Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பத்ம புராணம் காட்டும் தத்துவம்

பகுதி - 1

பத்ம புராணத்தில் அற்புதமான கதைகள் உண்டு. அவைகளெல்லாம் பல்வேறு விதமான தத்துவங்களை நமக்கு எடுத்துக்காட்டும். பொதுவாகவே சமயத் தத்துவங்களைப் புரிந்து கொள்கின்ற பொழுது ஒரு வரிசையைச் சொல்வார்கள்.வேதம், அதை விளக்குவதற்காக ஸ்மிருதிகள், அந்த ஸ்மிருதிகளை விளக்குவதற்காக இதிகாசங்கள், அந்த இதிகாசங்களை விளக்குவதற்காக புராணங்கள் என்று வரிசையைச் சொல்லுவார்கள்.

இதில் கடைசியாக வருவது புராணம். இதில் தான் ஏராளமான கதைகள், ரிஷிகளின் வாழ்க்கை வரலாறுகள், பல்வேறு தலங்களைப் பற்றிய தகவல்கள் ,பல ரிஷிகளின் முற்பிறவி ரகசியங்கள், தத்துவங்களை சொல்லும் குறியீட்டுக் கதைகள் எல்லாம் உண்டு.ஒவ்வொரு நிகழ்வுகளும், நிகழ்வுகளின் விளைவுகளும் ஏதோ ஒரு காரணம் பற்றித் தொடர்ந்து பல பிறவிகளில் வந்து கொண்டே இருக்கிறது(ACTION AND REACTION) என்கிற உண்மையை புராணங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒரு நிகழ்வு ஏன் நடந்தது? என்கின்ற கர்ம வினை சித்தாந்தத்தை(KARMA THEORY) புராணங்கள் அழகாக விளக்குகின்றன.

அம்பினால் அடிபட்ட இரண்டு பன்றிகள்

இப்படி ஒரு கதை பத்ம புராணத்தில் வருகிறது.குழந்தைகளை செல்லம் கொடுத்து வளர்த்தால் அதனுடைய விளைவுகள் அந்தக் குழந்தைக்கு எத்தனை விபரீதமாய் முடியும் என்பதைச் சொல்லுகின்ற கதை இது.இந்தக் காலத்தில் உள்ள அளவுகோல்களை வைத்துக்கொண்டு புராணக் கதைகளை அலசுவது கூடாது. சில பெண்கள் முன்பின் யோசிக்காமல் சில முடிவுகளை எடுப்பதால் அவர்கள் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறிப் போய் விடுகிறது என்பதை விளக்கும் கதை.

இஷ்வாகு மன்னன் சுதேவா என்ற பெண்ணை மணந்து அயோத்தியை ஆண்டு வந்தான். ஒருமுறை அவன் வேட்டைக்குப் புறப்பட்டபோது அவன் மனைவி சுதேவாவும் உடன் சென்றாள்.பல மிருகங்களை வேட்டையாடிவிட்டு இறுதியாக ஓர் இடத்திற்கு வந்தனர். அங்கே ஆண் பன்றி ஒன்றும் , அதன் மனைவியாகிய பெண் பன்றி ஒன்றும் , தனது குட்டிகளுடன் ஒன்றாக நின்றிருந்தது. இஷ்வாகுவின் வீரர் பலர் அப்பன்றிகளை எதிர்க்க அம்பு போட்டனர். ஆனால் அப்பன்றிகள் வீரர்கள் பலரைத் தம் கொம்புகளால் பாய்ந்து பிராண்டிக் குத்திக் கிழித்து விட்டது.

வியப்படைந்த இஷ்வாகு மன்னன், தானே அந்த ஆண் பன்றியை அம்பை எய்து கொன்றான். இதைக் கண்ட பெண்பன்றி ஆவேசமாகி சீறிப் பாய்ந்தது. மன்னனும் விடவில்லை. லாவகமாக ஒதுங்கி மற்றொரு கூர்மையான அம்பால் அந்தப் பெண்பன்றியை அடித்து வீழ்த்தினான். அம்பு பட்டு அப்பெண் பன்றி குற்றுயிரும், கொலை உயிருமாக இரத்தம் வழியக் கிடந்தது.

இதைப் பார்த்த இஷ்வாகுவின் மனைவியாகிய சுதேவா இரக்கப்பட்டு அப் பன்றியின் முகத்தில் நீர் தெளித்தாள். ஆசுவாசப்படுத்தினாள்.

மரண அவஸ்தையில் இருந்த அப் பெண்பன்றி பேச ஆரம்பித்தது. ‘‘இது என்ன பேசுகிறதே” என்று வியந்தாள்.உடனே பெண் பன்றியைப் பார்த்து, ‘‘நீ யார்? உன் கணவன் யார்?” என்று விவரம் கேட்டாள்.அப் பெண்பன்றி தன் கணவனின் கதையை முதலில் சொல்லியது.

