Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விஷ்ணு புராணம் காட்டும் தத்துவங்களும் நீதிகளும்

பகுதி -1

இந்திய நாட்டின் இணையற்ற செல்வங்களாக வேதங்களையும் உபநிடதங்களையும் இதிகாசங்களையும் புராணங்களையும் கருதுகிறோம். புராணம் என்ற வடமொழிச் சொல்லுக்குத் தொன்மையானது பழமையானது என்று அர்த்தம். புரா + நவம் என்ற இரண்டு வார்த்தைகளாகப் பிரித்தால் தொன்மையில் புதுமை என்றும் பொருள் சொல்வது உண்டு.

இப்பொழுது நாம் பழமை என்று நினைப்பது புராண காலத்திலே நவீனமாகக் கூட இருந்திருக்கலாம். இந்தக் காலத்துக்குப் பொருந்தாத எத்தனையோ விஷயங்கள் அந்தக் காலத்தில். புரட்சிகரமாக இருந்திருக் கின்றன. அப்படிப்பட்ட பல நிகழ்ச்சிகளைத்தான் இத்தகைய புராணங்களின் வாயிலாக நாம் தெரிந்து கொள்கிறோம்.

எத்தகைய புராணங்களாக இருந்தாலும் இதிகாசங்களாக இருந்தாலும் இந்தக் காலத்துக்கு பொருந்தாத சில விஷயங்கள் இருக்கத்தான் செய்யும். அதனை நாம் தள்ளிவிட்டு விட்டு, இந்தக் காலத்துக்கு ஏற்றம் உடையது நம்முடைய வாழ்வின் முன்னேற்றத்திற்குத் தேவையானது என்ற விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய ஆன்மிக முன்னேற்றத்திற்கான விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.புராணங்கள் 18 என்று பார்த்தோம் அதில் தலையாய புராணமாக அறிஞர்கள் கருதுவது விஷ்ணு புராணம். புராணரத்தினம் என்று இதனைச் சொல்லுவார்கள். இந்தியாவின் சிறந்த தத்துவ அறிஞர்கள் தங்கள் நூல்களில் விஷ்ணு புராண ஸ்லோகங்களை சரளமாக மேற்கோள் காட்டியதிலிருந்து விஷ்ணு புராணத்தின் பெருமை நமக்கு விளங்கும்.

18 புராணங்களிலே, புராணங்களுக்கு உரிய லட்சணங்கள் அனைத்தும் ஒன்றாக இருப்பது விஷ்ணு புராணத்தில் என்று சொல்வார்கள். அதனால் மற்ற புராணங்களுக்கு இது முன்னுதாரணமாகத் திகழ்கிறது.இன்னொரு முக்கியமான விஷயம், மற்ற புராணங்களில் சொல்லப்பட்ட பல விஷயங்களின் தொகுப்பாக விஷ்ணு புராணம் விளங்குவதால் இந்தப் புராணத்தைப் படித்தவர்களுக்கு மற்ற புராணங்களும் படித்த நிறை அறிவு கிடைத்து விடும். மேலும், இந்தப் புராணத்தைப் படிப்பதால் கிடைக்கக்கூடிய நன்மைகளை பராசர மகரிஷி பல இடங்களிலே குறிப்பிட்டிருக்கிறார். யார் இந்த பராசர மகரிஷி என்று கேட்கலாம்? பராசர மகரிஷிதான் விஷ்ணு புராணத்தை இயற்றியவர். அவர் மைத்திரிக்கு சொன்னதுதான் விஷ்ணு புராணம். பராசர மகரிஷி சாதாரணமானவர் அல்ல.

சுவாமி ஆளவந்தார், தம்முடையஇறுதிக்காலத்தில், சில முக்கியமான விஷயங்களைச் செய்யாமல் போகிறோமே என்ற வேதனையோடு திருநாடு அலங்கரித்தார். அதனால் அவருடைய மூன்று விரல்கள் மடங்கி இருந்தன. ஸ்ரீ ராமானுஜர் அவருடைய திரு உடலைப் பார்த்து ‘‘ஏன் இப்படி இவருடைய விரல்கள் மடங்கி இருக்கின்றன? ஏதாவது நிறைவேறாத ஆசைகள் இருக்கிறதா?” என்று கேட்டபொழுது, மூன்று ஆசைகளை அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். அதில் ஒரு ஆசை வியாஸரையும் பராசரரையும் நினைப்பது.

