Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பெருங் காதலொன்று பெருங் கிணறான கதை

எங்கு உள்ளது?

* ராணிகி வாவ் (Rani-ki-Vav) குஜராத் மாநிலத்தில் உள்ள பாடன் (Patan) நகரில், சரஸ்வதி நதிக்கரையில் அமைந்துள்ளது.

முழு நிலவு பிரகாசித்துக் கொண்டிருந்த இரவுப் பொழுது. தென்றல் தீண்டும் இன்பத்தை ரசித்தபடியே நின்று கொண்டிருந்தாள் மகாராணி உதயமதி. கணவன் பீமதேவன் தொலைதூரத்தில் தெரிந்த நட்சத்திரத்தைப் பார்த்தபடியே, ‘‘தேவி! நமது படையை விரிவுபடுத்தி இருக்கின்றோம். ஆங்காங்கு கோயில்களையும் எழுப்பி இருக்கின்றோம். குடிதண்ணீருக்கான வசதிகளையும் செய்து கொண்டே இருக்கிறோம். பாலை வனத்திற்குள் எதிரிகள் புகாதபடி நமது படை வீரர்களும் நிற்கிறார்கள். ஆனாலும், எனக்குள் பாலைவனத்து மணல் கண்ணில் விழுந்தது போன்று ஏதோ ஒன்று விபரீதமாக நடக்கப் போகிறது என்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கிறது” என்றான்.

நிலவிடம் இருந்து பெற்ற குளுமையுடனே உதயமதி ‘‘அப்படியெல்லாம் எதுவும் நடக்காது அரசே!” என்று சொல்லியபடியே தனது கண்களில் துளிர்த்த நீரை அரசருக்குத் தெரியாமல் சுண்டி விட்டாள். ‘‘தேவி! நீர்ப்பாசனத்திற்காக அங்கங்கே சிற்றாறுகளுக்கு தடுப்பணைகளும் கட்டியிருக்கின்றோம். மஹி, மச்சு, அஜி, சரஸ்வதி, ரூபன் ஹிரன் இவற்றுடன் நர்மதா, சபர்மதி நதிகளும் தங்கள் பங்குக்கு நமக்கு நல்ல வளத்தைத் தருகிறது. ஆனாலும்.....” என்று மீண்டும் சஞ்சலத்துடனே பேசினான் அரசன் பீமதேவன்.

உறக்க கலக்கத்திலே அருகில் வந்த இளவரசன் கர்ண தேவனை அணைத்தபடியே அரசன் பீமதேவனும் உறங்கிப் போனான். நிலவொளியில் காய்ந்தபடியே உறங்குகின்ற கணவன், மகன் இருவரையும் பார்த்தபடியே நீண்ட பெருமூச்சுடன் மாடத்தின் பெரிய பளிங்குத் தூணுக்கு பின்புறம் நின்றிருந்த ஒற்றன் உக்ராவிடம் நெருங்கினாள்.‘‘என்ன செய்தி?'' ‘‘என்றவுடன் மகாராணி வணக்கம்!'' நமது ஒற்றள் ரூபதியின் செய்தி தாங்கள் கூறியது போன்று முகலாய அரசன் தனது படையுடன் பாலைவனத்திற்கு அருகிலே வந்து விட்டான். படுகாயங்களுடன் வந்த ரூபதியும் இறந்து விட்டாள். எந்த நொடியிலும் அவர்கள் படையெடுத்து வரலாம்! நாம்...” என்று சொல்லிவிட்டு ஒற்றள் உக்ரா மௌனமானான்.

உறங்கும் பாவனையில் இருந்த அரசன் ‘‘தேவி! நீ அனுப்பி இருக்கின்ற ஒற்றள் செய்தி தருவாள் என்பதற்காக காத்திருந்தேன். என் மனம் சொன்னது போலவே நடந்து விட்டது. நீ இளவரசரை பார்த்துக்கொள் என்ற படியே விஸ்தாரமான தனது அறைக்குள்ளே சென்றான். சிரத்தையுடன் தயாரிக்கப்பட்ட இரும்புக் கவசத்தை அணிந்தபடி அந்தப் புரத்திற்கு அருகில் நின்றிருந்த குதிரையில் ஏறியபடி பறந்தான். பின் தொடர்ந்தனர் வீரர்கள்.

