தங்கத்தை தனக்குத் தேவையான அழகிய வடிவத்திற்குக் கொண்டு வர, தங்கக் கொல்லன் அதைச் சுத்தியலால் மீண்டும் மீண்டும் அடித்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு அடியும் தங்கத்தின் மீது விழுந்தபோதும், அது பெரிய சத்தம் எதுவும் எழுப்பவில்லை. அமைதியாக அந்த வலியைத் தாங்கிக்கொண்டு, கொல்லன் விரும்பிய அழகிய வடிவமாக அது மாறிக்கொண்டிருந்தது. அதே நேரத்தில், ஒரு இரும்புத் துண்டை ஒரு குறிப்பிட்ட வடிவத்திற்குக் கொண்டு வர, இரும்புச் சுத்தியலால் அதை அடிக்கத் தொடங்கினார்கள்.
ஒவ்வொரு முறையும் சுத்தியல் இரும்பின் மீது விழும்போது, “டமார்… டமார்…” என்று அந்த இடமே அதிரும் அளவுக்குப் பெரும் சத்தம் கேட்டது. இதைக் கவனித்த தங்கம் இரும்பிடம்,
“உங்களையும் என்னையும் சுத்தியலால் அடிக்கிறார்கள். ஆனால், நான் அமைதியாக இருக்கிறேன். நீங்கள் ஏன் ஒவ்வொரு அடிக்கும் இவ்வளவு சத்தமிட்டு கதறுகிறீர்கள்?” என்று கேட்டது. அதற்கு இரும்பு அமைதி யாகப் பதிலளித்தது;
“தங்கமே, உங்களை அடிப்பவர் உங்கள் இனத்தைச் சேர்ந்தவர் அல்ல. அதனால் அந்த அடியின் வலியை உங்களால் ஒருவிதமாகத் தாங்கிக்கொள்ள முடிகிறது. ஆனால் என்னை அடிப்பவர் அந்நியர் அல்ல; என்னைப் போன்ற அதே இரும்பால் செய்யப்பட்டவர். என்னைப் போன்றவரே என்னை ஓங்கி அடிக்கிறார். ஒரே இனம்… ஒரே தன்மை… என்னைப் போன்றவரிடமிருந்தே வரும் அடி என்பதால்தான் அந்த வலி இன்னும் அதிகமாக உணரப்படுகிறது.
“அந்நியர் கொடுக்கும் காயத்தைவிட, நம்மைச் சேர்ந்தவர் கொடுக்கும் காயம்தான் இருதயத்தில் ஆழமாகப் பதிகிறது. ஏனென்றால், அந்நியரிடம் நாம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் நம்முடையவர்களிடம் அன்பையும், நம்பிக்கையையும், ஆதரவையும் எதிர்பார்க்கிறோம்” இரும்பின் வார்த்தைகளைக் கேட்ட தங்கம் அமைதியாக இருந்தது. இறைமக்களே, நம் வாழ்க்கையிலும் இப்படித்தான். வெளியிலிருந்து வரும் காயங்களைவிட, நம்மை நம்பியவர்களிடமிருந்து வரும் காயங்கள்தான் அதிகமாக வலிக்கின்றன.
சில அனுபவங்கள் நம்மை உடைக்கலாம். சில மனிதர்கள் நம்மைக் காயப்படுத்தலாம். சில வார்த்தைகள் நம்மை அழவைக்கலாம். சில புறக்கணிப்புகள் நம்மைத் தனிமையாக உணரச் செய்யலாம். ஆனால், அவற்றின் வழியாகவே தேவன் நம்மை இன்னும் வலிமையானவர்களாகவும், பொறுமையானவர்களாகவும், முதிர்ச்சியானவர்களாகவும் மாற்றுகிறார். எனவே, நம்மைக் காயப்படுத்தியவர்களின் செயலால் நம் மதிப்பை அளவிடாதீர்கள்.
மனிதர்கள் நம்மை உடைத்த இடத்தில், தேவன் நம்மை இன்னும் வலிமையான வடிவமாக்க முடியும். நம்மைக் காயப்படுத்தியவர்களை நினைத்து வாழ்ந்துகொண்டே இருப்பது, நம் காயத்தை மீண்டும் மீண்டும் திறப்பதற்குச் சமம். அதற்குப் பதிலாக, அந்தக் காயத்தை தேவனுடைய கரங்களில் ஒப்படைக்க வேண்டும். மன்னிப்பது என்பது நடந்த நிகழ்வைச் சரி என்று ஏற்றுக்கொள்வதல்ல. நமக்கு ஏற்பட்ட வலியிலிருந்து நம் இருதயத்தை விடுவிப்பதாகும்.
தங்கம் சுத்தியலின் அடியால் அதன் மதிப்பை இழக்கவில்லை; மாறாக, அந்த அடிகளுக்குப் பிறகுதான் அதன் அழகும் மதிப்பும் வெளிப்பட்டது. அதுபோல, நம் வாழ்க்கையில் விழுந்த ஒவ்வொரு அடியும் நம்மை அழிக்க வந்தது என்று நினைக்காதீர்கள்.
சில அடிகள் நம்மை இன்னும் அழகான மனிதர்களாக மாற்றும். சில காயங்கள் நமக்குள் இருந்த வலிமையை வெளிக்கொண்டு வரும். நம்மைக் காயப்படுத்தியவர்கள் நம் கதையின் ஒரு அத்தியாயமாக இருக்கலாம்; ஆனால் அவர்கள் நம் முழுக் கதையல்ல. இன்று உங்கள் இருதயத்தில் யாரோ ஒருவர் ஏற்படுத்திய காயம் இருக்கலாம். நீங்கள் நம்பிய ஒருவர் உங்களை ஏமாற்றியிருக்கலாம்.
நீங்கள் நேசித்த ஒருவர் உங்களைப் புறக்கணித்திருக்கலாம். உங்களுக்குச் சொந்தமானவர் என்று நினைத்த ஒருவரே உங்களைக் காயப்படுத்தியிருக்கலாம். அந்த வலியில் நின்றுவிடாதீர்கள்.
“நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால், அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும்.” (1 பேதுரு 2:20) என்று இறைவேதாகமம் சொல்லுகிறது. எனவே, மனிதர்களால் வந்த காயங்களை தேவனுடைய கரங்களில் ஒப்படைத்துவிடுங்கள். இன்று உங்களை அழவைத்த அனுபவமே, நாளை இன்னொருவரின் கண்ணீரைத் துடைக்கும் அனுபவ ஆறுதலாக மாறும்.
உங்கள் வலி வீணானதல்ல.
உங்கள் கண்ணீர் அர்த்தமற்றதல்ல.
உங்கள் காயமும் உங்கள் கதையின் முடிவல்ல.
தேவனுடைய கரங்களில் ஒப்படைக்கப்படும் ஒவ்வொரு வலியும், ஒருநாள் உங்கள் வாழ்க்கையின் வலிமையாக மாறும்.
- அருள்முனைவர் பெவிஸ்டன்.