மனித குலத்துக்கு மிகப்பெரிய உபகாரம் செய்த வியாச மகரிஷிக்கும் பராசர மகரிஷிக்கும் நன்றிக்கடன் தெரிவிக்காமல் இருக்கிறோமே என்கிற துக்கம் அவருக்கு இருந்தது.

இதைக் கருத்தில் கொண்டுதான், ஸ்ரீ ராமானுஜர், தம்முடைய சீடர் கூரத்தாழ்வானின் இரண்டு புதல்வர்களுக்கு வேதவியாச பட்டர், பராசர பட்டர் என்று திருநாமம் சூட்டினார். அவர்கள் இருவரும், வேத வியாசரின் உபநிடதங்களையும், விஷ்ணு புராணத்தையும் மக்களிடையே பரப்பி ஆளவந்தாரின் ஆசையை நிறைவேற்றினர்.

அடுத்து, பராசர மகரிஷிக்கும் வேத வியாசருக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி வரும். வேத வியாசரின் திரு தகப்பனார் தான் பராசர மகரிஷி. அவருடைய திருத்தந்தையார் சக்தி மகரிஷி. அவருடைய தந்தை வசிஷ்டர் வசிஷ்டரின் பேரன் தான் பராசர முனிவர். வசிஷ்டரின் கொள்ளுப்பேரன் வியாச முனிவர். இந்தப் பரம்பரையை விளக்கும் ஸ்லோகம் தான் மிகப் பிரசித்தமான ஸ்லோகம். நாம் தினசரி வழிபாட்டில் சொல்லுகின்ற ஸ்லோகம்.விஷ்ணு சகஸ்ர நாமத்தில் வரும்.

வ்யாஸம் வசிஷ்ட நப்தாரம் சக்தே : பௌத்ர மகல்மஷம்

பரசராத்மஜம் வந்தே சுகதாதம் தபோநிதிம்

இனி விஷ்ணு புராணம் எப்படிப் பிறந்தது என்கின்ற வரலாற்றைப் பார்க்கலாம்.

ஒருநாள் பராசர முனிவர், தன்னுடைய நித்திய கர்ம அனுஷ்டானங்களை முடித்து விட்டு ஆச்ரமத்தில் அமர்ந்திருக்கும் போது மைத்ரேயர் என்கிற மகரிஷி அவரைத் தேடி வந்தார்.

மைத்ரேயர் மிகச் சிறந்த ஞானி விஷ்ணு பக்தர். மகாபாரதத்திலே அவருக்கும் விதுரருக்கும் நடந்த உரையாடல்களை நாம் காணலாம். மைத்ரேயர் என்றாலே எல்லோருக்கும் நண்பர் என்று ஒரு பொருள். பராசர மகரிஷியின் சீடர்.மைத்ரேயர் பராசர மகரிஷியிடம் கேட்கிறார்.

‘‘குருவே! பற்பல புராணங்களையும் இதிகாசங்களையும் சாஸ்திரங்களையும் தங்கள் மூலம் கேட்கும் பாக்கியம் பெற்றேன்.இருப்பினும் இன்னும் பல விஷயங்கள் தெரிந்து கொள்ளும்படியான தாகம் இருக்கிறது. அடியேன் கல்வி கற்றும் தாகம் அடங்கவில்லை. ஒவ்வொரு விஷயத்தைத் தெரிந்து கொள்ளும் போதும் இன்னும் தெரியாத விஷயங்கள் இத்தனை இருக்கிறதே என்று நினைக்கிறேன். தாங்கள் எனக்கு அவற்றைக் கூறவேண்டும்.

இந்த அண்ட சராசரங்கள் அனைத்தும் எங்கிருந்து யாரால் தோன்றியது? யாரிடம் ஒடுங்கப் போகிறது? எப்படி இந்த உலகமும் உயிர்களும் தோன்றின? நட்சத்திர மண்டலங்கள் எப்படித் தோன்றியது? தேவர்கள் மனிதர்கள் போன்ற உயிரினங்கள் எப்படித் தோன்றின? காலங்களின் அளவு மற்றும் காலங்களின் அமைப்பு என்பது எப்படி இருக்கிறது? எத்தனையோ ரிஷிகள் ஆன்றோர்கள் இங்கு தோன்றி இருக்கிறார்களே, அவர்களுடைய வரலாறு என்ன? இப்படி பல விஷயங்களை நீங்கள் எனக்குக் கூறினால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்” என்று கேட்டார்.