ஒரு மாதத்திற்கு பின்பு செய்தி வந்தது. மன்னன் பீமதேவன் எதிரிப்படையை துவம்சம் செய்து வந்து கொண்டிருக்கின்றான் என்று. மகிழ்ந்தாள். உதயமதி வரவேற்புக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. வந்தது என்னமோ பீமதேவனின் உடல் மட்டுமே. தனது தந்தை மூலராஜனின் வீரத்தைப் போலவே பீமராஜனும் வீரத்துடன் எதிரியை புறம் தள்ளி சோலங்கி வம்சத்தை நிலைநாட்டச் செய்தான்.

கணவனின் இழப்பு உதயமதியை ராஜ காரியங்களிலும் ஈடுபடுவதை சற்றே குறைக்கச் செய்தது. 14 வயது சிறுவன் கர்ண தேவன் தன் தாயின் முகத்தைப் பார்த்து திரும்பத் திரும்பச் சொன்ன செய்தி நானும் என் தந்தையைப் போலவே வீரத்துடன் இருப்பேன். எனது பதான் நாட்டு மக்களுக்கு நான் நல்லது செய்வேன்.தனது காதல் கணவன் பீமதேவன் நினைவாக என்ன செய்வது?! காலம் முழுவதும் பதான் நாட்டு மக்கள் பீமதேவனைக் கொண்டாட வேண்டும். சிந்தனையின் தீவிரம் அதிகமாகி பல நேரங்களில் அமர்ந்த நிலையிலே உறங்க ஆரம்பித்தாள்.

இப்படி ஒரு நாள் அமர்ந்திருக்கையில் பீம தேவன் உதயா என்று அழைத்த வண்ணம் பொற்குவளை ஒன்றில் தண்ணீர் தருவது போன்ற காட்சி வந்து சென்றது. அந்தக் குவளை பல்வேறு கலை நுணுக்க சிற்ப வேலைப்பாடுகளுடன் இருந்தது கண்டு வியந்தாள். தன் கணவனின் நினைவாக என்ன செய்வது என்பது புரிந்தது. மகன் கர்ணதேவனை எழுப்பினாள்.

‘‘மகனே கர்ணா... தந்தையின் நினைவாக எனது பேரன்பின் வெளிப்பாடாக பதான் நகர மக்கள் பயனுரும் வகையிலே கோடை காலத்தில் மக்களின் தாகம் தீர்க்க கிணறு ஒன்று அமைப்போம்.” நடுநிசியில் தனது தாய் எழுப்பி ஆனந்தத்துடன் ஏதேதோ சொல்கிறாளே என்று விழித்தான். ஆயினும் தாயை ஆதரவோடு அணைத்துக் கொண்டான், இளவரசன் கர்ணதேவன்.

உதயமதி அதிகாலையிலேயே அமைச்சர் வஜ்ராவை அழைத்து வரச் சொன்னாள். மந்திரி சபை கூடியது.

‘‘அமைச்சர் பெருமக்களே! நமது அரசரின் நினைவாக மக்களின் பயனுக்காக இதுவரை எவருமே கட்டமைக்க முடியாத கிணறு ஒன்றை நாம் அமைக்க வேண்டும். அதற்கான நிலத்தைத் தேர்வு செய்யுங்கள். மிகச் சிறந்த சிற்பிகளையும் அழைத்து வாருங்கள். கட்டிட அமைப்பு விற்பன்னர்களையும் வரச் சொல்லுங்கள். இன்று காலையில இருந்து வேலை தொடங்கட்டும் இது அரசு ஆணை. வேலை செய்பவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டும். சரியான ஓய்வும் சரியான உணவும் சரியான தங்குமிடமும் தர வேண்டும். மகிழ்ந்து செய்யுங்கள். கொண்டாடி மகிழுங்கள். அரசனின் நினைவுச் சின்னத்தை!” மகாராணி உதயமதியின் இந்த ஆணையைக் கேட்டவுடன் மகிழ்ந்தார் பிரதம அமைச்சர்.

இதுவரை சோகத்தில் இருந்த மகாராணி சுறுசுறுப்புடன் ராஜகளம் கண்டது பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. (பொ. ஊ. காலம் 1062 ஆம் ஆண்டு ) தை மாதத்தின் 15ஆம் நாள் மதியம் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு காணி நிலத்திலே (12 ஏக்கர்) 65 தனுசு (மீட்டர்) நீளத்திற்கும் 20 தனுசு (மீட்டர்) அகலத்திற்கும் 28 தனுசு (மீட்டர்) ஆழத்திலும் கிணறு தோண்டும் பணி ஆரம்பித்தது. வேலை செய்பவர்களுக்கு சமைப்பதற்காக கூடாரங்கள் அமைக்கப்பட்டது.