முனிவரைச் சீண்டிய வித்யாதரன்

ஒரு காலத்தில் சுமேரு மலை உச்சியில் அடர்ந்த காட்டுப்பகுதியில் புலஸ்தியன் என்ற முனிவர் தவம் செய்துகொண்டு இருந்தார். அவர் அருகில் ரங்க வித்யாதரன் என்ற கந்தர்வன் பாடிக் கொண்டிருந்தான். பாட்டு இனிமையாக இருந்தது. ஆனால் புலஸ்தியனுடைய தவம் கலையத் தொடங்கியது. நிம்மதியாக தவம் செய்ய முடியவில்லை.அவர் கந்தர்வனை அழைத்தார்., ‘அப்பா நான் பாடல் கேட்பதற்கு வரவில்லை. உன் பாடல் நன்றாக இருக்கிறது என்பது உண்மைதான். ஆனாலும், அது என் தவத்திற்கு இடையூறாக இருப்பதால் வேறு எங்காவது சென்று பாடு’ என்று கூறினார்.

அந்த கந்தர்வன் வேடிக்கையாக ‘அதென்ன ஸ்வாமி, இந்த சுமேருமலை உங்களுக்கு மட்டுமா சொந்தம்? அனைவருக்கும் சொந்தம். நான் பாடு கிறேன். பாடுவது என் உரிமை. அதைக் கேட்க நீங்கள் யார்? உங்களுக்கு இடையூறு என்றால், பாட்டு பிடிக்கவில்லையானால் வேறு எங்காவது சென்று தவம் செய்வதுதானே முறை’ என்று விதண்டாவாதம் செய்தான்.

இவனிடம் இனி வாதம் செய்வது வீண் என்று எண்ணிய புலஸ்திய முனிவர் காட்டில் வேறொரு பகுதிக்குச் சென்று தவம் செய்யத் துவங்கினார். ரங்க வித்யாதரன் அவரை மேலும் சீண்ட வேண்டும் என்று நினைத்தான்.

புலஸ்தியர் இன்னும் ஓர் இடத்தில் தவம் செய்வதை அறிந்த கந்தர்வன் மறுபபடியும் வேடிக்கை செய்ய முடிவு செய்தான். முனிவரை சீண்டினான். அதனால் ஒருபன்றி வடிவெடுத்துக்கொண்டு புலஸ்திய முனிவர் தங்கியிருந்த பர்ணசாலையை அடைந்தான். பூமியைத் தோண்டத் துவங்கினான். இடைவிடாது க்ரூக் க்ரூக் என்று சப்தம் எழுப்பினான்.தவம் கலைந்த புலஸ்திய முனிவர் சுற்று முற்றும் பார்த்து ஒரு பன்றி அட்டகாசம் செய்வதை அறிந்தார். இது சாதாரண காட்டுப் பன்றி அன்று. ரங்க வித்யாதரன் என்ற பழைய கந்தர்வன்தான் மறுபடியும் வந்து சீண்டுகிறான் என்பதை அறிந்து கொண்டார். அவர் கோபம் தலைக்கேறியது.

‘பன்றியாக வந்து என் தவத்தைச் சீண்டும் நீ பூமியில் பன்றியாகப் பிறக்கக் கடவாய்!’ என்று சாபமிட்டார்.சாதுதானே ஒன்றும் செய்யமாட்டார் என்று நினைத்த வித்யாதரன் விளையாட்டு விபரீதமாகியது குறித்து புரிந்து கொண்டான்..

சாபத்தைக் கேட்டு நடுங்கிப் போனான். தன்னை மன்னிக்குமாறு பலவாறு வேண்டினான். முனிவர், ‘‘இஷ்வாகு மன்னனுடைய அம்பு உன்னைக் கொல்லும்போது, நீ பழைய கந்தர்வ வடிவம் பெறுவாய்’ என்று சாப விமோசன வழியும் தந்தார்.இப்பொழுது உன் கணவனின் அம்பு பட்டு என் கணவன் உய்கதி அடைந்து விட்டான் என்று கூறினாள்.

அகம்பாவம் கொண்டதால் வந்த வினை

‘அது சரி, இவ்வளவு அழகாகப் பேசுகிறாயே ,உன்னுடைய கதை என்ன?’ என்று கேட்க, பெண் பன்றி தன் கதையைச் சொல்லத் துவங்கியது:ஒரு காலத்தில் ஸ்ரீபுரம் என்ற ஊரில் வசுதத்தா என்ற பெயரோடு ஒருவர் வசித்து வந்தார். அவர் சிறந்த வேத பண்டிதர்.அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஒரே பெண் என்ற காரணத்தால், மகளுக்கு அளவுக்கு மீறிச் செல்லம் கொடுத்து வளர்த்தார்.

இப்படி ஒரேயடியாகச் செல்லம் கொடுத்து வளர்த்ததால் அந்தப் பெண் அகங்கார சொரூபமாக வளர்ந்தாள். எல்லோரையும் எடுத்தெறிந்து பேசுவாள். இது குறித்து பெற்றோர்களுக்கு கவலை வந்தது.வயது ஏற ஏற கர்வமும் அகங்காரமும் அதிகமாகியது.அவளுக்கு மணப் பருவம் வந்தது. ஒரே பெண்ணைப் பிரிந்திருக்க முடியாததால் பெற்றோர் அனாதையாக உள்ள ஒருவனுக்கு மண முடித்து வீட்டோடு மாப்பிள் ளையாக வைத்துக் கொள்ள விரும்பினர்.. சிவசர்மா என்ற ஏழைக்கு மகளை மணமுடித்து வீட்டோடு வைத்துக் கொண்டார்கள்.

(தொடரும்)

முனைவர் ஸ்ரீராம்