Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

காமாட்சி எனும் நாமத்தின் பொருள்

காமாட்சி. எல்லோருக்கும் தெரிந்த நாமம் இது. காமாட்சி என்கிற பெயருக்கான விசேஷம் என்ன என்பதை பார்க்க வேண்டும். நாம் ஆன்மிகத்தின் முதல் படியில் இருப்போமானால், நாம் என்னென்ன வேண்டிக் கொள்கிறோமோ அதெல்லாம் கிடைக்க வேண்டும். இது சாமானியர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் வேண்டிக் கொள்வதுதான். முதல் படியில் தொடங்கி ஞானத்தையும் முக்தியையும் வேண்டும் வரை இதுதானே உண்மை. நாம் என்ன கேட்கிறோமோ அதை பிரசாதிக்கக் கூடியவள்தான் காமாட்சி. நாம் என்ன கேட்கிறோமோ அதை எந்தவித தடையுமில்லாமல் கொடுப்பவளே காமாட்சி. அப்போது இந்த காமாட்சி என்கிற இந்த நாமத்தைச் சொல்லும்போது, ஒரு குழந்தை தாயிடம் உரிமையோடு கேட்பதுபோல் கேட்கலாம் அதை எப்படி கொடுக்க வேண்டுமோ அப்படி கொடுப்பாள். அதில் எந்த சந்தேகமும் கொள்ள வேண்டாம்.

நாம் கேட்பதையெல்லாம் கொடுப்பதால் அவளுக்கு காமாட்சி என்கிற பெயர் ஏன் இருக்கிறது என்று பார்த்தால், இந்தக் காமாட்சி என்கிற நாமாவை பிரித்துப் பார்த்தால் காம அக்ஷி என்று பார்க்கலாம். இப்போது இந்த காம என்கிற சப்தம் இருக்கிறதல்லவா… இந்த காம என்கிற வார்த்தை இருக்கிறதல்லவா… இந்த வார்த்தைக்கு வெவ்வேறு விதமான அர்த்தங்கள் இருக்கின்றன. நாம் முதலில் காம என்கிற வார்த்தைக்கு அடிப்படையான அர்த்தத்தை பார்க்கலாம். அதற்கடுத்து அதைவிட சூட்சுமமான அர்த்தத்தை பார்க்கலாம். அதற்கும் அடுத்து லட்சியார்த்தத்தையும் பார்க்கலாம்.

இப்போது அடிப்படையாக இந்த வார்த்தையின் அர்த்தம் என்ன? காம என்கிற வார்த்தைக்கு அடிப்படை அர்த்தம் என்னவெனில், ஆசை என்று அர்த்தம். இதற்கு அடுத்து கொஞ்சம் சூட்சுமமான நடுத்தரமான அர்த்தம் இருக்கிறது. இந்த நடுத்தரமான அர்த்தம் என்னவெனில், காம என்றால் மன்மதன் என்று பொருள். இதுவும் எல்லாருக்கும் தெரியும். இதையெல்லாம் தாண்டி மூன்றாவதாக ஒரு அர்த்தம் இருக்கிறது. காம என்கிற சப்தத்திற்கு உயர்ந்த ஒரு அர்த்தம், உத்தமமான அர்த்தம் ஒன்று இருக்குமல்லவா… அது என்னவெனில் பகவான் காமேஸ்வரன் என்று அர்த்தம்.

காமேஸ்வரனாகிய பகவான் எனில், க - அ - ம. முதலில் க என்ற எழுத்து. அதற்கு அடுத்து அ கார சப்தம் சூட்சுமமாக இருக்கிறது. பிறகு மகார சப்தம் இருக்கிறதல்லவா. இப்போது இந்த க என்பது பிரம்மாவையும், அ என்பது விஷ்ணுவையும், ம என்பது ருத்ரனையும் குறிக்கும். இந்த அகார, உகார, மகாரமாக இருக்கக் கூடிய பிரம்மாவையும் விஷ்ணுவையும் ருத்ரனையும் தாண்டி, சதுர்த்தம் என்கிற நான்காவது நிலையில் எவன் இருக்கிறானோ அவன் காமேஸ்வரன். காம என்றால் சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் செய்யக் கூடியவனாக அதையெல்லாம் கடந்து நிற்கக் கூடியவன் எவனோ அவனே காமேஸ்வரன். அவன் தலைவனாக இருப்பதால் ஈஸ்வரன். அவனுக்கு காமன் என்று பெயர். காமனாகவும் இருக்கிறான், அதே நேரத்தில் ஈஸ்வரனாகவும் இருக்கிறான்.

அதனால் அவனுக்கு காமேஸ்வரன் என்று பெயர். மிகவும் கீழ் தளத்தில் இதனுடைய அர்த்தத்தை பார்த்தால் காமன் என்றால் மன்மதன். அதையும்விட கீழேயுள்ள தளத்தில் பார்த்தால் காமம் என்றால் ஆசை என்று பொருள். ஆனால், அதே விஷயத்தை மிக மிக உயர்ந்த தளத்தில் வைத்துப் பார்த்தால் காமேஸ்வரன் என்று பார்க்கிறோம்.

காம என்கிற சப்தத்திற்கு மூன்று அர்த்தம் பார்த்து விட்டோம். இதில் அக்ஷி என்பதை பார்ப்போம். அக்ஷி என்றால் கண்களை உடையவள் என்று அர்த்தம். காம அக்ஷி என்று சொல்லும்போது வெளிப்படையான அர்த்தம் என்னவெனில், அழகிய கண்களை உடையவள் என்று அர்த்தம். தன்னை நாடிவரக் கூடிய ஆசைகளை தன்னுடைய கண்களினாலேயே, தன்னுடைய கடைக்கண் பார்வையினாலேயே நிறைவேற்றி வைப்பதாலேயே அவளுக்கு காமாட்சி. அதாவது ஆசை என்கிற அர்த்தத்தை வைத்துப் பார்த்தால், நாம் அம்மாவிடம் செல்கிறோம் கேட்கிறோம். அதை அவளுடைய கடைக்கண் பார்வையினாலேயே நிறைவேற்றி வைக்கிறாள்.

கிருஷ்ணா