அவர்கள் ஓய்வுக்கென்று பிரத்தியேகமாக வர்ண கூடாரங்கள் அமைக்கப்பட்டன. நீராகாரங்கள் இனிப்புடன் சேர்ந்து வழங்கப்பட்டது. உழைத்த களைப்புதீர சோம பானமும் வழங்கப்பட்டது. கூச்சலும் கொண்டாட்டமாக மகிழ்ச்சியுடன் பீமதேவனின் நினைவாலயம் பூமிக்குக் கீழே எழும்ப ஆரம்பித்தது. கிணறு தோண்டப்பட்டது. கிணற்றிலிருந்து நீர் வர ஆரம்பித்தது.

அதனை மறுபக்கம் சேர்த்து வைக்க ஆரம்பித்தனர். அடுத்த கட்ட நடவடிக்கைக்காக மீண்டும் சபை கூடியது மகாராணி உதயமதி பேச ஆரம்பித்தாள்.

‘‘அன்பான அமைச்சர்களே! கட்டிடக்கலை விற்பன்னர்களே! அடுத்ததாக கிணற்றின் நிலைத்தன்மைக்கு என்ன செய்ய வேண்டும்?!”

முதல் நிபுணர் எழுந்தார் ‘‘முதலில் கிணற்றுக்குள் சுற்றிலும் 292 தூண்கள் கட்டமைக்கப்பட வேண்டும்.” என்றார்.

தூண்களை இணைக்கின்ற கற்களுக்கிடையிலே ஷிவாக் மரக்கட்டைகளை வைத்து விடுங்கள். அப்பொழுதுதான் தூண்கள் நீரில் நனைகின்ற பொழுது மரக்கட்டைகள் பெரிதாகி இடைவெளியை இன்னமும் நெருக்கமாக்கும்'' என்றாள் மகாராணி உதயமதி.அனைவரும் பிரம்மித்துப் போய் நின்றனர். கட்டிடக்கலையின் நுணுக்கமும் தெரிந்து வைத்திருக்கின்றாள். வாழ்க அரசி... என்று முனுமுனுத்தனர்.

புன்முறுவலுடன் அடுத்ததாக என்றவுடன், ‘‘படிக்கட்டுகளை மிகப்பெரிய கற்கள் கொண்டு அமைத்து விடலாம். அதனுடைய பலத்திற்காக பக்கவாட்டிலே சிறு படிக்கட்டுகளையும் அமைத்து விடலாம். நாம் ஏற்கனவே கட்டியிருக்கின்ற சூரியன் கோவிலைப் போன்று ஏழு அடுக்குகளாக கட்டி விடுவோம். அது மேல் நோக்கி கோபுரம் போகின்றது. இது கீழ் நோக்கி கோபுரம் போகும் அவ்வளவுதான். தலைகீழாக கோவிலை கட்டுகின்றோம் என்பது போன்றதுதான் இது” என்றார் சிற்பி சம்போ.

‘‘பலே சம்போ'' என்றபடியே தனது ஆசனத்தில் இருந்து அரியாசனத்தில் இருந்து இறங்கி வந்த உதயமதி தனது கைகளில் இருந்த பொற்கடய வளையலை கழட்டிக் கொடுத்தாள்.

ஏழு நிலை கீழ் நோக்கிய மண்டபங்கள் ஆகிவிட்டது இனி அந்த மண்டபங்களை அலங்காரம் செய்வதற்கு என்ன செய்வது?! என்ற ராணியின் கேள்விக்கு சம்போ பதில் சொல்ல ஆரம்பித்தார். ‘‘மகாராணி அவர்களே! ஒன்றரை தசத்திற்கும் (1500க்கும்) மேற்பட்ட சிலைகளை சுற்றிலும் வடிப்போம். அவை விஷ்ணுவின் அவதாரங்களாகிய பலராமர், பரசுராமர், கல்கி, வாமனம், வராஹம்,புத்தர் சிலைகளாக வடிப்போம்” என்றார்.

மற்றொருவர் ‘‘விநாயகர் சித்தி புத்தி சிலைகளை வைப்போம்’’ என்றார்.‘‘நாககன்னிகள் மற்றும் அப்சரஸ் சிலைகளையும் வடிப்போம் என்றார் மற்றொரு சிற்பி. பைரவர்,திக்பாலர்களாகிய இந்திரன், அக்னி, குபேரன், வருணன் இவர்களது சிலைகளையும் வடிப்போம்..” என்றார்.சபாஷ் என்றாள் உதயமதி, ‘‘அப்படியே நான் சொல்வதையும் குறித்துக் கொள்ளுங்கள், இந்த பிரபஞ்சத்தின் பேராற்றல் பெண்களாலே வடிவமைக்கப்படுகிறது என்பதற்கிணங்க சுற்றிலும் பெண்களினுடைய ஒப்பனையையும், அவர்களுடைய அன்றாட பணிகளையும் சேர்த்து வடிவமையுங்கள். மகிஷாசுரமர்த்தினி 20 கரங்களுடனும் வாள், கேடயம், திரிசூலம், ஏந்தி அரக்கனின் தலையைக் கொய்த வண்ணம் இருக்கட்டும்.

