பகுதி 11
திருவரங்கனின் திருவடியை அலங்கரிக்கிறது, பாதுகை. அந்த பாதுகையை அலங்கரிப்பது அதில் பதிக்கப்பட்டிருக்கும் ரத்தின கற்கள். அந்த கற்களின் வண்ணங்கள் எல்லாம் எப்படி ஸ்வாமிஸ்ரீ நிகமாந்த மகா தேசிகனின் எண்ணத்திற்குள் நுழைந்து, அவரின் அந்த கற்பனையும் கவி நயமும் கை கோர்த்துஸ்ரீ பாதுகா சஹஸ்ரத்தின் “மரகத பத்ததி” (மரதக பத்ததி) யாகவும் “இந்த்ரநீலபத்ததி” யாகவும் வெளி வந்திருக்கின்றன என்பதை தான் இன்றைய பகுதியில் நாம் அனுபவிக்க இருக்கிறோம்.
துளசியை போல அற்புதமான பச்சை வண்ணத்தை தன்னோடு கொண்டு திருவரங்கனின் திருவடிக்கு அழகு செய்து கொண்டிருக்கிறது அந்த மரகதம். திருமாலுக்கே உரியவள் என்ற பெருமை துளசிக்கு உண்டு. துளசியின் வாசத்தோடு மட்டுமே வாசம் செய்பவர் அல்லவா திருமால்? ஹரி தத்வத்தை துளசி காட்டுவதை போலவேதான் பாதுகா தேவியும் காட்டி கொடுக்கிறாள். திருமாலுக்கே உரியவளாக இருப்பவள் துளசியை போலவே பாதுகா தேவியும்தான். கருத்மான் என்றும் பெரிய திருவடி என்றும் போற்றக்கூடிய கருடனோடுகூட சம்பந்தவட்டவளாகவும் இருக்கிறாள் பாதுகா தேவி.
திருமால் கருடனின் மீதமர்ந்து கொண்டு தானே வருவார்? அப்படி திருவரங்கனை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அழைத்து செல்வதிலும் மற்றும் மரகத கல்லின் தேவதையாக இருக்கக் கூடியவரான கருட பகவானோடு பச்சை நிற ஒற்றுமை காரணமாகவும் இருக்கக் கூடிய பாதுகா தேவியை வணங்குகிறேன் என்றே இந்த “மரகத பத்ததி” யின் முதல் ஸ்லோகத்தில் சாதிக்கிறார் ஸ்வாமி தேசிகன்.
“வந்தே காருத்மதீம் வ்ருத்த்யா
மணிஸ்தோைமைஶ்ச பாதுகாம்
யயா நித்யம் துலஸ்யேவ
ஹரிதத்த்வம் ப்ரகாஶ்யதே”
துளசியை போல, பாதுகாதேவி இருக்கிறாள் என்று முதல் ஸ்லோகத்தில் (661) காட்டிய தேசிகன், 664 வது ஸ்லோகத்தில்,
``ஹரித: ஸஹஸா ஹரிந் மணீநாம்
ப்ரபயா ரங்க நரேந்த்ர பாதரக்ஷே
துளஸீதல ஸம்பதம் ததாதி
த்வயி ப்கதைர் நிஹித: ப்ரஸூநராஶி:’’
- என்கிறார்.
பாதுகையின் மீது பக்தர்கள் மலர்களை கொண்டு சேர்க்கின்றனர். அந்த மலர்களின் மீதெல்லாம் பாதுகையில் உள்ள மரகதத்தின் பச்சை நிறம் படர்கிறதாம். அப்படி அந்த பச்சை நிறத்தை மரகத மணியிலிருந்து உள்வாங்கி கொண்டதால், பல வண்ண மலர்கள் எல்லாம்கூட தங்கள் வண்ணங்களை விட்டு பச்சை நிறத்தாலான பூக்கள் போலவே காட்சி அளிக்கிறதாம். இதை பார்க்கும் போது, அங்கே துளசி இலைகள் கொண்டு பாதுகையை பூஜித்ததை போலவே இருக்கிறதாம்.
துளசி இலைகளின் மேன்மையை பார்த்து பாதுகா தேவி பூரிப்பு அடைகிறாளாம். பாதுகா தேவி எப்படி அந்த திருமாலின் திருவடிக்கு மட்டுமே ஏற்றவளாக இருக்கிறாள் என்று பார்த்து பூரிப்பு அடையும் துளசி, நாமும் அந்த பாதுகா தேவியை போலவே ஆகனும் என்று எண்ணுகிறாளாம். பாதுகா தன் மீது பொருத்தப்பட்டிருக்கும் மரகத கற்களாலே பச்சையாக இருக்கிறாள், நாமும் அப்படியே பச்சை நிறம் கொண்டவளாக மாறி பெருமாளுக்கு கைங்கர்யங்கள் செய்வோம் என்று எண்ணிய துளசி தன்னுடைய தளங்களாலே, இலைகளாலே பச்சையாக மாறி விட்டாள் என்றே கவிதார்கிக சிம்ஹம் சிலாகித்து அருளுகிறார், 672 வது ஸ்லோகத்தில்.
