும்.

(கீதை இசைக்கும்)

பிரபு சங்கர்