ஏகபத்னி விரதனாகிய ராமனின் திருக்கரங்கள் நான்கு இருக்கட்டும் ஒரு கரத்தில் வில்லும் மற்ற மூன்று திருக்கரங் களிலே வாள், கேடயம், ஈட்டி ஏந்தியதாக இருக்கட்டும்” என்றாள்! அரசியின் அறிவாற்றலைக் கண்டு வியந்த அனைவரும் ‘‘மகாராணியார் வாழ்க! சோளங்கி வம்சம் வாழ்க! இளவரசர் கர்ணதேவன் வாழ்க!” என்றனர். பணிகள் ஆரம்பித்தது.

இரண்டு மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. தனது காதல் நினைவு சாம்ராஜ்யத்துப் பணிகளைக் காண்பதற்காக சற்றே வளர்ந்து இருபது வயதில் இருக்கும் தனது மகன் கர்ணதேவனுடன் வந்தாள் மகாராணி உதயமதி. ‘‘மகனே! கர்ணா ஆலோசனைகள் ஏதாவது....” என்றவுடன். ‘‘அம்மா! மீன்கள், தாவரங்கள் உருவங்களை தேவதைகளின் சிருங்கார சிற்பங்களுடன் இணைத்துக் கொள்ளலாம்...” என்றான். ‘‘சபாஷ் கர்ணா” என்று மகனைப் பாராட்டிய வண்ணம் சிறு அணைப்பைப் பரிசாகத் தந்தாள்.

பிரதான அமைச்சர் சுபராஜ், கிணறு தோண்டிய சுஜன் இருவரையும் ஆலோசனை கூடாரத்துக்குச் செல்லும்படி சொன்னாள். தனது மகன் கர்ண தேவனுடன் தானும் சென்றாள்.

‘‘அமைச்சரே அவசர காலகட்டங்களில் அரச குடும்பங்கள் செல்வதற்காக சுரங்கப்பாதை ஒன்று அமைக்க வேண்டும் சித்பூருக்குச் சென்றடைவதாக இருக்க வேண்டும். என்ன வழிமுறை? ஆனால் அந்தப் பணிகள் யாருக்கும் தெரியக் கூடாது’’ என்றவுடன் அமைச்சர் சுபராஜ், ‘‘மகாராணியார் அவர்களே! முதலில் சித்பூரிலிருந்து பதானின் இந்தக் கிணற்றிற்கு வரும் வழியைக் குறித்துக் கொள்ள வேண்டும். சித்பூரிலிருந்து தோண்ட ஆரம்பிக்க வேண்டும்” என்றார்.

சுஜன் நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? என்று மகாராணி உதயமதி கேட்டவுடன்’ ‘‘ஆம் மகாராணி அவர்களே! அமைச்சர் சொன்னது போன்று அங்கிருந்து தோண்டி வர வேண்டும். ஆனால், அது கிணற்றினுடைய மேட்டுப் பகுதியாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் கிணற்றில் ஏற்கனவே நாம் தேக்கி வைத்திருக்கிற நீர் சுரங்கப் பாதைக்குள் சென்று விடாமல் இருக்கும். இதற்குப் பின்பு நாம் படிக்கட்டுகள் வைத்து கிணற்றின் படிக்கட்டுகள் வழியாக மேலே வருவதாக மாற்றிக் கொள்ளலாம். அதற்கான கதவுகளையும் கூட கற்பலகையால் செய்து வைத்துவிடலாம்” என்றார்.

‘‘அப்படியே ஆகட்டும் அதற்கான பணிகளை நீங்கள் ஆரம்பியுங்கள். தனிக்குழு வைத்துக் கொள்ளவும். எந்த அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது என்பதில் ஜாக்கிரதையாக இருக்கவும். குறிப்பாக உயிர்ச் சேதம் இருக்கக் கூடாது” தாய்மையின் கருணை கண்டிப்புடன் சொல்லிவிட்டுக் கிளம்பினாள் மகாராணி உதயமதி. நாட்கள் சென்றன. 1062 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு மகாராணியாரின் காதல் கிணறு முடிவடைவதற்கு 18 ஆண்டுகள் ஆகின. இளவரசன் கர்மதேவனுக்கும் பட்டாபிஷேகம் செய்யப்பட்டு அவனும் அரியணையில் அமர்ந்தான். அவனுக்கும் திருமணமாகி குட்டி இளவரசன் பீமதேவன் வாள் பயிற்சி எடுக்க ஆரம்பித்திருந்தான்.

