அம்பாளினுடைய மூன்று சொரூபங்களை துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்று மூன்றாகச் சொல்கிறோம். அதேபோன்று மூன்று நதிகளைச் சொல்லும்போது கங்கா, யமுனா, சரஸ்வதி என்றும் சொல்கிறோம்.
துர்க்கை, மஹாலட்சுமி போன்ற தெய்வங்களுக்கு சிவாலயங்கள், விஷ்ணு ஆலயங்களில் தனித்தனி சந்நதிகள் இருக்கும். ஆனால், சரஸ்வதிக்கு அபூர்வமாகவே சில இடங்களில் அதாவது கூத்தனூர் போன்ற இடங்களில்தான் கோயில் இருக்கும். சில கோயில்களில் சூட்சுமமாகத்தான் சந்நதியை அமைத்திருப்பார்கள்.
கங்கையும் யமுனையும் எப்படி ஆறாக வெளிப்படையாக வெளிப்பட்டு பிரவாஹமாக இருப்பதுபோல, சரஸ்வதி நதியானது சூட்சுமமாக ஓடிக் கொண்டிருக்கிறாள்.
இந்த வழிபாட்டு முறையில் பார்த்தாலும் சூட்சுமமாக இருக்கிறது.
கங்கை சிவ பெருமானுடைய சம்பந்தமாக சைவத்தில் இருக்கிறாள். யமுனை பெருமாளினுடைய கிருஷ்ணனுடைய பத்தினிகளில் ஒருத்தியாக இருக்கிறாள். வைஷ்ணவ சம்பந்தமாக இருக்கிறாள். இந்த இரண்டும் வெளிப் படையாக தெரிகிறது. ஆனால், சரஸ்வதி நதி அந்தர்வாஹினியாக ஓடிக் கொண்டிருக்கிறாள்.
மேலே சொன்னது மட்டும் விஷயமல்ல… இதற்குள் இன்னொரு சூட்சுமமும் அடங்கியுள்ளது.
கங்கா பிரவாஹம் என்பது ஞானத்தை குறிக்கக் கூடியது. யமுனா பிரவாஹம் என்பது பிரேமையை, பக்தியை குறிக்கக் கூடியது.
கங்கைக் கரையில்தான் எல்லாவிதமான உபதேசங்களும் நடந்திருக்கும். உபநிஷதங்களில் ஆரம்பித்து மத் பாகவதம் வரை எல்லாவித உபதேசங்களும் கங்கைக்கரையில்தான் நடந்திருக்கும். அப்போது கங்கா பிரவாஹம் என்பது ஞானத்தினுடைய வெளிப்பாடாக இருக்கிறது.
யமுனா பிரவாஹம் என்பது பிரேமையினுடைய வெளிப்பாடு. பக்தியினுடைய அடிப்படையானதும், பிரேமையினுடைய உச்சமான ராசலீலையும் யமுனா நதி தீரத்தில்தான் நிகழ்ந்தது.
ரமணபகவானை ஞானத்திற்கும், சைதன்யரை பக்திக்கும் சொல்வார்கள். ஆனால், ஞானத்திற்குள் பக்தியையும், பக்திக்குள் ஞானத்தையும் சரிசமமாக வைத்தே வெளிப்படுத்தினார்கள்.
இப்படி பக்தியும், ஞானமும் சங்கமம் ஆகும்போது, அவர்களுக்குள் நிகழ்வதை சூட்சுமமாகவே வெளிப்படுத்துவார்கள். யோக மார்க்கமாக அவர்களுக்குள் நிகழும் மாற்றங்களை வெளிப்படுத்துவார்கள். இந்த யோகமே நம்மை அவர்களை நோக்கி இழுக்கின்றது. இந்த யோகமே பக்தர்களுக்கு அற்புதங்கள் செய்கின்றது.
ஒரு மகானுடைய பக்தராக ஒருவர் மாறுவதற்கு முன்பு, ‘‘அவரிடம் நான் எப்படி ஈர்க்கப்பட்டேன் தெரியுமா. அவர் என்னவெல்லாம் அற்புதம் செய்திருக்கிறார் தெரியுமா’’ என்றும் சொல்வார்.
இப்படியாக மகான்கள் ஆகர்ஷணம் செய்வது, பக்தர்களுக்கு அற்புதங்கள் நடப்பது, பக்தர்களை காப்பாற்றுவது என்று எல்லாமே அவர்களுடைய யோகத்தினுடைய பிரபாவம். இந்த யோக மார்க்கம் சூட்சுமமானது. அந்த யோக மார்க்கமே சரஸ்வதியாகும்.
சரஸ்வதியை உபாசிக்க முதன்முதலாக எங்கு தொடங்க வேண்டும்?
அதற்கு முதலில் இயற்கையை பார்க்க வேண்டும். இதையும் நமக்கு எத்தனையோ மகான்கள் காண்பித்துக் கொடுத்திருக்கிறார்கள். இதற்கு உதாரணமாக ஜே. கிருஷ்ணமூர்த்தியையே சொல்லலாம். மரங்கள், மலைகள், சூரிய உதயம், சூரிய அஸ்தமனம், பறவையும் பள்ளத்தாக்கும் என்று சொல்லிக் கொண்டே போகலாம். இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். எல்லா மகான்களின் ஆசிரமங்களும் இயற்கை, சோலை, மலை சார்ந்த இடங்களில்தான் இருக்கும்.


