Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தனுஷ்கோடியில் மகான்!

மகத்துவம் மிக்க மகான்கள்

பல மத்வ மகான்களை நாம் இப்பகுதியில் தரிசித்து வருகிறோம். குறிப்பாக, ஸ்ரீ மத்வாச்சாரியாருக்கு பின் உருவான ஒவ்வொரு மடங்களை பற்றியும், அந்தந்த பீடாதிபதிகளை பற்றியும், பார்த்து வருகிறோம். அந்த வகையில், இத்தொகுப்பில் காணவிருக்கும் மடம் ``பெஜாவர் மடம்’’. உடுப்பி அஷ்ட மடங்களில், மிகவும் முக்கியமான மடமாகும்.

நினைவுகூர்ந்து

பெஜாவர் என்று சொன்னாலே, முதலில் நம் நினைவுக்கு வரும் மடாதிபதி ஸ்ரீ விஸ்வேஷதீர்த்தர்தான். அவரை எளிமையாக கடந்துவிட முடியாது. அவரின் சாதனைகள் அபரிமிதமானது. ஒரு மடாதிபதிகள், வேத பாடசாலைகள், கோயில்கள், மடங்கள் என ஆன்மிகம் சார்ந்த பணிகளை மேற்கொள்வது வழக்கம். ஆனால், விஸ்வேஷதீர்த்தர் பீடாதிபதியான பொறுப்பு ஏற்றது முதல், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் ஏழைகளுக்கான உணவு வழங்குதல் போன்ற லௌகீகம் சார்ந்த செயல்களையும் செய்ய தொடங்கினார். அதிலும், சாதி மத பேதம் இல்லாது, அனைவரிடத்திலும் நன்கு பேசி பழகக்கூடியவராக திகழ்ந்தார். குறிப்பாக, பிற்பட்ட மக்கள் நலனில் அக்கறையுடன் அவர்கள் மேம்படுவதற்கு தீவிரமாகச் செயலாற்றினார்.

2019-ஆம் ஆண்டு பிருந்தாவனம் ஆன, ஸ்ரீ விஸ்வேஷ தீர்த்தரின் ஆன்மிக ஆற்றலும், சமூக சீர்திருத்தங்கலும் இன்றியமையாதது. சுமார் 34 மடாதிபதிகள் பெஜவார் மடத்தை இன்றுவரை அலங்கரித்துள்ளனர். தற்போதைய பீடாதிபதியாக ஸ்ரீ விஸ்வபிரசன்ன தீர்த்தர் கவனித்து வருகிறார். தன் குருவை போல், இவரும் அர்ப்பணிப்புடன் சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறார். கர்நாடகாவில், இன்றும் மத்வரின் தத்துவங்களை பாதுகாப்பதிலும், பரப்புவதிலும் பெஜாவர் மடம் தன் பங்கினை சிறப்பாக செய்து வருகிறது.

மத்வரின் கடைசி சீடர்

பெஜாவர் மடத்தின் முதல் மடாதிபதி ``ஸ்ரீ அதோக்ஷஜ தீர்த்தர்’’ ஆவார். பெஜாவர் மடத்தை தோற்றுவித்தவரும் இவரே. அதோக்ஷஜ தீர்த்தரும், மத்வரின் நேரடி சீடர் என்று கூறப்படுகிறது. அதோக்ஷஜ தீர்த்தரின் பூர்வாஸ்ரம பெயர் என்னவென்று தெரியவில்லை. மேலும், பலிமார் மடத்தின் முதல் சந்நியாசியான ஸ்ரீ ஹ்ரிஷிகேஷ தீர்த்தர் முதல் பெஜாவர் மடத்தின் முதல் சந்நியாசியான அதோக்ஷஜ தீர்த்தர் வரை ஸ்ரீ மத்வரின் நேரடி சீடர் என்று கூறப்படுகிறது.

அதாவது, பலிமார் மடத்தின் முதல் பீடாதிபதியான ஸ்ரீ ஹ்ரிஷிகேஷ தீர்த்தர், அதமார் மடத்தின் முதல் பீடாதிபதியான ஸ்ரீ நரசிம்மதீர்த்தர், புத்திகே மடத்தின் முதல் பீடாதிபதியான ஸ்ரீ உபேந்திர தீர்த்தர், சீரூர் மடத்தின் முதல் பீடாதிபதியான ஸ்ரீ வாமனதீர்த்தர், கிருஷ்ணபூர் மடத்தின் பீடாதிபதியான ஜனார்த்தன தீர்த்தர், சோதே மடத்தின் முதல் பீடாதிபதியான ஸ்ரீ விஷ்ணுதீர்த்தர், கணியூர் மடத்தின் முதல் பீடாதிபதியான ஸ்ரீ ராமதீர்த்தர், சுப்ரமணிய மடத்தின் முதல் பீடாதிபதியான ஸ்ரீ விஷ்ணுதீர்த்தர், கடைசியாக, பெஜாவர் மடத்தின் முதல் பீடாதிபதியான அதோக்ஷஜ தீர்த்தர் ஆகியோர்கள் மட்டுமே, மத்வரின் சீடர்களாக இருந்திருக்கிறார்கள் என்று புராணங்கள் விவரிக்கின்றது.