மகாராணி உதயமதியின் காதல் கிணறு நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கும் கொண்டாட்ட நாள். யானைகள் பிளிற சிறப்பான பூஜைகளுடன் ராணியின் கிணறு திறந்து வைக்கப்பட்டது.

‘‘எனது இனிய நாட்டு மக்களே! நமது அரசர் பீமதேவனின் நினைவாக எனது அன்பின் வெளிப்பாடாக பலரது உழைப்பால் இந்த அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. அருகிலேயே ஜீவநதி சரஸ்வதி ஓடுவதால் கடும் வெப்ப காலங்களிலும் கூட இங்கு நீர் இருக்கும். ஏழு நிலை மண்டபங்களாக இது இருக்கிறது. இந்த கிணற்றினுடைய அழகு இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டு களானாலும் நிலைத்து நிற்கும். நமது நாடு நீர்ப்பாசனத்தில் செழித்து நிற்கட்டும்” என்று கூறியவுடன் மக்கள் கரகோஷம் எழுப்பினர்.

தான் நினைத்த அந்தக் காதல் கிணறு தான் நினைத்த வண்ணமே உருவாகி இருப்பதில் மகிழ்ந்தாள் உதயமதி. அன்று இரவு பிரதான அமைச்சர் சுபராஜ், மகன் கர்ண தேவன், சேடிப் பெண் ஒருவள், கிணறு தோண்டிய சுஜன் அனைவரையும் அழைத்தாள். ‘‘சுரங்கப்பாதையில் செல்வோமா?!” அனைவரும் ஆவலுடன் உத்தரவு மகாராணி என்றனர்.

முதற் சாமத்தில் தீப்பந்தக்காரர் முன் செல்ல படிகளின் வழியே இறங்கினர். சிற்பங்களின் அழகைக் கண்ட வண்ணம், உயிர் பெற்று ஆடிய அப்சரஸ்கள் அழகை ரசித்த வண்ணமாக ஆறாம் நிலை மண்டபத்தில் இருந்த சுரங்கப்பாதையின் கற்பலகை கதவைத் திறந்தனர். மகன் கர்ணதேவனின் கரத்தைப் பிடித்தபடி மனம் நிறைய மகிழ்ச்சியுடன் நடந்தாள் உதயமதி.

உள்ளே ஆங்காங்கே நின்று கொண்டிருந்த தீப்பந்தம் பிடித்திருந்த சிற்பங்களை ரசித்த வண்ணமே அனைவரும் எட்டி நடை போட்டனர். சுரங்கப்பாதையை விட்டு வெளியே வந்தவுடன் அங்கே வைத்திருந்த பீமதேவனின் சிலையைப் பார்த்து நீண்ட பெருமூச்சு விட்டாள் மகாராணி உதயமதி. காற்றிலே கரைந்த தன் கணவனுடன் ஆனந்தமாக அவளும் கரைந்தாள்.

* இது 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட புகழ்பெற்ற படிக்கிணறு (Step well). சோலங்கி மன்னர் பீமதேவர் I-ன் நினைவாக ராணி உதயமதி கட்டியதாகக் கருதப்படுகிறது. ஏழு நிலைகளைக் கொண்ட இக்கிணறு, அதன் சிற்ப வேலைப்பாடுகளுக்காகப் புகழ்பெற்றது. 2014ஆம் ஆண்டு UNESCO உலகப் பாரம் பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.

* (கி. பி.1080 வாக்கில் கட்டப்பட்ட ராணியின் படிக் கிணறு வெள்ளத்தின் சேறு சகதியினால் மூடி விட, 1964ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அப்படியே புத்தம் புதிதாக இருந்தது சிறப்பாகும். இன்னமும் அப்படியே இருக்கிறது இனியும் அப்படியே இருக்கும் ஒரு முறையாவது சென்று வாருங்கள் அன்பர்களே! காதல் பேசும் கிணற்றைக் கண்டு வாருங்கள்! இது தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. நமது நூறு ரூபாய் நோட்டிலும் ராணி கிணறு படம் இருக்கிறது.

செய்தி: மகேஸ்வரி சற்குரு

படங்கள்: மது ஜெகதீஷ்