Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மருத்துவ ஜோதிடத்தில் ஏழாம் பாவம்

ஜோதிடத்தில் ஏழாம் பாவம் என்பது பொதுவாகத் திருமணத்தையும், கூட்டாளிகளையும் குறிக்கும் இடமாகக் கருதப்படுகிறது. ஆனால், மருத்துவ ஜோதிடத்தில் ஏழாம் பாவத்திற்கு மிக முக்கியமான பங்கு உண்டு.

ஏழாம் பாவம் என்பது உடலில் இடுப்புப் பகுதி மற்றும் அதற்குச் சற்று கீழே உள்ள உறுப்புகளைக் குறிக்கிறது. ஏழாம் பாவம் பாதிக்கப் படும்போது அல்லது அந்த இடத்தில் பாப கிரகங்கள் அமரும்போது பின்வரும் உறுப்புகளில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடலில் நீரைச் சுத்திகரிக்கும் முக்கிய உறுப்பான சிறுநீரகங்கள் ஏழாம் பாவத்தின் கட்டுப்பாட்டில் வரும். சிறுநீர் தொடர்பான பாதைகள் மற்றும் உறுப்புகள், இடுப்புப் பகுதி, முதுகெலும்பின் கீழ் பகுதி மற்றும் இடுப்பு எலும்புகள், இனப்பெருக்க மண்டலம் சார்ந்த பாகங்கள் ஏழாம் பாவத்தில் வரும்.

பொதுவான தோல் ஆரோக்கியத்தில் சுக்கிரன் (ஏழாம் அதிபதி) மற்றும் ஏழாம் பாவத்திற்குத் தொடர்பு உண்டு. ஏழாம் பாவம் பலவீனமாக இருந்தாலோ அல்லது ராகு, கேது, சனி போன்ற கிரகங்களின் பார்வை பெற்றாலோ சிறுநீரகக் கற்கள், சிறுநீரகச் செயலிழப்பு அல்லது சிறுநீர் பாதையில் தொற்று, தீராத முதுகு வலி அல்லது இடுப்பு எலும்புத் தேய்மானம் முதலிய பிரச்னைகள் ஏற்படலாம். சுக்கிரன் மற்றும் ஏழாம் பாவம் பாதிக்கப்பட்டால் சர்க்கரை நோய்க்கான வாய்ப்புகள் அதிகம். பெண்களுக்குக் கருப்பை சார்ந்த கோளாறுகளும், ஆண்களுக்கு விந்தணுக்கள் சார்ந்த பலவீனங்களும் ஏற்படலாம்.

என் ஜாதகத்தில் ஏழாம் அதிபதி எட்டுக்குரிய புதனுடன் இணைந்து ராகு சாரத்தில் இருக்க, சுக்கிரன் 12ல் இருக்கிறார். நரம்புப் பிரச்னைகளும் (புதன்), நீரிழிவுப் பிரச்னைகளும் இருபது வருடங்களுக்கும் மேலாக இருக்கிறது.

ஏழாம் பாவத்தில் அமரும் கிரகத்தைப் பொறுத்து பாதிப்பின் தன்மை மாறும். செவ்வாய் தொடர்பு அறுவை சிகிச்சை, அதிக உஷ்ணம் சார்ந்த நோய்கள், ரத்தக் கசிவு பிரச்னைகளையும், சனி அமர நாள்பட்ட நோய்கள், சிறுநீரகக் கற்கள், வாத நோய்கள் சங்கடங் களும் ஏற்படலாம். ராகு/கேது இருந்தால் கண்டறிய முடியாத நோய்கள் அல்லது அலர்ஜி தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம். சுப கிரகம் பார்க்க இந்த உபத்திரவங்கள் கட்டுப்படும்.

இனி, பொதுவாக, ஏழாம் பாவத்தில், சூரியன் முதல் ராகு-கேது வரை கிரகங்கள் இருந்தால் என்ன விதமான விளைவுகள் ஏற்படும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். ஆனால், இவை பொதுவான பலன்கள்.

பலன்களைத் தீர்மானிக்கும்போது, இந்த விஷயங்களை மற்ற பல விஷயங்களில் ஒரு விஷயமாக எடுத்துக் கொள்ளலாமே தவிர, இதுவே முடிந்த முடிவாக எடுத்துக் கொள்ள முடியாது.

காரணம், எப்பொழுதும் ஒரு குறிப்பிட்ட பாவ பலனை அந்த குறிப்பிட்ட பாவம் மட்டுமே தீர்மானிப்பது கிடையாது. அதுபோல அங்கே அமர்ந்த கிரகம், எந்த நட்சத்திர சாரத்தில் இருக்கிறது, அந்தக் கிரகத்தை வேறு ஏதேனும் கிரகங்கள் பார்க்கிறார்களா சேர்ந்து இருக்கிறார்களா என்ற பல விஷயங்களை கவனித்துத்தான் பலனை முடிவு செய்ய வேண்டும். ஆனால் அடிப்படையான விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்கு, நமக்கு இந்தக் கணக்கீடுகள் உதவும்.

ஏழாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் அழகான, மென்மையான மனதுடைய துணை அமைவார். மன ரீதியான பிணைப்பு அதிகம் இருக்கும். சந்திரன் தேய்பிறையாக இருந்தால் மனக்கசப்பு ஏற்படலாம். இதில் சந்திரனின் நிலையைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

6,8,12 க்குரியவர் சாரம் பெற்றாலோ, சனி ராகு - கேது சேர்க்கை இருந்தாலோ எதிர்மறையான விளைவுகள் அதிகம்.ஏழில் உள்ள சந்திரனால் மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு மற்றும் புகழ் கிடைக்கும். உணவு, திரவப் பொருட்கள் அல்லது கலை சார்ந்த தொழில்கள் சிறப்பாக இருக்கும்.

ஏழாம் பாவத்தில் சூரியன் இருக்க துணையுடன் கருத்து வேறுபாடுகள் அல்லது ஈகோ மோதல்கள் வரலாம். துணை அதிகாரமிக் கவராக இருப்பார். சமூகத்தில் கௌரவம் கிடைக்கும், ஆனால், மற்றவர்களை ஆதிக்கம் செலுத்தும் குணம் இருக்கும். அரசாங்கத் தொடர்பு அல்லது அரசியல் மூலம் லாபம் வரும் வாய்ப்பு உண்டு. கூட்டுத் தொழிலில் தலைமைப் பண்பு வெளிப்படும்.

7-ல் சந்திரன் இருப்பது ஒருவர் மருத்துவராவதற்கு அல்லது மருத்துவத் துறையில் ஒரு சிறந்த ஆளுமையாகத் திகழ்வதற்கு மிகவும் சாதகமான அமைப்பாகும். ஏழாம் பாவம் என்பது பொதுமக்கள் தொடர்பு மற்றும் நோயாளிகளைக் கவனிக்கும் விதத்தைக் குறிக்கும். சந்திரன் என்பது மனோகாரகன் மற்றும் தாய்மை உணர்வு கொண்ட கிரகம். நோயாளிகளிடம் பரிவுடனும், கனிவாகவும் நடந்து கொள்ளும் குணம் இவர்களுக்கு இயல்பாகவே இருக்கும்.

மருத்துவ ஜோதிடத்தில் சந்திரன் திரவப் பொருட்கள், மூலிகைகள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கு அதிபதியாவார். எனவே, மருந்தியல் அல்லது திரவ நிலை மருந்துகள் குறித்த அறிவு இவர்களுக்கு அதிகம் இருக்கும்.சந்திரன் மனதைக் குறிப்பவர் என்பதால், மற்றவர்களின் மனநிலையைப் புரிந்து கொள்வதில் இவர்கள் கில்லாடியாக இருப்பார்கள். இதனால் சிறந்த மனநல மருத்துவராகும் வாய்ப்பு உண்டு. லக்னத்தில் சந்திரன் இருந்தாலும், அவர் ஏழாம் பாவத்தோடு தொடர்பு கொள்வதால், மருத்துவராகும் வாய்ப்பும், அல்லது மருத்துவர் துணைவராக (கணவன்/மனைவி) இருக்கும் வாய்ப்பும் அதிகம்.

7-ல் சந்திரன் இருப்பதால் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் ஆகும் வாய்ப்பு அதிகம். சந்திரனின் தாய்மைப் பண்பு இதற்கு உதவும்.மற்றவர்களின் மன அழுத்தத்தைப் போக்கும் ஆற்றலால் மனநல மருத்துவர் ஆகலாம்.

நோயாளிகளைப் பராமரிப்பதில் சிறந்து விளங்குவார்கள். செவிலியர் ஆகும் அமைப்பும் உண்டு. சந்திரன் உணவைக் குறிப்பவர் என்பதால் உணவு முறை நிபுணர் துறையும் இவர்களுக்குச் சிறப்பாக வரும்.

ஆனால், 7-ல் சந்திரன் மட்டும் இருந்தால் போதாது, சில கூடுதல் சேர்க்கைகள் மருத்துவத் தொழிலை உறுதிப்படுத்தும்: செவ்வாயின் தொடர்பு வேண்டும். தொழில் ஸ்தானமான 10-ஆம் இடத்தின் அதிபதி சந்திரன் அல்லது செவ்வாயுடன் தொடர்பு பெற்றிருக்க வேண்டும். லக்னாதிபதி வலுவாக இருந்து, அவர் 6-ஆம் இடமான ரோக ஸ்தானத்துடன் (நோய்களைக் குறிக்கும் இடம்) சுபமான தொடர்பு கொண்டிருந்தால், நோய்களைக் குணமாக்கும் மருத்துவராக முடியும்.

7-ல் சந்திரன் இருப்பதால் நோயாளிகள் மத்தியில் மிகவும் பிரபலமான மருத்துவராகத் திகழ்வார்கள். இவர்களுடைய ஒரு புன்னகையும், கனிவான பேச்சுமே நோயாளியின் பாதி நோயைக் குணப்படுத்திவிடும். சந்திரன் தேய்பிறையாக இருந்தாலோ அல்லது சனி, ராகு போன்ற பாவ கிரகங்களின் பிடியில் இருந்தாலோ, இவர்களுக்கு மருத்துவப் படிப்பில் தடைகள் வரலாம் அல்லது அதிக மன அழுத்தம் ஏற்படலாம்.

இனி, ஏழாம் பாவத்தில் செவ்வாய் இருந்தால்? அதையும் பார்க்கலாமே...