ஸ்ரீ ரகுநாத தீர்த்தர்- மகான் 18
18 மகான்
கடந்த சில இதழ்களுக்கு முன்னர், ``கணியூர் முதல் சந்நியாசி’’ என்ற தலைப்பில், உடுப்பி அஷ்ட மடங்களில் ஒன்றான கணியூர் மடத்தை பற்றியும், அதன் முதல் சந்நியாசியான ``ஸ்ரீ ராம தீர்த்தரை’’ பற்றியும் தெரிந்துகொண்டோம். இந்த மடத்தின் இரண்டாவது சந்நியாச பீடாதிபதியான ``ஸ்ரீ ரகுநாத தீர்த்தரை’’ பற்றி இந்த தொகுப்பில் கண்டு மகிழ்வோம்.
குரு சொல் கேட்பவர்
உடுப்பி கணியூர் மடத்தின் முதல் பீடாதிபதியான ராம தீர்த்தரிடம் சந்நியாசமும், வேதஞானமும் பெற்றவர். குரு பக்திக்கு எடுத்துக் காட்டாக விளங்கியவர், ரகுநாத தீர்த்தர்.
தான் பூர்வாஸ்ரமத்தில் இருக்கும் சமயத்தில், குருவிடம் துவைத தத்துவத்தை கற்கிறார். அந்த சமயத்தில், ``நீதான் இந்த மடத்திற்கு அடுத்த குரு.
சந்நியாசத்தை ஏற்றுக்கொள்’’ என கட்டளை இடுகிறார். மறுநொடி மறுக்காமல், ``ஸ்வாமி... நீங்கள் எனக்கு கொடுத்த ஞானம், எங்கு என்னுடனே முடிந்து போய்விடுமோ.. என்று அஞ்சினேன். தாங்களே எனக்கு சந்நியாச தீட்சை கொடுக்க எண்ணியுள்ளீர்கள், நான் மகிழ்ச்சியாக ஏற்கிறேன்’’ என சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். கோலாகலமாக சந்நியாசம் ஏற்கும் விழா நடைபெற்றது. அக்காலத்தில் இருக்கக்கூடிய ராஜாக்களும், மந்திரிகளும்
பங்கேற்றனர்.
58 ஆண்டுகள்
இவரின் பூர்வாஸ்ரம பெயர் என்னவென்று தெரியவில்லை. ஆனால், 1374-ஆம் ஆண்டு காலங்களில், இவர் துவைத தத்துவங்களை மக்களிடத்தில் பரப்பினார் என்று கூறப்படுகிறது. தன் குருவானஸ்ரீ ராம தீர்த்தர் பிருந்தா வனம் அடைந்த பின், சுமார் 58 ஆண்டுகள் வரை கணியூர் பீடத்திற்கு பீடாதிபதியாகஸ்ரீ ரகுநாத தீர்த்தர் இருந்திருக்கின்றார் என்பது ஆச்சரியமே! ராம தீர்த்தரால் நிறுவப்பட்ட கணியூர் மடத்தின் கடமைகளை திறம்படச் செய்தார், ரகுநாத தீர்த்தர். குறிப்பாக, கணியூர் பகுதியில் உள்ள மக்களுக்கு மத்வ சித்தாந்தங்களை போதிப்பது, பல சீடர்களை கணியூர் மடத்தில் இணைப்பது, மக்கள் படும் துயரங்களை கண்டு அதனை நிவர்த்தி செய்து அவர்களுக்கு வழிகாட்டுவது என பலவும் செய்திருக்கிறார்.
