திருப்பாவை எனும் தேனமுதம்
அதேநேரத்தில், நமக்குச் சொல்ல வேண்டியதை சொல்வது சௌசீல்யம். நமக்கு என்ன தேவையோ நாம் நினைப்பதற்கு முன்பு அவன் பார்த்துச் செய்வது சௌகார்த்தமாக இருக்கிறது. இதுபோன்ற எல்லா விஷயங்களையும் எங்கு அனுபவிப்போம் எனில் ஆய்ப்பாடியில்தான். பரமபதத்தில் அனுபவிக்க முடியாததை ஆய்ப்பாடியில் அனுபவிப்பதால் அது வெறும் ஆய்ப்பாடி கிடையாது, சீர்மல்கும் ஆய்ப்பாடி. மத் கோகுலம். சீர்மல்கும் ஆய்ப்பாடி. அப்போது எது உயர்ந்தது? சீர் மல்கும் ஆய்ப்பாடிதான் உயர்ந்தது.
அடுத்ததாக…
``கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்’’
நந்தகோபன் என்பவர், அந்த ஊரின் தலைவராக இருக்கிறார். கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் என்று சொல்வதற்கு காரணம்… அவர் அந்த ஊருக்கும் அந்த ஊர் மக்களுக்கும் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். எனவே, கூர்வேல் கொடுந்தொழிலன் என்பது அவருடைய சத்ரிய தர்மத்தைக் காண்பித்துக் கொடுக்கலாம். அந்த நிலையில் இருக்கக் கூடிய நந்தகோபனுடைய குமரன். இதுவொரு அர்த்தம்;
கூர்வேல் கொடுந்தொழிலன்… ஒரு குழந்தையை பார்த்துக் கொள்ளும்போது அதிலும் கிருஷ்ணன் மாதிரியான குழந்தையை பாதுகாப்பதில் ஒரு தந்தை முனைப்பாக இருப்பார். அந்த குழந்தைக்கு வெளியிலிருந்து எந்தப் பிரச்னையும் வரக்கூடாது. ஒரு தந்தையானவர் மென்மையானவராக இருந்தால்கூட, குழந்தைக்கு ஏதாவது வரும் என்று சொல்லும்போது, அவரை அறியாமல் அவருக்கு ஒரு வேகம் வெளிப்பட்டுவிடும். அது கோபமாகவோ அல்லது வீரமாகவோ வெளிப்படும்.
``கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்’’ என்றால், தன்னுடைய குமரனை, கிருஷ்ணனை கண்ணுக்குள்ளேயே வைத்து பாதுகாக்க வேண்டுமென்பதால், அவர் கூர்வேல் கொடுந் தொழிலன் ஆக இருக்கிறார். கிருஷ்ணரைப் பாதுகாக்க வேண்டி அவருடைய வீரத்தைக் காண்பிக்கக் கூடியவராக இருக்கிறார். இதற்கு பின்னணியில் கம்சன் பகவானை அழிப்பதற்குத் தொடர்ந்து எண்ணற்ற அசுரர்களை அனுப்பிக்கொண்டே இருந்தான் அல்லவா? பூதனாவை அனுப்பினான். சகடாசூரனை அனுப்பினான். த்ருணாவர்த்தனை அனுப்பினான். இதுபோன்று எத்தனையோ பேரை அனுப்பினான் அல்லவா? அங்கு அசுரர்களின் தாக்குதல் இருக்கிறது என்பதால், அதிலிருந்து தன்னுடைய மகனைக் காக்க வேண்டுமென்பதால், கூர்வேல் கொடுந்தொழிலனாக நந்தகோபன் இருக்கிறார்.
அந்த நந்தகோபனுடைய குமரன்… ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ் சிங்கம்… ஏரார்ந்த கண்ணி யசோதை என்று சொல்வதை கவனிக்க வேண்டும். அதாவது, எந்த அளவுக்கு வெளிப்புறத்திலிருந்து குழந்தைக்கு எதுவும் வரக்கூடாது என்று இவ்வளவு பாதுகாப்பாக இருப்பாரோ, அதேபோல உள்ளேயிருந்து internal affairs அம்மா பார்த்துக் கொள்வாள். பொதுவாகவே இது பொருந்தக் கூடிய விஷயமாக இருந்தாலும், குழந்தைக்கு இன்னும் நன்றாகப் பொருந்தும். குழந்தைக்கு உடம்பு சரியாக இருக்கிறதா… சரியான நேரத்தில் சாப்பாடு கொடுத்தோமா, அவனுக்கு என்ன உடை அணிவிக்க வேண்டும். குளிக்க வைக்க வேண்டுமா? என்ன செய்ய வேண்டும்? என்று இவை அனைத்தையும் அம்மா பார்த்துக் கொள்கிறாள்.
