Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மனம் மாறிய கொள்ளையன்

ஊர் எல்லையில், ஏராளமான மரங்கள் கொண்ட அடர்ந்த காடு இருந்தது. காட்டில் `அங்குலிமாலன்’ என்ற கொள்ளைக்காரன் வாழ்ந்துவந்தான். கடுகு அளவுகூட இரக்கம் இல்லாதவன். அவன் இருக்கும் காட்டின் பக்கத்தில் யாராவது வந்தால், அவர்களிடம் உள்ள எல்லா பொருட்களையும் கொள்ளை அடித்துவிடுவான். எதிர்த்து ஏதாவது பேசினால், தலையைச்சீவிவிடுவான். தன் இஷ்டம் போல கொலையும் கொள்ளையும் செய்துவந்த அங்குலிமாலன், அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. அவனிடம் ஒரு விசித்திரமான பழக்கம் இருந்தது. அவனிடம் மாட்டிக் கொள்பவர்களின் சுண்டுவிரல்களை மட்டும் வெட்டி எடுத்துக்கொள்வான். அவைகளை மாலையாகக் கட்டி கழுத்தில் போட்டுக்கொள்வான். அந்த சுண்டு விரல், மாலையுடனே உலவிக கொண்டிருப்பான். அங்குலிமாலனைக் கண்டு பயந்து மக்கள் யாருமே அந்தப் பக்கமே போவதில்லை.

ஒருநாள், ``என்ன இது யாருமே இந்த பக்கம் வரமாட்டேன் என்கிறார்களே? இன்று யாராவது வருகிறார்களா என்று பார்ப்போம்’’ என்று சிந்தனை செய்துகொண்டிருந்தான், அங்குலிமாலன். அவன் கண்கள் வழியையே பார்த்துக்கொண்டிருந்தன. அப்போது தூரத்தில் ஒரு துறவி வந்துகொண்டிருந்தார். அங்குலிமாலன் அவரைப் பார்த்துவிட்டான். அவன் கண்களில் மகிழ்ச்சி பொங்கியது. உடனே அந்தக்கொலைகாரனின் உடம்பு முழுவதும் சுறுசுறுப்பு பற்றிக் கொண்டது.

``ஏய்.. சாமியாரே.. அப்படியே நில்லு’’ என்று கத்தியபடியே மூச்சிரைக்க ஓடினான், அங்குலிமாலன். ஆனால், அவனால் துறவியைப் பிடிக்க முடியவில்லை. ``நில்லு... அப்படியே...’’ என்று கத்தினான். ``உன் குரல் கேட்டவுடனையே நான் நின்றுவிட்டேன். அன்புக்குழந்தாய் யார் நீ’’ என்றார், துறவி. அங்குலிமாலன் அவரை நெருங்கி வியப்போடு பார்த்தான். கொலைகாரனான அவனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

நம்மை கண்டால் எல்லோருமே உடல் நடுங்க குடல் நடுங்க ஓடுவார்கள், இவர் ஓடவில்லை. அத்துடன் அன்போடு என்னை குழந்தாய் என்று வேறு சொல்கிறாரே இவர் முகத்தைப் பார்த்தால்தான் குழந்தையைப் போல கள்ளம் கபடம் இல்லாமல் இருக்கிறது என்று எண்ணியபடியே அங்குலிமாலன் அந்தத் துறவியை ஒருமுறை நன்றாகச்சுற்றி வந்து பார்த்தான். துறவி, அந்த திருடனிடம், ``குழந்தையே என்ன தேடுகிறாய்? நீ இதுவரை பொன்னையும் பொருளையும் தேடித்தேடி அலைந்துகொண்டிருந்தாயே தவிர, உண்மையான அன்பையும் சந்தோஷத்தையும் தேடவில்லையே’’ என்று அமைதியுடன் சொன்னார். அதைக் கேட்டு அங்குலிமாலன் திகைத்தான்.

``நான் உன்னிடம் அறிவுரை கேட்க வரவில்லை. உன் சுண்டு விரலை கேட்கத்தான் வந்தேன். கொடு அதை’’ என்று கத்தினான். துறவி கவலைப்படவில்லை. ``என் சுண்டுவிரல் தானே உனக்கு வேண்டும் இந்தா எடுத்துக்கொள் என் அன்புக் குழந்தாய். உனக்கு தராமல் வேறு யாருக்குக் கொடுக்கப் போகிறேன்’’ என்று சொல்லிய படியே கைகளை அங்குலிமாலன் முன்னால் நீட்டினார். ``விரலை மட்டுமல்ல உன் உயிரையும் சேர்த்து எடுத்து விடுவேன். என்னை யார் என்று நினைத்தாய்’’ என்று கத்தி, ``என் பெயர் அங்குலிமாலன்’’ என்று கம்பீரமாக கூறினான்.

