Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

கல்வித்தடை நீக்கும் தலம்

கல்வியில் கவனச் சிதறலையும், தடைகளையும் சில சமயம் கிரகங்கள் தந்து கொண்டிருக்கும். இதற்கு என்ன பரிகாரம்? நோயைப் பற்றி தெரிந்து கொண்டால் மருந்து (பரிகாரம்) பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இப்படி அமையும் கிரக தோஷங்களைப் போக்கி கொள்வதற்காகவும், கிரகங்கள் தரும் தடைகளைத் தாங்கிக்கொண்டு முன்னேறுவதற்கும், பல அற்புதமான ஆலயங்கள் நம்முடைய பாரத தேசத்தில் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் திருவஹீந்திரபுரத்தில் உள்ள ஹயக்கிரீவர் சந்நதி.

திருவஹீந்திரபுரம் என்பது கடலூருக்கு அருகில் கெடில நதிக்கரையில் உள்ள திருக்கோயில். மிக அழகான கோயில். ஒரு பக்கம் கெடில நதி ஓடிக்கொண்டிருக்கும். அதற்கு அசல் பெயர் கருட நதி. அதன் கரையை ஒட்டி ஆலயம் அமைந்திருக்கும். ஆலயத்தின் எதிரில் ஒரு சிறு மலை உண்டு. ஒளஷதகிரி என்று பெயர். இந்த மலை மீது ஏற 74 படிகள் உள்ளன. அந்த மலையின் மீது ஹயக்கிரீவர் சந்நதி இருக்கிறது.

இந்த ஊரின் பெயர் நாலாயிரப் பிரபந்தத்தில் ‘திருவயிந்திரபுரம்’ எனக் கூறப்பட்டுள்ளது. இப்பெயர் இன்று ‘திருவந்திபுரம்’ எனச் சுருங்கி விட்டது. இவ்வூர் புராணங்களில் ‘திருவகீந்திரபுரம்’ எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது. அயிந்திரன் என்றால் ஆதிசேடன் .ஆதிசேடன் வழிபட்ட தலம். ‘அயிந்தை’ என இலக்கியங்களில் வழங்கப்பட்டுள்ளது. தேவநாதப் பெருமாள், ஹேமாம்புஜவல்லித் தாயார் அருளும் அற்புதத் தலம்.

இத்தல இறைவனை, திருப்பதி பெருமாளாக நினைத்து திருப்பதிக்குச் செலுத்தும் நேர்த்திக் கடன்களை இங்கேயே செலுத்துகின்றனர். தேவநாதப் பெருமாளை வணங்குவோர் பெரிய பதவி, நிலைத்த செல்வம், மக்கட்பேறு, நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள் ஆகியவற்றைப் பெறுவார்கள்.

மூவராகிய ஒருவனை,

மூவுலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை,

தேவர் தானவர் சென்று சென்று இறைஞ்சத்

தண் திருவயிந்திரபுரத்து

மேவு சோதியை.

- என்று இத்தலத்துப் பெருமாளை திருமங்கையாழ்வார் போற்றுகின்றார்.

கல்வியில் தடை உள்ளவர்கள், தங்கள் குழந்தைகளை ஒருமுறை இங்கு அழைத்து வந்து, கீழேயுள்ள தாயாரையும் பெருமாளையும் சேவித்து விட்டு, எதிரே உள்ள மலைமீது அருள்தர அமர்ந்திருக்கும் ஹயக்ரீவரைச் சென்று சேவிக்க வேண்டும். புதன்கிழமை, வியாழக் கிழமை, நவமி, சரஸ்வதி பூஜை அன்று சென்று வணங்குவது மிகவும் சிறப்பு.

இந்த மலை மீதுள்ள அச்வத்த மரம் உண்டு. அந்த மரத்தின் கீழ் அமர்ந்துதான், ஸ்ரீ மந்நிகமாந்த மஹா தேசிகன், என்னும் வைணவ ஆச்சாரியார் கருட மந்திரத்தை ஜெபித்தார். அப்போது கருடாழ்வார் தேசிகனுக்கு ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்தார். அவருக்குச் சகல கலைகளும் வசமானது. விஜயதசமி நாள் அன்று இந்த ஊருக்குப் பக்கத்திலிருப்பவர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியை இங்கே மலையேறி ஹயக்ரீவரை வழிபட்டே துவங்குகின்றனர்.

பரிமுகக் கடவுள் எனும் ஹயக்ரீவர், ஞானத்தின் இருப்பிடமாகத்திகழ்பவர். கலைமகளின் குரு ஹயக்ரீவ மூர்த்தி. ஹயக்ரீவர் மந்திரம் சொல்லி தினம் பரிமுகக்கடவுளை குழந்தைகள் வணங்கி வந்தால் தேர் வுகளில் நல்ல மதிபெண்கள் பெற்று, தேர்ச்சி பெறுவார்கள். ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சூட்டி, வெல்லம் கலந்த சுண்டலை நைவேத்தியம் செய்து வழிபட்டால் கல்வியில் முன்னேற்றம் அடையலாம்.