ஸ்வாமி தேசிகனின் கற்பனையில், தேவர்கள் எல்லாம் திருவரங்கனை வணங்குவதற்காக வரிசையில் நிற்கிறார்களாம். அவர்களது க்ரீடத்தில் சிவப்பு ரத்தின கற்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. அந்த சிவப்பு கற்கள் என்பது நெல் மணிகள் போல் இருக்க, அவர்கள் திருமாலின் திருவடியை நோக்கி வணங்கும் போது, திருவடியில் இருக்கும் பச்சை நிறம் பொருந்திய மரகத கற்கள், பச்சைக்கிளிகள் நெல் மணிகளை கொத்த வந்ததை போல தோன்றுகிறதாம்.இனி அடுத்த 20வது பத்ததியான “இந்த்ரநீல பத்ததியில்”, இந்த்ர நீல கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையின் பெருமைகளை பறைச்சாற்றுகிறார் ஸ்வாமி தேசிகன்.
``சரணாவநி! பாதி ஸஹ்யகந்யா
ஹரிநீலத் யுதிபிஸ் தவாநுவித்தா
வஸுதேவ ஸுதஸ்ய ரங்க வ்ருத்தே:
யமுநேவ ஸ்வயமாகதா ஸமீபம்’’
பாதுகையை பார்க்கிறார் காவிரி நதியை பார்க்கிறார் ஸ்வாமி தேசிகன். உடனே அந்த பாதுகையில் இருக்கும் இந்த்ர நீல நிறம் கொண்ட கற்களையும் பார்க்கிறார். ஸ்வாமியின் கற்பனையோ காவிரி ஆற்றை போலவே பிரவாகித்து ஓடுகிறது. பாதுகையே உனது இந்த்ர நீலக்கற்கள் தம் ஒளியால், காந்தியால், காவிரியையே கறுக்க வைத்து விட்டன என்கிறார். எப்படி தெரியுமா? உன்னுடைய இந்த்ர நீல கற்களின் ஒளியோடு தொடர்பு கொண்டதால், காவிரி நதி, வசுதேவரின் பிள்ளையான கண்ணனின் அருகாமையை தேடி வந்த யமுனை போன்று கறுத்து காணப்படுகிறது என்கிறார்.
அந்த இந்த்ர நீல கற்களின் வரிசை என்பது, பார்ப்பதற்கு கறுத்த மேகங்களின் வரிசை போலவே இருக்கிறது என்று வியக்கும் ஸ்வாமி தேசிகன், மேகமானது எப்படி கடலிலிருந்து நீரை உறிஞ்சி நல்ல மழை நீரை தன்னுள்ளே தேக்கி வைத்து கொண்டு உலகிற்கு தேவையான போது அதை மழையாய் பொய்விக்கிறதோ அப்படி இந்த இந்த்ர நீல கற்கள் திருவரங்கனின் திருவடியிலேயே இருப்பதால், பெருமாளின் திருவருளை தன்னகத்தே சேர்த்து வைத்து கொண்டே இருந்து, மோட்சம் எனும் அமிர்த மழையை பொழிந்து, அடியவர்களின் சம்ஸாரம் எனும் கோடை காலத்தை போக்கடிக்க செய்ய கூடியதாக இருக்கிறதாம்.
க்ஷமா என்று பூமி தேவிக்கு ஒரு திருநாமம் உண்டு. அந்த திரு நாமத்திற்கான அர்த்தம் பொறுத்து கொள்வது, பொறுமையுடன் இருப்பது என்பதே ஆகும். இந்த்ர நீல கற்கள் பூமா தேவியை போல இருக்கிறதாம். எதில் தெரியுமா? பொறுத்து கொள்வதில். எப்படி தெரியுமா? பூமி பிராட்டியின் நிறமும் இந்த்ர நீல கற்களை போலவே கரிய நிறத்தில் இருக்கிறது. குற்றம் செய்த ஒரு ஜீவன், தான் செய்த குற்றங்களுக்கான தண்டனை பெற போகும் சமயத்தில், நடுங்கி கொண்டே திருமாலின் திரு முன்பே நிற்கும் போது, தன்னால் தாங்கப்படும் அத்தனை ஜீவ ராசிகளின் குற்றங்களையும் தயை கூர்ந்து பொறுத்தருள வேண்டும் என்ற உயர் கோரிக்கையோடு அந்த ஜீவ ராசிகளுக்காக பெருமாளின் திருவடியை அடைகிறாளாம்.
பாதுகையே, நீ நிறத்தில் மட்டும் அல்ல குணத்திலும் பூமி பிராட்டி போலவே இருக்கிறாய். ரங்கநாதனின் திருவடிகளை அடைந்தவர்களின் குற்றங்களை நீ பொறுத்து கொள்கிறாய், பூமி தேவியை போல என்கிறார் ஸ்வாமி தேசிகன்.நம் உள்ளத்து குகைக்குள் உறைந்து கொண்டிருக்கும் இருள் போன்ற தீய எண்ணங்களை பாதுகையில் இருக்கும் இந்த்ர நீல கற்கள் உட்கொண்ட காரணத்தால்தான் அந்த கற்கள் இருள் போன்ற கறுமை நிறத்தில் இருக்கின்றனவாம். பாதுகையை பற்றினால் நம்முள் இருக்கும் இருள் நீங்கி நம்முள் நல்ல ஒளி வெள்ளம் புகும் தானே? நமக்காக தானே பாதுகை பரமனின் திருவடியிலேயே சதா சர்வகாலமும் இருக்கிறாள்? அப்படிப்பட்ட பாதுகையை மனதால் சரணடைந்து அவளது பெருமையை மேலும் தொடர்ந்து அறிவோம்.
பாதுகையின் பெருமை தொடரும்...
நளினி சம்பத்குமார்