ரகுபதி தீர்த்தர்
அப்படி இவருக்கு கிடைத்த சீடர்தான் ``ஸ்ரீ ரகுபதி தீர்த்தர்’’ (இவரின் பூர்வாஸ்ரம பெயரும் தெரியவில்லை) மிகவும் திறமைமிக்கவர். அவரை தனது அடுத்த வாரிசாக தேர்ந்தெடுத்து, கணியூர் மடப் பொறுப்புகளை ஒப்படைத்தார். அதன் பின், இந்தியா முழுவதிலும் சஞ்சாரம் செய்து, யாத்திரை மேற்கொண்டார். நாட்கள் செல்ல.. சைத்ர ஸுத்த பஞ்சமி அன்று கங்கை நதிக்கரையில் முக்தி அடைந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இவரின் மூலப்பிருந்தாவனம் எங்கு உள்ளது என்பது பற்றிய தகவல்கள் தெரியவில்லை. எங்கு உள்ளது என்று ஆராய இன்னும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
அதே போல், சில இதழ்களுக்கு முன்னர், குக்கே சுப்பிரமணிய கோயிலை பற்றியும், அதன் முதல் பீடாதிபதியானஸ்ரீ விஷ்ணுதீர்த்தரை பற்றியும் கண்டோம். தற்போது இந்த இதழில், சுப்ரமணிய மடத்தின் இரண்டாவது பீடாதிபதியான ``ஸ்ரீ அனிருத்த தீர்த்தரை’’ பற்றி பார்ப்போம்.
பரிகாரஸ்தலம்
ஸ்ரீ மத்வாச்சாரியார்,ஸ்ரீ விஷ்ணு தீர்த்தருக்கு சந்நியாச தீட்சை கொடுத்து, தனியாக சுப்ரமண்ய கோயிலையும் மடத்தையும் உருவாக்கிக் கொடுத்தார். அதன்படி, இன்று குக்கே சுப்ரமண்ய கோயில் விருக்ஷமாக வளர்ந்திருக்கிறது. அப்படி, விஷ்ணு தீர்த்தருக்கு பிறகுஸ்ரீ அனிருத்த தீர்த்தர், குக்கே சுப்ரமண்ய மடத்தின் பொறுப்புகளை கவனிக்கிறார். ஒருவரின் ஜாதகத்தில், செவ்வாயும் - ராகுவும் இணைந்து இருப்பவர், செவ்வாயும் - கேதுவும் இணைந்து இருப்பவர்கள் இந்த குக்கே கோயிலுக்கு செல்வது சிறப்பானதாகும். காரணமென்ன..? ஒரு உண்மை சம்பவத்தோடு பார்ப்போம்.
முன்னொரு காலத்தில், ஜக்கு என்ற சிறுமி குடும்பத்தாரோடு மங்களூருவில் இருந்து குக்கே சுப்ரமண்ய கோயிலுக்கு வந்திருந்தாள். இக்கோயிலில் நாகம் நடமாட்டம் அதிகம். அப்போது ஒரு பெரிய நாகம் ஒன்று வந்திருந்தது. அனைவரும் அதனை அடிக்க சென்றார்கள். ``யாரும் அதனை அடிக்க வேண்டாம். அதுவே சென்றுவிடும்’’ என கத்தி பேசினாள்.
நாகத்தை காப்பாற்றிய ஜக்கு
அந்த சமயத்தில்,ஸ்ரீ அனிருத்த தீர்த்தர் அங்கு வர, என்ன நடக்கிறது என்பதனை அறிய அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.
``எந்த ஒரு ஜீவராசியையும் துன்புருத்த நமக்கு அதிகாரம் இல்லை’’ என வாதிட்ட சிறுமி ஜக்கு, படம் எடுத்து பயந்திருந்த நாகத்தின் முன்பாக இருகைகளையும் கூப்பி;
``நாகராஜா.. நாங்கள் அனைவரும் சுப்ரமணியரை தரிசிக்க வந்திருக்கிறோம். தரிசிக்க வந்திருக்கும் முருக பக்தர்களுக்கு உன்னால் எவ்வித தீங்கும் இழைக்க கூடாது அல்லவா! சென்றுவா.. நாகராஜா’’ என்று சொல்ல, இதனை கேட்ட நாகம் அமைதியாக சென்றுவிட்டது. கூடியிருந்த அனைவருக்கும் மகிழ்ச்சி. ஜக்கு அருகில், அனிருத்த தீர்த்தர் வந்தார். ஜக்குவின் தலையின் மீது கைவைத்து;
``நாகத்தை காப்பாற்றிவிட்டாய்.. உன்னை நாகம் காப்பாற்றும். தர்க சமயத்தில் நாகத்தையும் என்னையும் நினைத்துக்கொள் உனக்கு உதவியாக இருக்கும்’’ என்று ஆசீர்வதித்தார். அனிருத்த தீர்த்தரிடத்தில் ஆசீர்வாதத்தை வாங்கிக் கொண்டு, ஜக்கு ஊர் திரும்பினாள்.