அப்போது ஏரார்ந்த கண்ணி… தன்னுடைய கண்ணை வந்து அவனை விட்டு அகலாமல்… தன்னுடைய கண்ணையே அவனாக நினைத்து…. பார்த்துக் கொள்வதாலும் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ் சிங்கம். கூர்வேல் கொடுந்தொழிலனாக அங்கு அவர் இருப்பதால் சமர்த்தாக கண்ணன் இருக்கிறான். இங்கு கண்ணுக்கு கண்ணாக வைத்து பார்த்துக் கொள்வதால்தான் அம்மாவிடம் சேட்டை செய்ய முடியும். எனவே, இளஞ்சிங்கம் மாதிரி எல்லா விதமான சேட்டைகளையும் செய்கிறான். வெண்ணெய் திருடுவது முதல் அனைத்தையும் அம்மாவின் முன்புதான் செய்கிறான். ஏனெனில், அம்மா எதுவும் பண்ண மாட்டாள் என்று தெரியும்.
ஏரார்ந்த கண்ணி யசோதை என்றாலே அழகிய கண்களையுடைய யசோதை என்றுதான் அர்த்தம். ஆனால், அழகிய கண்கள் எப்போதும் கண்ணனையே பார்த்துக்கொண்டிருக்கிறது. அதனால்தான் அது அழகாக இருக்கிறது. கண்ணுக்கு கண்ணாக வைத்து பார்த்ததினாலேயும், அவனையே தன்னுடைய கண்ணாக நினைத்து பார்ப்பதனாலேயும் அழகாக இருக்கிறாள். இப்போது கண்ணனே கண்ணாகிவிட்டான். அப்படி கண்ணாக இருக்கக்கூடிய யசோதையின் இளஞ்சிங்கம். அப்படி இருக்கக்கூடியவன் யாரெனில், கார்மேனிச் செங்கண் கதிர் மதியம்போல் முகத்தான்… நந்தகோபனின் முன்பு சமர்த்தாக உட்கார்ந்திருப்பான். யசோதை முன்பு அனைத்துச் சேட்டை களையும் செய்து கொண்டிருப்பவன்… என்றெல்லாம் சொன்னோமே அவன் யாரென்று நினைத்தாய்.
அவன் மேனியின் நிறம் கார்மேனி. அது சாதாரண மேகம் கிடையாது. கறுத்த மேகத்தினுடைய நிறமுடையவன். காளமேகப் பெருமாள். ஏன் அவனுக்கு கார்மேனியெனில், நாம் முதலில் பார்த்தோம் அல்லவா… இந்த ஜீவாத்மாவினுடைய வெப்பம் இருக்கிறதல்லவா… அந்த தாபம்… அந்த தாபத்தை வந்து பக்தி வந்து தணிக்கிறது. குளிர்ச்சி செய்கிறது என்று பார்த்தோம் அல்லவா? இப்போது பகவானுடைய சொரூபத்தை நாம் தியானம் செய்யும் போதோ அல்லது அர்ச்சாவதாரத்தில் பார்க்கும்போதோ அல்லது விபவாதாரத்தில் பார்க்கும்போதோ அந்த கார்மேனியை பார்த்த மாத்திரத்தில் நம்மிடம் இருக்கக்கூடிய கர்ம வாசனையினுடைய வெப்பத்தை அது தணிக்கிறதனால, நீருண்ட கருமேகம் போலிருக்கிறது அவனுடைய மேனி.
எப்படி ஒரு மயிலானது கார் மேகத்தைப் பார்த்தவுடனே நடனம் ஆடத் தொடங்கிவிடுமோ, மழை பெய்ய வேண்டு மென்பதுகூட இல்லை. அதற்கு முன்பு அந்த மேகமானது திரண்டு நிற்பதைப் பார்த்தாலே நடனமாடத் தொடங்கும். ஏனெனில், இவ்வளவு நேரமாக அனுபவித்த அந்த வெப்பத்தை அந்தக் கார்மேனியைப் பார்த்தவுடனே எப்படி மயில் நடனமாடுகின்றதோ, அதுபோல நாம் அந்த திருமேனியைத் தரிசனம் பண்ணிய மாத்திரத்தில் இந்த கர்மாதி வெப்பங்களெல்லாம் தணிந்து போகின்றது. அதனாலேயே திருமோகூரில் காளமேகம் என்றே பெயர். தஞ்சை மாமணிக்கோயிலில் நீலமேகப் பெருமாள் என்று பெயர்.
அப்போது நம்முடைய கர்ம வெப்பத்தை தணிக்கக்கூடிய உருவத்தில் இருப்பதால், கார்மேனி. கார்மேனியோடு கூடியவனாக இருந்தாலும் கண் எப்படி இருக்கிறதெனில், செங்கண்ணாக இருக்கிறது. செம்மையான கண்களை உடையவன். சிவப்பான கண்களை உடையவன். சிவப்பான தாமரை போன்ற கண்களை உடையவன்.
(தொடரும்)