``அன்பனே என் உயிரை எடுப்பதன் மூலம்தான் உனக்கு அமைதி கிடைக்கும் என்றால், என் உயிரையும் நீ எடுத்துக் கொள்ளலாம்’’ என்று பொறுமையுடன் பதில் சொன்னார், துறவி. இவ்வளவு தைரியமான அந்த துறவி, உலகம் முழுவதற்கும் தெரிந்த `கௌதம புத்தர்’ உயிரை வேண்டுமானாலும் எடுத்துக்கொள் என்று சொன்ன புத்தரின் கருணை, கொள்ளைக்காரனான அங்குலிமாலனை மாற்றியது. அமைதி தவழும் முகம், கருணை வழியும் கண்கள், முதலியவைகளுடன் தியாகத்தின் உருவமாகவே திகழும் புத்தரின் கால்களில் விழுந்து வணங்கினான்.

``சுவாமி, உங்களைப் போன்று அன்பு உள்ளம் கொண்டவர்களை நான் பார்த்ததே இல்லை. நான் திருந்திவிட்டேன். இனி யாரையும் கொல்லமாட்டேன். கொள்ளை அடிக்க மாட்டேன். இது சத்தியம்’’ என்று சொல்லி கைகளைக்கூப்பினான். அப்போது அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது. திருந்தியவனாக திருவடிகளில் விழுந்து அங்குலிமாலனை நெஞ்சோடு நெஞ்சாக கட்டி அணைத்துக் கொண்டார், புத்தர். அவனை தன்னுடன் மடத்திற்கு அழைத்துச் சென்று, சகோதரனாகவே அறிமுகப்படுத்தினார். அங்கிருந்த மற்றவர்களும் அங்குலிமாலனை சகோதரனாக ஏற்றுக் கொண்டார்கள். மறுநாள் பொழுது விடிந்தது. அந்த நாட்டு மன்னர், தன் படைகளுடன் வந்து புத்தரை வணங்கினார்.அப்போது புத்தர் தனியாக இருந்தார்.

``என்ன மன்னா.. ஏதோ போர்க்களத்திற்கு கிளம்புகிறாய் போல் இருக்கிறது. என்ன விஷயம்?’’ என்று மன்னரிடம் கேட்டார், புத்தர். ``ஆமாம் குருதேவா.. எல்லோரையும் நடுங்கச்செய்துகொண்டிருக்கும் பொடியவனான அங்குலிமாலனை ஒழிப்பதற்காகத்தான் இப்படி படைகளுடன் கிளம்பியிருக்கிறேன். குருதேவரான தங்களிடம் அதற்காக ஆசியை பெற வந்திருக்கிறேன்’’ என்று பதில் சொன்னார், மன்னர். உடனே புத்தர், ``மன்னா.. கொடியவனான அங்குலி மாலன் திருந்தி ஒரு துறவியாக வாழ்கிறான் என்று வைத்துக்கொள். அப்போதும் அவனைக் கொல்வாயா’’ என்று கேட்டார்.

``குருதேவா.. அங்குலிமாலன் திருந்தி துறவியாக மாறுவதாவது? ஒருவேளை நீங்கள் சொல்வது போல் அங்குலிமாலன் திருந்தி துறவியாக மாறினால், அவனுக்கு தலைதாழ்த்தி வணங்குவேன். கொல்ல மாட்டேன்’’ என்று பதில் சொன்னார். மன்னரின் வாக்குறுதியைக் கேட்ட புத்தர், ``அப்படியா.. சரி என்னுடன்வா’’ என்று சொல்லி, மன்னரைத்தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். ``அங்கே பார்’’ என்று மன்னருக்கு காட்டினார். புத்தர் காட்டிய இடத்தில், அங்குலிமாலன் அமைதியாகச் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தான். அதைப் பார்த்த மன்னர்,

``குருதேவா.. என்ன ஆச்சரியம் இது! எவ்வளவோ முயற்சிகள் செய்தும் அங்குலிமாலனை என்னால் அடக்கமுடியவில்லை.

மக்களின் சுண்டுவிரல்களை வெட்டி மாலையாக கழுத்தில் போட்டுக் கொண்டு, அதன் காரணமாக அங்குலிமாலன் என்று பெயர் கொண்ட இவனை நீங்கள் சுண்டுவிரலைகூட அசைக்காமல் திருத்திவிட்டீர்களே. அன்பும் கனிவும் இரக்கமும் அமைதியும் கொண்ட உங்களை வணங்குகிறேன்’’ என்று சொல்லி, அங்கேயே புத்தர் திருவடிகளில்விழுந்து வணங்கினார்.

தீயவர்களையும் நல்லவர்களாக திருத்திவிட முடியும் என்பதற்கு புத்தர் வாழ்வில் நடந்த இந்த நிகழ்ச்சியே உதாரணம்.

V.R.சுந்தரி