நட்சத்திரங்களின் ரகசியங்கள் - கிருத்திகை
27 நட்சத்திரங்களில் மூன்றாவதாக வருவது கிருத்திகை. பரணிக்குப் பிறகு வரும் இந்த நட்சத்திரம், நெருப்பு, வீரியம், துணிவு, ஞானம், சுத்திகரிப்பு ஆகிய பல ஆழமான தத்துவங்களைத் தன்னகத்தே கொண்டது.
கிருத்திகை என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது முருகப் பெருமான். ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட ஆறுமுகப் பெருமானுடன் கிருத்திகை நட்சத்திரத்திற்கு உள்ள தொடர்பு மிகப் பெரியது. கிருத்திகையின் அதிதேவதை அக்னி. அக்னி என்பது வெறும் நெருப்பு அல்ல. அழுக்கை எரித்து தூய்மைப்படுத்துவது, இருளை நீக்கி வெளிச்சம் தருவது, உணவைச் செரிக்கச் செய்வது, யாகத்தில் நாம் அளிப்பதை தெய்வத்திடம் கொண்டு சேர்ப்பது என்று அக்னிக்கு பல்வேறு பரிமாணங்கள் உள்ளன.
அதனால்தான் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கையிலும் ஒரு வகையான தீவிரத்தைப் பார்க்க முடியும். அவர்கள் ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டால், அதை முழுமையாகச் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். மனதில் பட்டதைச் சொல்லிவிடுவார்கள். தவறு என்று தெரிந்தால் எதிர்த்து நிற்கத் தயங்கமாட்டார்கள்.
கிருத்திகை நட்சத்திரத்தின் அதிபதி சூரியன். சூரியன் என்பது ஆத்மா, அதிகாரம், கௌரவம், தலைமை, தந்தை, நிர்வாகம், ஒளி ஆகியவற்றைக் குறிக்கிறது. அதனால் கிருத்திகையில் சூரியனின் தன்மையும் அக்னியின் தன்மையும் ஒன்றாக இணைகின்றன.
இதில் இன்னொரு விசேஷம் உள்ளது. கிருத்திகை முழுவதும் ஒரே ராசியில் இருப்பதில்லை. முதல் பாதம் மேஷ ராசியிலும், அடுத்த மூன்று பாதங்கள் ரிஷப ராசியிலும் அமைந்துள்ளன. அதாவது கிருத்திகையின் ஆரம்பத்தில் செவ்வாயின் மேஷமும், பின்னர் சுக்கிரனின் ரிஷபமும் வருகிறது. ஒரு பக்கம் போராடும் வீரியம். இன்னொரு பக்கம் வாழ்க்கையை அனுபவிக்கும் தன்மை.
இவற்றுக்கு மேலாக சூரியனின் கௌரவமும் அக்னியின் தீவிரமும் இருக்கின்றன. தான் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற வேகம் இருக்கும். அதே நேரத்தில், தன்னை மதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கும்.
ஒவ்வொரு மாதமும் வரும் கிருத்திகை நட்சத்திர நாளில் முருகப் பெருமானை வழிபடுவது நல்ல ஆன்மிகப் பழக்கம். இயன்றவர்கள் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி, முருகனுக்கு அர்ச்சனை செய்து, கந்தசஷ்டி கவசம், திருப்புகழ், சுப்ரமணிய புஜங்கம் போன்றவற்றை பாராயணம் செய்யலாம். குறிப்பாக, கார்த்திகை மாதத்தில் வரும் கிருத்திகைக்கு மிகப்பெரிய சிறப்பு உண்டு.
கார்த்திகை தீபம் என்றாலே அக்னியின் நினைவு வருகிறது. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மகாதீபம் சிவபெருமானின் ஜோதி வடிவத்தை நினைவுபடுத்துகிறது. அந்தக் காலத்தில் வரும் கிருத்திகை வழிபாடு அக்னி, சிவன், முருகன் ஆகிய மூன்று ஆன்மிகத் தத்துவங்களையும் ஒன்றாக நினைவுபடுத்துகிறது.
கிருத்திகை விரதமும், பல குடும்பங்களில் பக்தியுடன் கடைபிடிக்கப்படுகிறது.
நாவல் மரம், கிருத்திகை நட்சத்திரத்திற்குரிய விருட்சமாக பாரம்பரியத்தில் குறிப்பிடப்படுகிறது. மர வழிபாடு என்பது வெறும் பரிகாரம் அல்ல. மரத்தைப் பாதுகாப்பது, நீர் ஊற்றுவது, அதன் நிழலை மதிப்பது ஆகியவையும் நம் முன்னோர்கள் உருவாக்கிய ஒரு அழகான தர்ம வழியாகும்.