ஆக, மத்வரின் கடைசி நேரடி சீடராக ஸ்ரீ அதோக்ஷஜ தீர்த்தர் பார்க்கப்படுகிறார். தாய் எப்படி கடைசி பிள்ளைக்கு செல்லம் கொடுத்து வளர்ப்பாளோ. அதுபோல் மத்வரும், அதோக்ஷஜ தீர்த்தருக்கு அதிகளவில் முன்னுரிமை கொடுத்து, பாடங்களை சொல்லிக் கொடுப்பாராம்.

மத்வர் கொடுத்த அஜ விட்டலன்

அதோக்ஷஜ தீர்த்தரின் மீது அதீத அன்பு வைத்திருந்த மத்வர், அவருக்கு ஸ்ரீ தேவி - பூதேவியுடன் கூடிய ஸ்ரீ விட்டலன் விக்ரகத்தை, வழிவழியாக பூஜித்து வர அனுக்கிரகித்து கொடுக்கிறார். அந்த விக்ரகம்தான் இன்றும் ஸ்ரீ விஸ்வபிரசன்ன தீர்த்தரால் பூஜிக்கப்பட்டு வருகிறது. மேலும், சில மத்வ மடங்களுக்கும் இதே போல் விட்டலன் விக்ரகத்தை மத்வர் வழங்கியுள்ளார். ஆனால், அவைகளிடமிருந்து பெஜாவர் மடத்தில் உள்ள விட்டலன், சற்று வித்யாசமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, இந்த விட்டலனை ``அஜ விட்டலன்’’ என்று அழைக்கப்படுகிறது. அதே போல், பெஜாவர் மடத்தில் வழிவந்த ஏழாவது மடாதிபதியான ``ஸ்ரீ விஜயத்வஜ தீர்த்தர்’’ ராமர் விக்ரகம் ஒன்றை உருவாக்கி அதனை வழிபாட்டில் இணைத்துகொண்டார். அதன் காரணமாக, தற்போது ராமர் விக்ரகத்தையும், பெஜாவர் மடத்தினர் பூஜித்து வருகிறார்கள்.

போற்றுகிறது சுமத்துவவிஜயம்

``அப்ரத்யக்ஷ குணோத்ரிக்தா’’ என்று ஸ்ரீ அதோக்ஷஜ தீர்த்தரை, உயரிய மத்வ நூலான ``சுமத்வவிஜயம்’’ போற்றுகிறது. அதன் முழு ஸ்லோகம்;

``அப்ரத்யக்ஷ குணோத்ரிக்தா அப்ரமேய மஹோதயா

அவிஜ்ஞாத கதயோ நித்யம் நமோ மாத்வ நிவாஸினே’’

* அப்ரத்யக்ஷ (Apratyaksha): புலன்களுக்கு எட்டாத அல்லது இறைவனின் அருளை நேரடியாகக் காண முடியாத நிலையைக் குறிக்கும்.

* குண (Guna): நற்பண்புகள் அல்லது தெய்வீக குணங்கள்.

* உத்ரிக்தா (Uthriktha): மிகுதியாகக் கொண்டவர் அல்லது சிறந்தவர்.

அதாவது, ``நேரடிப் புலன்களுக்கு எட்டாத, எல்லையற்ற நற்பண்புகளை மிகுதியாகக் கொண்டவரே’’ என்று சுமத்வவிஜயம் இவரை புகழ்ந்து பாராட்டுகிறது. மேலும், அதோக்ஷஜ தீர்த்தர் சிறந்த தபஸ்வியாகவும், சாஸ்திரங்களில் சிறந்தவராகவும் விளங்கினார். மத்வரின் பெருமைகளையும், துவைத தத்துவங்களையும் பரப்பும் பொருட்டு, பகீரதி போன்ற புனித தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டார்.

தனுஷ்கோடிக்கு செல்லுதல்

தனது பிரதான சீடரான ஸ்ரீ கமலாக்ஷ தீர்த்தரிடம் பெஜாவர் மடம் பீடத்தை ஒப்படைத்த பிறகு, ராமாயண காலத்தில் ராமபிரான் ஓடியாடி நடந்த இடமான, தமிழ்நாட்டின் ராமேஷ்வரம் பகுதியில் உள்ள தனுஷ்கோடிக்கு சென்று, அங்கயே பிருந்தாவனம் பிரவேசம் செய்ய வேண்டும் என்று விரும்பினார். அதன்படியே... ராமனின் அனுக்கிரகத்தால், மாக சுத்த மாதத்தின் (மாசி) ஏழாம் நாளில் (சப்தமி திதியில்) தனுஷ்கோடியில் பிருந்தாவனம் பிரவேசமானார் என்று கூறப்படுகிறது. மேலும், 1964-ஆம் ஆண்டு, டிசம்பர் 23 - ஆம் தேதி அன்று, மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது, ராட்சத அலைகள் எழுந்து, ஊருக்குள் புகுந்தது. தனுஷ்கோடி நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. அப்போது, ஸ்ரீ அதோக்ஷஜ தீர்த்தரின் பிருந்தாவனமும், கடலில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

``ஸ்ரீ மம்தம் கமலகம் தாஸம் ததாத்யநதத்பரம்

அதோக்ஷஜமுநிம் ஸம்தாம் வாமதே வித்தலபூஜகம்’’

ரா.ரெங்கராஜன்