பராசர மகரிஷி அப்பொழுது அவரிடம் தன்னுடைய சொந்த அனுபவ வரலாற்றைக் கூறுவதிலிருந்து விஷ்ணு புராணம் ஆரம்பிக்கிறது. பரமஞானம் உள்ள அவருக்கே கூட, ஒரு கட்டத்தில் கோபம் எப்படி இருந்தது? அந்த கோபம் அடக்கமுடியாமல் அவர் செய்த காரியங்கள் என்ன? எதனால் அந்த கோபம் அடங்கியது? கோபம் அடங்கியதால் அவர் பெற்ற நன்மைகள் என்ன? என்பதையெல்லாம் அவர் மைத்ரேயரிடம் சொல்ல ஆரம்பித்தார்.ரிஷிகள் ஞானிகள் என்று சொல்பவர்களுக்குக் கூட கோபம் வருமா என்று இப்பொழுது ஒரு சந்தேகம் வரலாம்.

சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் துக்க உணர்வுகளும் ஒருவருக்குக் கோபத்தைத் தூண்டி விடுகிறது. அவர்கள் ஞானிகளாக இருந்தாலும் சில நேரங்களில் கோபத்தைக் கட்டுப்படுத்தத் தவறி விடுகிறார்கள். பிறகு உணர்ந்து திருத்திக் கொள்கிறார்கள்.அவர்கள் கோபத்தோடு இருக்கின்ற பொழுது மற்றவர்களும் அழிகிறார்கள். அவர்களுடைய, முயற்சியும் தவமும் சிதைவடைகிறது. சக்தி இழந்து மறுபடியும் அந்தக் சக்தியைப் பெறுவதற்குப் பலகாலம் போராடுகிறார்கள்.

கோபத்தை அடக்கிக் கொள்வது என்பது ஞானத்தின் ஒரு பகுதி என்கிற செய்தியை. இதன் மூலம் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

அவர்களுக்கு ஏன் கோபம் வந்தது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?

பராசர மகரிஷியின் தந்தை சக்தி மகரிஷி. வசிஷ்டரின் பிள்ளை சக்தி மகரிஷி.வசிஷ்டருக்கும் விஸ்வாமித்ர மகரிஷிக்கும், பல பிணக்குகள் இருப்பதை புராண இதிகாசங்களிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம். இதற்கு உதாரணமாக ஒரு நிகழ்ச்சியைச் சொல்வார்கள். ஒரு முறை இந்திரன் அவையிலே ஏதோவொரு விஷயத்தை விவாதிப்பதற்காக பல மகரிஷிகளும் கூடி இருந்தார்கள்.

இந்திரன் சபையை ஆரம்பிக்காமல் காத்துக் கொண்டிருந்தான் . விஸ் வாமித்திரருக்குக் கோபம் வந்தது. ‘‘யாருக்காக நீ காத்துக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார். வசிஷ்டருக்காகக் காத்துக் கொண்டிருக் கிறேன் என்று இந்திரன் சொன்னவுடன் அவர் கோபம் இன்னும் அதிகமாகிறது.

‘‘இத்தனை ரிஷிகள் காத்திருக்கும் போது அவர் எப்படி தாமதமாக வரலாம்?உடனே சபையை ஆரம்பிக்க வேண்டும்” என்று கண்டிப்புடன் கூறியபோது வசிஷ்டர் உள்ளே வந்துவிட்டார்.

இந்திரன் பக்கத்தில் உட்கார்ந்து, மெல்லிய குரலில் ஏதோ விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தார் வசிஷ்டர்.அப்பொழுது சற்று தூரத்தில் இருந்து கவனித்த விசுவாமித்திர மகரிஷி, ‘‘இந்திரா! வசிஷ்டர் சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் அவர் சொன்னது தவறு” என்று உரக்கக் கூறினார்.