கிருத்திகை நட்சத்திரத்துடன் திருமங்கை ஆழ்வாருக்கும் ஒரு சிறப்பான தொடர்பு உள்ளது. திருமங்கை ஆழ்வார், கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் அவதரித்தவர். வைணவ சம்பிரதாயத்தில் அவர் தனித்துவமான இடத்தைப் பெற்றவர்.
கலியன் என்ற வீரனாக இருந்து, திருமாலின் அருளால் ஆழ்வாராக மாறிய அவரது வாழ்க்கை கிருத்திகையின் இன்னொரு பரிமாணத்தை நமக்குக் காட்டுகிறது. வீரம் இருந்தது.துணிவு இருந்தது. உலக வாழ்க்கையில் தீவிரமான ஈடுபாடு இருந்தது. அதே தீவிரம், இறுதியில் இறைவனை நோக்கித் திரும்பியது. அதுதான் கிருத்திகையின் அழகான ஆன்மிக ரகசியம்.
அக்னி எதைத் தொடுகிறதோ அதை மாற்றுகிறது. அதுபோல, இறைவனுடைய தொடர்பு ஒரு மனிதனுடைய வாழ்க்கையையே மாற்றிவிடும் என்பதை திருமங்கை ஆழ்வாரின் சரித்திரம் நமக்குக் காட்டுகிறது.
கிருத்திகை நட்சத்திரத்திற்கான வழிபாடு
செவ்வாய்க்கிழமை அல்லது கிருத்திகை நாளில் விளக்கேற்றி, முருகனுக்கு சிவப்பு அல்லது செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்யலாம். சூரியன் நட்சத்திரத்தின் அதிபதி என்பதால், தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்து, சூரியனை வணங்கலாம். இயன்றவர்கள், ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்யலாம். தந்தையை மதித்தல், வயதில் மூத்தவர்களை மரியாதையுடன் நடத்துதல், ஆசிரியர்களுக்கு உரிய கௌரவம் கொடுத்தல் ஆகியவையும் சூரிய வழிபாட்டின் ஒரு வடிவமாகவே பார்க்கலாம்.
நாவல் மரம் அல்லது பிற பயனுள்ள மரங்களைப் பாதுகாப்பதும், மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதும் கிருத்திகை நட்சத்திரத்திற்குரிய நல்ல தர்மச் செயலாக எடுத்துக் கொள்ளலாம்.
கோயிலில் விளக்கேற்றுதல், அன்னதானம் செய்தல், ஏழைகளுக்கு உணவு வழங்குதல் போன்றவை அக்னியின் சுத்திகரிக்கும் தத்துவத்துடன் பொருந்தும் நல்ல செயல்கள்.
கிருத்திகை நட்சத்திரத்துடன் உடல் உறுப்புகள் தொடர்பான சில பாரம்பரிய ஜோதிடக் குறிப்புகளும் உள்ளன.
சூரியன் மற்றும் அக்னித் தத்துவம் காரணமாக கண்கள், தலை, உடலின் வெப்பம் போன்றவற்றை சில ஜோதிட நூல்கள் தொடர்புபடுத்துகின்றன. கிருத்திகையைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், நான்கு விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ளலாம்.
சூரியன் - ஒளியும் கௌரவமும்.
அக்னி - சுத்தமும் சக்தியும்.
முருகன் - வீரமும் ஞானமும்.
திருமங்கை ஆழ்வார் - தீவிரம் இறைவனை நோக்கித் திரும்பிய வரலாறும்.
இதுதான் கிருத்திகையின் தனித்துவம். இவர்கள் அன்பாக இருப்பார்கள். ஆனால் மரியாதையை எதிர்பார்ப்பார்கள். துணிவாக இருப்பார்கள். ஆனால் தாங்கள் நம்பிய விஷயத்தில் பிடிவாதமாகவும் இருக்கலாம். தவறு என்று தெரிந்தால் எதிர்ப்பார்கள். வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், அந்த வெற்றிக்கு பின்னால் ஒரு பெரிய உழைப்பும் இருக்கும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால்;
“தீவிரமாக வாழ்வார்கள்;
துணிவுடன் போராடுவார்கள்;
மரியாதையை விரும்புவார்கள்;
உண்மையை விட்டுக் கொடுக்கமாட்டார்கள்;
அக்னியைப் போல எரியும் சக்தி அவர்களிடம் இருக்கும்’’
அந்த சக்தி இறைவனை நோக்கித் திரும்பினால், அதுவே ஞானமாகும். அதுதான் கிருத்திகை நட்சத்திரத்தின் உண்மையான பலம்.
வாழ்க்கையில் வரும் சோதனைகளைத் தாண்டி நிற்பதிலும், தன்னுடைய முயற்சியால் உயர்வதிலும், இறுதியில் அந்தத் தீவிரத்தை இறைவன் பாதத்தில் அர்ப்பணிப்பதிலும் ஒரு தனித்துவமான சக்தி கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உண்டு.