கணவனை தீண்டிய நாகம்
அக்காலத்தில், சிறுவயதுலேயே திருமணத்தை முடித்துவிடுவார்கள். ஆகையால், ஜக்குவிற்கு திருமண ஏற்பாடுகளை செய்து, திருமணத்தை தடபுடலாக நடத்தினார்கள், ஜக்குவின் பெற்றோர்கள். ஜக்குவிற்கு பேரானந்தம். ஆனால், அந்த ஆனந்தம் நீடிக்கவில்லை. ஜக்குவின் கணவரை நாகம் ஒன்று தீண்டியது. இதில், ஜக்குவின் கணவர் மரணிக்க, வேதனை தாங்க முடியாது துக்கத்தில் மூழ்கினாள். கணவன் மரணித்தால், மனைவியானவள் வீட்டில் ஒரு மூலையில் முடங்கி இருக்க வேண்டும். வெளியே வரக்கூடாது என்பது போன்ற கடும் கட்டுப்பாடுகள் எல்லாம் நிறைந்திருந்த காலம். இதையெல்லாம் நினைத்து பெற்றோர்கள் கவலையடைந்தார்கள்.
இதையெல்லாம் கவனித்த ஜக்குவிற்கு அனிருத்த தீர்த்தர் ஆசீர்வதித்தது நினைவுக்கு வந்தது. உடனே.. குக்கே சுப்ரமண்யஸ்வாமியையும், நாகத்தையும், மகான்ஸ்ரீ அனிருத்த தீர்த்தரையும் மனமுருகி வேண்டுகிறாள்.
முன்கூட்டியே அறிந்தவர்
அடுத்த நொடி, வாசல் வழியாக அதே நாகம் ஒன்று வந்து, அமைதியாக பிணத்தின் அருகில் சென்று, கடித்த இடத்தில் மீண்டும் வாய் வைத்து விஷத்தை அனைத்தையும் உறிஞ்சி எடுத்துக் கொண்டு, மீண்டும் வந்த வழியிலேயே பயணித்து சென்றுவிட்டது. ஜக்குவின் கணவர் மெதுவாக எழுந்தார். நடந்தவற்றை அவரிடம் தெரிவிக்க;``இப்போதே அந்த மகானை (அனிருத்த தீர்த்தர்) சந்திக்க வேண்டும்’’ என்று குடுப்பத்தார் அனைவரும் குக்கேவிற்கு சென்றனர்.ஆகையால்தான் ஒருவரின் ஜாதகத்தில், செவ்வாயும் - ராகுவும் இணைந்து இருப்பவர், செவ்வாயும் - கேதுவும் இணைந்து இருப்பவர்கள், நாகதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த குக்கே ஸ்தலம் பரிகாரஸ்தலமாக விளங்குகிறது.
ஆக, பின்னால் நடைபெறுவதை முன்கூட்டியே தெரிந்துக்கொள்ளும் வல்லமைப்படைத்தவர், மகான்ஸ்ரீ அனிருத்த தீர்த்தர். இவருக்கு பின் தன் பிரதான சீடரானஸ்ரீ வராஹ தீர்த்தருக்கு பட்டத்தை கொடுத்து நிர்வகிக்க ஆனையிட்டார். அதன் பிறகு, சிறிது காலத்தில் பிருந்தாவனமானார். இவரது பிருந்தாவனம், குக்கேவில் அமைந்துள்ளது.இவரது பூர்வாஷ்ரம பெயர், காலம், ஆராதனையின் மாதம், பக்ஷம் மற்றும் திதி பற்றிய விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. மேலும் இந்த இரண்டு மகான்களின் உண்மையான புகைப்படங்களும் கிடைக்கவில்லை.
ரா.ரெங்கராஜன்