அப்பொழுது இந்திரன் விசுவாமித்திர மகரிஷியிடம் ‘‘வசிஷ்டர் என்னிடம் என்ன கூறினார் என்பது என் பக்கத்தில் உட்கார்ந்து இருப்பவர்களுக்குக் கூட காதில் விழுந்திருக்காது. நீங்களோ தூரத்தில் இருக்கிறீர்கள். நிச்சயமாக வசிஷ்டர் என்னிடம் என்ன பேசினார் என்பது உங்கள் காதுகளுக்குக் கேட்டிருக்காது. அப்படி இருக்க என்ன விஷயம் என்று தெரியாமலேயே நீங்கள் வசிஷ்டர் கூறியது தவறு என்று எப்படிக் கூறுகிறீர்கள்? என்று இந்திரன் கேட்டவுடன், விசுவாமித்ர மகரிஷி ஒரேடியாகக் கூறினார்.

‘‘அவர் என்ன பேசினார் என்பது என் காதில் விழ வேண்டிய தேவை யில்லை அவர் எது பேசினாலும் என்னைப் பொறுத்தவரை தவறுதான்” என்று முடித்தாராம். இப்படி வசிஷ்ட விஸ்வாமித்ர இணக்கமின்மையை சுவாரஸ்யமாகச் சொல்வார்கள்.வசிஷ்டர் பல நேரங்களில் தேவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கும் பொழுது, விசுவாமித்திரர் அரக்கர்களுக்கு உதவி செய்து விடுவார்.

இந்தக் கருத்து வேறுபாடு அவர்களிடத்திலே இருந்த காலத்தில், விசுவாமித்திரரால் ஏவப்பட்ட, ஒரு ராட்சசன், வசிஷ்டரின் ஆசிரமத்திற்கு வந்து, அங்கே தவநிலையில் இருந்த பராசர மகரிஷியின் தந்தை சக்தி மகரிஷியை விழுங்கி விட்டான். தன்னுடைய தந்தையை ஒரு ராட்சசன் கொன்று விட்டதை பராசர மகரிஷியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர் ஞானி தான். ஆனால், தன்னுடைய தந்தையின் சாவை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. இப்பொழுது ஞானம் கொஞ்சம் நெகிழ்ந்து உணர்ச்சி அதிகரித்தது.

பலவீனமான ஒரு துளையின் வழியே தேக்கி வைத்த நீர் ஆவேசத்துடன் வெளியேறுவது போல அவருடைய உணர்ச்சி வடிகால் கோபமாக மாறியது.

‘‘ஒரு ராட்சசன் என்னுடைய தந்தையைக் கொன்று விட்டான். இனி ராட்சச குலமே இருக்கக் கூடாது என்று ஆவேசத்தோடு ஒரு யாகம் தொடங்கினர். சத்ர யாகம் என்று சொல்லப்படும் அந்த யாகம் நடக்க ஆரம்பித்தவுடன் பல அரக்கர்கள் அழியத் தொடங்கினார்கள்.

இதைக் கேள்விப்பட்டு ஓடோடி வந்தார் தாத்தா வசிஷ்டர். ‘‘பராசரா! என்ன காரியம் செய்து கொண்டிருக்கிறாய்? உன்னுடைய ஞானம், தவம் இதெல்லாம் உன்னுடைய கோபத்தைக் கட்டுப்படுத்த வில்லையா.? நீ இப்படி கோபத்தோடு இருக்கலாமா? இந்த கோபம் உலகை அழித்து விடுமே! கடைசியில் உன்னுடைய தவத்தையும் அழித்து விடுமே! வேண்டாம் கோபம். இந்த யாகத்தை இத்தோடு நிறுத்திக் கொள்” என்றார்.

அப்பொழுது பராசர மகரிஷி ‘‘தாத்தாவே, நான் ஏன் இந்த யாகத்தை நிறுத்த வேண்டும்? அநியாயமாக என்னுடைய தந்தையைக் கொன்றவர் களை நான் ஏன் விட்டு வைக்க வேண்டும்? என்னுடைய தந்தையின் சாவுக்கு இந்த ராட்சசர்கள் தானே காரணம்?” என்று ஆவேசமாகக் கேட்டார். அவருடைய கோபத்தைக் கண்டு உலகமே நடுங்கியது. பிறகு என்ன நடந்தது? அடுத்த இதழில் காண்போம்

(தொடரும்)

முனைவர் ஸ்ரீராம்